– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
அல் குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை. அப்படி முரண்பாடுகள் இருந்தால் அது இறை வேதமாகவும் இருக்க முடியாது என அல் குர்ஆனே கூறியுள்ளது. அல் குர்ஆனில் சில வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்போல் தோன்றுகின்றன. அவற்றை ஆழமாக அவதானித்துப் பார்த்தால் அவற்றுக்கிடையே முரண்பாடு இல்லையென்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்படி உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் இரண்டும் என் இரட்சகனிடமிருந்து வந்தவை என்று ஈமான் கொள்ள வேண்டும்.
இவ்வாறே அல் குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸுக்கும் இடையில் முரண்பாடு இல்லை. சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தென்பட்டாலும் ஆழமாக அவதானித்தால் முரண்பாடு இல்லையென்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்படி உணர முடியாவிட்டாலும் நான் புரிந்து கொண்டதில்தான் ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று இரண்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை உணர்த்துவதற்காக முரண்போல் தென்படும் பத்துக் குர்ஆன் வசனங்களை உதாரணமாகத் தருவதாக நாம் கூறியிருக்கின்றோம். ஏற்கனவே இரண்டு உதாரணங்களைக் கூறியிருந்தோம். அதன் மற்றப் பகுதிகளை இங்கே தருகின்றோம்.
03. நரகவாதிகள் பேசுவார்களா?
“இது அவர்கள் பேசமுடியாத நாளாகும்”
“சாக்குப் போக்குக் கூற அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.” (77:35-36)
இந்த வசனங்கள் கெட்டவர்கள் பேசமாட்டார்கள் என்றும் சாக்குப் போக்குக் கூறமாட்டார்கள் என்றும் கூறுகின்றது.
“பின்னர், “எங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இணைவைப்பாளர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களின் பதிலாக இருக்காது.” (6:23)
இந்த வசனம் அவர்கள் பேசுவதாக மட்டுமல்ல தாம் இணைவைக்கவே இல்லையென்று பொய் கூறுவார்கள் என்றும் கூறுகின்றது.
“எவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, நாம் எவ்வித தீங்கும் செய்து கொண்டிருக்க வில்லையென சமாதானம் கோருவார்கள். “இல்லை! நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்” (என்று கூறுவார்கள்)” (16:28)
“”அகிலத்தாரின் இரட்சகனுக்கு உங்களை நாம் சமமாக்கிய போது, அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாம் தெளிவான வழி கேட்டிலேயே இருந்தோம்” என அவர்கள் அதில் தர்க்கித்தவர்களாகக் கூறுவார்கள்.”
“எம்மை இந்தக் குற்றவாளிகளே வழி கெடுத்தனர்.” (26:97-99)
“உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனித சமூகங்களுடன் நீங்களும் நரகத்தில் நுழைந்து விடுங்கள். அதில் ஒவ்வொரு சமூகமும் நுழையும் போதெல்லாம் தனது சகோதர சமூகத்தை சபிக்கும். அவர்கள் அனைவரும் அதைச் சென்றடைந்ததும், அவர்களில் பின் வந்தோர் அவர்களில் முன் சென்றோரைப் பார்த்து, “எங்கள் இரட்சகனே! இவர்கள்தாம் எம்மை வழிகெடுத்தவர்கள். எனவே, நரகத்தின் இருமடங்கு வேதனையை அவர்களுக்கு வழங்குவாயாக!” என்று கூறுவார்கள். அ(தற்க)வன், “உங்களில் ஒவ்வொருவருக்கும் இருமடங்கு உண்டு. எனினும், நீங்கள் அறியமாட்டீர்கள்” எனக் கூறுவான்.”
“அவர்களில் முன் சென்றோர் அவர்களில் பின் வந்தோரிடம் எம்மை விட உங்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. எனவே, நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த வற்றிற் கான வேதனையை நீங்களே சுவையுங்கள் எனக் கூறுவர்.” (7:38-39)
இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்கள் நரகவாதிகள் பேசுவார்கள் என்றும் சாக்குப் போக்குச் சொல்வார்கள் என்றும் கூறுகின்றன. நரகவாதிகளின் உரையாடல்கள் பற்றியும் நரகவாதிகளுடன் சுவர்க்கத்துவாதிகள் பேசுவது பற்றியெல்லாம் குர்ஆன் கூறுகின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று நேரடியாக முரண்படுவது போல் தோன்றினாலும் முரண்பாடு இல்லை. இது குறித்து அறிஞர்கள் விளக்கும் போது பின்வரும் விளக்கங்களை அளிக்கின்றனர்.
1. மறுமையில் பலகட்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன. சில கட்டங்களில் பேசுவர், சில கட்டங்களில் பேசமாட்டார்கள். இரண்டு வகையான வசனங்களும் இரு விதமான நிலைப்பாட்டைப் பற்றி பேசுகின்றன என்பது ஒரு விளக்கமாகும்.
2. தமக்குப் பயன் தரும் எந்தப் பேச்சையும் அவர்கள் பேசமாட்டார்கள். பயனற்ற பேச்சு பேச்சாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. இந்த அடிப்படையில் பேசமாட்டார்கள் என்பது அவர்களது பேச்சுக்களால் அவர்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதைத்தான் குறிக்கும் என்பது சிலருடைய விளக்கமாகும்.
3. “எங்கள் இரட்சகனே! இதிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! அதன் பின்னரும் நாம் (நிராகரிப்பின்பால்) மீண்டால் நிச்சயமாக நாம் அநியாயக்காரர்கள் தாம் (என்றும் கூறுவர்.)”
“அதிலேயே நீங்கள் சிறுமையடைந்து விடுங்கள், என்னுடன் பேசாதீர்கள் (என்று கூறுவான்.)” (23: 107-108)
இவ்வாறு கூறப்பட்ட பின்னர்தான் அவர்கள் பேச அனுமதிக்கப்படமாட்டார்கள். அதற்கு முன்னர் பேசமாட்டார்கள் என்று அந்த வசனம் கூறவில்லை என்று விளக்குவர். இதனைப் பின்வரும் வசனம் உணர்த்துகின்றது.
“அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருந்ததின் காரணமாக (எமது) விதி அவர்கள் மீது நிகழ்ந்து விடும். எனவே, அவர்கள் பேச மாட்டார்கள்.” (27:85)
எனவே பேசக் கூடாது என்ற விதி விதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் பேசுவார்கள். அதற்கு முன்னர் அவர்கள் பேசுவார்கள் என்பது அதற்குப் பின்னர் அவர்கள் பேசமாட்டார்கள் என்பதற்கு முரணானது அல்ல.
04. எது சிறந்த சமூகம்
“இஸ்ராஈலின் சந்ததியினரே! நான் உங்கள்மீது புரிந்துள்ள எனது அருட்கொடையையும், அகிலத்தாரை விட உங்களை மேன்மைப்படுத்தியதையும் நினைவுகூருங்கள்.” (2:122)
இந்த வசனங்களில் பனூ இஸ்ரவேலர்களை அல்லாஹ் சிறப்பான சமூகமான ஆக்கியதாகக் கூறுகின்றான். அதுவும் “அலல் ஆலமீன்” அகிலத்தார்களில் சிறப்பான சமூகமாக ஆக்கியதாகக் கூறுகின்றான். இந்த வசனங்களில் அடிப்படையில் இஸ்ரவேல் சமூகம்தான் சிறந்த சமூகம் என்றாகிவிடுகின்றது.
“மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள். தீமையை விட்டும் தடுக்கின்றீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதத்தையுடையோரும் நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு நல்லதாகும். அவர்களில் நம் பிக்கை கொள்வோரும் உள்ளனர். இன்னும், அவர்களில் அதிகமானோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.” (3:110)
இந்த வசனம் நபி(ச) அவர்களை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் சமூகத்தை “கைர உம்மத்” சிறந்த சமூகம் என்று கூறுகின்றது. இரண்டும் முரண்படுவது போன்று தோன்றுகின்றது. இரண்டுமே சிறந்த சமூகம் என்ற கருத்திலும் முடிவெடுக்க முடியாது. ஏனெனில் இஸ்ரவேல் பற்றிக் கூறும் போதும் அகிலத்தார் அனைவரையும் விட அவர்களைச் சிறப்பித்ததாகக் கூறப்படுகின்றது. முஸ்லிம் உம்மத் பற்றிக் கூறப்படும் போதும் மனித இனத்துக்கு வெளியேற்றப்பட்ட சமூகங்களிலேயே நீங்கள்தான் சிறந்த சமூகம் என்று கூறப்படுகின்றது. எனவே இரண்டுமே சிறந்த சமூகம் என்று முடிவு செய்யவும் அந்த வசனம் இடம் தரவில்லை. இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருக்கின்றது என்று கூறி இரண்டையும் நிராகரித்தாலோ காபிராகிவிடுவோம். வஹியில் முரண்பாடு இருக்கவும்மாட்டாது. இது குறித்து ஆழ்ந்து அவதானித்தால் இஸ்ரவேலர்கள் பற்றி அகிலத்தார் அனைவரையும் விட உங்களை நான் சிறப்பித்தேன் என்று அல்லாஹ் கூறும் இடத்தில் அந்தக் காலத்தில் வாழ்ந்த அனைவரையும் விட அவர்கள் சிறப்பிக்கப்பட்டது பற்றி பேசப்படுவதைக் உணரலாம். அவர்கள் சிறப்பிக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிறப்பிக்கப்பட்டது என்று முடிவு செய்யும் போது முரண்பாடு நீங்கிவிடுகின்றது. இஸ்ரவேலர்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்த அனைவரையும் விட சிறப்பிக்கப்பட்hர்கள். அந்த சிறப்பை இழந்தும் விட்டனர். முஸ்லிம் உம்மத் சிறந்த சமூகம் என்ற சிறப்பை இழக்காது. இவ்வாரே ஆதார பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தோண்றும் போதும் ஏதாவது ஒரு முறையில் இணக்கம் கண்டு இரண்டையும் ஏற்பதுதான் சரியான வழிமுறையாகும்.
5. நிர்ப்பந்தத்திற்கு மன்னிப்பு உண்டா?
“எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் அவரின் உள்ளம் நம்பிக்கையால் அமைதி பெற்ற நிலையில், அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதின் காரணமாக அவனை (வாயளவில்) நிராகரிக்கிறாரோ (அவர் மீது குற்றமில்லை.) எனினும், எவர்கள் மன நிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.” (16:106)
இந்த வசனத்தை நோக்கும் போது நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் குப்ரான வார்த்தையை மொழிந்தாலோ அல்லது குப்ரான செயலைச் செய்தாலோ காபிராகிவிடமாட்டார் என்பது உறுதியாகிவிடுகின்றது.
“நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவார்கள். அல்லது தங்களது மார்க்கத்திற்கு உங்களை மீட்டிக் கொள்வார்கள். அப்போது, நீங்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டீர்கள்.” (18:20)
இந்த வசனத்தைப் பார்க்கும் போது நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் குப்ரான செயலைச் செய்தால் அவர் காபிராகிவிடுவார் என்று புரிய முடிகின்றது. நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் என்ற வார்த்தை நிர்ப்பந்தம் காரணமாக குப்ரைச் செய்தவனும் சுவனம் செல்லமாட்டான் என்று கூறுகின்றது. உங்களைக் கல்லெறிந்து கொண்றுவிடுவார்கள் என்ற வார்த்தை அவர்கள் குப்ரை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கொள்ளப்படுவார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. கொலை அச்சுறுத்தலை விட பெரிய நிர்ப்பந்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே, இந்த வசனம் நிர்ப்பந்தம் காரணமாக வெறுப்புடன் நிராகரித்தாலும் அது நிரந்தர நரகம் செல்லக் காரணமாகிவிடும் என்பதை உறுதி செய்கின்றது. ஆனால் முன்னைய வசனம் நிர்ப்பந்தம் காரணமாக உள்ளத்தில் ஈமான் உறுதியாக இருக்கும் நிலையில் வெளிப்படையாக நிராகரிப்போர் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று கூறுகின்றது. இரண்டு வசனங்களும் ஒன்றுக் கொன்று முரணான கருத்தைத் தருகின்றது. இதனை எப்படிப்; புரிந்து கொள்வது என்பது முக்கியமானதாகும்.
நிர்ப்பந்தத்திற்குக் கூட நிராகரிக்கக் கூடாது என்பது எமக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்களுக்குரிய கட்டமாகும். நிர்ப்பந்தம் காரணமாக உள்ளத்தில் ஈமானை ஏற்றுக் கொண்டு வெறுப்புடன் நிராகரிப்பை வெளிப்படுத்துவதற்கான அனுமதியென்பது இந்த உம்மத்துக்குரியதாகும். நிர்ப்பந்தம் காரணமாக நிராகரித்தவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்பது மாற்றப்பட்ட மன்சூஹ் ஆன சட்டமாகும். இவ்வாறு முடிவு செய்யும் போது முரண்பாடு நீங்கிவிடுகின்றது. அல் குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ் முரண்பட்டால் அதில் நாஸிஹ், மன்சூஹ் அல்லது தனிச் சட்டம், பொதுச் சட்டம் என்பன போன்ற ஏதாவது வேறுபாடுகள் இருப்பதை உணரலாம். இவ்வாறு சட்டத்தை வேறுபடுத்திக் காண்பதன் மூலம் முரண்பாட்டைக் களைந்து இரண்டையும் ஏற்றுக் கொள்வதே சரியான நிலைப்பாடாகும்.
06. யார் பெரிய அநியாயக்காரன்
“அல்லாஹ்வின் மஸ்ஜித்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழ்படுத்த முயல்பவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? அச்சமுடையவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்கு அவர்களுக்குத் தகுமானதல்ல. அவர்களுக்கு இம்மையில் இழிவும் மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.” (2:114)
இந்த ஆயத்து அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுப்பவனை விட பெரிய அநியாயக்காரன் யாரும் இல்லை என்று கூறுகின்றது.
“இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) சந்ததிகள், யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் கூறுகின் றீர்களா? (இதை) நீங்கள் நன்கு அறிந்த வர்களா? அல்லது அல்லாஹ்வா? என்று (நபியே!) நீர் கேளும். அல்லாஹ்விடமிருந்து வந்த சான்றை தன்னிடம் வைத்துக் கொண்டு மறைப்பவனை விட மிகப்பெரும் அநியாயக்காரன் யார்? நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.” (2:140)
இந்த ஆயத்து அல்லாஹ்விடமிருந்துள்ள அத்தாட்சியை மறைப்பவன்தான் பெரிய அநியாயக்காரன் என்று கூறுகின்றது.
“அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை அல்லது அவனது வசனங்களைப் பொய்ப்பித்தவனை விட மிகப்பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.” (6:21)
இந்த வசனம் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனும், அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிப்பவனுமே பெரிய அநியாயக்காரன் என்று கூறுகின்றது.
“அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனையும், அல்லது தனக்கு வஹியாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் தனக்கு வஹி அறிவிக்கப்படுவதாகக் கூறுபவனையும், மேலும் அல்லாஹ் இறக்கியதைப் போன்று நானும் இறக்குவேன் என்று கூறுபவனையும் விட மிகப்பெரும் அநியாயக்காரன் யார்? இவ்வநியாயக்காரர்கள் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்த்தால் வானவர்கள் தமது கைகளை விரித்தவர்களாக, “உங்களது உயிர்களை நீங்களே வெளியேற்றி விடுங்கள்! அல்லாஹ்வின் மீது, உண்மைக்கு மாற்றமாக நீங்கள் கூறிக்கொண்டிருந்ததினாலும், அவனது வசனங்களை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருந்ததினாலும் இன்றைய தினம் இழிவுதரும் வேதனையை நீங்கள் கூலியாக வழங்கப்படுகின்றீர்கள்” (எனக் கூறுவதை நீர் காண்பீர்)” (6:93)
இந்த வசனம் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனும், தனக்கு வஹி வராமலேயே வருவதாகக் கூறுபவனும் அல்லாஹ் அருளியது போன்று தானும் அருளுவேன் என்று கூறுபவனுமே பெரிய அநியாயக்காரன் என்று கூறுகின்றது.
“அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை அல்லது தன்னிடம் வந்த சத்தியத்தைப் பொய்ப்பித்தவனை விட, மிகப்பெரும் அநியாயக்காரன் யார்? நிராகரிப்பாளர்களுக்கான தங்குமிடம் நரகத்தில் இல்லையா?” (29:68)
அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனும் தன்னிடம் வந்த உண்மையைப் பொய்ப்பிப்பவனுமே பெரிய அநியாயக்காரன் என்று கூறுகின்றன.
இந்த வசனங்களும் இது போன்ற மற்றும் பல வசனங்களும் “அழ்ழுலுமு” மிகப் பெரிய அநியாயக்காரன் என சிலரைக் குறிப்பிடுகின்றன. இப்போது யார் மிகப் பெரிய அநியாயக்காரன் என்ற சந்தேகம் எழுகின்றது. யார் மிகப் பெரிய அநியாயக்காரன்?
பள்ளியை விட்டும் தடுப்பவனா? அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனா? அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனா? அல்லது அல்லாஹ்வின் ஆயத்துக்களை நிராகரிப்பவனா?. இதில் யார் பெரிய அநியாயக்காரன்? யாராவது ஒருவன் மிகப் பெரிய அநியாயக்காரன் என்று கூறினால் அடுத்தவர்கள் அவனை விட குற்றத்தில் குறைந்த அநியாயக்காரர்கள் என்று கூற நேரிடும். அப்போது மிகப் பெரிய அநியாயக்காரன் எனக் குர்ஆன் குறிப்பிட்டதில் சந்தேகம் ஏற்பட்டு விடும். இதை எப்படிப் புரிந்து கொள்வது.
குர்ஆன் பொதுவாக மிகப் பெரிய அநியாயக்காரன் எனக் குறிப்பிட்டுள்ளது. அதைக் குறிப்பிட்ட குற்றத்துடன் மட்டும் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.
தடுப்பவர்களில் மிகப் பெரிய அநியாயக்காரன் பள்ளிகளை விட்டும் தடுப்பவன்.
பொய்யுரைப்பதில் மிகப் பெரிய அநியாயக்காரன் அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவன்.
இட்டுக் கட்டுவதில் மிகப் பெரிய அநியாயக்காரன் அல்லாஹ் மீது இட்டுக்கட்டுபவன்.
பொய்ப்பிப்பதில் மிகப் பெரிய அநியாயக்காரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிப்பவன். மறைப்பதில் மிகப் பெரிய அநியாயக்காரன் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைப்பவன் என பகுதி பகுதியாகப் பிரித்து நோக்க வேண்டும். இவ்வாறு நோக்கும் போது முரண்பாடு அகன்றுவிடும்.
அபூறையான் போன்ற அறிஞர்கள் மற்றுமொறு கோணத்தில் இப் பிரச்சினையை அணுகுகின்றனர். இங்கே குறிப்பிடப்பட்ட குற்றங்கள் அனைத்தும் சம அளவிளான அநியாயங்கள். இவனை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்கின்றான்? என்ற கேள்வி இவனை விடப் பெரிய அநியாயக்காரன் யாரும் இல்லை என்றுதான் கூறுகின்றது. இவன் அளவுக்கு சமமான அநியாயக்காரன் யாரும் இல்லை என்ற கருத்தைத் தராது. எனவே இவர்கள் அனைவரும் பெரிய அநியாயக் காரர்கள்தான். ஒருவரையொருவர் மிகைத்துவிட்டனர் என்று கூற முடியாத அளவுக்கு இல்லாமல் சம அளவிலான அநியாயக்காரர்கள் என எடுத்துக் கொண்டாலும் குறித்த சந்தேகம் அகன்றுவிடும்.
இவ்வாறு அல் குர்ஆன் ஒன்றைக் கூறும் போது அதற்கு முரண் போல் ஹதீஸ் ஒரு செய்தியைக் கூறினால் குர்ஆன் குறிப்பிட்டது ஒரு துறை சார்ந்தது. ஹதீஸ் குறிப்பிட்டது மற்றொரு துறை சார்ந்தது என்று புரிந்து கொண்டால் முரண்பாடு அகன்றுவிடும். அதை விட்டு விட்டு ஹதீஸை நிராகரிப்பதென்பது வஹியின் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுக்கும் தவறான போக்காகும். இந்தத் தவறான வழியில் மக்களைத் தள்ளிவிடும் அழைப்பாளர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்… வ பரக்…
இடுகைகள் ஒன்று, இரண்டு என தொடராக வரும்போது, தொடரின் பழைய பகுதிகளுக்கு ‘படித்து விட்டீர்களா’ என்பது போன்ற லிங்க் கொடுத்தால் படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இது போலவே தொடர் முடிந்த பின் முன்னுள்ள தொடர்களுக்கு கீழே ‘தொடர்ச்சிக்கு’ என்பது போல அடுத்துள்ள பகுதிகளுக்கு லிங்க் கொடுக்கலாம்.
அல்லாஹ் உங்களின் முயற்சிகளுக்கு சிறந்த நற்கூலிகளை வழங்குவானாக!
Alhamdhulillah! beautiful explanation! Zajakallahu khairan! May ALLAH poured HIS Blessings on your team!
ALLAH SUBANAHUTHAALA guide those whom He wills ! misguide those whom He wills! No matter the misguided person is a scholar of islam or whatever position he has in islamic society! Beware of tamilnadu shaiks!(not all shaiks only a few) because from tamilnadu, persons who called themselves belongs to people who follows quran and sunnah are follows these kind of “fithna”
They first confuse the people in the tamil translation of Holy Quran thorough explanation. They even dont bother about criticizing our beloved prophets like “Dawood alahisalaam, and Sulaiman alahisalaam! and after that they came to criticize Sahabas !
May ALLAH save the tamilnadu muslims from their fitna particularly and all tamilmuslims as a whole!
ALLAH IS OUR ONLY PROTECTOR!