Download Unicode Font

 

 

Index

5- ஹஜ்ஜுடைய காலங்கள் அல்லாத நாட்களில் எல்லையை அடைபவருக்குரிய சட்டம்


அறிந்து கொள்ளுங்கள்! -இஹ்ராமிற்காக நிய்யத் வைக்கும்- எல்லையை அடைபவருக்கு இரண்டு நிலைகள் உள்ளன.
முதலாம் நிலை : ஒருவர் ஹஜ்ஜுடைய மாதங்களல்லாத ஷஃபான், ரமலான் போன்ற மாதங்களில் எல்லையை அடைவது.

இவர் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து, அதனை மனதால் நினைத்து லப்பைக்க உம்ரதன் என்றோ, அல்லாஹும்ம லப்பைக்க உம்ரதன் என்றோ நாவால் மொழிவார். பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் தல்பியாவைக் கூறுவார்.

 

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيْكَ لَكَ

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்! லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக்! இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக்க வல் முல்க்! லாஷரீக்க லக்!

(கருத்து: யாஅல்லாஹ் உன் அழைப்பை ஏற்று வந்துள்ளேன்! உனக்கு இணை யாருமில்லை. நிச்சயமாக அனைத்துப் புகழும், அனைத்து அருட்கொடைகளும் ஆட்சி அதிகாரமும் உனக்கே உரியன! உனக்கு இணை யாருமில்லை!)

இந்த தல்பியாவையும் அல்லாஹ்வை நினைவு கூறும் திக்ர்களையும் கஃபாவை வந்தடையும் வரை அதிகமாகக் கூறிக் கொண்டிருக்கவேண்டும். கஃபாவை வந்தடைந்தவுடன் தல்பியாவை நிறுத்தி விட்டு, கஃபாவை ஏழு முறை வலம் வந்து -தவாஃப்- செய்யவேண்டும். பிறகு மகா(ம் இப்ராஹீ)முக்குப் பின் பகுதியில் இரண்டு ரகஅத்கள் தொழுவார். பிறகு ஸஃபாவை நோக்கிச் சென்று ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றி -ஸயீ- செய்ய வேண்டும். பிறகு தலை முடியை மழித்துக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ வேண்டும். இத்துடன் உம்ராவின் கிரியைகள் நிறைவடைந்துவிடும். இதற்குப் பிறகு இஹ்ராமின் காரணத்தால் தடுக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும் ஹலால் ஆகிவிடும்.

இரண்டாம் நிலை : ஒருவர் ஷவ்வால், துல்கஃதா மற்றும் துல்ஹஜ்ஜின் முந்தய 10 நாட்கள் ஆகிய ஹஜ்ஜுடைய மாதங்களில் எல்லையை அடைவது.

இவர் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றும் இஃப்ராதையோ, ஹஜ்ஜையும் உம்ராவையும் பிரித்து நிறைவேற்றும் தமத்துஃவுக்குரிய உம்ராவையோ, அல்லது இரண்டையும் இணைத்து நிறைவேற்றும் கிரானாகவோ ஆக இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவி;ன் போது துல்கஃதா மாதத்தில் எல்லையை அடைந்தபோது இம்மூன்று வழிபாடுகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள தோழர்களுக்கு அனுமதியளித்தார்கள்.

எனினும் ஹதி எனும் பலிப்பிராணியை தன்னுடன் கொண்டு வராதவர்கள் உம்ராவிற்காக நிய்யத் வைத்து இஹ்ராம் அணிந்து கொள்வதே சுன்னத்தாகும். அதன் பிறகு அவர் -ஹஜ்ஜுடைய காலங்கள் அல்லாத பிற காலத்தில் எல்லையை அடைந்தவர் விஷயத்தில் நாம் மேற்கூறிய முறையில் (உம்ரா) கிரியைகளை நிறை வேற்ற வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மக்காவை நெருங்கியபோது (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்திருந்த) தமது தோழர்களுக்கு, அவர்களின் இஹ்ராமை உம்ராவிற்காக மாற்றிக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். அதனை மக்கா வந்தடைந்த பின்னரும் வலியுறுத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க நபித்தோழர்களும் தவாஃப் மற்றும் ஸயீ செய்து முடியைக் குறைத்து இஹ்ராமைக் களைந்தார்கள்.

தன்னுடன் பலிப்பிராணியை கொண்டுவந்தவர்கள் துல்ஹஜ் 10-ம் நாளில் இஹ்ராமை களையும்வரை இஹ்ராமுடனேயே இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டி ருந்தார்கள். அதனால் அவர்களைத் தவிர மற்ற அனைவரும் உம்ராவிற்குப் பின் இஹ்ராமைக் களைந்து விட்டனர்.
பலிப் பிராணியை தன்னுடன் கொண்டுவருபவர் ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் சேர்த்து (கிரானாக) நிய்யத் வைத்து இஹ்ராம் அணிவது சுன்னத்தாகும். ஏனெனில் பலிப் பிராணியை தன்னுடன் கொண்டுவந்த நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்.

பலிப்பிராணியுடன் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்திருந்த தமது தோழர்களுக்கு உம்ராவுடன் ஹஜ்ஜையும் இணைத்து (கிரானாக) தல்பியாச் சொல்லுமாறும் அவ்விரண்டையும் 10-ம் நாளில் நிறைவு செய்யும் வரை இஹ்ராமைக் களையக் கூடாது என்றும் கட்டளையிட்டார்கள்.

பலிப்பிராணியை தன்னுடன் கொண்டுவந்தவர் ஹஜ்ஜுக்காக மட்டும் (இஃப்ராதாக) இஹ்ராம் அணிந்திருந்தாலும் -கிரான் ஹஜ் செய்பவர் போன்று- 10-ம் நாள் வரை இஹ்ராமுடனேயே இருக்க வேண்டும்.

பலிப்பிராணியை தன்னுடன் கொண்டுவராதவர் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றும் இஃப்ராதாகவோ, அல்லது ஹஜ், உம்ரா இரண்டையும் இணைத்து நிறைவேற்றும் கிரானாகவோ இஹ்ராம் அணிந்திருந்தால் (10-ம் நாள் வரை) அவர் இஹ்ராமுடனேயே இருக்கத் தேவையில்லை. மாறாக அவர் தனது இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொண்டு தவாஃப் மற்றும் ஸயீ செய்து முடியைக் குறைத்து இஹ்ராமைக் களைந்துவிடுவதே சுன்னத்தாகும் என்பதை இதன் மூலம் அறியலாம். நபி (ஸல்) அவர்கள் பலிப் பிராணியைத் தன்னுடன் கொண்டுவராத தமது தோழர்களுக்கு இவ்வாறே கட்டளையிட்டார்கள். எனினும் தாமதமாக (மக்காவிற்கு) வருகை தருபவர் இவ்வாறு (உம்ராச்) செய்வதினால் ஹஜ் செய்ய முடியாது போய்விடும் என்று பயப்படுவாரானால் அவர் தனது இஹ்ராமுடனேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவதால் குற்றமில்லை.
-அல்லாஹ் மிக அறிந்தவன்-

இஹ்ராம் அணிபவர் நோய் அல்லது எதிரியின் பயம் போன்றவற்றால் தனது (ஹஜ், உம்ரா) வழிபாட்டை நிறைவேற்றமுடியாமல் போகலாம் என்று பயப்படுவாரானால் அவர் இஹ்ராம் அணியும் போது, (ஹஜ், உம்ராவை நிறைவேற்ற முடியாதவாறு) ஏதாவது ஒரு தடை என்னைத் தடுத்து விட்டால் நீ என்னைத் தடுத்த இடமே நான் இஹ்ராமைக் களையுமிடம் எனக் கூறுவது விரும்பத்தக்க செயலாகும்.

ளுபாஆ பின்த் சுபைர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நோயாளியாக இருக்கும் நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்! (இந்நிலையில் நான் எவ்வாறு நடந்து கொள்வது?) என்று கேட்டபோது, நீ என்னைத் தடுக்குமிடமே நான் இஹ்ராமைக் களையுமிடம்! என்ற நிபந்தையுடன் நீ ஹஜ் செய்! என்று பதிலளித்தார்கள்.
(நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

இந்த நிபந்தனையின் பயன் யாதெனில், இஹ்ராம் அணிந்தவரை அவரது வழிபாட்டை முழுமையாக நிறை வேற்றுவதை விட்டும் நோயோ அல்லது எதிரியோ தடுத்துவிட்டால் அவ்விடத்திலேயே இஹ்ராமைக் களைந்து விடலாம். மேலும் அதற்காக எந்தக் குற்றப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.
 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்