10 - ஹஜ்
செய்பவர் பத்தாம் நாளின் செயல்களை சிறந்த முறையில்
நிறைவேற்றுவது பற்றிய விளக்கம் |
ஹஜ் செய்பவர் 10-ம் நாளில்; நான்கு செயல்களை ஒன்றன்பின் ஒன்றாக
-வரிசையாகச்- செய்வது மிகச் சிறந்த தாகும். முதலாவதாக, ஜமரத்துல்
அகபாவிற்கு கல்லெறிதல். பிறகு -பிராணிகளைப்- பலியிடுதல். பிறகு
(முடியை) மழித்தல் அல்லது குறைத்தல். பிறகு கஃபாவை தவாஃப் செய்தல்.
இதன் பிறகு, தமத்துஃ ஹஜ் செய்பவர் ஸயீ செய்தல். அதுபோன்று கிரான்
மற்றும் இஃப்ராத் ஹஜ் செய்பவர்கள், கஃபாவிற்கு வருகை தந்ததிற்காக செய்த
தவாஃபுடன் ஸயீ செய்யவில்லை என்றால் அவர்களும் ஸயீ செய்தல்.
இச்செயல்களில் ஒன்றைவிட மற்றொன்றை முன், பின்னாக மாற்றிச் செய்தால்
அதுவும் நிறைவேறியதாகவே ஆகும். 10-ம் நாள் செயல்களை முன், பின்
மாற்றிச் செய்வதை நபி (ஸல்) அவர்கள் பொதுவாக அனுமதித்துள்ளதால் அதில்
தவாஃபை விட ஸயீயை முற்படுத்துவதும் அடங்கும். ஏனெனில் அதுவும் 10-ம்
நாளில் செய்யப்படும் வழிபாடுகளில் உள்ளவைதான். 10-ம் நாளின் செயல்களில்
-ஒன்றைவிட மற்றொன்றை- முற்படுத்துவது பற்றியும் பிற்படுத்துவது
பற்றியும் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் செய்து கொள்! அதனால்
குற்றமில்லை! என்றே நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்ற
நபித்தோழர்pன் கூற்றில் -தவாஃபை விட ஸயீயை முற்படுத்துவதும்-
அடங்கிவிடும். மேலும் தவாஃபும் ஸயீயும் மறதியாலும் அறியாமையாலும்
-முன்பின்- நிகழ வாய்ப்புள்ளதால் நிச்சயமாக இப்பொது அனுமதியில் அதுவும்
இடம்பெற்றுவிடும். மேலும் இவ்வனுமதியில்தான் இலகுவும் வசதியும் உள்ளது.
தவாஃப் செய்வதற்கு முன்னால் ஸயீ செய்துவிட்ட ஒருவரைப் பற்றி நபி (ஸல்)
அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அதனால் குற்றமில்லை! என்றார்கள் என உஸாமா
பின் ஷாPக் (ரலி) அறிவிக்கும் ஸஹீஹான ஹதீஸ் அபூதாவுதில் இடம்
பெற்றுள்ளது. -தவாஃபையும் ஸயீயையும் முன், பின் மாற்றிச் செய்வது 10-ம்
நாளின்- பொது அனுமதியில் அடங்கிவிடும் என்பது இதன் மூலம்
சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகி விட்டது. -அல்லாஹ்வே நேர்வழி
காட்டுபவன்-
ஹஜ் செய்பவர் முழுமையாக -இஹ்ராமிலிருந்து- விடுபட மூன்று காரியங்களைச்
செய்தாகவேண்டும். அவை : (10-ம் நாள்) ஜமரத்துல் அகபாவுக்குக் கல்லெறிய
வேண்டும். (முடியை) மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும். தவாஃபுல்
இஃபாழா செய்யவேண்டும். தமத்துஃ ஹஜ் செய்பவரும் கிரான் மற்றும் இஃப்ராத்
ஹஜ் செய்பவர்களும் கஃபாவிற்கு வருகை தந்ததிற்காகச் செய்த தவாஃபுடன் ஸயீ
செய்யவில்லை என்றால் அவர்கள் இத்தவாஃபுக்குப் பின் ஸயீயும்
செய்யவேண்டும்.
இம்மூன்றையும் நிறைவேற்றிவிட்டால் இஹ்ராமினால் தடுக்கப் பட்டிருந்த
இல்லறம், நறுமணம் போன்ற அனைத்தும் ஹலால் ஆகிவிடும்.
இதில் இரண்டை மட்டும் நிறைவேற்றியவருக்கு இஹ்ராமினால்
தடுக்கப்பட்டவைகளில் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் ஹலால் ஆகிவிடும்.
இந்நிலைக்கு தஹல்லுலுல் அவ்வல் -முதலாவது அனுமதி- என்று பெயர்.
ஹஜ் செய்பவர் ஜம்ஜம் தண்ணீரை வயிறு நிரம்பக் குடிப்பதும் அப்போது
பயனுள்ள பிரார்த்தனைகளை -முடிந்த அளவு- செய்து கொள்வதும் விரும்பத்தக்க
செயலாகும். நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் தண்ணீரைப் பற்றி இவ்வாறு
கூறினார்கள் :
( مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ )
ஜம்ஜம் தண்ணீர் எதற்காகக் குடிக்கப்படுகிறதோ அது கிடைக்கும்.
(அறிவிப்பவர் : ஜாபிர்-ரலி, நூல் : இப்னுமாஜா)
( . . إِنَّهَا طَعَامُ طُعْمٍ . . ) ( وَشِفَاءُ سُقْمٍ )
நிச்சயமாக அது உண்ண உணவாகவும் நோய்க்கு நிவாரணமாகவும் உள்ளது.
(அறிவிப்பவர் : அபூதர் -ரலி, நூல் : முஸ்லிம் - அபூதாவூத்)
ஹஜ் செய்பவர், தவாஃபுல் இஃபாழாவையும், ஸயீ செய்ய வேண்டியவர்கள்
ஸயீயையும் நிறைவேற்றிய பிறகு மினாவுக்குத் திரும்பி வந்து அங்கு மூன்று
இரவுகள் தங்க வேண்டும். அந்த மூன்று நாட்களிலும் (சு10ரியன்) உச்சி
சாய்ந்த பிறகு மூன்று ஜம்ராக்களுக்கும் கல்லெறியவேண்டும். அதனை
(சிறியது, நடு, பெரியது என்று) வரிசையாக எறிவது கடமையாகும்.
ஆரம்பமாக, முதல் ஜம்ராவில் கல்லெறியவேண்டும். அது கைஃப் பள்ளியை
அடுத்துள்ள ஜமராவாகும். அதில் ஒன்றன்பின் ஒன்றாக ஏழு கற்களை
எறியவேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் கையை உயர்த்தி எறிய
வேண்டும். பிறகு சற்று முன்னேறிச் சென்று, ஜம்ரா தனக்கு இடதுபுறம்
இருக்குமாறு நின்று கொண்டு, கிப்லாவை முன்னோக்கி, இரு கைகளையும்
உயர்த்தி, மிகப் பணிவுடன் அதிகமாகப் பிரார்த்தனை செய்வது
சுன்னத்தாகும்.
பிறகு முந்தய ஜம்ராவைப் போல் இரண்டாம் ஜம்ராவுக்குக் கல்லெறிய
வேண்டும். பிறகு சற்று முன்னேறிச் சென்று, ஜம்ரா தனக்கு வலதுபுறம்
இருக்குமாறு நின்று கொண்டு, கிப்லாவை முன்னோக்கி, இரு கைகளையும்
உயர்த்தி, அதிகமாகப் பிரார்த்தனை செய்வது சுன்னத்தாகும். பிறகு
மூன்றாம் ஜம்ராவுக்குக் கல்லெறிய வேண்டும். அதில் (பிரார்த்தனைக்காக)
நிற்கக் கூடாது.
பிறகு தஷ்ரீக்குடைய இரண்டாம் நாள் உச்சி சாய்ந்த பின்னர், முதலாம் நாள்
எறிந்தது போன்று (மூன்று) ஜமராக் களுக்கும் கல்லெறியவேண்டும். அதில்
-நபி (ஸல்) அவர் களைப் பின்பற்றியவராக- முதலாவது மற்றும் இரண்டாம்
ஜமராக்களில் முதல் நாள் செய்தது போன்று -பிரார்த்தனை- செய்வது
சுன்னத்தாகும்.
தஷ்ரீக்குடைய நாட்களில் முதலிரண்டு நாட்கள் கல்லெறிவது ஹஜ்ஜின்
கடமை(யான செயல்)களில் உள்ளவைகளாகும். அது போன்றே 11-ம் இரவும், 12-ம்
இரவும் மினாவில் தங்குவதும் கடமையாகும். தண்ணீர் புகட்டுபவர்,
கால்நடைகளைப் பராமரிப்பவர் போன்றவர்களுக்கு இரவில் மினாவில் தங்குவது
கடமையல்ல.
மேற்கூறப்பட்ட (11, 12 ஆகிய) இரண்டு நாட்களிலும் கல்லெறிந்து விட்டவர்
மினாவை விட்டும் விரைவாகப் புறப்பட விரும்பினால் அதற்கு அனுமதியுள்ளது,
அவ்வாறு புறப்படுபவர் -12-ம் நாள்- சு10ரியன் மறைவதற்கு முன்
அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்.
எனினும் தாமதித்து, பதிமூன்றாம் நாள் இரவும் தங்கி, அன்றய தினமும்
ஜம்ராக்களுக்கு கல்லெறிந்து விட்டுச் செல்வதே மிகச் சிறந்ததும் அதிக
கூலியைப் பெற்றுத்தரும் செயலுமாகும்.
وَاذْكُرُوا اللهَ فِيْ أَيَّامٍ مَعْدُوْدَاتٍ فَمَنْ تَعَجَّلَ
فِيْ يَوْمَيْنِ فَلاَ إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلاَ إِثْمَ
عَلَيْهِ لِمَنِ اتَّقَى
(மினாவில் தங்கியிருந்து) எண்ணிவிடப்பட்ட (மூன்று) நாட்களில் அல்லாஹ்வை
நினைவு கூறுங்கள். ஆகவே எவரொருவர் இரண்டு நாட்களில் அவசரப்பட்டு(ப்
புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரொருவர் (மூன்றாம் நாள்
வரை) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. (இது) யார்
(அல்லாஹ்வாகிய) அவனை பயந்து நடக்கின்றார்களோ அவர்களுக்கு (உள்ளதாகும்.)
என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 2:203)
நபி (ஸல்) அவர்கள், -12-ம் நாள் மினாவை விட்டும்- விரைவாகச் செல்ல
மக்களுக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் விரைவாகப்
புறப்படவில்லை. மாறாக 13-ம் நாள் சு10ரியன் உச்சி சாயும் வரை மினாவில்
தங்கியிருந்து, அதன் பிறகு ஜம்ராக்களுக்குக் கல்லெறிந்தார் கள்.
பின்னர் ளுஹர் தொழுகைக்கு முன்னர் அங்கிருந்து புறப்பட்டார்கள்.
கல்லெறிய இயலாத சிறுவர்களுக்காக அவர்களின் பொறுப்பாளர்கள் (10-ம் நாள்)
ஜமரத்துல் அகபாவிலும் (தஷ்ரீக்குடைய நாட்களில்) அனைத்து ஜம்ராக்களிலும்
தனக்கு எறிந்ததற்குப் பிறகு அவர்களுக்காகக் கல்லெறிய வேண்டும். அதுபோல்
கல்லெறிய இயலாத சிறுமிகளுக்காக அவர்களின் பொருப்பாளர்கள் அவர்களுக்குப்
பகரமாகக் கல்லெறிய வேண்டும். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
( حَجَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ
وَمَعَنَا النِّسَاءُ وَالصِّبْيَانُ فَلَبَّيْنَا عَنِ الصِّبْيَانِ
وَرَمَيْنَا عَنْهُمْ )
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். எங்களுடன் பெண்களும்
சிறுவர்களும் இருந்தனர். சிறுவர் களுக்குப் பகரமாக நாங்கள் தல்பியாக்
கூறினோம். மேலும் அவர்களுக்கு பகரமாக நாங்கள் கல்லுமெறிந்தோம்.
(நூல் : இப்னுமாஜா)
فَاتَّقُوا اللهَ مَا اسْتَطَعْتُمْ
இயன்ற அளவிற்கு நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! (64:16) என்ற
அல்லாஹ்வின் கட்டளைக் கிணங்க நோய், முதுமை, கர்ப்பம் போன்ற காரணங்களால்
கல்லெறிய சக்தியற்றவர்கள் தங்களுக்குப் பகரமாக பிறரை நியமிக்க
அனுமதியுள்ளது.
மக்கள் நெரிசலில் இவர்களால் ஜமராக்களுக்குக் கல்லெறிய முடியாது.
(தாமதமாகச் சென்று எறியலாம் என்றால் அதற்குள்) கல்லெறியும் நேரம்
முடிந்து போய்விடும். அதனை களாச் செய்யவும் முடியாது. எனவே இதனை
நிறைவேற்ற மாத்திரம் பிறரை நியமிக்க அனுமதி உள்ளது. இது தவிர உள்ள
ஹஜ்ஜின் பிற வழிபாடுகளில் (பகரமாகப் பிறரை) நியமிக்கக் கூடாது.
ஹஜ்ஜுக்காகவோ, உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்துவிட்டால் -அவ்விரண்டும்
நஃபிலானவை களாக இருந்தாலும் சரியே!- அதனை முழுமையாக நிறை வேற்றுவது
கடமையாகும். அதனை நிறைவேற்றுவதற்காக தனக்குப் பகரமாக பிறரை நியமிக்கக்
கூடாது.
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ ِللهِ
ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் அல்லாஹ்வுக்காக நிறைவு செய்யுங்கள்! என
அல்லாஹு தஆலா கூறுகின்றான்.
(அல்குர்ஆன் 2:196)
தவாஃபின் நேரமும் ஸயீயின் நேரமும் (வரையறுக்கப்பட வில்லை என்பதால் அது)
முடிந்துவிடாது. ஆனால் கல்லெறி யும் நேரம்
(வரையறுக்கப்பட்டிருப்பதினால் அது) முடிந்துவிடும்.
அரஃபாவில் தங்குவதும், முஸ்தலிஃபா மற்றும் மினாவில் இரவில் தங்குவதும்
(விரைவில்) கடந்துவிடும் -குறிப்பிட்ட- நேரங்கள்தான் என்பதில்
சந்தேகமில்லை. எனினும் இயலாதவர்கள் சிரமப்பட்டாவது அந்த இடங்களை
அதற்குரிய நேரத்தில் சென்றடைய முடியும். ஆனால் அவர்களால் கல்லெறிதலை
அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றமுடியாது. மேலும் முன்சென்ற நல்லோர்களான
நபித் தோழர்கள், கல்லெறிய இயலாதவர்களுக்காக பிறரைப் பகராமாக
நியமித்துள்ளார்கள் என்றும் அதைத் தவிர உள்ள வழிபாடுகளில் பிறரைப்
பகரமாக நியமிக்கவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன.
வணக்க, வழிபாடுகள் அனைத்தும் (அல்லாஹ் மற்றும் அவனது தூதர் -ஸல்-
அவர்களால்) முடிவு செய்யப் பட்டவைகளாகும். அதில் ஆதாரமின்றி எவரும்
எந்த ஒன்றையும் ஏற்படுத்திட முடியாது.
பிறருக்காகக் கல்லெறிபவர் -ஒரு தடவை சென்று- மூன்று ஜம்ராக்களில்
ஒவ்வொன்றிலும் முதலில் தனக்காகவும் பிறகு பிறருக்குப் பகரமாகவும் எறிய
அனுமதியுள்ளது. மூன்று ஜம்ராக்களிலும் முதலில் தனக்காக எறிந்துவிட்டு,
பிறகு மற்றொரு முறை திரும்பிச் சென்று பிறருக்காக எறிய வேண்டும் என்று
கடமையில்லை. இதுவே அறிஞர்களின் இரு கூற்றுக்களில் சரியான கூற்றாகும்.
ஏனெனில் -இருமுறை செல்லவேண்டும் என்ற- கூற்றிற்கு எந்த ஆதாரமும்
கிடையாது. மேலும் அவ்வாறு செய்வதில் கஷ்டமும் சிரமமும் ஏற்படும்.
وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّيْنِ مِنْ حَرَجٍ
. . இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும்
ஏற்படுத்தவில்லை. . என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 22:78)
( يَسِّرُوْا وَلاَ تُعَسِّرُوْا )
எளிதாக்குங்கள்! கஷ்டப்படுத்தாதீர்கள்! என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்-ரலி, நூல்: புகாரீ)
மேலும் நபித்தோழர்கள் தங்களின் சிறுவர்களுக்கும் பலவீனர்களுக்கும்
பகரமாகக் கல்லெறியும் போது இவ்வாறு (இருமுறை) சென்றதாக எந்தச்
செய்தியும் வரவில்லை. அவர்கள் அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக
அச்செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏனெனில் இச்செய்திகளை பதிவு
செய்வதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
-அல்லாஹ்வே மிகஅறிந்தவன்-
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
|
|