Download Unicode Font

 

 

Index

7- இஹ்ராமிற்காக நிய்யத் வைத்துள்ளவருக்கு தடுக்கப்பட்டவைகளும் அனுமதிக்கப்பட்டவைகளும்


ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இஹ்ராமிற்காக நிய்யத் வைத்தபின் முடி, நகம் எடுப்பதும், நறுமணம் பூசுவதும் கூடாது.

தைக்கப்பட்ட எந்த ஆடைகளையும் ஆண்கள் அணிவது கூடாது.

முழுமையாக வெட்டித் தைக்கப்பட்ட சட்டை போன்றவைகளும் சிலபகுதிகள் மட்டும் தைக்கப்பட்ட பனியன், பேண்ட், ஷு, சாக்ஸ் போன்றவைகளும் இத்தடையில் அடங்கும். (இஹ்ராமிற்காக) கீழாடை கிடைக்காதவர் பேண்ட் அணிந்து கொள்ள அனுமதியுள்ளது. அதுபோல் செருப்புக் கிடைக்காதவர் ஷு (காலுறை) அணிந்து கொள்ள அனுமதியுள்ளது. (அதனை செருப்பைப் போன்று மாற்றுவதற்காக) அதன் மேற்பகுதியை வெட்டி விடத் தேவையில்லை.

 

( مَنْ لَمْ يَجِدْ إِزَارًا فَلْيَلْبَسْ سَرَاوِيلَ وَمَنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ )

-இஹ்ராமிற்காக- கீழாடை கிடைக்காதவர் பேண்ட் அணிந்து கொள்ளட்டும்! செருப்புக் கிடைக்காதவர் காலுறை அணிந்து கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்-ரலி, நூல்: புகாரீ, முஸ்லிம்)

செருப்புக் கிடைக்காத நிலையில் ஷு (காலுறை) அணிந்தால் அதன் மேற்பகுதியைத் துண்டித்துக் கொள்ளவேண்டும் எனக் கட்டளையிடும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உள்ளது. எனினும் இச்சட்டம் பிறகு மாற்றப்பட்டு விட்டது. இஹ்ராம் அணிபவர் அணியவேண்டிய ஆடைகளைப் பற்றி மதினாவில் வினவப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள். அதன் பிறகு செருப்பு இல்லாதவர்கள் காலுறை அணிந்து கொள்ளலாம் என அரஃபாவில் உரை நிகழ்த்தும் போது அனுமதித்தார்கள். அதனை துண்டித்துக் கொள்ளுமாறு அவ்வுரையில் கட்டளையிடவில்லை.

மதினாவில் நபி (ஸல்) அவர்களின் பதிலை செவிமடுக் காதவர்களும் இந்தப் பிரசங்கத்தில் கலந்து கொண்டிருந்தனர். -ஒரு சட்டம் சொல்லும்போது- தேவைப்படும் நேரத்தில் விளக்கமளிக்காமல் அதனைப் பிறகு கூறுவதற்கு அனுமதி இல்லை என்பதே ஹதீஸ் மற்றும் சட்டக்கலையில் கடைபிடிக்கப்படும் விதியாகும். எனவே இதன் மூலம் (காலுறையை) வெட்டி விடுவதற்கான கட்டளை மாற்றப்பட்டு விட்டது என்பதே உறுதியாகிறது. அதனை கண்டிப்பாகத் துண்டித்தாக வேண்டும் என்றிருந்தால் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் அதனைத் தெளிவுபடுத்தி இருப்பார்கள்.
-அல்லாஹ் மிக அறிந்தவன்-

இஹ்ராமிற்காக நிய்யத் வைத்திருப்பவர் கரண்டைக்குக் கீழுள்ள கட்ஷு போன்றவற்றை அணிவதற்கு அனுமதி உள்ளது. ஏனெனில் அதுவும் செருப்பின் வகையைச் சார்ந்தவையே!

கீழாடையை முடிந்து கொள்வதற்கும் கயிறு போன்றவை களால் அவற்றைக் கட்டிக் கொள்வதற்கும் அனுமதி உள்ளது. ஏனெனில் இவ்வாறு செய்யக் கூடாது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை.

இஹ்ராம் அணிந்துள்ளவர் குளித்துக் கொள்வதற்கும், தலையை கழுவிக் கொள்வதற்கும், தேவையேற்பட்டால் இலேசாக, மிருதுவாகச் சொரிந்து கொள்வதற்கும் அனுமதியுள்ளது. இதனால் தலையிலிருந்து (முடி) ஏதேனும் விழுந்துவிட்டாலும் குற்றமில்லை.

இஹ்ராமான நிலையிலிருக்கும் பெண்கள் முகத்திற்கென தைக்கப்பட்ட ஆடைகளான புர்கா, நிகாப் போன்றவை களையோ, கைக்கெனத் தைக்கப்பட்ட கையுறை போன்றதையோ அணிவது கூடாது.

(இரு கண்களும் தெரியும் விதமாக அணியும் ஆடைக்கு புர்கா என்றும் ஒரு கண் மட்டும் தெரியும் விதமாக உள்ள ஆடைக்கு நிகாப் என்றும் பெயர்)


( . . وَلَا تَنْتَقِبِ الْمَرْأَةُ الْمُحْرِمَةُ وَلَا تَلْبَسِ الْقُفَّازَيْنِ . . )

இஹ்ராம் அணிந்துள்ள பெண்கள் நிகாப் அணியக் கூடாது. கையுறைகளையும் அணியக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னுஉமர்-ரலி, நூல்: புகாரீ)

கையுறை என்பது : கம்பளி அல்லது பஞ்சு போன்றவை களால் -முன்னங்- கைகளின் அளவிற்குத் தைக்கப்பட்ட அல்லது நெய்யப்பட்ட ஆடையாகும்.

இவற்றைத் தவிர உள்ள சட்டை, பேண்ட், ஷு, சாக்ஸ் போன்ற தைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொள்ள பெண்களுக்கு அனுமதியுள்ளது.

அதுபோல் தேவை ஏற்படுமானால் முந்தானையை முகத்தில் தொங்கவிட அனுமதியுள்ளது. ஆனால் அதனை முகத்தில் கட்டிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு தொங்கவிடும் போது முகத்தில் முந்தானை பட்டாலும் குற்றமில்லை.


( كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ )

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்தவர்களாக இருந்த போது எங்களை வாகனக் கூட்டத்தினர் கடந்து செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் எங்களை நெருங்கும் போது எங்கள் தலையிலிருந்த முந்தானைகளை முகத்தில் தொங்கவிட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களைக் கடந்த பிறகு அதனை நீக்கிக் கொள்வோம் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(நூற்கள் : இப்னுமாஜா, அபூதாவூத், உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதுபோன்ற செய்தி தாரகுத்னீ எனும் நூலிலும் இடம் பெற்றுள்ளது.)

அதுபோல் ஆடை மற்றும் அது போன்றவைகளைக் கொண்டு கைகளை மூடிக் கொள்வதிலும் தவறில்லை.

அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் முகத்தையும் முன்கைகளையும் மறைத்துக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் நிச்சயமாக அவைகள் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளாகும். அல்லாஹு தஆலா கூறுகிறான் :
 

وَلاَ يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ إِلاَّ لِبُعُوْلَتِهِنَّ

மேலும் அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் . . . .  ஆகியவர்களைத் தவிர வெளிப்படுத்தவேண்டாம். (குர்ஆன் 24:31)

நிச்சயமாக முகமும் முன்கைகளும் அலங்காரப் பகுதிகள் என்பதிலும் அதிலும் முகம் மிகக் கவர்ச்சியுடையது என்பதிலும் சந்தேகமில்லை. அல்லாஹுத் தஆலா கூறுகிறான்:


وَإِذَا سَأَلْتُمُوْهُنَّ مَتَاعاً فَسْأَلُوْهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ

மேலும் நீங்கள் (நபியின் மனைவியர்களான) அவர்களிடம் யாதொரு பொருளையும் கேட்(க நேரிட்)டால் நீங்கள் திரைக்கு அப்பால் இருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள்! அ(வ்வாறு செய்வ)து உங்கள் உள்ளங்களுக்கும் அவர்கள் உள்ளங்களுக்கும் பரிசுத்தமானதாகும். (அல்குர்ஆன் 33:53)

முகத்தில் ஆடை படாமல் தடுக்க முந்தானைக்குக் கீழ் தொப்பி அணியும் பழக்கம் பல பெண்களிடம் காணப் படுகிறது. நாம் அறிந்தவரை இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமுமில்லை. இது மார்க்கச் சட்டமாக இருந்திருந்தால் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் சமுதாயத்தினருக்கு தெளிவு படுத்தியிருப்பார்கள். அதனை கூறாமல் விட்டிருக்கமாட்டார்கள்.

அணிந்துள்ள இஹ்ராம் ஆடையில் அழுக்கு அல்லது அதுபோன்ற ஏதாவது (அசுத்தங்கள்) பட்டுவிட்டால் அதனை கழுவிக் கொள்ளவோ, அல்லது அதுபோன்ற (வேறு இஹ்ராம்) ஆடைகளை மாற்றிக் கொள்ளவோ ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுமதியுள்ளது.

இஹ்ராம் அணிந்தவர் குங்குமமோ அல்லது வர்ஸ் எனும் நறுமணமிக்க தாவரச் சாயமோ பூசப்பட்ட எந்த ஆடை யையும் அணிவதற்கு அனுமதி கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இதனைத் தடுத்துள்ளார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)
இஹ்ராம் அணிந்துள்ளவர் இச்சையான செயல்கள், பாவங்கள், வீண் தர்க்கங்கள் ஆகியவைகளை விட்டும் விலகிக்கொள்வது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்:


اَلْحَجُّ أَشْهُرٌ مَعْلُوْمَاتٌ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلاَ رَفَثَ وَلاَ فُسُوْقَ وَلاَ جِدَالَ فِي الْحَجِّ

ஹஜ்ஜுக்குரிய காலம் (ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் மாதத்தின் பத்தாம்நாள் அதிகாலை வரையுள்ள) அறியப்பட்ட மாதங்களாகும். ஆகவே, அவற்றில் எவரொருவர் (இஹ்ராம் கட்டுவதன் மூலம்) ஹஜ்ஜைத் (தன் மீது) கடமையாக்கிக் கொண்டால் தாம்பத்திய உறவு கொள்வதும், கெட்டபேச்சுக்கள் பேசுவதும், வீண் தர்க்கம் செய்வதும் ஹஜ்ஜில் கூடாது.
(அல்குர்ஆன் 2:197)


(مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ)

இச்சையான செயல்களிலும் பாவமான காரியங்களிலும் ஈடுபடாமல் ஹஜ் செய்பவர் -ஹஜ்ஜை நிறைவேற்றித் திரும்பும் போது- அவருடைய தாய் அவரை அன்று பெற்றெடுத்ததைப் போன்று (பாவமற்று) திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ)

அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள "ரஃபஸ்" எனும் வார்த்தை உடலுறவுக்கும் வெறுக்கத்தக்க சொல், செயல் அனைத்திற்கும் பயன்படுத்தப்படும்.
"ஃபுஸுக்" என்பது : அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் -பாவமான- செயல்களைக் குறிக்கும்.
"ஜிதால்" என்பது : அசத்தியமானவைகளிலும் பயனற்றவை களிலும் தர்க்கம் செய்வதைக் குறிக்கும்.

சத்தியத்தை நிலைநாட்டுவதற்காகவும் அசத்தியத்தை ஒழிப்பதற்காகவும் அழகிய முறையில் தர்க்கம் செய்வதில் தவறில்லை. மாறாக அவ்வாறு செய்ய வேண்டுமென மார்க்கம் கட்டளையிடுகிறது. அல்லாஹ் தஆலா கூறுகிறான் :


اُدْعُ إِلَى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِيْ هِيَ أَحْسَنُ

(நபியே!) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ, அதைக் கொண்டு அவர்களுடன் நீர் விவாதம்செய்வீராக! (குர்ஆன் 16:125)

இஹ்ராம் அணிந்துள்ள ஆண்கள் தொப்பி, துண்டு, தலைப்பாகை போன்ற தலையை மூடும் பொருட்களைக் கொண்டு தலையை மறைப்பது கூடாது. அதுபோல் முகத்தை மறைப்பதும் கூடாது. அரஃபா தினத்தன்று வாகனத்திலிருந்து விழுந்து இறந்துவிட்ட நபித்தோழரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது,


( اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ وَلَا تُخَمِّرُوا رَأْسَهُ وَلَا وَجْهَهُ فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا )

இவரை இலந்தை இலை கலந்த தண்ணீரால் குளிப்பாட்டுங்கள்! அவருடையை இரண்டு ஆடைகளிலேயே அவருக்கு கஃபனிடுங்கள்! அவருடைய முகத்தையும் தலையையும் மூடாதீர்கள்! ஏனெனில் நிச்சயமாக அவர் மறுமை நாளில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என்றார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம், இது முஸ்லிமில் இடம் பெற்ற வாசகமாகும்)

நிழலுக்காக குடையைப் பயன்படுத்துவதிலோ, வாகனத்தின் முகடு, கூடாரம், மரம் போன்றவைகளின் மூலம் நிழல் பெறுவதிலோ தவறில்லை. நபி (ஸல்) அவர்கள் ஜமரத்துல் அகபாவிற்குக் கல்லெறியும் போது அவர்களுக்கு நிழலுக்காகத் துணி பிடிக்கப்பட்ட செய்தியும் நபி (ஸல்) அவர்களுக்காக நமிரா எனும் இடத்தில் கூடாரம் அடிக்கப்பட்டு, அரஃபா தினத்தன்று சு10ரியன் உச்சி சாயும் வரை அதில் தங்கி இருந்தார்கள் என்ற செய்தியும் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.

நிலத்திலுள்ள வேட்டைப் பிராணிகளை வேட்டையாடுவது, வேட்டையாட உதவுவது, பிராணிகளை அதன் இடத்தை விட்டும் விரட்டுவது, திருமண ஒப்பந்தம் செய்வது, உடலுறவு கொள்வது, திருமணத்திற்காக பெண் நிச்சயிப்பது, இச்சையுடன் பெண்களைத் தொடுவது ஆகிய அனைத்துச் செயல்களும் இஹ்ராம் அணிந்துள்ள ஆண், பெண் அனைவரின் மீதும் தடுக்கப்பட்டுள்ளது.


( لَا يَنْكِحُ الْمُحْرِمُ وَلَا يُنْكِحُ وَلَا يَخْطُبُ )

இஹ்ராம் அணிந்துள்ளவர் திருமணம் செய்யக் கூடாது. (பிறருக்கு) திருமணம் செய்துவைக்கவும் கூடாது. திருமணத்தை நிச்சயிக்கவும் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உஸ்மான் -ரலி, நூல் : முஸ்லிம்)

இஹ்ராம் அணிந்துள்ளவர்கள் மறதியாகவோ. அறியாமலோ தைக்கப்பட்ட ஆடையை அணிந்து விட்டாலோ, தலையை மறைத்து விட்டாலோ அல்லது நறுமணங்களைப் பூசி விட்டாலோ அவர் மீது எந்தப் பரிகாரமும் கிடையாது. எனினும் (மறந்தவருக்கு) நினைவு வந்தவுடன், (அறியாதவர்) அறிந்தவுடன் அதனை நீக்கிவிட வேண்டும்.

அதுபோல் மறதியாகவோ அறியாமலோ -தலை-முடியை மழித்து விட்டால் அல்லது முடியில் ஏதேனும் (சிறுபகுதியை) எடுத்துவிட்டால் அல்லது நகத்தை வெட்டிவிட்டால் -சரியான கூற்றின்படி- அவர் மீது எந்தப் பரிகாரமும் கிடையாது.

முஸ்லிம்கள் -அவர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ, இஹ்ராமுடனோ, இஹ்ராமின்றியோ இருந்தாலும் சரியே- ஹரமுடைய எல்லைக்குள் உள்ள பிராணிகளை வேட்டையாடுவது, அதனை வேட்டையாட ஆயுதங்கள் வழங்குவது அல்லது காட்டிக் கொடுப்பது போன்ற வகையில் உதவுவது, அதனை அதன் இடத்திலிருந்து விரட்டுவது, ஹரமின் மரங்களை வெட்டுவது, அதன் பச்சைத் தாவரங்களைப் பிடுங்குவது, கீழே கிடக்கும் பொருளை (அதனை உரியவரிடம் ஒப்படைக்க) அறிவிப்புச் செய்பவரைத் தவிர பிறர் எடுப்பது ஆகிய அனைத்தும் அவர்கள் மீது ஹராமாகும்.


( فَإِنَّ هَذَا البَلَدَ- يعني : مكة -حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا يُعْضَدُ شَوْكُهُ وَلَا يُنَفَّرُ صَيْدُهُ وَلَا يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلَّا مَنْ عَرَّفَهَا وَلَا يُخْتَلَى خَلَاهَا )

நிச்சயமாக இந்த ஊர் -மக்கா- மறுமை நாள்வரை அல்லாஹ்வின் கண்ணியத்தால் - புனிதமாக்கப்பட்டுள்ளது. எனவே அதன் மரங்களை வெட்டக் கூடாது! அதன் பிராணி களை விரட்டக் கூடாது! அதில் கீழே கிடக்கும் பொருட்களை (உரியவரிடம் ஒப்படைக்க) அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறு எவரும் அதனை எடுக்கக் கூடாது. அதன் பச்சைத் தாவரங்களைப் பிடுங்கக் கூடாது! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் -ரலி, நூற்கள்; :புகாரீ, முஸ்லிம்)

மினாவும் முஸ்தலிஃபாவும் ஹரமின் எல்லைப் பகுதிக்குள் உள்ளன. ஆனால் அரஃபா ஹரமுக்கு வெளியே (ஹில் பகுதியில்) உள்ளது.
 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்