– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
இலங்கை அரசு என்றுமில்லாதவாறு வெளிநாடுகளின் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நேரத்தில் உள்நாட்டிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென அறிவிக்கப்பட் எரிபொருட்களின் விலையேற்றம் சாதாரண மக்களைக் கதிகலங்கச் செய்துள்ளது. இந்த விலையேற்றத்துடன் மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் பொருளாதார நெருக்கடி நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விலையேற்றங்கள் இத்துடன் நிற்கப்போவதில்லை. எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி பாண், அரிசி, போன்றவற்றின் விலைகளையும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. பொருட்களை இடம் மாற்றும் செலவு அதிகரிப்பதால், எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரிக்கவே செய்யும். அத்துடன் சிற்றுண்டிச் சாலைகளில் விற்கப்படும் அனைத்து உணவுகளும் மின்சாரக் கட்டணம், எரிபொருள் கட்டணம், பொருட்களைக் கொண்டுவரும் செவவினம் என்பவை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைக் காரணம் காட்டி அதிகரிக்கவே செய்யும். இந்தப் பின்னணியில் இந்த விலையேற்றம் எல்லாப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் அடிப்படையாகும் என்பதால் மக்கள் கலங்குவதில் நியாயம் இருப்பதை மறுக்க முடியாது.
இந்தத் திடீர் விலையேற்றத்தின் அடிப்படையான பின்னணி என்ன? என்பதும் சிந்திக்க வேண்டியதாகும். ஈரான் சர்வதேச ரீதியில் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையால் இலங்கை பாதிக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் மொத்தப் பெற்றோலிய இறக்குமதியில் 93% சதவிகிதம் ஈரானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. ஒரே வார்த்தையில் கூறுவதென்றால் இலங்கை தனது பெற்றோலியத் தேவைக்கு முற்றுமுழுதாக ஈரானையே நம்பியுள்ளது என்று கூறலாம். ஈரான் தூதுவர் முஹம்மத் நாபி ஹஸனீ என்பவர் ஈரானின் இலங்கைக்கான நட்பின் விசுவாசத்தை வெளியிடும் போது ‘என்ன தடைகள் விதிக்கப்பட்டாலும் இலங்கைக்கான எரிபொருள் இலங்கைக்குக் கிடைத்தே தீரும்’ என்று உறுதியளித்துள்ளார். இருப்பினும் ஈரான் நசுக்கப்பட நசுக்கப்பட இலங்கையின் கண்கள் பிதுங்க ஆரம்பிக்கும். இன்னும் சில தினங்களுக்குள் எரிபொருள் விலை இலங்கை அரசையே மூச்சுத் திணற வைக்கலாம்.
இது மட்டுமன்றி, அதிகரித்துச் செல்லும் ஊழல், ஆடம்பரம் என்பவையே இந்த அளவுக்கு மக்கள் மீது சுமையை ஏற்ற முக்கிய காரணங்களாகும் என்றும் விமர்சிக்கப்படுகின்றது. விலை யேற்றத்திற்கு நியாயமான காரணம் இருக்கின்றதோ, இல்லையோ என்ற வினாவுக்கு அப்பால் இந்த விலையேற்றத்தால் நாட்டின் பெரும்பாலான மக்கள் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது சர்வ நிச்சயமாகும்.
விலையேற்றம் மக்களுக்கு இன்னல் தரக்கூடியது. என்றாலும் அந்த விலையேற்றம் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பம் பொருத்தமற்றதாக உள்ளது என்றே கூற வேண்டும். பொதுவாக எதிர்க்கட்சி தனக்குள் முரண்பட்டு அந்த முரண்பாடு பல கட்டங்களாக உயர்மட்டத்தால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. பேருவளையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய உரை கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. உயர் மட்டத்திலிருக்கும் வெறுப்பு நிலை கீழ் மட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டு அவர்களது பிரச்சினை பூதாகரமாக வெடிப்பதற்கு அவகாசம் அளிப்பதுதான் அரசுக்கு சாதகமான அரசியல் சாணக்கியமாகும்.
அதற்கு மாற்றமாக அதிகரிக்கப்பட்ட இந்த விலையேற்றம் என்பது அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளது. அதே நேரம் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன்னைத் தூக்கி நிறுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கியுள்ளது. மக்களின் பொதுப் பிரச்சினையை முன்னெடுக்கக்கூடிய தேசியத் தலைவராகத் தன்னை இனம் காட்டிக் கொள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு இது நல்ல சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.
பொதுவாக விலையேற்றங்கள் ஏற்படும் போது மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமது அதிருப்தியை வெளியிடுவதும், சிலபோது அதனூடாக சில அணுகூலங்களை அடைந்து கொள்வதும் ஆசிய அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாத அம்சமாகும். எரிபொருளின் விலையேற்றம் குறித்து அறிவிக்கப்பட்டதும் தனியார் போக்குவரத்து சபை பணி பகிஷ்கரிப்பின் மூலமாக கட்டண உயர்வுக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டதை உதாரணமாகக் கூறலாம்.
விலையேற்றங்களின் போது மக்களின் உணர்வலைகளைப் புரிந்து கொண்டு செயற்படுவது அரச இயந்திரத்தின் பணியாக இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக ஆர்ப்பாட்டங்களைத் தீவிரவாதத்தை நசுக்குவது போன்று நசுக்குவது நல்லாட்சிகு நல்லதன்று.
பொதுவாக விலையேற்றங்கள்அதிகரிக்கப்பட்டால் மக்கள் அதனால் அதிருப்தியடைவர். அந்த அதிருப்தியை அறுவடையாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயமடைய எதிர்க்கட்சிகள் முனையும். இது ஒன்றும் அரசியலுக்குப் புதிய அம்சமல்ல. இருப்பினும் இந்தத் தடீர் விலையேற்றத்தால் ஆடிப்போன மக்கள் அரசியல் கட்சிகளை நம்பாமல் சுயமாகவே அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசு கையாண்ட முறையும் விமர்சனத்திற்குரியதாயுள்ளதுடன் அரசை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
சிலாபத்தில் மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 38 வயதுடைய அந்தோனி பெர்னாண்டோ எனும் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அரசைக் கவிழ்க்கும் சதிமுயற்சி ஆர்ப்பாட்டங்களைக் கையாள்வது போன்று மக்கள் தமது உணர்வினை வெளிப்படுத்தும் ஆர்ப்பாட்டங்களைக் கருத முடியாது.
இத்தகைய நடவடிக்கைகள் இலங்கை அரசை இன்னும் இக்கட்டான நிலைக்குத் தள்ளி விடுவதுடன் வெளிநாடுகளின் இலங்கை பற்றிய தப்பெண்ணம் மேலும் வலுவடையவே வழி செய்யும். குறிப்பாக போர்க் குற்றப் பொறிக்குள் இலங்கை வசமாகவே மாட்டியுள்ள சந்தர்ப்பம் இதுவாகும். இது போன்ற சந்தர்ப்பத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் இலங்கையில் போர்க் குற்றச் செயல்கள் அதிகளவில் இடம்பெற்றிருப்பதற்கான இடம்பாடு இருப்பதை உறுதி செய்யும் நிகழ்வாகப் பதிவாகிவிடும்.
தங்களது இனத்தைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் போதே வெளிப்படையாகவே சுடுகின்ற இராணுவம் தம்மோடு போர் செய்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் முறையான கண்கானிப்பில்லாத சந்தர்ப்பத்தில் எவ்வளவு மோசமாக நடந்திருக்கும் என்ற நியாயமான கேள்விக்கும், சந்தேகத்துக்கும் இச்சம்பவம் வழியமைத்துவிட்டது. இலங்கை வெளிநாடுகளின் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுவிட்டால் அது இலங்கைத் தாய் திருநாட்டின் அனைத்துக் குடிமக்களையும் தான் பாதிக்கும் என்பது கவனத்திற்குரியதாகும்.
இப்போது விலையேற்றத்தைக் கண்டிக்கும் இந்த மக்கள் போர் நடக்கும் போது என்ன விலை ஏறினாலும் பரவாயில்லை போரை முடியுங்கள் என அரசுக்கு ஒத்துழைப்பு நல்கியவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். பயங்கரவாதத்தை முடித்து நாட்டை அமைதி நிலைக்குக் கொண்டு வந்த நன்றியுணர்வை இந்த விலையேற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வருவதையும் அரசு கவனத்திற்கொள்வது நல்லது.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் சில நன்மைகளை நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் பொருளாதார நெருக்கடி என்பது தீராத பிரச்சினையாகவே இருக்கின்றது. போருக்காக செலவிடப்பட்டது கோடானு கோடிப் பணம் போர் வெற்றியால் கிடைக்கப் பெற்ற வரப்பிரசாதங்களுக்கு என்ன நடந்தது? என்ற நியாயமான கேள்விக்கு இன்னும் மக்களுக்கு விடை கிடைக்கவில்லை. அந்த விடை கிடைக்காவிட்டால் போர் முடிந்ததால் ஏற்பட்ட நன்மைகளை ஒரு குடும்பம்தான் அனுபவிக்கின்றது என்ற எண்ணம் அதிருப்தியாக வெடிக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கையில் உள்நாட்டு அரசியல் குழப்ப நிலையென்பது நாட்டுக்கு நன்மையாக முடியாது. எனவே, மக்களின் இந்த நியாயமான சந்தேகத்தினை நிவர்த்தி செய்வது அரச தரப்பினரின் பொறுப்பாகும்.
தனியார் ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது ஏற்பட்ட எதிர்ப்பலைகளால் அத்திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. எரிபொருள் விலையேற்றம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கென மானியங்கள் அறிவிக்கப்பட்டது. நிலைமை முற்றிச் செல்வதை அவதானித்த அரசு, எரிபொருள் விலையைக் குறைப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றது. இது மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியேயாகும். இருப்பினும், இதற்காகக் ஒரு இளம் குடும்பஸ்தனின் உயிர் பலியாக்கப்பட்டுள்ளது என்பது வேதனை தரும் நிகழ்வாகும். இதே வேளை தற்போது எடுக்கப்படும் விலைக் குறைப்புத் திட்டத்தைக் கூட அரசு தக்கவைத்துக் கொள்ளுமா? என்பது சர்வதேச அரசியல் நிலைகளை வைத்துப் பார்க்கும் போது சந்தேகமானதேயாகும். 30 வருட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் உண்மையான பயனை மக்கள் முழுiமாக அனுபவிக்கும் நிலை வரும் நன்னாள் எந்நாளோ?..