கதைகள்

 

  

கடவுளின் பெயரால்

முஃப்தி

 

ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் எப்படி வந்தது செம்பருத்திச் செடி என்று தெரியவில்லை.

ஒரு ஆள் கத்தியில் செம்பருத்திப்பூவை தேய்த்து உலரவைப்பதும் பிறகு மீண்டும் தேய்ப்பதுமாக இருந்தான்.

ஆளரவம் இல்லாத இடமும் கத்தியும் பயத்தை உண்டாக்கியதால் ஆடுகளை ஓட்டி வந்து கொண்டிருந்த ரோஜாகனி, இன்று தொலைந்தோம் என்று நினைத்தபடியே ஆடு மேய்க்கும் தன் ஏழ்மையை எண்ணி நொந்து கொண்டாள்.

அவனைக் கடந்துச் செல்லும் பொழுது பயத்தினால் ஏற்பட்ட நெஞ்சுத் துடிப்பு அச்சிறுமியின் ஆடைகளைத்தாண்டி தெரிந்தது.

கத்தியில் செம்பருத்தியை தேய்த்துக்கொண்டிருந்தவனுக்கு தன்னை கடந்து செல்லும் அச்சிறுமி தன் செய்கையை பார்த்தாளா இல்லையா என்ற குழப்பத்துடன் கத்தியையும் அவளையும் மாறி மாறி பார்த்தது, ரோஜாகனியை மேலும் கலவரப்படுத்தியது. தன்னைத்தான் துரத்த எத்தனிக்கிறானோ என்று நினைத்து ஓட ஆரம்பித்தாள் ரோஜாகனி.

-o0o-

ஒருநாள், எதிர்வீட்டு செல்லத்தாயோட தங்கச் சங்கிலி காணமல் போனபோது வெத்தலையில் மைதடவி பார்க்க, அதே ஆள்தான் வந்திருந்தான்.

"திருடினவங்க இப்படித்தான் இரத்தவாந்தியெடுத்து சாகப்போறானுங்கன்னு எலுமிச்சையை அறுக்கும்போது இரத்தம் கொட்டியதன் மகிமை அவளுக்குப் புரிந்தது. சங்கதியை செல்லத்தாயிடம் சொன்ன போது,

"அடப்போ ரோஜாகனி, பாய் ஜனங்கெல்லாம் இப்படித்தான், எதையும் நம்பமாட்டாக", என்றாள்.

முத்தாச்சி வீட்டு மாடு காணாமல் போனபோது, உச்சிமலை மந்திரவாதியிடம் மைதடவி பார்க்க ரோஜாகனியும் உடன் சென்றிருந்தாள்.

"தெற்கால போய் வடமேற்கு தெசையில திரும்பி கிழக்கு பக்கமாக போற தெருவுல அந்த மாடு மேயுது, போய் புடிச்சுக்கன்னு" சொன்னான்.

அருகாமையில் இருக்கிற வடிகாலில் மழைச்சேற்றில் வழுக்கி விழுந்துக்கிடந்தது. ஊரெல்லாம் தேடியலைந்தவர்கள் அருகிலுள்ள இடங்களை பார்க்காமல் போனமைக்காக தங்களையே நொந்துக்கொண்டார்கள். வயசான மாடு என்பதால் குறுகலான வடிகாலும், சேறும் சகதியும் மீறி எழ முடியாமல் கிடந்தது.

-o0o-

ரோஜாகனியின் குடும்பம் கண்ணியமாக வாழ்ந்தவர்கள். கை நீட்டி வாழத்தெரியாது. கையிருப்பு நகைகளையெல்லாம் விற்று துபைக்கு அனுப்பப்பட்ட மூத்தவன் சுவற்றில் அடித்த பந்தாக திரும்ப வந்திருந்தான். பயணம் கிளம்பும்போது அம்மா சொல்லியிருந்தாள், வேலையோ அல்லது உடம்புக்கோ கஷ்டம் என்றால் "திரும்பி வந்துவிடு"ன்னு.

சொன்னபடியே வந்துவிட்டான்.

பயண வியாபாரத்தில் முதலீடு செய்யத்துணிந்த அவர்களின் குடும்பத்துக்கு அதைவிட குறைந்த முதலீட்டில் ஒரு ஆட்டோ ஓட்ட துணிவில்லை.

சில நேரத்தில் வயிற்றை நிரப்புவது ஆட்டுக்கு என்று பக்கத்து வீட்டிலிருந்து வாங்கி வந்த வடிச்ச கஞ்சியும், முருங்கைக் கீரையும்தான். மூன்று வீடுகளில் வீட்டுவேலை பார்க்கும் அம்மாவுக்கு மாதம் பிறந்தால்தான் சம்பளம் கிடைக்கும்.

-o0o-

ஆல் இந்தியா ரேடியோவில் மழையுடன் கூடிய இடியோ அல்லது மின்னலுடன் கூடிய இடியோ(?!) அடுத்த 24 மணிநேரத்தில் வரலாம் அல்லது வராமல் போகலாம் என்று எச்சரித்தது. நேரம் முற்பகல் பதினொன்று. மேக மூட்டம் பார்ப்பதற்கு அப்படித் தெரியவில்லை. அணைகட்டும் சுற்றிலும் உள்ள மலைகளும், "நான் இங்கிருக்கேன்! இங்கே! இங்கே!" என்று பாம்புகளைப்பார்த்து சொல்லும் தவளைகளும், சில்வண்டுகளின் ரீங்காரமும் நின்று ரசிக்க வேண்டும் போல் இருந்தது.

வயிறு காய்ந்தால் எதைத்தான் ரசிக்க முடியும்! காதல் காமம் இவற்றில் எதுவோ மிகைத்து வீட்டைவிட்டு ஓடி போன காதலர்கள்கூட கையிருப்பு காசு தீர்ந்து வயிறு காய ஆரம்பித்துவிட்டால் மற்றவை இரண்டாம் பட்சம்தான்.

அந்த பதினோரு வயது சிறுமி ரோஜாகனி ஏழ்மையின் காரணமாக வாடி வதங்கி இருந்தாள். காலையிலிருந்து அம்மாவின் தொண தொணப்பு தாங்க முடியவில்லை.

"ஆடு மேய்ச்சிட்டு வா!", அம்மாவின் அன்பு கலந்த கட்டளை இது.

மூன்று நாட்களாக சரியான தீனி இல்லை. இலை தழைகளாவது போடவேண்டிய கட்டாயம். அணைக்கட்டின் ஓரத்தில் உள்ள தோட்டத்திலிருந்து கிழுவை தழைகளை ஒடித்து ஆட்டுக்கு தரலாம் என்ற எண்ணத்தில் கோணிப்பையை தற்பாதுகாப்புக்கு தலையில் போட்டுக்கொண்டு காலையில் வீட்டைவிட்டு புறப்பட்டவள்தான்.

-o0o-

"ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழிக்குஞ்சி வந்ததென்ன? யானைக்குஞ்சி சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சி வந்ததென்ன" என்று மேட்னி ஷோவுக்கு ரிக்கார்டு போட்டிருப்பது காற்றின் வழியே காதுகளுககு எட்டியது.

சூரியன் உச்சியைவிட்டு சாய்ந்திருந்த விஷயம் மேகமூட்ட திரையின் வழியே தெரிந்தது. பசி வயிற்றை கிள்ளுவதால் நீர்ச் சோறாவது சாப்பிட்டு வரலாம் என்று வீட்டுக்குப் புறப்பட்டாள். நரித்தொல்லைக்கு பயந்து குட்டியினைத் தனது தோளில் இட்டு கருப்பங்கொல்லை வழியாக ஆடுகளை ஓட்டி வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.

கருப்பங்கொல்லையின் இறுதியிலுள்ள ஆலமரத்தை கடக்கும்போது "இந்தா பொண்ணு!" என்ற குரல்கேட்டது.

சத்தம் வந்த திசையை நோக்கினாள்.

யாருமில்லை.

ஆலமரத்தின் ஆக்கிரமிப்பு மிகப்பெரிய பரப்பளவில் இருந்தது. ஒரு அம்மாவாசையில் பக்கத்து டவுனில் இரண்டாவது ஷோ பார்த்துவிட்டு சைக்கிளில் திரும்பும்போது தன் தலையில் ஏதோ இடித்துவிட்டதால் தீ கொழுத்தி பார்க்கும்போது "ஒருத்தன் தூக்கு மாட்டி தொங்கிக்கிட்ருக்கான் புள்ள" என்று பக்கத்து வீட்டு மாமா சொன்னது ஏனோ இந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வந்து தொல்லை தந்தது.

காற்று மற்றும் குருவிகளின் சத்தம் மட்டுமே மேலோங்கி இருந்த ஆலமரத்தின் அருகாமையை கடக்கும்போது இரண்டாவது கிளையில் நாலு காலில் நகர்ந்துக்கொண்டிருந்த உருவத்தைப் பார்த்து நெஞ்சு பக்-கென்றது ரோஜாகனிக்கு.

"ச்சே குரங்கு" என்று அதிர்ந்தவளுக்கு ஒரு "குளோசப் பேஸ்ட்" விளம்பர சிரிப்பை உதிர்த்துவிட்டு "எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன"ன்னு நடையைக் கட்டியது குரங்கு.

ஏதோ மனப்பிரமைப் போல என்று தன்னுள் நினைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

"பக்தையே!, நான் தான் கடவுள் பேசறேன், கழுத்துல என்ன போட்ருக்கே?" என்றது குரல்.

ஆலமரத்தின் முடிவில் வாய்க்கால் கரையோரத்தில் மிகச்செழிப்பாக காட்டாம்ளி காடு. ஒரு குச்சியை தற்பாதுகாப்புக்கு எடுத்துக் கொண்டாள். ரப்பர் போல வளையும் பச்சை குச்சி என்பதால் தரையில் ஓடும் நல்ல பாம்பைக்கூட தைரியமாக விளாசலாம்.

"நீ கடவுளுங்கிறே எங்கழுத்துல என்னன்னு உனக்குத் தெரியாதா?" என்று
பயம் கலந்த படபடப்புடன் ரோஜாகனியிடமிருந்து பதில் வந்தது.

கடவுளின் பெயரால் காதலை சொல்வதற்காக எத்தனை தமிழ் சினிமாக்களில் கதாநாயகி, கதாநாயகன் ஆலமரத்தின் பின் நின்று பேசியிருக்கிறார்கள்.

"ஆ..அஹ்..ஹாாா.. எங்களுக்குன்னு ஒரு முறை இருக்கு. அப்படித்தான் பேசுவோம். வளவளன்னு பேசிக்கிட்டிருக்காம ஆட்டுக்குட்டியை எங்கிட்ட கொடுத்துட்டு திரும்பி பார்க்காம ஓடிடு! இல்லாட்டி அத கழுதையா மாத்திடுவேன்" என்றது குரல்.

"ஆட்டுக்குட்டியை கழுதையாக்க கடவுள் நீ கஷ்டப்படனுமா? பேசாம ரெண்டா மாத்திடு. உனக்கொண்ணு எனக்கொண்ணு எடுத்துக்கிடுவோம்". என்றாள் ரோஜாகனி.

சற்று தூரம்தான் சென்றிருப்பாள். மரத்திலிருந்து "தொப்" என்ற சத்தத்துடன் ஏதோ கீழே விழும் சத்தம் கேட்டவுடன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தவலுக்கு என்ன நடந்தது என்று புரிந்துப் போனது.

கத்தியில் செம்பருத்தியை தேய்த்த அதே ஆசாமி மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்ததான். அவனின் கத்தி இரண்டு அடிக்கு முன்னால் அவனைவிட்டு பிரிந்து கிடந்தது.

நிலைதடுமாறி விழுந்ததன் காரணமாக காதுகளிலிருந்து இரத்தம் இப்போதுதான் வழிய ஆரம்பித்திருந்தது. கத்தியில் தேய்க்கப்பட்ட உலர்ந்த செம்பருத்தியில் சிட்ரஸ் (எலுமிச்சை சாறு) கலந்ததால் வரும் இரத்தம் அல்ல. நிஜமானது.
 

அட்டவணை