Download Unicode Font

 

 

Index

8- ஹஜ் செய்பவர் மக்காவில் நுழையும்போது செய்ய வேண்டியவைகளும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்த பின் செய்யும் தவாஃப் பற்றிய விளக்கங்களும்


இஹ்ராமின் நிய்யத் வைத்தவராக, மக்காவை வந்தடைபவர் நகருக்குள் நுழையும் முன் குளித்துக் கொள்வது விரும்பத்தக்க செயலாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்.

மஸ்ஜிதுல் ஹராமை வந்தடைந்து விட்டால் வலது காலை முன்வைத்து கீழ்காணும் துஆவைக் கூறுவது சுன்னத்தாகும்.

بِسْمِ اللهِ، وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ، أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ، وَبِوَجْهِهِ الْكَرِيْمِ، وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ، أَللَّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
(பொருள் : அல்லாஹ்வின் பெயர் கூறி நுழைகின்றேன். அல்லாஹ்வின் தூதர் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக! மகத்தான அல்லாஹ்வின் மூலமும், அவனுடைய கருணைமிக்க முகத்தின் மூலமும், அவனது பழமைமிகு அதிகாரத்தின் மூலமும் விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உனது அருள் வாயில்களை நீ எனக்குத் திறந்திடுவாயாக!)

(அறிவிப்பவர்கள் : ஃபாத்திமா -ரலி, அம்ர் பின் ஆஸ் -ரலி, நூற்கள் : இப்னுமாஜா, அபூதாவூத்)

இதனை (மஸ்ஜிதுல் ஹராம் உட்பட) எந்தப் பள்ளிவாயிலில் நுழைந்தாலும் கூறுவது சுன்னத்தாகும். மஸ்ஜிதுல் ஹராமில் நுழையும் போது மட்டும் கூறவேண்டிய பிரத்தியேக திக்ர் எதுவும் -நான் அறிந்தவரை- ஹதீஸில் இடம்பெறவில்லை.

உம்ராச் செய்பவர், -அவர் தமத்துஃ(விற்கான உம்ராச்) செய்பவரானாலும் சரியே- கஃபாவை வந்தடைந்துவிட்டால் தவாஃபை ஆரம்பிப்பதற்கு முன்னர் தல்பியாக் கூறுவதை நிறுத்திவிடவேண்டும். பின்னர் அவர் ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சென்று, அதனை முன்னோக்கி நின்று, வலது கையால் தொடுவார். வாய்ப்பிருந்தால் அதனை முத்தமிடுவார். அதனை முத்தமிட வேண்டும் என்பதற்காக மக்களை நெருக்கித் துன்புறுத்தக் கூடாது. அதனைத் தொடும்போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்றோ அல்லாஹு அக்பர் என்றோ கூறுவார்.

ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது சிரமமாக இருந்தால் அதனை கையாலோ, கைத்தடியாலோ, அல்லது அது போன்றவைகளைக் கொண்டோ தொட்டு, அதனை முத்த மிட்;டுக் கொள்வார்.

இவ்வாறு தொடுவதும் சிரமமாக இருந்தால் அல்லாஹு அக்பர் எனக் கூறியவாறு அதனை நோக்கி -வலது கையால்- சைகை செய்து கொள்ளவேண்டும். சைகை செய்ததை முத்தமிடக் கூடாது.

தவாஃப் செய்பவர் சிறிய, பெரிய தொடக்குகளை விட்டும் தூய்மையாக இருப்பது தவாஃப் நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்றாகும். ஏனெனில் தவாஃப் தொழுகை யைப் போன்றது. எனினும் தவாஃபில் (அவசியமான) பேச்சுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கஃபா இடதுபுறம் இருக்குமாறு (நின்று கொண்டு) தவாஃபை ஆரம்பிக்கவேண்டும். தவாஃபை ஆரம்பிக்கும்போது,
أَللَّهُمَّ إِيْمَانًا بِكَ، وَتَصْدِيْقًا بِكِتَابِكَ، وَوَفَاءً بِعَهْدِكَ، وَاتِّبَاعًا لِسُنَّةَ نَبِيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
(யாஅல்லாஹ்! உன்னை விசுவாசித்தவனாக, உன்னுடைய வேதத்தை உண்மைப்படுத்தியவனாக, உன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றியவனாக, உன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றியவனாக இதனை ஆரம்பிக்கின்றேன்) என்ற துஆவைக் கூறுவது சிறந்ததாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறகு -கஃபாவை- ஏழு சுற்றுக்கள் சுற்றவேண்டும். உம்ரா, தமத்துஃ, இஃப்ராத் அல்லது ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்துச் செய்யும் கிரான் ஆகியவைகளில் எதையேனும் நிறைவேற்ற மக்காவிற்கு வருபவர் முதலாவதாக செய்யும் தவாஃபின் முதல் மூன்று சுற்றுக்கள் முழுவதிலும் “ரமல்” செய்ய வேண்டும். ரமல் என்பது : நெருக்கமாக அடி எடுத்து வைத்து விரைவாக நடப்பதாகும். மீதமுள்ள நான்கு சுற்றுக் களை நடந்தவாறு சுற்றவேண்டும். ஒவ்வொரு சுற்றையும் ஹஜருல் அஸ்வதிலிருந்து தொடங்கி அங்கேயே முடிக்க வேண்டும். இந்தத் தவாஃபில் மட்டும் அனைத்துச் சுற்றுக் களிலும் இழ்திபாச் செய்வது விரும்பத்தக்க செயலாகும். இழ்திபா என்பது : மேலாடையின் நடுப்பகுதியை வலது புஜத்திற்குக் கீழே (அக்குள் பகுதியில்) இட்டு அதன் இரு ஓரங்களையும் இடது தோளின்மீது போட்டுக் கொள்வதாகும்.

சுற்றுக்களின் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டால் உறுதியானதை அதாவது, குறைந்த எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். சுற்றியது மூன்றா? நான்கா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் மூன்று என்றே முடிவெடுக்க வேண்டும். ஸயீயி(ல் சந்தேகம் வந்தா)லும் இவ்வாறே செய்துகொள்ள வேண்டும்.

தவாஃபை முடித்ததும் தவாஃபுடைய இரண்டு ரகஅத்கள் தொழுவதற்கு முன்னர் தனது மேலாடையை -தவாஃபிற்கு முன்பு அணிந்திருந்தது போல்- இரு புஜங்களையும் போர்த்தி, அதன் இரு பகுதிகளையும் நெஞ்சில் தொங்குமாறு போட்டுக் கொள்ளவேண்டும்.

பெண்கள் அலங்காரத்துடனும் நறுமணத்துடனும் மறைக்க வேண்டிய பகுதிகளை முறையாக மறைக்காமலும் தவாஃப் செய்வது தடுக்கப்பட்டுள்ள, கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டிய செயல்களாகும். எனவே தவாஃபின் போதும் அதல்லாத நிலைகளிலும் ஆண்களுடன் பெண்கள் கலக்கும் நிலை ஏற்படும் போது அலங்காரம் செய்து கொள்ளாமல் இருப்பதும் (உடலை முறையாக) மறைத்துக் கொள்வதும் கடமையாகும்.

ஏனெனில் நிச்சயமாக அவர்கள் மறைந்திருக்க வேண்டியவர்கள், அவர்களால் (ஆண்களுக்கு மனக்) குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்களின் முகங்களே அவர்களின் அழகின் வெளிப்பாடாகும். எனவே அதனை மஹ்ரமானவர்களை (கணவன் மற்றும் அவளைத் திருமணம் செய்யத் தடுக்கப்பட்டவர்களை)த் தவிர பிறருக்கு வெளிக்காட்ட அனுமதியில்லை. அல்லாஹு கூறுகிறான் :
 وَلاَ يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ إِلاَّ لِبُعُوْلَتِهِنَّ 
மேலும் அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் . . . ஆகியவர்களைத் தவிர வெளிப்படுத்தவேண்டாம். (குர்ஆன் 24:31)

ஹஜருல் அஸ்வதை முத்தமிடும்போது அன்னிய ஆண்கள் தங்களைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற நிலையிருந்தால் அவர்கள் தங்கள் முகத்தைத் திறந்து கொள்ள அனுமதி இல்லை. ஹஜருல் அஸ்வதைத் தொடவோ, முத்தமிடவோ எளிதாக வாய்ப்புக் கிடைக்காதபோது, ஆண்களின் நெரிசலுக்கிடையில் (கல்லை முத்தமிடச்) செல்வதற்கும் அனுமதியில்லை. மாறாக ஆண்களை விட்டும் விலகியே தவாஃப் செய்யவேண்டும். இவ்வாறு செய்வது ஆண்களின் நெரிசலுக்கிடையில் கஃபாவுக்கு அருகில் தவாஃப் செய்வதை விட அவர்களுக்குச் சிறந்ததும் அதிக நன்மையைப் பெற்றுத் தரும் செயலுமாகும்.

ஸயீயிலும் -முதலாவதாகச் செய்யும்- தவாஃபைத் தவிர பிற தவாஃப்களிலும் ரமலோ, இழ்திபாவோ செய்யத் தேவையில்லை. அதுபோல் பெண்கள் எந்த தவாஃபிலும் ஸயீயிலும் ரமலோ, இழ்திபாவோ செய்யக் கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வருகை தந்தபோது செய்த தவாஃபைத் தவிர மற்ற எதிலும் ரமலோ, இழ்திபாவோ செய்யவில்லை.

தவாஃப் செய்யும் போது தொடக்குகள், அசுத்தங்கள் ஆகியவைகளை விட்டும் தூய்மையாக இருக்கவேண்டும். மேலும் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக, அவனுக்குப் பணிந்தவர்களாக தவாஃப் செய்யவேண்டும். தவாஃபில் அதிகமாக திக்ர், துஆக்களில் ஈடுபடுவது விரும்பத்தக்க செயலாகும். அல்குர்ஆனில் ஏதேனும் சில வசனங்களை ஓதினால் அதுவும் சிறந்ததே!

இந்த தவாஃபிலோ, இது தவிர உள்ள பிற தவாஃப்களிலோ அல்லது ஸயீயிலோ குறிப்பிட்ட எந்த துஆவும் குறிப்பிட்ட எந்த திக்ரும் ஓதுவது கடமையல்ல. சிலர் தவாஃப் மற்றும் ஸயீயில் ஒவ்வொரு சுற்றிற்கும் குறிப்பிட்ட திக்ர், குறிப்பிட்ட துஆக்களை புதிதாக ஏற்படுத்தியிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக தன்னால் இயன்ற திக்ர், துஆக்களைக் கூறிக் கொள்வதே போதுமானதாகும்.

ருக்னுல் யமானியைக் கடக்கும் போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறியவர்களாக, அதனை வலது கையால் தொடவேண்டும். அதனை முத்தமிடக் கூடாது. அதனைத் தொடுவது சிரமமாக இருந்தால் அதனைத் தொடாமலேயே தவாஃபைத் தொடரலாம். அதனைக் கடக்கும் போது சைகை செய்வதோ, தக்பீர் கூறுவதோ கூடாது. நாமறிந்தவரை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக ஹதீஸ் வரவில்லை.

ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதிற்குமிடையில்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَاحَسَنَةًوَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَاعَذَابَ النَّارِ
(ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிர(த்)தி ஹஸனதன் வகினா அதாபன்னார்) என்று கூறுவது விரும்பத்தக்க செயலாகும்.
(பொருள் : எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இம்மையில் நற் பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கி யங்களைத் தந்தருள்வாயாக! மேலும் நரக வேதனையை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக!) (அல்குர்ஆன் : 2:201)

தவாஃபின் போது ஹஜருல் அஸ்வதைக் கடக்கும் போதெல்லாம் அல்லாஹு அக்பர் என்று கூறி அதனைத் தொட்டு, முத்தமிடுவது ஸுன்னத்தாகும். தொட்டு முத்தமிட வாய்ப்பு இல்லையெனில் அதனைக் கடக்கும் போதெல்லாம் தக்பீர் கூறியவர்களாக -வலது கையால்- சைகை செய்து கொள்ளவேண்டும்.

தவாஃப் செய்யும் போது மகாம் இப்ராஹீமுக்குப் பின்புறமோ, ஜம்ஜம் கிணற்றிற்குப் பின்புறமோ செல்வதில் தவறில்லை. அதிலும் குறிப்பாக நெரிசலான நேரத்தி;ல் அவ்வாறு செய்வதில் தவறே கிடையாது. மஸ்ஜிதுல் ஹராம் -பள்ளி- முழுவதும் தவாஃப் செய்யுமிடம்தான். எனவே பள்ளியின் மாடியில் தவாஃப் செய்தால் அதுவும் நிறைவேறிவிடும். எனினும் வாய்ப்பிருக்கும் போது கஃபாவுக்கு அருகில் தவாஃப் செய்வதே சிறந்தது.

தவாஃபை நிறைவேற்றிய பிறகு மகாம் இப்ராஹீமுக்கு பின்னால் தவாஃபுக்குரிய இரண்டு ரகஅத்களை தொழுவார். கூட்ட நெரிசல் போன்ற காரணத்தால் அங்கு தொழ வாய்ப்பில்லை எனில் பள்ளியின் எந்த இடத்திலும் அதனைத் தொழுது கொள்ளலாம். அத்தொழுகையில் முதல் ரகஅத்தில் ஃபாத்திஹா சு10ராவிற்குப் பிறகு குல் யாஅய்யுஹல் காஃபிரூன் சு10ராவையும் இரண்டாவது ரகஅத்தில் குல் ஹுவல்லாஹு அஹது சு10ராவையும் ஓதுவது சுன்னத்தும் மிகச் சிறந்தது மாகும். இவ்விரண்டும் அல்லாத வேறு ச10ராக்களை ஓதினாலும் தவறில்லை. இதன் பிறகு வாய்ப்பிருந்தால் ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சென்று வலது கரத்தால் தொடுவது நபிவழியாகும்.

பிறகு அவர் ஸஃபாவை நோக்கி அதன் வாயிலில் வெளியேறிச் சென்று மலையின் மீது ஏறுவார். அல்லது அதனருகில் நிற்பார். வாய்ப்பிருந்தால் அதன் மீது ஏறுவதே சிறந்தது. (ஸயீயின்) முதல் சுற்றை ஆரம்பிக்கும் போது
 إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ 
(நிச்சயமாக ஸஃபா மற்றும் மர்வா -எனும் இரு மலைகள்- அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களில் உள்ளவையாகும்) என்ற (அல்குர்ஆன் 2:158 -ம்) வசனத்தை ஓதுவார். பிறகு மலையின் மீது நின்று கொண்டு, கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை பெருமைப்படுத்தி, புகழ்ந்தவர்களாக,

لاَ إِلهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ، لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ، لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ اْلأَحْزَابَ وَحْدَهُ
(லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாPக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்.)
என்று கூறுவது விரும்பத்தக்க செயலாகும். பிறகு அவர் இரு கைகளையும் உயர்த்தி விரும்பிய துஆக்களைக் கேட்பார். இந்த திக்ர் மற்றும் துஆக்களை மூன்று முறை கூறுவார். பிறகு அங்கிருந்து இறங்கி மர்வாவை நோக்கிச் செல்வார். முதல் (பச்சை விளக்கு) அடையாளத்தை அடைந்ததிலிருந்து இரண்டாவது (பச்சை விளக்கு) அடையாளத்தை அடையும் வரை ஆண்கள் வேகமாக நடக்க வேண்டும். அவ்விரு அடையாளங்களுக்கு மத்தியில் பெண்கள் வேகமாக நடக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் -தங்கள்- அலங்காரங்களை மறைக்கவேண்டியவர்கள். எனவே அவர்கள் ஸயீயின் அனைத்துச் சுற்றுக்களிலும் நடந்தவாறே செல்ல வேண்டும்.

அதனைக் கடந்து சென்று மர்வா மலையில் ஏற வேண்டும் அல்லது அதனருகில் நிற்க வேண்டும். வாய்ப்பிருந்தால் அதன் மீது ஏறுவதே சிறந்தது. பிறகு ஸஃபாவில் சொன்னதை, செய்ததை (திக்ர், துஆக்களை)ப் போன்று மர்வாவிலும் செய்ய வேண்டும். ஆனால் (ஸஃபாவில் கூறிய)

 إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ 
என்ற (அல்குர்ஆன் 2:158-ம்) வசனத்தை மர்வாவில் கூறவேண்டியதில்லை. அவ்வசனத்தை முதல் சுற்றுக்காக ஸஃபாவில் ஏறும்போது மட்டுமே கூறுவார். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள்.

பிறகு அங்கிருந்து இறங்கி நடந்து செல்லவேண்டிய இடத்தில் நடந்தும், வேகமாகக் கடக்க வேண்டிய இடத்தை வேகமாகக் கடந்தும் ஸஃபா மலையை அடையவேண்டும். இவ்வாறு ஏழு முறை செல்லவேண்டும். (ஸஃபாவிலிருந்து மர்வா) செல்வது ஒரு சுற்றும், அங்கிருந்து (ஸஃபாவுக்குத்) திரும்புவது மற்றொரு சுற்றுமாகும். நபி (ஸல்) அவர்கள் மேற்கூறப் பட்டவாறே செய்துள்ளார்கள். மேலும் உங்களுடைய ஹஜ் வாழிபாட்டை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்! என்றும் கூறியுள்ளார்கள்.

ஸயீயில் முடிந்தளவு அதிகமாக திக்ர், துஆக்களில் ஈடுபடுவதும் சிறிய, பெரிய தொடக்குகளிலிருந்து தூய்மை யாக இருப்பதும் விரும்பத்தக்க செயலாகும். ஒருவர் உளுவின்றி ஸயீ செய்தால் அதுவும் நிறைவேறிவிடும். அதுபோல், தவாஃப் செய்தபின் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் (அந்நிலையிலேயே) அவர் ஸயீ செய்தால் அதுவும் நிறைவேறிவிடும். ஏனெனில் ஸயீயின் போது தூய்மையாக இருப்பது -நாம் மேற்கூறிய வாறு- விரும்பத்தக்க செயல்தானே தவிர அதனை நிறைவேற்றுவதற்கு தூய்மையாக இருப்பது நிபந்தனையல்ல.

ஸயீயை நிறைவேற்றிய பின் ஆண்கள் தலை(முடி)யை மழித்துக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ வேண்டும். எனினும் மழிப்பதே சிறந்தது. ஹஜ்ஜில் மழிப்பதற்காக (உம்ராவில்) குறைத்துக் கொண்டால் அதுவும் சிறந்ததே!

ஹஜ்ஜுக்குரிய நாட்களுக்கு மிக நெருக்கத்தில் மக்காவிற்கு வருவோர் ஹஜ்ஜில் (முடியை) மழித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக (உம்ராவில்) குறைத்துக் கொள்வதே சிறந்ததாகும். துல்ஹஜ் 4-ம் நாள் தோழர்களுடன் (மக்கா) வருகை தந்த நபி (ஸல்) அவர்கள், பலிப்பிராணிகளை தங்களுடன் கொண்டுவராதவர்களுக்கு (உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமைக் களைந்து விடுமாறும் (முடியை) குறைத்துக் கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள். மழித்துக் கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிடவில்லை.

தலையின் அனைத்துப் பகுதியிலும் உள்ள முடிகளைக் குறைப்பது அவசியமாகும். அதன் சில பகுதிகளை மட்டும் குறைப்பது போதுமானதாகாது. அதுபோல் சிலபகுதிகளை மட்டும் மழிப்பதும் போதுமானதாகாது.

பெண்களுக்கு (முடியை) குறைப்பது மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது கொண்டைப் பின்னல்களின் இறுதிப் பகுதியில் விரல் நுனியளவோ, அல்லது அதைவிடக் குறைவாகவோ முடிகளை வெட்டிக் கொள்ள வேண்டும். பெண்கள், இதைவிட அதிகமாக வெட்டிக் கொள்வது கூடாது.

இஹ்ராம் அணிந்தவர் மேற்கூறப்பட்டச் செயல்களைச் செய்துவிட்டால் உம்ராவை நிறைவேற்றியவராகிவிடுகிறார்.
- அல்ஹம்து லில்லாஹ்-

அதன் பிறகு இஹ்ராமின் காரணத்தால் தடுக்கப்பட்ட அனைத்தும் அவருக்கு அனுமதியாகிவிடும். எனினும் ஹரம் எல்லையின் வெளிப்பகுதியிலிருந்து தன்னுடன் பலிப்பிராணி யைக் கொண்டுவந்தவர் ஹஜ், உம்ரா இரண்டையும் நிறை வேற்றும் (10-ம் நாள்)வரை இஹ்ராமுடனே இருக்க வேண்டும்.

(இஃப்ராத்) ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் அணிந்தவரும், ஹஜ் மற்றும் உம்ரா இரண்டையும் (கிரானாக) நிறைவேற்ற இஹ்ராம் அணிந்தவரும் அவைகளை உம்ராவாக மாற்றிக் கொண்டு, தமத்துஃ ஹஜ் செய்பவரைப் போன்று நிறைவேற்று வது சுன்னத்தாகும். ஆனால் தன்னுடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர் இவ்வாறு -ஹஜ்ஜின் வகையை- மாற்றக் கூடாது. ஏனெனில் இஹ்ராமைக் களையுமாறு தம்முடைய தோழர்களுக்குக் கட்டளையிட்ட நபி (ஸல்) அவர்கள்,
( . . لَوْلَا أَنِّي سُقْتُ هَدْيًا لَأَحْلَلْتُ . . )
நிச்சயமாக நான் என்னுடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால் நிச்சயமாக நானும் இஹ்ராமைக் களைந்திருப்பேன் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : அஹமத்)

உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்துவிட்ட பெண்ணுக்கு மாதவிடாயோ, பிரசவ இரத்தமோ வந்துவிட்டால் தூய்மை யாகும் வரை தவாஃபோ, ஸயீயோ செய்யக் கூடாது. தூய்மையான பிறகு தவாஃப் மற்றும் ஸயீ செய்து, முடியை வெட்டிவிட்டால் உம்ரா நிறைவேறிவிடும்.

அப்பெண் துல்ஹஜ் 8-ம் நாளுக்கு முன்னால் தூய்மையாக வில்லையானால் அவள் தங்கியிருக்கும் இடத்திலிருந்தே ஹஜ்ஜுக்காக இஹ்ராமின் நிய்யத் வைத்துக் கொண்டு, மக்களுடன் மினாவுக்கு புறப்பட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்வதினால் அவள் ஹஜ், உம்ரா இரண்டையும் இணைத்து (கிரானாக) நிறைவேற்றியவளாகிவிடுவாள்.

மேலும் அவள், அரஃபா மற்றும் மஷ்அருல் ஹராமில் தங்குவது, ஜமராக்களுக்குக் கல்லெறிவது, முஸ்தலிஃபா மற்றும் மினாவில் இரவு தங்குவது, பிராணியை பலியிடுவது, முடியைக் குறைப்பது ஆகிய ஹஜ் செய்பவர் செய்யும் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றவேண்டும். தூய்மையான பிறகு கஃபாவை ஒரு முறை தவாஃப் செய்ய வேண்டும். பிறகு ஸஃபா, மர்வாவுக்கிடையே ஒரு முறை ஸயீ செய்யவேண்டும். இதுவே ஹஜ், உம்ரா இரண்டிற்கும் போதுமானதாகிவிடும். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்த ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்துவிட்ட போது,

( . . فَافْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي )
. . நீ தூய்மையாகும் வரை- கஃபாவை தவாஃப் செய்வதைத் தவிர ஹஜ் செய்பவர் செய்யும் அனைத்தையும் செய்து கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தத்துடனுள்ள பெண்கள் 10-ம் நாள் கல்லெறிந்து, முடியை வெட்டிவிட்டால் இஹ்ராமின் காரணத்தால் தடுக்கப்பட்டிருந்தவைகளில் நறுமணம் போன்றவை அனைத்தும் அனுமதியாகிவிடும். எனினும் தூய்மையான பெண்கள் ஹஜ்ஜுக் காரியங்களை முழுமையாக நிறைவேற்றியது போன்று இவர்களும் நிறைவேற்றும் வரை இல்லறத்தில் ஈடுபடக் கூடாது. தூய்மையான பிறகு தவாஃபையும் ஸயீயையும் செய்துவிட்டால் இல்லறமும் அனுமதியாகிவிடும்.

 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்