ச்சே! போன வாரந்தான் மெக்கானிக்கிட்டே போனேன்.... அதுக்குள்ள என்ன
ஆச்சு? இந்த மிஸிரி மெக்கானிக்கிட்ட போனாலே இந்த மாதிரிதான். இதுல வேற
தன்னை தொக்தர்னு (டாக்டர்னு) அலட்டிக்கிறான்.
வயது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து இருக்கும். மருண்கலர் ஃபைபர்
ஃபரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். கண் டாக்டரிடம் டெஸ்ட் செய்து
ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது போலும். சவுதி அரேபியாவில் மக்கள்
அதிகமாக வசிக்கும் ஜித்தா நகரின் வீதியை உற்று நோக்கியவாறு டொயாட்டோ
கொரல்லா நீல நிற காரை டிரைவ் செய்துக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் அவரின் துணைவி. அவரைவிட கொஞ்சம் உயரம்போல் தெரிந்தாலும்
கண்ணியமாக பர்தா அணிந்திருந்தார். இரண்டு பிள்ளைகள். ஜாம்ஜும்
சென்டரில் சற்று முன்தான் பர்சேஸ் முடிந்திருந்தது. பர்ஸ் கனம்
குறைந்து டிக்கி கணம் அதிகரித்திருக்க வேண்டும்.
இந்த எளவெடுத்த காரை மாத்ரீங்களா. உங்களோட வந்தவனெல்லாம் பெரிய பெரிய
லாரியெல்லாம் வாங்கிட்டானுங்க. நீங்க ஏன்தான் இத கட்டி
அலுவுரீங்களோன்னு தெரியல.
ம்...ஏன் சொல்லமாட்டே? அட கைக்கூலி வாங்கக்கூடாது வாணாம். சரி
மாப்ளைக்கு அன்பா ஒரு சைக்கிளாவது வாங்கித்தராங்களா? உங்க வீட்ல. டவுன்
பஸ்ல போய்கிட்டிருந்த நீ... பேசற....ம்
ம்...உம். போதும்! போதும்! நீங்க எழுத்தப் பார்த்து ஒழுங்கா ஓதுங்க!
(ரோட்ட பார்த்து ஓட்டுங்க).
ஏங்க இப்டி ஓட்றீங்க. பெரிய டைலரல்லாம் வருது.
ஏய்! அது டைலர் இல்ல. அவன் என்ன சொக்காவா தைச்சிக்கிட்டிருக்கான்
ரோட்ல. "ட்ரைலர்". எங்கே சொல்லு ட்..ரை...ல...ர்
வாப்பா... ட்ரைலர் ஸ்பெல்லிங் எனக்கு தெரியுமே. நாஞ்சொல்றேன்
டீ...ஆர்...ஏ...ஐ...எல்...ஈ...ஆர். ட்ரைலர் என்று பின்சீட்டு மூத்த
மகன் பாடம் நடத்தினான்.
ஆ..மா! வாப்பாவும் மகனும் பெரிய்ய்ய்ய வெள்ளக்காரங்க பாரு. அடியே! நீ
ஏன் சும்மா இருக்கே! ஒம் பங்குக்கு எதனாச்சும் நீயும் சொல்லு என்று
பின் சீட்டில் இருந்த மகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்
குடும்பத்தலைவி.
வாப்பா...வாப்பா..! பேரண்ட்ஸ் மீட்டிங்ல டீச்சர் சொன்னாங்க,
"மம்மிக்கு ஒன்னுமே தெரியலையாம்" மகள் பின் சீட்டிலிருந்து வாப்பாவின்
தோல்பட்டையை நின்டினாள்.
இப்படி ஒரு கதையிருக்கா? அஹ்...அஹ்...ஹா... குட் கேர்ள்! பின்சீட்டு
பிள்ளைகளுடன் உரையாடிக்கொண்டு வந்ததால் வாப்பாவின் கவனம் முழுவதும்
ரோட்டில் இல்லை. இடது புறம் சைடுவாங்கி போகும் வாகனத்தை
கவனிக்காததால் இவரும் இடதுபக்கம் ஒதுங்க.... டப்பா டான்ஸ்
ஆடப்பார்த்தது.
கார் ஓட்டிய சவுதி இளைஞன் கத்தினான் "ஏய் க்ஹுமார்! கைய்ப்ஃப சூக்
சைய்யாரா? மன் ஆதிக் ருக்ஷா? மாய்ரோ தல்லா? கல்ப்!" ("ஏய் கழுத!
வண்டியை எப்டி ஓட்ற? எவன்டா உனக்கு லைஸன்ஸ் கொடுத்தான்? டிரைவிங்
ஸ்கூல் போகலே? நாயே!")
இதே சென்னையாக இருந்திருந்தால் "கைய்த...கஸ்மாலும்...வீட்ல
சொல்ட்டுவன்ட்யா சரியான சாவுக்கிராக்கி!" என்பார்கள். சில நேரத்தில்
தாய் தந்தை அக்கா எல்லாருக்கும் புதிய சான்றிதழ் வழங்குபவர்களும்
உண்டு.
தய்யுப்! தய்யுப் மாலிஷ் யா(க்)ஹீ (சரி சரி உடுப்பா!) என்று அவனுக்கு
வருத்தம் தெரிவித்துக் கொண்டவர், "வந்துட்டானுங்க பெருஸ்ஸ்ஸா..." என
முனுமுனுத்தார்.
மதினா ரோடுவழியாக வந்தால் டிராஃபிக் சிக்னல்களுக்கு காத்திருக்க
வேண்டும் என்பதால், கார்னிஷ் (கடற்கரை) வழியாக வண்டியை செலுத்தினார்.
புதிய புதிய மாடல்களில் நிறைய ரவுண்ட் எபவ்ட்கள் முளைத்திருந்தன.
வியாழன் வெள்ளி என்றால் சரியான கூட்டம் இருக்கும். ஜித்தாவின்
அலைகளில்லாத கடற்கரை காற்றுக்காக சிலர் வருவதுண்டு. இதே சாக்கில்
சமையலுக்கு லீவு போட்டுவிட்டு கடற்கரை பிஸ்ஸாவுக்கு (Pizza Hut)
அப்ளிகேஷன் போடும் குடும்ப தலைவிகளும் உண்டு.
ஏங்க என்னமோ தீய்ஞ்ச வாடை அடிக்குதே?
அது ஒன்னுமில்லே இப்ப ஒரு வாந்தியிலபோவா(ன்) கத்திகிட்டு போறான்ல
அவன் ப்ரேக் அடிச்சிருப்பான். தேஞ்சுபோய் அந்த வாடை வருது.
டேய் குடிக்க தண்ணி எடுடா! அப்டியே அந்த கேஸட்ட எடு! என்று வாப்பா
மகனுக்கு ஆர்டர் போட
வாப்பா!... வாப்பா!... "யுவா" கேஸட் போடுங்க! - மகன் தனது நேயர்
விருப்பத்தைத் தெரிவித்தான்.
ச்சே! கழிச்சல்ல போவான்... முழுசா ரெண்டு வார்த்தை ஹிந்தி தெரியாது.
ஹிந்தி பாட்டா கேக்குது உனக்கு? நம்ம ஹனீபா கேஸட்டை எடுடா!
இறைவனிடம் கையேந்துங்கள்.... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்.... அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
பாட்டு அவருக்கா அல்லது கடற்கரையோரம் உள்ளவங்களுக்கா என்று
தெரியவில்லை. சப்தம் காதை அடைத்தது. திடீரென ஹனீபாவாக மாறி ஸ்டீரிங்கை
விட்டுட்டு கையேந்த வண்டி தாருமாறாக ஓட ஆரம்பித்தது.
சுதாரித்துக்கொண்டு ஸ்டீரிங்கை பிடிக்கவே வண்டி மீண்டும்
கண்ட்ரோலுக்கு வந்தது.
க்ளைமேட் மாறி வருமாதிருக்கு. பஜ்ருக்கு எழுந்திருக்க கொஞ்சம்
கஷ்டமாயிருக்கு. ம்.. முன்னெல்லாம் தஹஜ்ஜத்துக்கு எழுந்திருப்பேன்.
ஏம்புள்ள.. பசிக்கிற மாதிரியிருக்கே தாக சாந்திக்கு ஏதாச்சும்
தேத்தண்ணி கொண்டு வந்தியா?
அதெல்லாம் ஒன்னும் கொண்டுவரலே. தேவைப்பட்டா வண்டியை நிறுத்தி வாங்கி
சாப்பிட வேண்டியதுதானே!
ஏங்க.. ஊர்லேந்து எங்க அம்மா எழுதின லெட்டர வாசிச்சீங்ளா?
ஆமா.. என்னத்தெ சேதியிருக்கும். ஒன் தம்பிக்கு விசா எடுக்க மச்சானிடம்
சொல்லுன்னு எழுதியிருப்பாங்க. விசா என்னெ மரத்திலயா காய்ச்சி
தொங்குது பறிச்சி கொடுக்க. இருக்கிறவனுக்கே இகாமா (ID card) ரினூவல்
ஆவறது சந்தேகம்.
டேய் குடிக்க தண்ணீ கேட்டன்ல. உங்க அம்மாவிடம் பேசிப்பேசி
தொண்டத்தண்ணி வத்திப்போச்சு.
மகனிடம் இருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி உயரத்தூக்கி பருகும்போது
மீண்டும் வண்டி தடம்மாற சமாளித்து பாதைக்கு கொண்டுவந்தார்.
(கடலையை கொறித்துக் கொண்டே) அட என்ன கடல்லே தண்ணீ குறைவா தெரிது.
வெளியூருக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டாங்களா. இது என்ன யானையா? அய்
கோவேறு கழுதை. அங்க பார் அங்க பார் என கிண்டலும் கேலியுமாக கடலோர
விளையாட்டுகளை ரசித்தவாறு வண்டி போகிறது.
மொபைல் ஃபோன் சிணுங்கவே அதை காருக்குள் தேடி ஒருவழியாக கண்டுபிடித்து
பேசுகிறார். மீண்டும் ஒரு ஃபோன் வரவே நம்பரை பார்த்து யாராயிருக்கும்
என யூகிக்க முடியாமல் முனங்கியவாறே அட்டண்ட் செய்ய, மறுமுனையில்
வெகேஷன் சென்று திரும்பிய நண்பர்.
ஹலோ! சொகமா ஈக்கியிருயலா? எப்படி சுகம் செய்தி? ஊர்ல எல்லாரும் நலமா?
மழை பெய்யுதா? ஊர் பண்டம்லாம் கொண்டுவந்தியா? பனியா(ர)ம், முறுக்கு,
வத்தல் எல்லாம்... அப்புறம்.. என்று தேவைற்ற பேச்சுக்களை பேசிக்கொண்டே
"வைத்து விடவா" என்றும் "நீங்கள் டிரைவிங்ல இருக்கீங்களே?"என்றும்
கேட்ட நண்பரிடம், "அது ஒன்னும் பிரச்சினையில்ல நீங்க பேசுங்க!" என்று
கூறிவிட்டு "கம்பெனி பில்லுதானே உனக்கு ஏன் நோவுது" என தனக்குள்
முனங்கியவாறு பேச்சு தொடர்ந்தது.
ஏங்க? வண்டி ஓட்டும்போதுதான் உங்களுக்கு எல்லா வேலையும்!? டிரைவிங்ல
இருக்கும் போது என்ன வளவளன்னு மொபைல்ல பேச்சு?!
உனக்கென்ன? அவ(ன்) எம்ஃப்ரண்டு. உங்க ஜனங்க போன் பண்ணினா மட்டும்
ஈ..ஈ...ன்னு இளிச்சு இளிச்சு பேசுவியே...! ஆளப்பாரு!
இப்படியே கார்னிஷ் ரோடு கடந்துவிட்டதால் ட்ராஃபிக் ஜாம் இல்லையென்ற
தைரியத்தில் ஆக்சிலேட்டரை மிதிக்க வண்டி பறக்க ஆரம்பிக்கிறது.
ஏங்க இப்படி தலைதெறிக்கிற மாதிரி ஓட்றீங்க. வண்டி வேற கண்டிஷன்
இல்லங்கிறீங்க.
அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் நல்லாத்தான் ஓட்றேன். வெகேஷன் போய்
வந்ததும் ஃபாஹஸல்தவ்ரி (F.C.) முடிக்கனும்.
மகனும் மகளும் பதறியவாறு வாப்பா வாப்பா எங்களுக்கு பயமா இருக்கு.
மொள்ளமா போங்க... வாப்பா.. வாப்பா
பாத்துங்க.. பாத்துங்க.. அல்லாஹ்வே..
வாயை மூடிக்கிட்டு ஒன் வேலையைப் பாரு. இதைவிட டப்பா வண்டியெல்லாம்
போவுது.
டப்பா வண்டிதாங்க இது.
"அல்லாஹ்வே..... வாப்பா" என்று குழந்தைகள் பயந்தவாறு முன் இருக்கைகளை
கட்டிபிடித்துக்கொண்டார்கள்.
ஏங்க.. ஏங்க.. பாத்துங்க
படாாாாார்
வண்டி எதிலோ மோதி நிற்க. சிதறிய கண்ணாடி துண்டுகள் விழுந்து
சினுங்கின.
டினோஸார்
கடித்து துப்பியவாறு வண்டியின் முன்பக்கம் ஆகிவிட டிரைவர்
மயக்கநிலையில் ஸ்டீரிங்கில் சாயந்துகிடந்தார். கை துவண்டிருந்தது.
மற்றவர்களுக்கு நன்றாக அடிப்பட்டிருக்க வேண்டும். யார் தலையும் கண்ணாடி
வழியே தெரியவில்லை. சாய்ந்து கிடக்கிறார்கள் போலும்.
அவ்வழியே சென்ற அரபி ஒருவர்தான் தனது காரை நிறுத்திவிட்டு உதவிக்காக
ஓடிவந்தார்.
இன்னாலில்லாஹி.... வஇன்னா இலைஹி ராஜிஊன். சலாமத்... மதாம் (மேடம்) தால்
சொய்ய மதாம் இன்ஷா அல்லாஹ் கைர் (எல்லாம் சரியாகிவிடும்) என்று
பெண்மணியை ஓரமாக உட்கார வைத்துவிட்டு குழந்தைகளை ஒவ்வொருவராக
கைதாங்களாக வெளிக்கொண்டு வந்தார்.
ஸ்டீரிங்கில் சாய்ந்து கிடந்தவரிடம் "யா சதீக் சலாமத் இன்ஷா அல்லாஹ்
மாஃபி முஷ்கிலா (நண்பா! கவலைப்படாதே ஒன்னும் பிரச்சினையில்லை) என
ஆறுதல் கூறிவிட்டு தெளிக்க பாட்டிலில் தண்ணீர் இல்லாததால் செவனப்
டின்னை ப்ட்டீஷ்ஸ் என திறந்து முகத்தில் தெளிக்க, காயமுற்றவர் மயக்கம்
தெளிந்து நாவால் நக்கியவாறே சுதாரித்துக்கொள்ளவே, அரபி கையைப்பிடித்து
இழுத்து வெளியேற்றினார்.
கொட்டும் இரத்தத்தை அரபி துடைத்தது ஒரு பகுதி என்றால், அனைவரையும்
வெளியில் கொண்டுவரும் முயற்சியினால் அவர்களது இரத்தங்கள் அரபியின்
மேல் துடைத்துக்கொண்டது இன்னொரு பகுதியாக இருந்தது.
விபத்துக்கு உள்ளானது அரபியா அல்லது இவர்களா என்று புதியவர்களுக்கு
குழம்பும்படி அனைவரின் மேலேயும் இரத்தம் தோய்ந்திருந்தது.
நினைவு திரும்பியவுடன் ஆ..ஆ.. கைவலிக்குது! அல்லாஹ்வே எம்புள்ள என்
மக்கள்.. கால்.கால்.கால் நொண்டியபடி புலம்பிக்கொண்டிருந்தார்.
(அலட்சியத்தின் விளைவல்லவா இந்த பரிசு. முன்பே சிந்திக்க வேண்டாமா?)
You Want Call? தஸ்ஸல் (உடைந்துபோன மொபைலைப்பார்த்து) ஹாதா கலாஸ்
கர்பான் தஸ்ஸல் ஜவ்வாலி.. ஃபீ ஸிஃபர் ஃபீ ஜீரோ கல்லிம் என தன்
மொபைலைக் கொடுத்து டயல் செய்யச்சொன்னார்.
ஆனால் அவரால் டயல் செய்ய முடியாது என புரிந்துகிகொண்டு அவரே டயல்
செய்ய தயாரானார்.
ஸிஃபர், கம்ஸ, ஸிஃபர், த்ரீ, டூ...
அரபி இங்கிலிஸி குல்லு மாஃபி முஷ்கிலா 050532 அய்வா! அய்வா!
(பரவாயில்லை அரபி, இங்கிலீஸ் எதிலாச்சும் சொல்லு ம்.. ம்..)
நைன், ...ன்.. நஸீத் (மறந்துவிட்டேன்)
நஸீத்?! வல்லாஹி?! மா அரஃப் நம்பர் தானி? கலாஸ் கலாஸ் அனா தஸ்ஸல்
அஸ்ஸாஃப் (Ambulance).
வொய்ங்......... வொய்ங்.......... வொய்ங்.............
(ஆம்புலன்ஸ் சைரன் அருகில்... இன்னும் மிக அருகில் கேட்கிறது).
Scene Freezed
(2004 ஆம் ஆண்டு
நடந்த இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட நாடகத்தின் எழுத்து
வடிவம்.)
புகைப்படம் மற்றும் இணையத்திற்காக கதை வடிவம் : அபூ உமர்
இயக்கம் : ஆசாத்
உதவி இயக்கம் : ரஃபியா, நிஃமத்
தொழில்நுட்ப இயக்கம் : S.N. ராஜா
பங்கேற்றோர் : ரஃபியா, நிஃமத், ஷாநாஸ், அமீரா
கலை உதவி : நிஜாமுத்தீன், சிராஜுத்தீன், ஷம்மிஃபாரூக்
பிற உதவிகள் : இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சியின் நிர்வாகத்தினர்கள்
மற்றும் தன்னார்வ தொண்டர்கள்
இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிக்காக "ஷரஃபியா நண்பர்களின் தயாரிப்பு"
ஓட்டுனர்கள் கவனத்திற்கு
எந்த வேலையாக இருந்தாலும் கவனத்தை அதில் ஒருமுகப்படுத்த வேண்டியது
அவசியம். உதாரணமாக தொலைக்காட்சி பார்க்கும்போது அருகிலிருப்பவர்கள்
வளவளவென்று பேச நாம் அனுமதிப்பதில்லை. தொலைபேசியில் யாருடனாவது
பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கீடுகள் வருவதை நாம் அனுமதிப்பதில்லை.
ஆனால், வண்டி ஓட்டும்போது மட்டும் எது வேண்டுமானாலும் நமது கவனத்தைச்
சிதறடிக்க அனுமதிக்கிறோம். இது தவறு.
இதுவரையில் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் திறமையாக வண்டி
ஓட்டியிருப்பதாக நாம் நினைக்கலாம். அந்த நினைப்பை அப்படியே
விட்டுவிடுவோம். எத்தனையோ சின்னச்சின்ன நிகழ்வுகள் ஒரேயடியாக நமது
கவனத்தைத் திருப்பிவிடவும், அதனால் உண்டாகும் தவறுகள் விபத்தில்
கொண்டுவிடவும் வாய்ப்புகள் உண்டு.
சாதாரணமாக நிகழக்கூடிய சில தவறுகள்.
1. வண்டி ஓட்டும் போது குளிர்பானம் குடிக்கிறோம். எதோ ஒரு சமயத்தில்
அது உடையில் சிந்திவிட்டால், அனிச்சையாக நாம் கையை உதறக்கூடும்.
சட்டென்று கவனம் பாதையிலிருந்து விலகி கறைபடிந்த உடையின் மேல்
செல்லக்கூடும். அந்த நேரத்தில், முன்னே மிகவும் நெருக்கமாக வண்டிகள்
எதுவும் இருந்தால்?
2. நெரிசலான பகுதியில் வண்டி ஓட்டிச் செல்கிறோம். கைத்தொலைபேசி
அழைக்கிறது. ஒரு கையில் தொலைபேசியும், மறு கையில் செலுத்து வளையுமாக
(ஸ்டீரிங்), மொத்த போக்குவரத்திற்கும் இடைஞ்சலை உண்டாக்குகிறோம்.
3. நெடுஞ்சாலைகளில் போகும்போது குழந்தைகளுடன் சாதாரணமாக
விளையாடிக்கொண்டே செல்கிறோம். சிறிய கவனச் சிதறலும், நூற்று இருபது
கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வண்டிக்கு எவ்வளவு பாதிப்பை
உண்டாக்கும் என நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.
4. அருகில் அமர்ந்திருப்பவருடன் பேசிக்கொண்டே செல்வது நமக்கு மிகவும்
சாதாரணமான ஒன்று. ஊரில் பேருந்து ஓட்டுபவர் எப்பொழுதாவது வளவளவெனப்
பேசினால் ஒத்துக்கொள்கிறோமா? "ரோட்டை பாத்து ஓட்டுங்க" என்று கட்டளை
இடுகிறோம். ஆனால், நாம் மட்டும் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுகிறோம்.
பேசுவது தவறில்லைதான்; அந்தப் பேச்சு உணர்வுகளைத் தூண்டி நமது கவனத்தை
சிதறடிக்காத வரையில்.
5. புகை பிடிப்பதே தவறு. வண்டி ஓட்டும்போது புகைப்பது தவறிலும் தவறு.
6. எதாவது ஈயோ கொசுவோ வந்தால் உடனே அதை விரட்டுவதில் கவனம் செலுத்தக்
கூடாது.
7. ஒலிநாடாவோ, வானொலியோ எதுவாக இருந்தாலும் ஓரளவிற்கு மேல் சத்தத்தை
வைத்துக் கேட்பதாலும் கவனம் சிதற வாய்ப்பு இருக்கிறது.
கவனிக்க:
இவற்றை நாம் சாதாரணமாக தினசரி செய்துகொண்டுதான் இருக்கிறோம்.
இதுவரையில் எதுவும் நிகழவில்லையென்பதால் இனியும் இதனைத் தொடர்ந்து
செய்வது நமக்கு நாமே அபாயத்தைத் தேடிக்கொள்வதாகும். வண்டி ஓட்டும்போது
முழுக்கவனத்தையும் சாலையில் செலுத்தி, பாதுகாப்பாக வண்டி ஓட்டவேண்டியது
மிகவும் அவசியம்.
நன்றி : ஆசாத் |