Index

 

  

ஆராய்ச்சியாளரின் சிந்தனை?!

(நீதிக்கதை)

 

சிங்கம், சிறுத்தை, யானை, குரங்கு போன்ற வனவிலங்குகள் மனிதனால் பழக்கப்பட்டு, அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்து நடப்பதை ஸர்கஸில் பார்த்திருக்கிறோம்.

நீர்வாழ் உயிரினத்தில் டால்ஃபின், அதைப் பழக்குபரின் சொல்படி (முடிந்தவரை) சாகசங்கள் செய்வதும் நமக்குத் தெரியும்.

இவற்றின் தொடர்ச்சியாக ஓர் ஆராய்ச்சியாளர் தவளையைப் பழக்குவதற்கு முயற்சி செய்தார்.

பல நாட்கள் ஒரு தவளையைப் பழக்கி, அவர் "ஜம்ப்" என்று சொன்னதும் அத்தவளை ஒருமுறை குதித்துத் தாவும். இன்னொருமுறை "ஜம்ப்" சொன்னால், இன்னொரு தாவு தாவும்வரை பழக்கி விட்டார்..

ஆராய்ச்சியாளர் ஆயிற்றே! அத்தோடு விட முடியுமா?

தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு "ஜம்ப்" சொன்னார். வலியைப் பொறுத்துக் கொண்டு மற்ற மூன்று கால்களையும் பயன்படுத்தித் தவளை தாவியது.

அந்தத் தவளையின் இரண்டாவது காலையும் வெட்டி விட்டு "ஜம்ப்" சொன்னார். முயற்சியெடுத்துத் தவளை தாவி விட்டது.

பின்னர், மூன்றாவது காலையும் வெட்டி விட்டு "ஜம்ப்" சொன்னர். மிகவும் கஷ்டப் பட்டு, தன் எஜமானின் கட்டளையைத் தவளை நிறைவேற்றியது.

நான்காவது காலையும் வெட்டி விட்டு "ஜம்ப்" சொன்னபோது தவளை தாவவில்லை.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில்,

'நான்கு கால்களையும் வெட்டி விட்டால் தவளைக்குக் காது கேட்காது'

(இவ்வாறுதான் தம் ஆய்வுக் குறிப்பில் அந்த ஆராய்ச்சியாளர் எழுதினாராம்.)

 

oOo

 

அட்டவணை