அண்மையில் ஊரில் நடைபெற்ற நூல் வெளியீடொன்றும், அதில் இடம்பெற்ற உரைகளும் கடந்த காலங்களில் என் சொந்த ஊருக்கும் எனக்குமிடையில் இருந்த தற்காலிக பிரிவொன்றினை மீட்டுவதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்தது.
ஒருவனை தன் பிறந்த ஊரின் ஞாபகம் சூழ்ந்து, அதுவே விடாமல் வாட்டி வதைக்குமானால், அவன் ஊருக்கு வெளியில் எங்கேயோ சூழ்நிலைக் கைதியாக்கப் பட்டிருக்கிறான் என்று அர்த்தம். சொந்த ஊரின் பெறுமதியை உணர்ந்து கொள்ள அதுவும் ஓர் அளவுகோலாகி விடுவதுண்டு. குறைந்த பட்சம் அந்த வேதனையை ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் அனுபவித்திருப்பார்கள் என நினைக்கிறேன். அந்த அனுபவத்தை சொந்த ஊர் எனக்கு சற்று தாராளமாகவே கொடுத்திருந்தது. அதாவது, கடந்துபோன யுத்த நிலைமைக்கும் (1990களில்) எனது குடும்பம் தென்பகுதிக்கு இடம் பெயர்ந்தமைக்கும் ஒரு நேர்கோட்டுத் தொடர்பிருந்தது. அப்போது நான் ஏழாம் தரத்தில் கற்றுக்கொண்டிருந்தேன்.
அதே காலப்பகுதியில் எங்களுடன் அயலவராய் இணைந்திருந்த வடபுலத்து உறவுகளையும் இதற்குள் நினைவுகூராதிருக்க முடியாது. அவர்களின் சொந்த ஊரிலிருந்து திணிக்கப்பட்ட வெளியேற்றமும், புதிய இடம் நோக்கிய அவர்களின் வருகையும், “அகதிகள்” என்ற பட்டத்தைச் சூட்டி அரசாங்கத்தின் ஓரிரு உதவிகளையும் பெற்றுக் கொடுத்துவிட்டு தன் கடமையை முடித்துப் போனது.
ஆனால், பிறப்பிலிருந்து அனுபவித்த அடிப்படை வாழ்வியலை இழந்தது மட்டுமன்றி, மீண்டும் புதிய சூழலுக்கு அறிமுகமாகும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்ட அவர்களின் போராட்டமும் உளக்குமுறல்களும் சாதாரணமானதொன்றல்ல.
சொந்த மண் பற்றியும் உறவுகள் பற்றியும் பேசுவதிலேயே அவர்களின் சந்தோசம் வெளிப்பட்டது. தனது ஊர் பற்றிய மீட்டல்கள்தான் அவர்களுக்கு இனிமை கொடுத்தது. அந்த நினைவுகளிலேயே புதுச் சூழலைக் கட்டியெழுப்ப முயற்சித்தார்கள். தனது குடும்பச் சடங்குகளாயிருக்கட்டும், பிரசவ நிகழ்வாயிருக்கட்டும், மரணச் செய்தியாயிருக்கட்டும், துக்கங்களாயிருக்கட்டும், தோள்கொடுக்கும் தோளராயிருந்ததெலாம் புதிய அயலவர்களாகிப்போன நாங்களும்தான்.
விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் புன்னகைத்தோம்…
பாடசாலை நட்புகளை வளர்த்தோம்…
மாலை வகுப்புக்கள் சென்றோம்…
விளையாட்டுகளைத் தொடர்ந்தோம்…
ஊரின் மூலை முடுக்குகளில் எம் மண்வாசனை தேடினோம்…
ஊர்ச் செய்திகளையறிய ஆவலுற்றோம்…
ஊரவர்களைக் கண்டால் ஊரையே கண்டாற் போன்று சந்தோசப்பட்டோம்….
தொலைபேசித் தொடர்பற்றிருந்த காலம் அது, கனவுகளால் பிறந்த(அ)கத்துடன் உறவாடிக்கொண்டோம்…
எது எப்படி இருப்பினும், திசைகடந்து, எல்லை கடந்து, வாழத் திணிக்கப்பட்ட அவர்களின் நிலைமை ஒரு சோதனைக் களம்தான் என்பதை உணர முடிகிறது. சொந்த வீட்டில் தூங்கிப்பழகிய ஒருவருக்கு புதிய இடத்தில் தூங்குவது சிரமமாக இருக்கும். இந்தச் சிறிய அனுபவமே அவர்களின் பெரும் வலியை உணர்த்தக்கூடியது.
தங்களுடைய மண்வாசனைகள் மண்ணாகி விடுமோ என்ற அச்சமும், பண்பாடுகள் பத்தோடு பதினொன்றாகி விடுமோ என்ற பதட்டமும் அவர்களின் உள்ளங்களில் எப்போதுமே குடியிருந்தன.
எவ்வூராயினும் அதன் மண்வாசனைகளும் பண்பாடுகளும் ஒரே சூழலில் பேணப்படும்போதே அதன் முன்னேற்றம் ஒரு பக்கமாய் ஏனைய முயற்சிகள் மறு பக்கமாய் அவ்வூரின் வாழ்வியல் ஒரு சமநிலையிலிருக்கும்.
ஆனால், அந்த மக்களை அழைப்பதற்குகூட அவர்களின் பிறந்தகத்திலே யாரும் இருக்கவில்லை என்பதுதான் துரதிஸ்டமானது. பிற்காலங்களில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் சொந்த இடங்களில் இருத்தப்பட்டாலும், அவர்கள் இழந்தவற்றுக்கு முன்னால் அனைத்தும் இரண்டாம் பட்சமே.
எனக்கு இறையளித்த பாக்கியங்களில் ஒன்று, மூன்று வருடங்களுக்குப் பின் எனது குடும்பத்தினருடன் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் சந்தர்ப்பம் வாய்த்தமை. நான் ஊருக்கு திரும்பிய நிகழ்வும் என்னை மிகவும் பாதித்த விடயமாகவே இருந்தது.
எப்போதுமே கசப்பாகத் தோன்றும் வசுவண்டிப் பிரயாணம் அன்று இனிப்பாக மாறியதற்கு காரணம் எனது ஊர்தான்.
நாங்கள் பயணித்த முகமறியா வாகனச் சாரதிகூட எனக்கு உறவுக்காரராக தோன்றினார்.
உடன் பயணித்த பிரயாணிகள் என்னை ஊருக்கு வாழ்த்தி வழியனுப்ப வந்தாற்போல ஒர் உணர்வு.
ஊரின் எல்லையை அடைந்தேன், சந்தோசத்தில் எல்லையற்றுக் கிடந்தேன்.
அதோ தெரிகிறது எனது ஊர். இதோ கிளம்புகிறது என் கிராமத்து புழுதி. அது என்னை சுகம் விசாரிக்கிறது.
“ட்ரைவர் அன்கிள்… நிறுத்துங்கள்… என்னை இறக்கி விடுங்கள்… நான் புழுதியின் கரம் பிடித்து நடக்க வேண்டும்…”
சாரதியின் காதில் விழுந்ததாயில்லை. வேகமாக ஓட்டுகிறார். நான் யாருமறியாமல் கற்பனையாகி வண்டியிலிருந்து குதிக்கிறேன். என் பாதம் தரையில் பட்டதும் தன்னம்பிக்கை எனக்குள் இருக்கையிட்டுக் கொண்டது. மேலும், என் இறக்கை கொண்டு பறக்கிறேன்.
ஆலையடிச் சந்தி எனப் பெயரெடுத்த அந்த ஆலமரம் எனைப் பார்த்துக் கேட்டது, நீ சுகமா?
அதன் பக்கத்திலிருந்த வாசிகசாலை இடுக்கிலிருந்து முகமூடி மாயாவி கேட்கிறான், வாசகியே! நீ சுகமா?
எனது தாயின் முந்தானை பிடித்துப் போய் குளித்து முழுகிய ஆற்றங்கரை கேட்டது, ஆருயிரே! நீ சுகமா?
“ஹொண்டா” மோட்டார் பைசிக்கிளில் என் தந்தையும் நானும் ஓடி ரசித்த அந்த பிரதான பாதை கேட்டது, கண்ணே! நீ சுகமா?
திருட்டுத்தனமாக நண்பிகளுடன் தாமரைக்காய், காரக்காய், சூரக்காய் ஆய்ந்துவந்த சூரத்தனத்தனத்திற்கு அடிவாங்கித் தந்த பெயரறியாப் பெருங்காடு கேட்டது, சுட்டிப்பெண்ணெ! நீ சுகமா?
ஆற்றங்கரைகளில் ஆங்காங்கே தோண்டிக் கைவிடப்பட்ட சிறுசிறு பூவல்கள் கேட்டது, பூவே நீ சுகமா?
வரப்புயர நீர் உயரும்…
நீர் உயர நெல் உயரும்…
நெல் உயர குடி உயரும்…
குடி உயர கோன் உயர்வான்…
என்ற ஒளவையாரின் வரிகளை வாழ்வியலோடு விளக்கிய அந்த வயல் நாற்றுகள் தலையசைத்துக் கேட்டன, நாயகியே! நீ சுகம்தானா?
களங்கமில்லாமல் புன்னகைத்து நகரும் என் ஊருக்கான நிலவிடம் நான் கேட்டேன், நிலவே! எனது ஊர் சுகமா?
நான் விட்டுப்போன எனது பாடசாலை பாசத்தோடு கேட்டது, மறுபடி வந்துவிட்டாயா? என்று.
நாங்கள் வாழ்ந்த வீடும் வாசலும் ஏக்கத்தோடு கேட்டது மறுபடி போவாயா? என்று.
உண்மையிலே சொந்த ஊரில் வாழ்தல் என்பது அடிக்கரும்பை ருசித்தலுக்கு ஒப்பானது. அதனாலோ என்னவோ சூழ்நிலை காரணமாக வெளியூரில் திருமணமுடித்தவர்களும் பின்னாட்களில் தனது ஊரோடு இருத்தலை விரும்புகிறார்கள்.
முகம்மத் நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜுக்காக தனது சொந்த மண்ணிற்கு சமுகமளித்தவேளை, மக்கா மண்ணை முத்தமிட்டுவிட்டு,
“உன்னை விட்டு நான் பிரியவில்லை…
உன்னையும் என்னையும் அவர்கள்தான் பிரித்தார்கள்…” எனக்கூறி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
சொந்த மண்ணை தரிசிக்க சந்தர்ப்பம் கிடைத்தல் இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடையே. அதை அனைவருக்கும் பெறவேண்டி பிரார்த்திப்பதோடு, கிடைத்த சந்தர்ப்பத்திற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாவோம்.
பர்சானா றியாஸ்