பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக் கொண்டோ அல்லது இடத்தை மாற்றுவதைக் கொண்டோ இடைவெளி இருப்பது விரும்பத்தக்கது.
கேள்வி : பூமியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் சாட்சிசொல்ல வேண்டும் என்ற ரீதியில், நான் பர்ழான தொழுகையை தொழுத பின்னர் உபரியான சுன்னத்தான தொழுகையை தொழுவதற்காக வேண்டி இடத்தை மாற்றித்தொழுவது விரும்பத்தக்கதா?
பதில் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே,
ஆமாம், பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக்கொண்டோ அல்லது இன்னொரு இடத்தை மாற்றுவதைக் கொண்டோ இடைவெளி விடுவது விரும்பத்தக்கது.
(இதிலே) மாற்றுதலில் மிகவும் சிறந்தது வீட்டிலிருந்தே தொழுகைக்காக செல்வதாகும். ஏனெனில், ஒரு மனிதனுக்கு கடமையான பர்ழான தொழுகைகளைத் தவிர மற்ற தொழுகைகளை வீட்டிலே தொழுவதுதான் சிறந்தது.
عن معاوية رضي الله عنه قال : (إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِذَلِكَ ، أَنْ لَا تُوصَلَ صَلَاةٌ بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ) . رواه مسلم في صحيحه (1463)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “நீ ஜும்ஆ தொழுததும் (ஏதேனும் வெளிப்பேச்சு) பேசாதவரை அல்லது பள்ளிவாயலிலிருந்து புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுக்கள் பேசாதவரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாதவரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக்கூடாது” என்று கூறினார்கள். (ஆதாரம் முஸ்லிம் -1463)
இமாம் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் முஸ்லிம் கிரந்தத்திற்கான தனது விளக்க நூலிலே கூறினார்கள் ; “இதிலே ஷாபிஃ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களின் கூற்றுக்கு ஆதாரம் உள்ளது. அதாவது பர்ழான தொழுகை தொழுத இடத்தை விட்டும் வேறு இடத்தில் உபரியான தொழுகைகளை தொழுவது விரும்பத்தக்கதாகும். இன்னும் ஸுஜுது செய்யும் இடங்களை அதிகப்படுத்திக்கொள்வதற்காகவும், உபரியான தொழுகையின் வடிவம் பர்ழான தொழுகையின் வடிவத்திலிருந்து வேறுபடுவதற்காகவும். உபரியானதை வீட்டில் தொழுவதே மிகவும் சிறந்தது, அப்படி இல்லை என்றால் அதே பள்ளிவாயிலிலோ அல்லது வேறு இடத்திலோ தொழுவது ஏற்றதாகும்.
அத்துடன் “கதைக்கின்ற வரை” என்ற வாசகத்தின் மூலம் இரண்டுக்கும் மத்தியிலான பிரிவு பேச்சின் மூலமும் அமையலாம் என்பதற்கான ஆதாரமாகவுள்ளது. என்றாலும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதே மிகவும் சிறந்ததாகும்.” அல்லாஹ்வே அறிந்தவன்.
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : (أَيَعْجِزُ أَحَدُكُمْ إِذَا صَلَّى أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ أَوْ عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ ، يَعْنِي : السُّبْحَةَ) أي : صلاة النافلة بعد الفريضة. أبو داود (854) وابن ماجه (1417) وصححه الألباني في صحيح سنن ابن ماجه .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “உங்களில் ஒருவர் பர்ழான தொழுகையை தொழுதால் முன்னால் சென்றோ அல்லது பின்னால் வந்தோ அல்லது வலதோ அல்லது இடதோ நோக்கிவந்து உபரியான தொழுகையை தொழுவதற்கு முடியாதா?” (ஆதாரம் : அபூதாவூத்-854, இப்னு மாஜா-1417) இமாம் அல்பானீ அவர்கள் இதனை ஆதாரபூர்வமானது என தனது “ஸஹீஹ் இப்னு மாஜா“வில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “பர்ழான தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்றவைகளின் பின்னரான உபரியான தொழுகைகளுக்கும் கடமையான தொழுகைகளுக்கும் மத்தியில் ஒரு இடைவெளி இருப்பது நபிவழியாகும்.
மாறாக, ஒரு தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் மத்தியில் எழுவதைக் கொண்டோ அல்லது பேசுவதைக் கொண்டோ பிரிக்காமால் தற்பொழுது அதிகமான மனிதர்கள் செய்வதைப்போன்று பர்ழான தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் சுன்னத்தான இரண்டு ரக்ஆத்துக்களை எந்தவித இடைவெளியுமில்லாமல் உடனே தொழக்கூடாது. இச்செயற்பாடு நபியவர்களால் தடைசெய்யப்பட்ட ஆதாரபூர்வமான ஒரு விடயமாகும். ஏனெனில் இபாதத்திற்கும் இபாதத் அல்லாததிற்கும் மத்தியில் வேறுபடுத்துவதைப்போன்று பர்ழுக்கும் சுன்னாவிற்கும் மத்தியில் வேறுபடுத்துவது இதன் ஹிக்மத்தாக இருக்கின்றது. எனவேதான் நோன்பு திறப்பதை விரைவுபடுத்துவதுடன், நோன்பு பிடிப்பதினை (ஸஹர் நேரத்தை) பிற்படுத்துவதும் விரும்பத்தக்க செயற்பாடாக உள்ளது.
அத்துடன் நோன்புப் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகைக்கு முன்னர் சாப்பிடுமாரும், ரமழான் மாதத்தை ஓர் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னர் நோன்பு நோற்று ரமழானை வரவேற்பதையும் தடுத்தார்கள். ஏனெனில், இவைகளெல்லாம் மார்க்கத்தில் ஏவப்பட்ட நோன்பிற்கும் மற்ற நோன்பிற்கும் மத்தியில் ஒரு பிரிவு இருக்கவேண்டும் என்பதுடன் இபாதத்திற்கும் இபாதத் அல்லாத காரியங்களுக்கு மத்தியிலும் ஒரு பிரிவு இருக்க வேண்டும் என்பதனாலாகும். இவ்வாறே அல்லாஹுத்தஆவால் கடமையாக்கிய ஜும்ஆ மற்றவைகளிலிருந்து வேறுபாடுகின்றது.“ (அல்பதாவா அல்குப்ரா 2-359)
“எனவே, பர்ழான மற்றும் சுன்னத்தான தொழுகைக்கு மத்தியில் ஒரு பிரிவு இருப்பதற்கான காரணி என்னவென்றால் ஒன்றை மற்றையதிலிருந்து வேறுபடுத்தி காட்டுவதாகும்.
இன்னும் சில அறிஞர்கள் அதற்கான மற்றுமொரு காரணியை குறிப்பிடுகின்றார்கள் : நாளை மறுமையில் அவனுக்காக ஸுஜுது செய்த இடங்கள் சாட்சிசொல்லும் என்பதனாலுமாகும்.” (முன்னர் கூறப்பட்ட இமாம் நவவீ அவர்களின் கருத்தை போன்ற கருத்தாகும்)
அர்ரம்லி அவர்கள் கூறினார்கள் : “ஸுஜுது செய்யுமிடங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக வேண்டி ஒரு பர்ழான தொழுகைக்குப் பின் இன்னொரு பர்ழான தொழுகையை தொழுவதற்கோ அல்லது சுன்னத்தான தொழுகையை தொழுவதற்கோ ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்தில் தொழுமிடத்தை மாற்றிக் கொள்வது சுன்னத்தான வழிமுறையாகும். ஏனெனில் இச்செயலின் மூலம் பூமியை இபாதத்தைக் கொண்டு உயிர்ப்பித்தான் என்பதால் அவனுக்காக வேண்டி அந்த இடங்கள் நாளை மறுமையில் சாட்சி சொல்லும். அப்படி ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்தில் மாற்ற முடியவில்லை என்றால் ஒருவருடன் பேசுவதின் மூலமாவது இரண்டு தொழுகைகளையும் பிரித்துக்காட்டுவாயாக.” (நிஹாயதுல் முஹ்தாஜ் 1-552)
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.
அரபியில் : https://islamqa.info/ar/116064
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளன் : தபூக் அழைப்பு நிலையம் – சவுதி அரேபியா.