Index |Subscribe mailing list | Help | E-mail us

பிளவுக்கு காரணம் கொள்கையா?

தேங்கை முனீப், பஹ்ரைன்

 

[Right click on link and select "Save target as" to download the audio/video clips]

 

கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் (தமிழகத்தில் பல பகுதிகளிலும் ஏகத்துவப் பிரச்சாரத்தின் பொறி பற்ற ஆரம்பித்த காலகட்டத்தில்) ஏகத்துவவாதிகளின் அழைப்பை ஏற்று இஸ்லாமிய இறைபணி இயக்க அலுவலகத்தில் திருக்குர்ஆன் வகுப்புக்காகச் சென்றிருந்தபோது திருக்குர்ஆன் வசனங்களின் தாக்கம் மிகவும் சிறுவயதிலேயே ஏகத்துவக் கொள்கையை ஏற்கச் செய்தது. அன்றிலிருந்து திர்க்குர்ஆனின் மொழியாக்கத்தைப் படித்து ஈமானிய உணர்வை வளர்த்துக் கொண்டோம். இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் ஷைத்தானின் கொம்பு என்று கொச்சைப்படுத்திய நிலையில் இமாம் அவர்களின் தியாக வரலாறு அன்று தமிழுலகுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. அதனைப் படித்து உள்ளம் உருகினோம். நமது சமுதாய மக்கள் வலிமார்களிடம் உதவி தேடுவதை முக்கியக் கொள்கையாக வைத்து அதனுடைய அடிப்படையில் குத்பிய்யத் மவ்லித் தர்ஹா வழிபாட்டை நியாயப்படுத்தி தமிழக ஆலிம்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது நமது ஏகத்துவ முன்னோடிகளான இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் புரட்சிப் புத்தகமான "வசீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்", "இறைநேசச் செல்வர்களும் ஷைத்தானின் தோழர்களும்" இமாம் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் "கிதாபுத் தவ்ஹீத்", "தவ்ஹீதின் எதிர்ப்புக்குத் தக்க பதில்கள்" போன்ற புத்தகங்கள் தமிழுலகுக்கு மொழிபெயர்க்கப்பட்டு ஒரு மகத்தான ஏகத்துவப் புரட்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

 

அதற்கும் மேலாக சகோதரர்கள் பி.ஜைனுல் ஆபிதீன் உலவி, கமாலுத்தீன் மதனி, ஹாமித் பக்ரி மன்பயீ, K.S.ரஹ்மத்துல்லா இம்தாதி போன்ற அறிஞர்களின் மகத்தான உரைகளும் நம்முடைய சிந்தனையைத் தட்டி எழுப்பியது. இணை வைப்பை நியாயப்படுத்தி படையெடுத்து வந்த பித்அத் வாதிகள் கோட்டாறு முனாளராவில் ஏகத்துவ அறிஞர்களிடம் தோற்றோடிய சரித்திரத்தை நாம் அறிவோம். அது ஏற்படுத்திய மகத்தான புரட்சியால் ஒரு ஒட்டுமொத்த சமூகமே ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தமிழகத்தில் தவ்ஹீத் அதிவேகமாக வளர்ந்து வருவதை அறிந்த ஷைத்தானுக்குப் பொறுக்க முடியவில்லை. பிரிவினை என்ற விஷவித்தை விதைத்தான். 1990 களிலிருந்தே ஏகத்துவ வாதிகளுக்கிடையில் ஏற்பட்ட சலசலப்புகள் இன்று ஒரு சாராரை எகத்துவத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று தூற்றும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றது.

பிளவு படுவதற்கு பொருளாதார காரணமோ பதவி காரணமோ அல்ல. அவ்வாறாக இருந்தால் விட்டுக் கொடுத்து விடலாம். பிளவு படுவதற்குக் கொள்கைதான் காரணம். கொள்கை அடிப்படையில்தான் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற பி.ஜே அவர்களின் குற்றச்சாட்டுகள்
(Play / Download Video Clip) பின் வரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

இஸ்லாமியப் பேரறிஞர்களான இப்னுதைமிய்யா, முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப், பின் பாஸ் முதலானவர்களைப் பற்றி பித்அத்வாதி கலந்தர் மஸ்தான் கொச்சையாகப் பேசியபோது நாம் வெகுண்டெழுந்தோம். அவர்களது புரட்சிப் புத்தகங்களை மக்கள் மன்றத்தில் வைத்து ஏகத்துவ விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினோம். ஆனால் அவர்களும் நபித்தோழர்களைப் பின்பற்றும் கொள்கையுடையவர்கள் (ஸலஃபுகள்) என்று அவர்களின் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பி.ஜே அவர்களின் கருத்துப்படி மேற்குறிப்பிட்ட அறிஞர்களெல்லாம் தவ்ஹீதுவாதிகள் அல்ல என்கின்றபோது, அவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை ஆரம்பகாலத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது ஏன்? அவ்வாறு பயன்படுத்தியதை எதிர்க்காமலிருந்தது ஏன்?


குர்ஆன் ஹதீஸிலிருந்து ஸஹாபாக்களைப் பிரிக்க முடியாது என்பதும், குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்கு ஸஹாபாக்களின் புரிந்து கொள்ளுதலே அடிப்படை என்பதும் தான் இதுவரையிலும் சர்வதேச குர்ஆன் சுன்னா அமைப்புகளின் நிலைபாடாக இருக்கின்றது. இஸ்லாத்தின் பெயரால் ஊடுருவிய ஷிர்க் பித்அத் அனாச்சாரங்களை ஒழிக்கப் பாடுபட்ட சீர்திருத்தவாதிகளின் கொள்கையும் இதுவாகத்தான் இருந்தது. இந்நிலையில் 25 வருடத்திற்கும் மேலாக கூறி வந்த கொள்கைக்கு மாற்றமாக இப்போது கூறப்படும் புதிய கொள்கை என்பதன் அடிப்படை என்ன? அவ்வாறாயின் முன்னர் ஷிர்க் பித்அத் மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்திய மக்கள், தங்களை அஹ்லு சுன்னத் வல் ஜமாஅத் என்று பிரகடனம் செய்த மக்களிடம் பிரச்சாரம் செய்கையில் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத் என்பவர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் ஸஹாபாக்களின் ஜமாஅத்தையும் பற்றிப் பிடிப்பவர்கள், அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்று 73 கூட்டம் சம்மந்தமான ஹதீஸை ஆதாரம் காட்டி பி.ஜே அவர்கள் பேசியது எதனடிப்படையில்? இதனைத்தான் நாம் 25 வருடமாகக் கூறி வருகின்றோம் என்பது உண்மையாயின் 73 கூட்டம் பற்றிய ஹதீஸைக் குறிப்பிட்டு குர்ஆனையும் நபிவழியையும் ஜமாஅத்துஸ் ஸஹாபாவையும் பின்பற்றுவதுதான் வெற்றிக்கு வழி என்ற பி.ஜே அவர்களின் பழைய உரை
(Download Audio clip) அதற்கு முரணாக உள்ளதை அவர்களின் ஆதரவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

வெளிநாட்டில் உள்ள அழைப்பு மையங்களில் உள்ள அரபு அறிஞர்களும் இது போன்று ஸஹாபாக்களின் வழிமுறையைப் பின்பற்றவேண்டும் என்று கூறுகின்றனர். அதனை இங்குள்ள த.த.ஜ ஆதரவாளர்களும் ஆமோதித்து வந்தனர். எனவே இக்காரணத்தால் பிளவு பட்டிருக்கின்றோம் என்பது உண்மையாயின் அத்தகைய அழைப்பு மையங்களில் கிடைக்கும் பணத்தை வைத்து அவர்களோடு சேர்ந்து பணியாற்ற வெளிநாட்டில் உள்ள த.த.ஜ சகோதரர்கள் முயல்வது சந்தர்ப்பவாதம் இல்லையா? வெளிநாட்டு அழைப்பு மையங்களில் (ஜாலியாத்) ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் த.த.ஜ அறிஞர்களை வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்த விரும்புவது ததஜவினரின் கொள்கைக்கு முரண்பாடாகத் தெரியவில்லையா? ஸலஃபுக்கள் என்று சொல்லிக்கொண்ட வெளிநாட்டு அழைப்பு மையங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இரட்டைவேடம் போடுவது கடைந்தெடுத்த சந்தப்பவாதம் இல்லையா? என்பதே மக்களின் கேள்விகளாக இருக்கின்றன. (உதாரணம்: ஸலஃப் கொள்கை தவ்ஹீதுக்கு எதிரானது என்று தமிழ்பேசும் முஸ்லிம்களிடமும், ஸலஃப் கொள்கைதான் ததஜவின் கொள்கை என்று அரபுகளிடமும்)

குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்கு அதற்கு அரணாக விளங்கிய ஸஹாபாக்களின் புரிந்துணர்தலே அடிப்படை என்னும் ஸலஃப் கொள்கை தவ்ஹீதுக்கு எதிரானது என்றும் அதனைப் பின்பற்றுவது தவ்ஹீதுக்கு எதிரானது என்றும் கூறிவரும் பி.ஜே அவர்கள் தனது நிலைபாட்டை அதாவது ஸலஃப் கொள்கை தவ்ஹீதுக்கு முரணானது என்றும் அதனைப் பின்பற்றக் கூடியவர்கள் தவ்ஹீதை விட்டும் வெளியேறியவர்கள் என்றும் த.த.ஜ வின் தலைமையக ஷரீஅத் தீர்ப்பாயத்திலிருந்து அரபிமொழியில் பகிரங்க பத்வாவாக வெளியிட்டால் இவர்களின் நிலைபாட்டை அரபுகளும் அறிந்துக் கொள்வதோடு, வெளிநாட்டில் இரட்டைவேடம் போட்டுவரும் ததஜவினரின் உண்மை முகத்தை மற்றவர்கள் தெரிந்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

 

இக்கட்டுரையாளரின் பிற பங்களிப்புகள்:

 

bullet

முஸ்லிம்களும் கடன் விவகாரம் பற்றிய திருமறை வசனமும்

bullet

இஸ்லாமியப் போர்கள்

bullet

அகிலங்களின் இறைவன் அல்லாஹ் - பகுதி-1