Featured Posts

[10] நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்

1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) எத்தனையோ நோன்பாளிகள், அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர், இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, இப்னுமாஜா)

3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடலுறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் ” நோன்பாளி ” என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

விளக்கம்: நோன்பு நோற்பதென்பது வெறும் பசி, தாகத்தோடு இருப்பதல்ல, பசி தாகத்தை கட்டுப்படுத்துவதைப் போன்று, மற்ற எல்லாத் தவறுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யார் நோன்பு நோற்றுக் கொண்டு, தவறான பேச்சுக்கள் இன்னும் தவறான செயல்களைச் செய்கின்றாரோ அவர் பசித்திருந்ததையும் தாகித்திருந்ததையும் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளமாட்டார். ஆகவே, நோன்பு மாதத்திலும் நோன்பு அல்லாத மாதத்திலும் எல்லாத் தவறுகளையும் விட்டு, உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஆனால் இன்று நோன்பு மாதத்தின் இரவு நேரத்தை வீணாக விழித்திருந்து சுப்ஹு தொழுகையின்றி தூங்கிவிடுபவர்கள் பலர். இவர்கள் பகல் நேரத்தை தூக்கத்திலேயே கழித்து, பல தொழுகைகளை பாழாக்கி விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மீது நோன்பைக் கடமையாக்கியது, பாவங்களைச் செய்வதற்கும் ஃபர்லான தொழுகைகளை பாழாக்குவதற்குமா? நிச்சயமாக இல்லை! நாம் எல்லாப் பாவங்களையும் விட்டு, தொழுகைகள் மற்றும் பல நல் அமல்களைச் செய்வதற்குத்தான். ஆகவே, தவறுகளை முற்றாக விட்டு, தொழுகைகளையும் மற்ற எல்லா அமல்களையும் உரிய நேரத்தில் செயல்படுத்த நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *