Featured Posts

புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)

நபி (ஸல்) கூறினார்கள்:
இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)

ரமழானின் சிறப்பு
இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:

– இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது,
– ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
– ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான் உள்ளது. எனவே
குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது,
– நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக
மணமுடையது,
– இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.

மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்

ரமழானில் அமல்கள்
ரமழானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:

1. தூய்மையான நோன்பு

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” (புகாரி, முஸ்லிம்)

வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்:

“பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி)

“நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் “நான் ஒரு நோன்பாளி’ என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்)

2. இரவு நேரத் தொழுகை

நபி (ஸல்) கூறினார்கள்:

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” (புகாரி, முஸ்லிம்)

இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

“ரமழானிலும் ரமழானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்களுக்கு மேல் தொழுததேயில்லை” என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)

3. தருமம்

“நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்” என்று கூறினார்கள். (திர்மிதி)
தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.

“நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்)

4. குர்ஆன் ஓதுதல்

ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

5.இஃதிகாஃப்

நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.

இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

6. உம்ரா

“ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது

லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.

8. பாவமன்னிப்புக் கோருதல்

“நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக்கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 51:18)

எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதை விட இதுவே மேலானது என்பதை சிந்திக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்டவை

நோன்பாளிகளுக்கு கீழ்கண்டவை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையாகும். இவற்றை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

-குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ரமலான் இரவுகளில்) உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமலான் நோன்பை நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

– பல்துலக்குவதில் ரமழான், ரமழானல்லாத காலம் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் ரமழான் காலங்களில் நன்கு பல்துலக்குவதில் தவறேதுமில்லை.

– உளுவின் போது வாய்க்கொப்பளிப்பதிலும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே சென்றுவிடாத வகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். (பார்க்க : அபூதாவூத்)

– எல்லை தாண்டாத அளவிற்கு சுயக்கட்டுப்பாடு உள்ளவர் நோன்பு நேரத்தில் மனைவியை அணைப்பதும் முத்தமிடுவதும் கூடும். (பார்க்க : அஹ்மத்)

– இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண், காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குழிக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்த்தல், வாந்தி எடுத்தல், பகல் வேளையில் குளித்தல், தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவிக்
கொள்ளுதல், வாசனை திரவியங்கள் பூசுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் ஆகிய எவையும் நோன்பை முறிக்கும் என்பதற்கு எந்த சரியான ஆதாரமும் இல்லை.

அனுமதிக்கப்படாதவை
– உண்ணுதல், பருகுதல், உடலுறவுக்கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கின்ற செயல்களாகும். (பார்க்க அல்குர்ஆன் 2:187)

எனவே இவற்றை ரமலானின் பகல் வேளையில் நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனினும் ஒரு நோன்பாளி மறந்து உண்பதாலோ, பருகுவதாலே அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)

– இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றவர்கள் முறிந்த நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)

– வீண் விளையாட்டுகள், கேளிக்கைகள், சண்டையிடுதல் மற்றும் தீய வார்த்தைகள் ஆகியவற்றை நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சலுகையளிக்கப்பட்டவர்கள்

நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிரயாணிகள், தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில் தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும் நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பை விட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
(பார்க்க அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

தடைசெய்யப்பட்டவர்கள்

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் சட்ட விதிகளைப் பேணி வழிபாடுகள் அதிகம் செய்து ஈருலகிலும் வெற்றியடைய முயற்சிப்போம், அல்லாஹ் மிக அறிந்தவன்.

இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்.

தொகுப்பு : S.செய்யித் அலி ஃபைஸி
(மாநில துணைத் தலைவர் JAQH)

2 comments

  1. ASSALAMUALIKUM

    JAZAKALLAH KHAIR

  2. this is a nice web site

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *