விடியற்காலை பாங்கோசை கேட்டு கண் விழித்தார். விழித்தெழத் துணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மனித குலம் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்ட ஃபஜ்ர் தொழுகையை அவரும் மன அமைதியோடு நிறைவேற்றினார். பின்பு பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டார்!
தனது மனைவி ஆயிஷாவிற்கு வாங்கிய புடவைக்காக ஜவுளிக் கடையில் கொடுத்த சிறிய துணிப் பை அவர் கையில். அதில் வறுமையையும், சோகங்களைப் பறைசாற்றும் சில கந்தலான மாற்றுத் துணிமனிகள். வாடிய முகம். முகத்தை அலங்கரிக்கும் தாடி. தளர்ந்த வயது. முகத்தில் மாட்டியிருந்த பழைய மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறே சோர்வாக பேருந்தின் படியில் தட்டுத் தடுமாறி ஏறி இருக்கையைத் தேடிப்பிடித்து சோகங்ளைச் சுமந்து கொண்டு கனத்த இதயத்துடன் அமர்ந்தார் அப்துல் காதர்.
அப்துல் காதரையும், அவர் போன்ற சோகத்தில் வாடும் வேறு பலரையும் சுமந்து கொண்டுள்ள பேரூந்து, அவர்களது சோகத்தில் பங்கு கொண்டது போல முணுமுணுப்போடு புறப்பட்டது. பேரூந்தின் வேகத்தில் அப்துல் காதர் சிந்தனையும் புறப்பட்டு விட்டது. குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன தனது மனைவி, உடல் நிலை குன்றி அவதிப்படுவதை காண சகிக்க முடியாமலும், அவளுக்கு சிகிச்சை செய்வதற்கு பண வசதி இல்லாமல் இருக்கும் தனது நிலையை நினைத்து நினைத்து நொந்து நூலாகிப் போன கனத்த இதயத்துடனும் பயணம் செய்யும் அப்துல் காதர், பட்டணத்தில் மனைவி, மக்கள், மாடி வீடு என சகல வசதிகளுடனும் வாழும் தான் பெற்ற அன்பு மகன் ஹனீபாவைக் காண புறப்பட்டு விட்டார்.
தனது மனைவியின் வைத்தியச் செலவிற்கு மகனிடம் ஏதேனும் உதவி பெற்று வரலாம் என்ற கற்பனையில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டின் விலாசம் அறிந்து தள்ளாடி நடந்து சென்ற முதியவர் அப்துல் காதர் வீட்டின் கதவைத் தட்டுகிறார். உள்ளே தனது மகனிடம் ‘ம் ஹும் ஒரு சல்லிக்காசு கொடுக்கக் கூடாது’ என தனது மருமகள் கறாராய் கூறிக் கொண்டிருப்பதைக் கேட்டு மனம் உடைந்து போன அப்துல் காதர் திரும்பிப் போய் விடலாம் எனக் கருதி கண்ணீருடன் அடியெடுத்து வைத்து திரும்பிய போது கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார்.
‘தாத்தா! வந்திருக்காங்க! தாத்தா! வந்திருக்காங்க!’ எனக் கூவியபடி, ‘உள்ள வாங்க! தாத்தா! உள்ள வாங்க!’ என உரக்கக் கூறியவாறே தள்ளாடித் திரும்பிய அப்துல் காதரின் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்று கம்பீரமான சுழற் நாற்காலியில் அமர வைத்தான் பேரன் அஹ்மது குட்டி. முறைத்துப் பார்க்கும் தனது தாயை திரும்பி பார்க்காமலேயே, ‘ஏன் தாத்தா பாட்டியை அழைச்சிக்கிட்டு வரலையா? அவங்க சவுக்கியமா இருக்காங்களா? நீங்க சாப்பிட்டிங்களா?’ என்று சோகம் புரியாமல் கேட்கும் தனது பேரனுக்கு என்ன பதில் கூறுவது என்ற யோசனையிலேயே அவனது தலையை பரிவோடு வருடிக் கொண்டிருந்த அப்துல் காதர், தனது மகன் வருவதைக் கண்டு எழுந்து விட்டார்.
தான் வந்திருக்கும் நோக்கத்தை ஏற்கனவே அறிந்து வைத்திருக்கும் மகனிடம், என்ன கூறுவது என்று தயங்கி நின்று கொண்டிருந்த தந்தையை இருக்கையில் அமரச் சொல்லி விட்டு, எதிரில் இருந்த நாற்காலியில் ஹனீஃபா பலத்த யோசனையோடு அமர்ந்து கொண்டான். ஒழிந்திருந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் மனைவியை ஓரக்கண்ணால் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் மகனை நோக்கி ‘சிரமத்தோடு பத்து மாதம் உன்னை வயிற்றில் சுமந்தவள், சிரமத்தோடு பெற்றெடுத்தவள், இரவு பகலாக உனக்காக கண் விழித்து, கண்ணை இமை காப்பது போல் உனக்கு காவலாக இருந்தவள் உன் தாய். அவள் நோய் வாய்ப்பட்டு அவதிப்படும் போது கூடவா உதவிட உனக்கு மனம் வரவில்லை’ என கேட்டு விடலாமா? என உதடுகளை அசைத்த அப்துல் காதர் தனது இயலாமையை நினைத்து மௌனமாகி விட்டார்.
நெடுநேர அமைதியை அப்துல் காதரின் குரல் கலைத்தது. ‘சரி மகனே! நான் புறப்படுகிறேன். உன் தாயின் வைத்தியச் செலவிற்கு எப்படியாவது நான் ஏற்பாடு செய்து கொள்கிறேன். உங்களுக்கு நல்லது தரட்டும் என வல்ல அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறி விட்டு புறப்பட்டு விட்டார் அப்துல் காதர்.
‘சரிங்க வாப்பா’ என்று கூறிக் கொண்டு வாசற்படி வரை வந்த ஹனீஃபா, எதையோ சொல்ல மறந்துவிட்டது போன்று பாவனை செய்து கொண்டு வெளியில் வந்து ‘வாப்பா! நீங்கள் நீண்ட நாட்களாக பழைய கண்ணாடியை மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே! இதோ ஒரு புதுக் கண்ணாடி வாங்கி வந்துள்ளேன். அடுத்த வாரம் ஊருக்கு வருவதாக அம்மாவிடம் சொல்லுங்க வாப்பா’ என்றவாறே தன்னிடம் இருந்த கண்ணாடிக் கூட்டை அப்துல் காதரிடம் நீட்டினான்.
மனைவியின் மருத்துவச் செலவிற்கு பணம் தர மறுத்த மகனிடம் எப்படி இதனைப் பெற்றுக் கொள்வது என்று தயங்கிக் கொண்டிருந்த வாப்பாவின் கையில் திணித்து விட்டு உள்ளே சென்று விட்டான் ஹனீஃபா.
சுமந்து வந்த சோகத்துடன் திரும்பிச் செல்லும் அப்துல் காதர் பஸ் நிலையத்திற்கு வழிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவரது பழைய கண்ணாடி கீழே விழுந்து நொருங்கி விட்டது.
பார்வைக் குறைவால் தட்டுத் தடுமாறிய அப்துல் காதர் தனது மகன் கொடுத்த கண்ணாடியை வேறு வழியின்றி அணிந்து கொள்ள நினைத்து அதனை திறந்த போது, கண்ணாடியுடன் ஆயிரம் ரூபாயின் 5 நோட்டுகள் இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்து ‘அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்’ என்று உரக்கவே கூறிவிட்டார்.
தனது மருமகளின் அடாவடித்தனத்தையும், மகனின் சாதுரியத்தையும் கண்டு மீண்டும் ஒரு முறை அல்லாஹ்விற்கு நன்றி கூறி விட்டு, மருமகளுக்கு நல்ல புத்தி ஏற்பட இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தனை செய்து, புறப்பட்டார் பஸ் நிலையம் நோக்கி.
மனைவியைப் பகைத்துக் கொள்ளாமலும், தக்க தருணத்தில் தாயாருக்கும் உதவிய தனது மகனின் சாதுர்யச் செயலைச் சிந்தித்தவாறே பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தார் அப்துல் காதர்.
நன்றி: நேர்வழி மாத இதழ் (தாய்ப் நகர் வெளியீடு)
ka ru thu ulla sol kar nan raga padik kawam