இஸ்லாமிய அடிப்படை ஆதாரங்களில் குர்ஆன் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று ஹதீஸூம் முக்கியமானதாகும். மிக அந்தஸ்துக்குரியதாகும். மேலும் இஸ்லாத்தில் எவ்வளவு முக்கியமானது என்றால் ஹதீஸ் இல்லாமல் குர்ஆனை விளங்கவே முடியாது. மேலும் ஹதீஸ் குர்ஆனுக்கு எவ்வளவு தேவையென்றால், குர்ஆனில் உள்ள செய்திகளை உறுதிப்படுத்தும் அல்லது குர்ஆனில் உள்ள செய்திகளை விளக்கும் அல்லது குர்ஆனில் இல்லாத தகவல்களை கூடுதலாக வழங்கும்.
குர்ஆன், ஹதீஸின் பால் இவ்வளவு தேவை இருப்பதினால் தான் நபித்தோழர்கள் குர்ஆனுக்கு முக்கியத்துவம் வழங்கியது போல் ஹதீஸிற்கும் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறார்கள். ஹதீஸ்களை பெற்று அதனை மனனம் செய்து எழுதி, பாதுகாத்தும் வந்தார்கள். அவர்களின் இந்த செயலுக்கு நபி (ஸல்) அவர்களின் சொல்லும் தூண்டுதலாக இருந்தது.
யார் என்னுடைய சொல்லை கேட்டு, அதனை மனனம் செய்து, பாதுகாத்து பிறருக்கு எத்திவைக்கிறாரோ அந்த மனிதரின் வாழ்க்கையை செழிப்பாக்குவானாக என்று நபி (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள். (நூல் : திர்மிதி 3658)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். என்னிடமிருந்து ஒரு செய்தியை கேட்டாலும் அதை பிறருக்கு எத்திவைத்துவிடுங்கள். (நூல் : புகாரி 3227)
நபித்தோழர்களை பின்தொடர்ந்து தாபிஈன்களும், தபவுத் தாபிஈன்களும் இப்பணியில் ஈடுபட்டார்கள். அவர்களும் நபித்தோழர்களிடம் ஹதீஸ்களை கேட்டு மனனம் செய்தார்கள். அதை எழுதி பாதுகாத்தார்கள். அதை பிறருக்கு எத்திவைக்கவும் செய்தார்கள்.
ஹதீஸ் எப்படி எழுதி மனனம் செய்து பாதுகாக்கப்பட்டது என்பதை அறியாத சிலர் இன்று ஹதீஸ்களின் மீதும் ஹதீஸ் தொகுப்புகளின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். இவர்களின் சந்தேகங்களை அகற்றும் விதமாக இன்ஷா அல்லாஹ் இத்தொடர் உங்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறோம்.
இக்கட்டுரைக்காக நாங்கள் பல அரபு நூல்களிலிருந்து தகவல்களை உங்களுக்காக திரட்டியிருக்கிறோம். நீங்கள் படிப்பது மட்டுமல்லாமல் பிற மக்களுக்கும் இச்செய்தியை கொண்டு சேருங்கள். நம்முடைய ஸலஃபுகள் ஹதீஸ்களை பாதுகாத்ததை போன்று நாமும் பாதுகாக்க முன்வரவேண்டும்.
சுன்னாவின் சொல்விளக்கம்
சுன்னத் என்ற வார்த்தை ஒருமையாகும். இதன் பன்மை சுனன் ஆகும். இந்த வார்த்தை நபியவர்களுக்கு முன்னால் வாழ்ந்த அறியாமைக் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சுன்னத் என்ற வார்த்தை அறியாமைக் காலத்தில் அத்தரீக் பாதை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. இதை ”லிஸானுல் அரப்” (பாகம் 6 பக்கம் 399) அரபி அகராதியில் பார்க்கலாம்.
சுன்னா என்ற வார்த்தை குர்ஆனிலும் அதிகமான இடங்களில் பாதை என்ற பொருளிலே பயன்படுத்தப்பட்டு இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹுதஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
உங்களுக்குத் தெளிவுபடுத்திடவும், உங்களுக்கு முன் சென்றோரின் வழி முறைகளை உங்களுக்குக் காட்டிடவும், உங்களை மன்னிக்கவும் அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 4 : 26)
மேலும் சுன்னா என்ற வார்த்தை ஹதீஸ்களிலும் பாதை என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தன்னுடைய ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: 1848.)
சுன்னாவின் வரைவிலக்கணம்:-
சுன்னா என்ற வார்த்தைக்கு வரைவிலக்கணத்தை கூறுவதில் ஹதீஸ்கலை அறிஞர்களும், ஃபிக்ஹ்கலை அறிஞர்களும் வித்தியாசப்படுகிறார்கள். காரணம் ஹதீஸ்கலை அறிஞர்கள் அவர்கள் என்ன நோக்கத்தில் ஹதீஸ்களை அணுகுகிறார்களோ அந்த அடிப்படையில் சுன்னா என்ற வார்த்தைக்கு வரைவிலக்கணம் சொல்கிறார்கள்.
சுன்னத் என்ற வார்த்தைக்கு மார்க்க சட்ட அறிஞர்கள் வணக்க வழிபாடுகளில் ஃபர்ள் என்ற வார்த்தையின் எதிர் பதமாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் உளூவில் இது ஃபர்ள் என்றும் ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுவுவது சுன்னத் என்றும் பயன்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் சுன்னத்தான காரியத்தை செய்தால் நன்மை என்றும் அதை விட்டால் தண்டிக்கப்படமாட்டார் என்றும் கூறுகிறார்கள்.
சுன்னத்தின் இரண்டு வகைகள்
மேலும் அவர்கள் சுன்னத்தை சுன்னத்துல் ஹத்யி சுன்னத்துல் ஸவாயித் என்று இரண்டு விதமாக பிரிக்கிறார்கள்.
சுன்னத்துல் ஹத்யீ என்றால் நபியவர்கள் வணக்க வழிபாடுகள் என்ற அடிப்படையில் செய்த செயல்களாகும்.லுஹா தொழுகை, மற்றும் பர்ளான தொழுகையின் முன் சுன்னத் மற்றும் பின் சுன்னத் போன்றவைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
சுன்னத்துல் ஸவாயித் என்றால் வணக்க வழிபாடுகள் என்ற அடிப்படையில் அல்லாமல் வழமை என்ற அடிப்படையில் அவர்கள் செய்யும் செயல்களாகும். அவர்களின் நடக்கும் முறை, உட்காரும் முறை, ஆடைகள் மற்றும் உணவு முறைகள் ஆகியவைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
அடிப்படை விதிகளை ஆராய்வோர் மார்க்க சட்ட அடிப்படை ஆதாரங்களில் சுன்னாவை மிக முக்கியமான அடிப்படை ஆதாரமாக கருதுகிறார்கள். அவர்கள் சுன்னா என்பதற்கு வரைவிலக்கணம் சொல்லும்போது நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இவைகளில் எது உறுதியாகிவிட்டதோ அவைகள்தான் சுன்னா என்று சொல்கிறார்கள்.
ஹதீஸ்கலை வல்லுநர்களிடத்தில் சுன்னா என்ற வார்த்தைக்கு வரைவிலக்கணமாக நபியவர்களின் பக்கம் இணைக்கப்பட்ட சொல் செயல் அங்கீகாரம் நபியவர்களின் வர்ணனை நபியவர்களின் வரலாறு நபியவர்களின் குணம் என்று சொல்கிறார்கள்.
இந்த வரைவிலக்கணம் அடிப்படை விதிகளை ஆராய்வோர் சொன்ன வரைவிலக்கணத்தை விட விரிவானதாகும்.
சுன்னா என்ற வார்த்தைக்கு நெருக்கமான மற்ற வார்த்தைகளான ஹதீஸ், கபர், அதர் போன்ற வார்த்தைகளையும் அறிஞர்கள் பயன்படுத்துவார்கள்.
சுன்னாவின் வகைகள்.
சுன்னா நான்கு பங்குகளாக இருக்கிறது. ஒன்று சுன்னா அத்தக்ரீரிய்யா பொதுவாக இவ்வகையான செய்திகள் நபியவர்களின் அங்கீகாரத்தை குறிக்கும். நபியவர்களின் முன்னிலையில் அல்லது வேறு இடங்களில் நபித்தோழர்களின் சொல்லில் நபித்தோழர்களின் செயல்களில் நபியவர்கள் எதை மறுக்கவில்லையோ அவைகளை குறிக்கும். காரணம் நபித்தோழர்களிடமிருந்து வெளிப்பட்ட தவறான சொல்லையோ செயலையோ நபியவர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள்.
இதற்கான உதாரணம் இரண்டு நபித்தோழர்கள் பிரயாணத்தில் இருந்தார்கள். அப்பிரயாணத்தில் இரண்டு நபித்தோழர்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இரண்டு நபர்களும் தயம்மும் செய்து தொழுதார்கள். பிறகு இரண்டு நபர்களும் தொழுகையின் நேரம் முடிவதற்குள் தண்ணீரைப் பெற்றுக் கொண்டார்கள். அதில் ஒருவர் தண்ணீரை வைத்து ஒளு செய்து மீண்டும் தொழுதார். மற்றொருவர் தண்ணீரை வைத்து ஒளு செய்யவுமில்லை மீண்டும் தொழவுமில்லை.
பயணத்தில் இரண்டு நபர்களும் திரும்பிய போது இரண்டு நபர்களும் நடந்த செய்தியை நபி (ஸல்) அவர்களிடத்தில் சொன்னார்கள். தண்ணீரை வைத்து ஒளூ செய்து மீண்டும் தொழுதவரைப் பார்த்து உனக்கு இரண்டு தடவை கூலி உண்டு என்று சொன்னார்கள். தண்ணீரை வைத்து ஒளூ செய்து தொழாதவரைப் பார்த்து நீ சுன்னத்தையே செய்துவிட்டீர் உனக்கு முதல் தொழுகையே போதுமானதாகும் என்று சொன்னார்கள். (நூல் : அபூதாவூத் 338)
நபியவர்களின் குணம் அவர்களின் தோற்றம் பற்றி சொல்லும் சுன்னா கஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். நபியவர்கள் மகிழ்ச்சியடைந்தால் அவர்களின் முகம் சந்திரனைப் போன்று பிரகாசிக்கும். (நூல்: ஹாகிம் 4193)
அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதே போன்றதை அறிவித்துவிட்டு, ”நபி (ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களுடைய முகத்தில் தெரிந்துவிடும்” என்று (அதிகப்படியாக) அறிவித்துள்ளார்கள்.
நூல் : புகாரி (3562)
நபியவர்களின் மற்ற சுன்னாக்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்க்கலாம்
தொடரும்…