Download Unicode Font

 

 

Index

4- இஹ்ராமிற்காக நிய்யத் வைக்க வேண்டிய இடங்களும் எல்லைகளும்


இஹ்ராமிற்காக நிய்யத் வைக்க வேண்டிய எல்லைகள் (மீகாத்) : ஐந்து
1- துல்ஹுலைஃபா: இது மதீனா வாசிகளுக்குரிய எல்லையாகும். இதனை இன்று அப்யார் அலி என மக்கள் அழைக்கின்றனர்.

2- ஜுஹ்ஃபா: இது ஷாம் (பலஸ்த்தீன், சிரியா, லெபனான், ஜோர்டான்) தேசத்தினருக்குரிய எல்லையாகும். இது ராபிக் எனும் ஊரை அடுத்துள்ள அழிந்துவிட்ட ஒரு கிராமமாகும். இன்று மக்கள் ராபிகிலிருந்தே இஹ்ராமிற்காக நிய்யத் வைக்கின்றனர். ராபிகிலிருந்து இஹ்ராமிற்காக நிய்யத் வைத்தவர் -மீகாத்- எல்லையிலிருந்து நிய்யத் வைத்தவராகவே கருதப்படுவார். ஏனெனில் ராபிக் எனும் ஊர் எல்லைக்கு சற்று முன்னர்தான் உள்ளது.

3- கர்னுல் மனாஸில்: இது நஜ்த் (ரியாத், தம்மாம்) வாசிகளுக்குரிய எல்லையாகும். இதனை இன்று ஸைல் என்று அழைக்கின்றனர்.

4- யலம்லம்: இது யமன் தேசத்தினருக்குரிய எல்லையாகும்.

5- தாதுஇர்க்: இது ஈராக் வாசிகளுக்குரிய எல்லையாகும்.

நபி (ஸல்) அவர்கள் இந்த எல்லைகளை நாம் மேலே குறிப்பிட்டவர்களுக்கும் ஹஜ், உம்ரா செய்யும் நோக்கத்தில் அவ்வழியில் வருகின்ற பிறருக்கும் எல்லைகளாக நிர்ண யித்தார்கள். எனவே -ஹஜ், உம்ராவிற்காக- அவ்வழியில் செல்பவர் அங்கிருந்து இஹ்ராமிற்காக நிய்யத் வைப்பது கடமை யாகும். ஹஜ், உம்ராச் செய்யும் நோக்கமிருந்தும் இஹ்ராமின்றி அவ்வழிகளைக் கடப்பது கூடாது. அவ்வாறு கடப்பது தரை மார்க்கமாகவோ, ஆகாயமார்க்கமாகவோ இருந்தாலும் சரியே! ஏனெனில் எல்லைகளை நிர்ணயித்த நபி (ஸல்) அவர்கள்

 

( . . فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ . . )

அந்த எல்லைகள் அவர்களுக்கும் (அதாவது அந்தந்த தேசத்தினருக்கும்) ஹஜ், உம்ரா நோக்கத்தில் அவ்வழியைக் கடந்து செல்லும் அவர்களல்லாத பிறருக்கும் உரியன என்று எல்லைகளைப் பொதுவாகக் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூல் : முஸ்லிம்)

ஹஜ், உம்ராச் செய்வதற்காக மக்காவிற்கு விமானத்தில் வருபவர் அதில் ஏறும் முன்னரே குளிப்பு போன்ற தேவைகளை நிறைவேற்றி ஆயத்தமாகிக் கொள்ளவேண்டும். எல்லையை நெருங்கும் போது இஹ்ராமுடைய ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். (ஹஜ்ஜுக்கு முன்) உம்ராச் செய்ய போதிய அவகாசம் இருந்தால் உம்ராவிற்காக தல்பியாச் சொல்லிக் கொள்ள வேண்டும். ஹஜ்ஜுக்கு முன் உம்ராச் செய்ய அவகாசம் மிகக் குறைவாக இருந்தால் ஹஜ்ஜிற்காக தல்பியாச் சொல்லிக் கொள்ள வேண்டும்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னரோ அல்லது எல்லையை நெருங்குவதற்கு முன்னரோ இஹ்ராமுடைய ஆடைகளான மேலாடை மற்றும் கீழாடையை அணிந்து கொள்வதில் தவறில்லை. எனினும் எல்லையைக் கடக்கும் போது அல்லது அதனை நெருங்கிய பின்னர்தான் (ஹஜ், உம்ரா) வழிபாட்டை ஆரம்பிப்பதாக எண்ணி, தல்பியாக் கூறவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் எல்லையில்தான் இஹ்ராமிற்காக நிய்யத் வைத்தார்கள். நபி (ஸல்) அவர்களை மார்க்கத்தின் மற்ற காரியங்களில் பின்பற்றுவது கடமையாக இருப்பது போன்று இதிலும் பின்பற்றுவது அவசியமாகும்.


لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ

நிச்சயமாக உங்களுக்கு அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்
(அல்குர்ஆன் 33:21)


( خُذُوْا عَنِّيْ مَنَاسِكَكُمْ)

என்னிடமிருந்து உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்; போது கூறினார்கள். (நூல் : பைஹகீ, முஸ்லிம்)

ஹஜ், உம்ராச் செய்யும் எண்ணம் இல்லாமல் மக்காவுக்கு வருகை தரும் வியாபாரி, எரிபொருள் மற்றும் தபால் வினியோகம் செய்பவர் போன்றோர் (ஹஜ், உம்ராச் செய்ய) விரும்பினாலே தவிர அவர்கள் இஹ்ராம் அணிய வேண்டிய தில்லை. ஏனெனில் எல்லைகளைப் பற்றி வந்துள்ள மேற்கண்ட நபிமொழியில் :


( . . فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ . . )

-இஹ்ராமிற்காக நிய்யத் வைக்கவேண்டிய- அந்த எல்லைகள் அவர்களுக்கும் (அதாவது அந்தந்த தேசத்தினருக்கும்) ஹஜ், உம்ராச் செய்யும் நோக்கத்தில் அவ்வழியைக் கடந்து செல்லும் அவர்களல்லாத பிற பகுதியினருக்கும் உரியன என்று வந்துள்ளது. இதன் மூலம் ஹஜ், உம்ராவின் நோக்கமின்றி எல்லைகளைக் கடப்பவர் இஹ்ராம் அணியவேண்டியதில்லை என்பதை அறியலாம். - இது அல்லாஹ் தன் அடியார்களுக்குச் செய்த கிருபையும் அவர்கள் மீது காட்டிய கருணையுமாகும். இதற்கான அனைத்துப்புகழும் நன்றியும் அவனுக்கே உரியன.

மக்காவை வெற்றி கொண்ட ஆண்டு மக்காவிற்கு வருகை தந்த நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. மாறாக தலையில் கவசத் தொப்பி அணிந்திருந்த நிலையில் தான் மக்காவிற்குள் நுழைந்தார்கள் என்பது இக்கூற்றை உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் அப்போது ஹஜ், உம்ராவின் எண்ணத்தில் வருகை தரவில்லை. மாறாக மக்காவை வெற்றி கொண்டு, அங்குள்ள இணை(வைப்புச் சாதனங்களான சிலைக)ளை அப்புறப்படுத்தும் நோக்கத்தில்தான் வருகை தந்தார்கள்.

எல்லையின் உட்பகுதிகளான ஜித்தா, உம்மு சுலம், பஹ்ரா, அஷ்ஷராயிஃ, பத்ர், மஸ்தூரா போன்ற ஊர்களில் வசிப்பவர் கள் மேற்கூறப்பட்டுள்ள ஐந்து எல்லைகளில் எதற்கும் செல்ல வேண்டியதில்லை. மாறாக அவர்கள் வசிக்கும் இடமே அவர் களின் எல்லையாகும். அங்கிருந்தே ஹஜ், உம்ராவின் இஹ்ராமிற்காக நிய்யத் வைத்து கொள்ளலாம்.
(எல்லைக்குள் வசிக்கும்) ஒருவருக்கு எல்லைக்கு வெளியே மற்றொரு வீடு இருந்தால் அவர் எல்லையிலிருந்தோ, அல்லது அதைவிட மக்காவிற்கு மிக அருகில் இருக்கும் தனது வீட்டிலிருந்தோ இவ்விரண்டில் தான் விரும்பிய இடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ள அனுமதியுள்ளது. எல்லைகளைப் பற்றி குறிப்பிடும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள்


(فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ حَتَّى إِنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا)

-இஹ்ராமிற்காக நிய்யத் வைக்கவேண்டிய- அந்த எல்லை களுக்கு உட்பகுதியில் இருப்பவர்கள் தன் வீட்டிலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும். எதுவரையெனில், மக்கா வாசிகள் மக்காவிலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ்-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

ஹரம் எல்லையினுள் இருப்பவர் உம்ராச் செய்ய நாடினால் அவர் ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியேறி (ஹில்லுடைய பகுதிக்கு)ச் சென்று அங்கிருந்து உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள் உம்ராச் செய்ய வேண்டுமென கூறியபோது, அவர்களை ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியே அழைத்துச் சென்று அங்கிருந்து இஹ்ராமிற்காக நிய்யத் வைத்து, அழைத்து வருமாறு அவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் -ரலி, நூல் : இப்னுமாஜா)

உம்ராச் செய்பவர் ஹரமுடைய எல்லையினுள் இஹ்ராம் அணியக்கூடாது, மாறாக உம்ராவிற்காக ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியில்தான் இஹ்ராம் அணிய வேண்டும் என்பதை இச்செய்தி அறிவிக்கிறது.

எல்லையைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட நபிமொழியின் (பொதுவான) சட்டத்தை இந்த நபிமொழி குறிப்பான சட்டமாக்கி விட்டது. அதாவது, அதில் மக்காவாசிகள் மக்காவிலிருந்தே இஹ்ராம் அணிய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஹஜ்ஜுக்குரியதுதானே தவிர உம்ராவிற்குரியது அல்ல (என்பதை -ஆயிஷா (ரலி) அவர்களின் சம்பவத்தின் வாயிலாக அறியலாம்).

ஹரமின் எல்லையிலிருந்தே உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ள அனுமதியிருந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமை விட்டும் வெளியேறிச் செல்லக் கட்டளையிடாமல், அவர்கள் தங்கியிருந்த (ஹரம்) பகுதியிலிருந்தே இஹ்ராம் அணிய அனுமதித்திருப்பார்கள். இது மிகத் தெளிவான செய்தியாகும். இதுவே மார்க்க அறிஞர்கள் பெரும்பாலானோரின் கூற்றாகும். இம்முடிவின் மூலம்தான் இரு நபிமொழிகளையும் ஒருங் கிணைத்துச் செயல்பட முடியும். எனவே இதுவே முஃமினுக்குப் பேணுதலான முடிவாகும்.
-அல்லாஹ் நேர்வழிகாட்டப் போதுமானவன் -

ஹஜ்ஜுக்கு முன்பு உம்ராச் செய்துவிட்டவர்களில் சிலர், ஹஜ்ஜுக்குப் பிறகு தன்யீம் அல்லது ஜிஃரானா போன்ற இடங்களிலிருந்து (இஹ்ராம் அணிந்து) அதிகமான உம்ராக்களைச் செய்கின்றனர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது. மாறாக அவ்வாறு செய்யாமல் இருப்பதே சிறந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

நபி (ஸல்) அவர்களோ, நபித் தோழர்களோ ஹஜ்ஜை நிறைவேற்றியதற்குப் பிறகு உம்ராச் செய்யவில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் தன்யீமிலிருந்து உம்ராச் செய்ததற்குக் காரணம் அவர்கள் மக்காவில் நுழையும் போது மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதால் மக்களுடன் சேர்ந்து உம்ராச் செய்யமுடிய வில்லை. அதனால் அவர்கள் எல்லையிலிருந்து உம்ராவிற்காக அணிந்த இஹ்ராமிற்கு பகரமாக ஒரு உம்ராச் செய்ய வேண்டுமென வேண்டியபோது நபி (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதித்தார்கள். எனவே அவர்கள் இரண்டு உம்ராக்களை நிறைவேற்றியவரானார்கள். ஒன்று ஹஜ்ஜுடன் இணைந்த உம்ரா. மற்றொன்று தனியாகச் செய்த உம்ரா.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட நிலையைப் போன்று எவருக்கேனும் ஏற்பட்டால் இந்த ஆதாரங்களின் அடிப்படையிலும் அது முஸ்லிம்களுக்கு பொதுச் சலுகை என்ற அடிப்படையிலும் ஹஜ்ஜுக்குப் பிறகு (ஒரு) உம்ராச் செய்வதில் தவறில்லை.

ஹஜ் செய்பவர் மக்காவில் நுழையும் போது செய்த உம்ராவைத் தவிர ஹஜ்ஜுக்குப் பிறகு மற்றொரு உம்ராவில் ஈடுபடுவது பொதுமக்களுக்குக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. மேலும் அது அதிக நெரிசலுக்கும் விபத்துகளுக்கும் காரணமாக அமைகிறது. அதற்கெல்லாம் மேலாக, இது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கும் நடைமுறைக்கும் மாற்றமாக அமைந்துள்ளது.
- அல்லாஹ் நேர்வழி காட்டப் போதுமானவன்-

 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்