بسم الله الرحمن الرحيم
அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்துப்
புகழும்!
அவனையே நாம் புகழ்கின்றோம்! அவனிடமே உதவி கோருகிறோம்!
அவனிடமே பாவமன்னிப்புத் தேடுகிறோம்! அவனிடமே தவ்பாச் செய்கிறோம்!
நம் ஆன்மாவின் தீங்கை விட்டும் நம்முடைய தீய செயல்களை விட்டும்
அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுகிறோம்!
அல்லாஹ் நேர்வழி காட்டியோரை எவராலும் வழிகெடுக்க முடியாது! அவன்
வழிகெடுத்துவிட்டோருக்கு எவராலும் நேர்வழிகாட்ட முடியாது!
இணைற்றவனான, தனித்தவனான அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியோர்
எவருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய
அடிமையாகவும் அவனது தூதராகவும் உள்ளார்கள் என்றும் நான் சாட்சி
கூறுகிறேன்.
சொர்க்கம் செல்ல காரணமாக அமையும் அமல்களின் சிறப்புகள் ளை கூறும்
சில ஹதீஸ்களை எனக்கும் என்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கும்
நினைவூட்டுவதற்காக ஒன்றிணைத்துள்ளேன். இதற்கு சுன்னாவின் ஒளியில்
சொர்க்கப் பாதை என்று பெயரிட்டுள்ளேன்.
- சொர்க்கத்தை கடமையாக்கும் செயல்களையும், சொர்க்கத்தில் நுழைய,
அங்கு வீடோ, கோட்டைகளோ கட்டப்பட, சொர்க்க வாயில்கள் திறக்கப்பட,
சொர்க்கத்தில் உயர்ந்த பதவி கிடைக்க, சொர்க்கக் கிரீடங்கள்
அணிவிக்கப்பட, சொர்க்கத்தில் பயிர்கள் நட ஆக இவைபோன்றவைகளுக்கு
காரணங்களாக அமையும் அமல்களை கொண்ட ஹதீஸ்களை இந்நூலில்
தொகுத்துள்ளேன்.
- மனிதன் தன் அமல்களின் காரணமாக மட்டும் சொர்க்கத்தில் நுழைந்துவிட
முடியாது. அமல்கள் சொர்க்கத்தில் நுழைய காரணமாக இருந்தாலும்
அல்லாஹ்வின் பெருங்கருணையினால்தான் மனிதன் சொர்க்கத்தில் நுழைய
முடியும் என்பதே மார்க்க நிலைபாடு.
(ادخلوا الجنة بما كنتم تعملون )
நீங்கள் செய்து கொண்டிருந்த (நல்லறங்களின்)
காரணத்தால் நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று அல்லாஹ்
கூறுகிறான். (அல்குர்ஆன் 16:32) இதில் சொர்க்கத்தில் நுழைய நல்ல
அமல்கள் காரணமாக அமைகின்றன என்பதை அல்லாஹ் உணர்த்துகிறான்.
அமல்களின் காரணத்தால் மட்டும் ஒருவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட
முடியாது. மாறாக அல்லாஹ்வின் பெருங்கருணையினால்தான் சொர்க்கத்தில்
நுழைய முடியும் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
فَإِنَّهُ لَا يُدْخِلُ أَحَدًا الْجَنَّةَ عَمَلُهُ قَالُوا وَلَا
أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَلَا أَنَا إِلَّا أَنْ
يَتَغَمَّدَنِي اللَّهُ بِمَغْفِرَةٍ وَرَحْمَةٍ
நிச்சயமாக எந்த மனிதரையும்
அவருடைய அமல் அவரை சொர்க்கத்தில் நுழைவித்துவிட முடியாது என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின்
தூதரே! உங்களைக் கூடவா? என்று கேட்டனர். அதற்கவர்கள், ஆம், நானும்
கூட, அல்லாஹ்வின் கருணையும் பவமன்னிப்பும் என்னை சூழ்ந்து
கொள்ளவில்லை என்றால் என்னைக் கூட என்னுடைய அமல் சொர்க்கத்தில்
நுழையச் செய்துவிடாது என்றார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல்
: புகாரீ 5986)
மற்றொரு அறிவிப்பவில்
وَاعْلَمُوا
أَنَّهُ لَنْ يَنْجُوَ أَحَدٌ مِنْكُمْ بِعَمَلِهِ
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக
உங்களில் எவரும் அவருடைய அமலின் காரணத்தால் -மறுமையில்-
வெற்றியடையந்துவிட முடியாது என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 5041)
மனிதன் செய்யும் நல்லறங்களுக்கு பகரமாக சொர்க்கம் கிடைப்பதில்லை.
மாறாக மனிதனின் நல்லறங்கள் சொர்க்கம் கிடைப்பதற்கு காரணமாகவே
அமைகின்றன. எனவே அல்லாஹ்வின் பெருங்கருணையின் காரணமாகத்தான்
சொர்க்கம் கிடைக்கிறது என்பதை மேற்கண்ட வசனமும் நபிமொழியும்
உணர்த்துகின்றன.
- மிகமுக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் யாதெனில் ஈமான்
இல்லாமல் நிறைவேற்றப்படும் எந்த நல்லறமும் சொர்க்கத்தைப் பெற்றுதர
ஒருபோதும் காரணமாக அமையாது. எனவே அனைத்து அமல்களும் முறையான
இறைநம்பிக்கையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
- சொர்க்கத்திற்கு மனிதனை அழைத்துச் செல்லும் செயல்களை அல்லாஹ்
அதிகமாக ஆக்கியிருப்பது அவன் தன் அடியார்கள் மீது செய்த
பெருங்கருணைதான். மனிதர்கள் பலதரப்பட்டவர்களாக வாழ்கின்றனர்.
சிலருக்கு சில அமல்களை செய்யும் சக்தியும் வாய்ப்பும் இருக்கும்.
மற்ற அமல்களை நிறைவேற்றும் சக்தியோ, வாய்ப்போ அவருக்கு கிடைக்காமல்
போய்விடலாம். பெற்றோருக்கு பணிவிடை செய்வது, அனாதைகளை அரவணைப்பது
போன்ற நல்லறங்களை இலகுவாக நிறைவேற்றிடும் ஒருவருக்கு தஹஜ்ஜுத்
தொழுவது, நஃபிலான நோன்பு நோற்பது போன்றவை சற்று சிரமமாக இருக்கலாம்.
தஹஜ்ஜுத் தொழுவது, நஃபிலான நோன்பு நோற்பது போன்ற நல்லறங்களை மிக
இலகுவாக நிறைவேற்றும் ஒருவருக்கு பெற்றோருக்கு பணிவிடை செய்வது,
அனாதைகளை அரவணைப்பது போன்றவை சற்று சிரமமாக இருக்கலாம்.
எனவே எந்த நல்லறங்களை உங்களால் செய்ய முடியுமோ, எதற்கு வாய்ப்புக்
கிடைக்கின்றவோ அவைகளை தவறவிட்டுவிடாமல் பயன்படுத்திக் கொண்டு
நன்மைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! உங்களால் நிறைவேற்றக் கடினமாகத்
தோன்றும் நல்லறங்களையும் செய்வதற்காக முயற்சித்துக் கொண்டிருங்கள்!
காலித் இப்னு மிஃதான் அல்கலாயீ அத்தாபியீ (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள் :
நன்மையின் வாயில் திறக்கப்பட்டுவிட்டால் அதன்பால் விரைந்து
செல்லுங்கள்! ஏனெனில் அது எப்போது மூடப்படும் என்று உங்களுக்குத்
தெரியாது.
இந்த நபிமொழித் தொகுப்பை பள்ளிவாயிலில் பொதுமக்களுக்கு வாசித்துக்
காட்டுமாறு பள்ளிவாயில் இமாம்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இதன்
மூலம் பயனடையும் வாய்ப்பை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கலாம்.
இந்நூழை எழுதியவருக்கும் அதனை வாசிப்பவருக்கும் அதனை
செவிமடுப்பவருக்கும் இந்நூலின் மூலம் பயனடையும் வாய்ப்பை அல்லாஹ்
ஏற்படுத்துவானாக! அவனே செவியேற்பவன், பதிலளிப்பவன்.
மார்க்கச் சகோதரரே! இறுதியாக ஒரு வேண்டுகோள்! வெகு தொலைவில்
இருக்கும் உங்களுடைய மார்க்கச் சகோதரன் -எனக்காக- நல்லவற்றை
வேண்டிப் பிரார்த்திக்க மறந்துவிடாதீர்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்
11-2-1413 ல் எழுதி நிறைவு செய்யப்பட்டது.
அப்துல்லாஹ் இப்னு அலீ அல்ஜுஐஸின்
அல்கஸீம் - இஸ்லாமியக் கல்லூரி - ஷரீஆ பிரிவு
புரைதா - தபால் பெட்டி எண் : 281
ஸவூதி அரேபியா.
|