Featured Posts

[26] பெருநாள் தொழுகை

1) நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)

2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா)

4) நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் சென்றார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உன்றுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஒவ்வொரு தக்பீர்களுக்குமிடையில் குறிப்பிட்டுச் சொல்லும் எந்த திக்ரும் இல்லை. அல்லாஹ்வை புகழக்கூடிய, பெருமைப்படுத்தக்கூடிய, துதிக்கக்கூடிய வார்த்தைகளை கூற வேண்டும். உதாரணமாக

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ الله ُ، وَالله ُأَكْبَرُ

பெருநாள் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ இல்லை. பெருநாள் தொழுகைக்கு முன், பின் சுன்னத்தும் இல்லை.

One comment

  1. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
    அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 161

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *