11-
தமத்துஃ மற்றும் கிரான் ஹஜ் செய்பவர் மீது பலிப்பிராணி
கடமையாகும் |
மக்காவாசி அல்லாதவர் தமத்துஃ அல்லது கிரான் முறையில் ஹஜ் செய்தால் ஒரு
ஆட்டையோ, அல்லது ஏழு நபர்கள் இணைந்து ஒரு ஒட்டகத்தையோ, ஒரு மாட்டையோ
அறுப்பது கடமையாகும். அது தூய்மையான முறையில் ஈட்டப்பட்ட, ஹலாலான
பொருளாதாரத்தில் இருப்பது கடமையாகும். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹு தஆலா
தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர ஏற்றுக் கொள்ளமாட்டான்.
பலிப்பிராணியையோ அல்லது பிற பொருளையோ ஆட்சியாளரிடமோ, பிற மக்களிடமோ
யாசிப்பதை அனைத்து முஸ்லிம்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்
அவர்களுக்குப் பிராணியை பலியிடும் அளவிற்கு பொருளாதாரத்தைக்
கொடுத்திருந்தால் அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். பிறரிடம்
கையேந்துவதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் யாசிப்போரின்
இழிவு மற்றும் கேவலம் பற்றியும் யாசிக்காதவர்களைப் புகழ்ந்தும் அதிகமான
ஹதீஸ்கள் வந்துள்ளன.
தமத்துஃ மற்றும் கிரான் ஹஜ் செய்பவர் -பலிப் பிராணி- ஹதீ கொடுக்க
சக்திபெறவில்லையெனில் ஹஜ்ஜுடைய காலங்களில் மூன்று நாட்களும் வீடு
திரும்பியபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்பது அவசியமாகும். ஹஜ்ஜுடைய
காலங்களில் நோற்கவேண்டிய மூன்று நோன்புகளை துல்ஹஜ் பிறை 10-ம் நாளுக்கு
முன்போ, அல்லது தஷ்ரீக்குடைய மூன்று நாட்களிலோ (ஆகிய இவ்விரண்டில்)
அவர் விரும்பிய விதத்தில் நோற்றுக் கொள்ளலாம்.
فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ
مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلاَثَةِ أَيَّامٍ فِي
الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ
ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ
. . உம்ராவை முடித்துக் கொண்டு ஹஜ்ஜின்பால் செல்பவர் மீது
ஹதீயிலிருந்து எவ்வளவு முடியுமோ அது அவர்மீது -கடமை- ஆகும். அதனைப்
பெற்றுக் கொள்ளாதவர் ஹஜ்ஜில் மூன்று நாட்களும் நீங்கள் (இருப்பிடம்)
திரும்பியபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்கவேண்டும். அவை பூரணமான பத்து
(நாட்கள்) ஆகும். இது எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்
குடி) இருக்கவில்லையோ அவருக்குரியதாகும். . . என அல்லாஹு தஆலா
கூறுகின்றான். (அல்குர்ஆன் 2:196)
ஹதீ கொடுக்க சக்தி பெறாதவர்களைத் தவிர பிறருக்கு தஷ்ரீக்குடைய
நாட்களில் நோன்பு நோற்க அனுமதி வழங்கப் படவில்லை என ஆயிஷா (ரலி)
அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் கூறியுள்ள செய்தி புகாரீயில்
இடம் பெற்றுள்ளது. இது நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புடைய சட்டமாகவே
கருதப்படும்.
அரஃபா தினத்தில் நோன்பின்றி இருப்பதற்காக இம்மூன்று நோன்புகளையும்
அரஃபா தினத்திற்கு முன்பே நோற்றுவிடுவது சிறந்தது. ஏனெனில் நபி (ஸல்)
அவர்கள் அரஃபாவில் நோன்பின்றிதான் தங்கினார்கள். மேலும் அரஃபாவில்
இருப்பவர்களை (அதாவது: ஹஜ் செய்பவர்களை) அரஃபா தினத்தன்று நோன்பு
நோற்பதை விட்டும் தடுத்தார்கள். அன்றய தினம் நோன்பு நோற்காமல் இருப்பது
உற்சாகமாக திக்ர், துஆக்களில் ஈடுபடவாய்ப்பாக அமையும்.
மேற்கூறப்பட்ட மூன்று நோன்புகளையும் தொடர்ந்தோ, விட்டு விட்டோ
நோற்பதற்கு அனுமதியுள்ளது. அதுபோல் (ஊர் திரும்பியபின் நோற்கவேண்டிய)
ஏழு நோன்புகளையும் தொடர்ந்து நோற்பது கடமையல்ல. மாறாக அதனையும்
தொடர்ந்தோ அல்லது விட்டுவிட்டோ நோற்பதற்கு அனுமதி உள்ளது. அல்லாஹ்வோ,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ தொடர்ந்து நோற்பதை நிபந்தனையாகக்
கூறவில்லை.
وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ
நீங்கள் (இருப்பிடம்) திரும்பிய பின் ஏழு நாட்களும் . . . என்ற
வசனத்திற்கிணங்க ஏழு நோன்புகளையும் -முன்னரே நோற்றுவிடாமல் அதனை- வீடு
திரும்பும்வரை பிற்படுத்துவதே சிறந்ததாகும்.
ஹதீ கொடுக்க சக்தி பெறாதவர் தனக்காக ஹதீ கொடுக்குமாறு ஆட்சியாளரிடமோ,
பிறரிடமோ யாசிப்பதைவிட நோன்பு நோற்பதே மிகச் சிறந்ததாகும். யாசகம்
கேட்காமலும் அதனை மனதால் கூட விரும்பாமலும் இருக்கும் நிலையில்
யாரேனும் ஹதீயையோ அல்லது பிற பொருளையோ அன்பளிப்பாக கொடுத்தால் அதனைப்
பெற்றுக் கொள்வதில் தவறில்லை. அவர் பிறருக்காக ஹஜ் செய்பவராக
இருந்தாலும் சரியே! ஹஜ் செய்ய நியமித்தவர் தனது பொருளில்தான் ஹதீ
கொடுக்கவேண்டும் என நிபந்தனையிடாவிட்டால் அவரும் -அன்பளிப்பைப்
பெற்றுக் கொள்வதில்- தவறில்லை.
சிலர் அரசாங்கத்திடமோ அல்லது பிறரிடமோ பொய்யாகப் பிறரின் பெயரைக் கூறி
ஹதீயைப் பெற யாசிப்பது ஹராமானது என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக இது
பொய்யுரைத்து பொருள் திரட்டுவதாகும்.
-அல்லாஹ் நம்மையும் முஸ்லிம்கள்
அனைவரையும் இச்செயலை விட்டுக் காப்பாற்றுவானாக!-
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
|
|