அஸ்ஸலாமு அலைக்கும்,
‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)
அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! ஒரு முஸ்லிம் தன்னுடைய அனைத்து செயல்களுமே, மறுமையில் பயன்தரக் கூடிய செயல்களாக அமைத்துக் கொள்வது மிகவும் அடிப்படையான விஷயமாகும். இதற்காக அவன் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும் என அவசியமில்லை. மனிதன் தனது அன்றாட செயல்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் அமைத்துக் கொண்டு, நடுநிலையைப்பேணி நடந்தால் அவனது ஒவ்வொரு செயல்களும் மறுமையில் சுவனத்தை தேடித்தரக் கூடியதாக அமைந்துவிடும்.
இதில் மிகவும் முக்கியமான விஷயம், அவன் தனது அன்றாட செயல்களை, இபாதத்துகளாக மாற்றி அமைத்துக் கொள்வதற்கு கல்வி மிக மிக அவசியமானதாகும். அதை தேடுவதில் ஒவ்வொரு முஸ்லிமும் ஆர்வம் காட்ட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மார்க்க அறிஞர்களை மட்டும் நம்பி இல்லாமல் ஒவ்வொரு விஷயத்திற்கும் கடந்த கால அறிஞர்கள் (முஹத்திஸின்கள்) என்ன சொல்லி இருக்கின்றார்கள் என்பதையும் ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள், கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறக்கைகளை தாழ்த்துகின்றனர். ஒருவர் கல்வியை எடுத்துக்கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக்கொண்டவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)
எனவே கல்விக்காகவும் கல்வியை தேடும் விஷயத்திலும் நாம் அதிக நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவிட வேண்டும். உலகில் நாம் வாழ்வதற்காக எத்தனையோ விஷயங்களில் நேரங்களை செலவிடுகின்றோம். நமது உரிமைகளுக்காக வேண்டி போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் பல மணிநேரம் செலவிடுகின்றோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் கல்விக்காகவும், அதை தேடுவதற்காகவும் நேரம் ஒதுக்குகின்றோம் என நமது நெஞ்சில் நாமே கைவைத்து கேட்டுக்கொள்ள கடமை பட்டிருக்கின்றோம்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில், தங்களின் சிவப்புநிறப் போர்வையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் போது… அவர்களிடம் நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் கல்வியை தேடி வந்துள்ளேன் எனக் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள், கல்வியை தேடுபவனுக்கு என் வாழ்த்துக்கள். கல்வியை தேடுபவனுக்கு மலக்குகள் தங்களின் இறக்கைகளால் சூழ்கிறார்கள். கல்வியைத்தேடி அவர் வந்ததற்காக அவர் மீது பிரியம் கொண்டவர்களாக, பூமியிலிருந்து வானத்தை அடையும்வரை அவர்கள் ஒருவர் மீது ஒருவராக ஏறுகிறார்கள் என்ற கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸப்வான் இப்னு அஸ்ஸால் அல் முராதீ(ரலி) நூல்கள்: அஹ்மத், தப்ரானி, இப்னு ஹிப்பான், ஹாகிம்.)
இப்படி கல்வியை தேடுபவர்களுக்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்த்தும், மலக்குகளின் பிரியமும் கிடைக்கிறதென்றால், இந்த இரண்டையும் பெற்ற மனிதர் எப்படிபட்ட பாக்கிய சாலியாக இருப்பார் என நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும், கல்வியை தேடி செல்வது கூட ஒரு வணக்கம் என்பதை நாம் உணர வேண்டும். கல்வியைத் தேடுவது என்பதை நம் மக்கள் பலபேர் புரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். ஒரு அறிஞரின் சொற்பொழிவிலோ அல்லது ஒரு அமைப்பின் சொற்பொழிவிலோ ஒரு மணிநேரம் செலவிட்டு விட்டால் கல்வியைப் பெற்றுவிட்டோம் என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அன்புச் சகோதர சகோதரிகளே! கல்வியைப் பெறுவதில் சொற்பொழிவு என்பது நூறில் ஒரு பகுதியே தவிர அதுவே முழு கல்வி என்று ஆகிவிடாது என்பதை நாம் உணர வேண்டும். கல்வி என்பது கடல் போன்றது. அதை ஒரு முஸ்லிம் தான் மரணிக்கின்றவரை கற்றுக்கொண்டே இருக்கலாம். அல்லாஹ்வினால் பொருந்திக்கொள்ளப்பட்ட சஹாபாக்களைப் பாருங்கள், தாங்கள் மரணிக்கும்வரையில் கல்வியை கற்பிப்பது மட்டுமல்ல, கற்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். அதாவது ஒரு மூஃமின் ஆசிரியராகவும் மாணவராகவும் இருக்கவேண்டும்.
அது போல் கல்வி கற்கும் போது ஒவ்வொரு முஸ்லிமும், கல்வியை யாரிடம் எடுக்க வேண்டும், யாரிடம் எடுக்கக் கூடாது என்பதையும் தெளிவாக தெரிந்திருப்பது அவசியம். ஏனெனில் தவறான நபர்களிடமிருந்து கல்வியை எடுத்தால் நாம் போய் சேறும் இடமும் தவறானதாக இருக்கும். அதனால் மார்க்கக் கல்வியை அல்லாஹ்வும், அவனது தூதரும் எப்படி நமக்கு சொல்லித்தந்தார்களோ அதன் அடிப்படையிலும் அந்தக் கல்வியை எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் மறுமையை மட்டுமே இலக்காக வைத்து, சொர்க்கத்தின் சொந்தக்காரர்கள் என வல்ல ரஹ்மானால் சான்று பகரப்பட்ட அந்த உத்தம சஹாபாக்கள் புரிந்து நடைமுறைப்படுத்திய அந்த முறையில் கற்று நாமும் சுவர்க்க வாசிகளாக ஆக முயற்சி செய்ய வேண்டும்.
சில அதிமேதாவிகள்? நபித்தோழர்களின் ஒரு சில தவறுகளை சுட்டிக்காட்டி, இப்படி செய்தார்களே! அப்படி செய்ததர்களே! என்று வீரமுழக்கமிடுகின்றார்கள். அந்த உத்தம ஸஹாபா பெருமக்கள் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அறிவித்திருப்பார்கள். அவர்களும் மனிதர்கள் என்ற ரீதியில் ஒரு ஹதீஸை தவறாக விளங்கி இருக்கலாம். அந்த ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு மக்களிடம் சென்று, பார்த்தீர்களா! ஸஹாபாக்களே எப்படி தவறு செய்துள்ளார்கள் என்று? எனவே, அவர்களைவிட நாம்தான் சிறந்தவர்கள்? எனக்கூறி, தனக்கென ஒரு தனிப்பாதையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது தவறான வழிமுறையாகும். மேலும் இது அறிவீனர்களின் வாதமாகும். ஏனென்றால், ஒரு சஹாபி தவறுசெய்தால் அது இன்னொரு சஹாபியால் திருத்தப்பட்ட வரலாறு நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் கல்வியை இவ்வுலகின் பயன் ஒன்றை நாடி, அதை அடைவதற்காக கல்வி கற்றால், இவன் மறுமையில் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா, இப்னுஹிப்hன், ஹாகிம்)
கடந்த கால வழிதவறிய கூட்டங்கள் அனைத்துமே குர்ஆன் சுன்னாவை போதிக்க வந்தவைகள்தான். பிறகு தங்களுடைய பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, புத்திக்கு உட்படுத்தி அதை மக்களிடம் போதிக்கின்ற போர்வையில் தனக்கென ஒரு தனிக்கொள்கையை அமைத்துக்கொண்டு வழிதவறினார்கள் என்பது வரலாறு. முன்சென்ற அறிஞர் பெருமக்களைப் பற்றியும், முஹத்திஸின்கள் பற்றியும், அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய கல்வி ஞானம், அவர்களின் தியாகங்கள் பற்றியும் அறியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம். இதன்விளைவு நாம் யாரை அறிஞர்கள்? என்று நினைத்திருக்கின்றோமோ, அவர்கள் முன்சென்ற அறிஞர்களைப்பற்றியும், முஹத்திஸின்கள் பற்றியும் தவராக மட்டம்தட்டி பேசும்போது நாக்கைதட்டி கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
நபி(ஸல்)கூறினார்கள், அறிஞர்களை மட்டம் தட்டவோ, அறிவிலிகளிடம் பெருமையடிக்கவோ, மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கவோ கல்வியை ஒருவன் தேடினால் அவனை அல்லாஹ் நரகில் நுழையச் செய்வான். (அறிவிப்பவர்: கஃப் இப்னு மாலிக்(ரலி) நூல்கள்: திர்மிதீ, ஹாகிம், பைஹகீ)
இதுபோன்ற குணங்கள் யாரிடமும் வந்துவிடாமல் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். எனவே கல்வியை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் கற்கவேண்டும். யாரிடம் கல்வியை கற்பது என்று தெளிவான சிந்தனை வேண்டும். மார்க்கத்தை சொல்லி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்களை ஒதுக்கி விட்டு ஸாலிஹான நல்லறிஞர்களை கண்டறிந்து கல்வி கற்க வேண்டும். அது போலவே இன்னும் ஒரு முக்கிய காரியம், கற்ற கல்வியின் அடிப்படையில் அமல் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அடிப்படை விஷயமாகும். எத்தனையோ ஏகத்துவவாதிகள் பிரச்சார பீரங்கிகளாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடத்தில் அமல்களே இருக்காது. கடந்தகால அறிஞர்களையோ, இமாம்களையோ எடுத்துக்கொள்ளுங்கள், அவர்கள் அமல் செய்யாமல் பிரச்சாரம் செய்யவில்லை.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், மிஃராஜின் போது, நான் சிலர் பக்கம் சென்றேன். அவர்களின் உதடுகள் நெருப்பிலான கத்தரியால் கத்தரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. ‘ஜிப்ரீலே! யார் இவர்கள்? என்று கேட்டேன். இவர்கள் தான் ‘தாங்கள் செய்யாததை (பிறருக்கு) கூறிக்கொண்டிருந்த உமது சமுதாயத்தின் பேச்சாளர்கள்’ என்று (ஜிப்ரீல் அலை அவர்கள்) கூறினார். (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைது(ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.)
கல்வியை கற்றுக்கொண்டு அதை செயல்படுத்தாமல் பிற மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பது தன்னைத்தானே நாசப்படுத்திக் கொள்வதற்குச் சமமாகும்.
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், கடலில் வியாபாரம் பெருகும் அளவுக்கு, இறைவழியில் குதிரைகள் புறப்படும் அளவுக்கு இஸ்லாம் வெளியாகும். பின்பு எங்களைவிட படித்தவர் உண்டா? அறிந்தவர் உண்டா? மார்க்க சட்டங்களை புரிந்தவர் எவரும் உண்டா? என்று கூறி குர்ஆனை ஓதும் சில கூட்டம் வெளியாகும் என்று கூறிவிட்டு, அவர்களிடம் நற்செயல்கள் உண்டா? என தம் தோழர்களை பார்த்து நபி(ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிந்தவர்கள் என்று சொன்னார்கள். அவர்களும் இந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள்தான். (எனினும்) அவர்களே நரகத்தின் விறகுகள் என்று நபி(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப்(ரலி)
நூல்: தப்ரானி,பஸ்ஸார்)
எந்த தனிநபரையும், எந்த கூட்டத்தையும் கண்மூடித்தனமாக பின்பற்றாமல் இருப்பதற்கு இந்த ஒரு நபிமொழி போதும்.
கல்வியை கற்ற பிறகு அதை செயல்படுத்தாமல் இருப்பது குறித்து நபித்தோழர்கள் எப்படி பயந்துள்ளார்கள் எனப் பாருங்கள்.
மறுமையில் என் இரட்சகன் மக்கள் மத்தியில் என்னை அழைக்கும் போது, இரட்சகனே! நான் கட்டுப்பட்டேன் என்று நான் கூறியவுடன், ‘நீ அறிந்ததில் எதைச் செய்தாய் என்று? என் இரட்சகன் கேட்பதையே நான் மிகவும் அஞ்சுகிறேன் என்று அபூதர்(ரலி) கூறுவார்கள் என லுக்மான் இப்னு ஆமிர்(ரலி) கூறியுள்ளார்கள். (நூல்: பைஹகீ )
மேற்கண்ட இச்செய்தியை கவனித்துப்பாருங்கள். அந்த உத்தம நபித்தோழர்கள் எப்படியெல்லாம் அல்லாஹ்வின் விஷயத்தில் அஞ்சியுள்ளார்கள் என நாம் சிந்திக்க கடமை பட்டிருக்கின்றோம்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நரைத்த முஸ்லிமுக்கு மதிப்பளிப்பதும், குர்ஆனை சுமந்து அதில் வரம்பு மீறாத புறக்கணிக்காதவர்களுக்கு மதிப்பளிப்பதும் அல்லாஹ்விடத்தில் மதிப்புள்ளதாகும். அபூ மூஸா(ரலி) நூல்: அபூதாவூத்
எனவே அன்புச் சகோதரர்களே! நாம் இந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மேலும், அறிஞர்களை அடையாளம் கண்டு கல்வி கற்க வேண்டும். மேலும் அறிஞர்கள் என்றால், நம் நாட்டில் உள்ள மவ்லவிகள்தான் என்றல்ல.
இமாம் புகாரி (ரஹ்). அவர்கள் குர்ஆனை மனனம் செய்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை ராவியுடனும், அதன் ஸனதுடனும் மனப்பாடமாக சொல்லக்கூடியவர்களாக திகழ்ந்தார்கள்.
அதேபோல், ஷேக் அல்பானி அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள், குர்ஆனை மனனம் செய்தவர்கள். ஆயிரக்கணக்கான ஹதீதுகளை மனனம் செய்து, அதன் ராவி மற்றும் ஸனதுகளுடன் விளக்கமளித்துள்ளார்கள். இப்படி இவர்கள் வழியில் வந்த எத்தனையோ அறிஞர்கள் இன்றளவும் உள்ளார்கள்.
எனவே சிறிய வட்டத்திலிருந்து வெளியேறி மார்க்க அறிவை நாலாப்புறமும் தேடவேண்டும். மேலும் நபி(ஸல்) அவர்கள் ஓர் அற்புதமான துஆவை நமக்கு கற்றுதந்துவிட்டு சென்றுள்ளார்கள்.
யா அல்லாஹ்! பயன் இல்லாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத பிராத்தனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்துள்ளார்கள். (அறிவிப்பவர்: ஸைது இப்னு அர்ஹம்(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)
எனவே அன்பு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! மார்க்க கல்வி என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவன் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இன்று கிட்டதட்ட அனைத்து ஹதீஸ் கிரந்தங்களும் தாய்மொழி தமிழிலேயே வந்துவிட்டது. எனவே உயிர் வாழப்போகும் கொஞ்ச காலத்திலாவது மார்க்கத்தை, முறையாக கற்க வேண்டியவர்களிடம் கற்று, அதன் வழியில் அமல் செய்து, அதை அடுத்தவர்களுக்கும் எடுத்துக்கூறி, அல்லாஹ் பொருந்திக்கொண்ட சமுதாயமாக நாம் அனைவரும் மாறவேண்டும். எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அத்தகைய நற்கிருபையை வழங்க பிராத்திப்போம்.
– M.S.Ramathullah
masha allah. today some are saying ulaha kalvi and maarka kalvi while others say both kalvi so people are confused!!!!!! u didnt mention about those diferents. pls respond to me atleast thru email.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே ஏன் உங்களுடைய ஹதீஸ் தொகுப்புகளில் தொடர் இலக்கம் காணப்படுவதில்லை தொடர் இலக்கம் இருந்தால் மற்றுமே எதையும் உறுதியாக ஏற்கவும் முடியும் செயல் படுத்தவும் முடியும் தொடர் இயக்கத்தை குறிப்பிடுமாறு வேண்டி கொள்கிறேன்.