Featured Posts

முஹர்ரம் மாதமும், ஆஷூரா நோன்பும்

அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். முஹர்ரம் மாதம் வந்து விட்டால் குறிப்பாக இம்மாதத்தில் மூன்று நிகழ்வுகளைப் பற்றி அதிகமாக பேசப்படுவதையும் அதை காரணமாக்கி சில காரியங்கள் அரங்கேற்றப்படுவதையும் நாம் அறிவோம். எனவே முஹர்ரம் மாதத்தில் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய சுன்னாக்களைப் பற்றிய ஒரு தெளிவை இந்த ஆக்கத்தினூடாக வழங்குவது பயனளிக்கும் என நினைக்கிறேன்.

1 ) மாதங்களைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்:

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.

ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள். இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 53

திருக்குர்ஆன் 9:36

ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடங்கி இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் வரை அனைத்து நபிமார்களின் சமூகத்தாருக்கும் மாதங்களை இவ்வாறு தான் அல்லாஹ் அமைத்தான். வருடத்துக்கு 12 மாதங்கள் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. வானம் பூமி படைக்கப்பட்ட நாள்முதல் இது தான் நடைமுறை என்று அல்லாஹ் சொல்கிறான்.

2) புனித மாதங்கள் எவை?

துல்கஃதா , துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப்.
ஆகிய நான்கு மாதங்களும் புனித மாதங்களாகும்.

3) புனித மாதமான முஹர்ரம் இஸ்லாமியப் புதுவருடமாக மாறியது எவ்வாறு.?

1: நபியவர்களுக்கு முன்னரே ஜாஹிலிய்யாக் கால மக்களிடம் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும்.

2: நாம் என்ன பெயர்களைக் கூறி மாதங்களை அழைக்கின்றோமோ அதே பெயரைத் தான் அவர்களும் புழக்கத்தில் பாவித்து வந்துள்ளார்கள்.

3: அன்றைய அரபிகளிடம் முஹர்ரம் மாதம் தான் முதல் மாதமாக இருந்துள்ளது. ஆனால் வருடங்களைக் கணக்கிட குறிப்பிட்ட ஒரு முறை அவர்களிடம் இருக்க வில்லை.

4: ஓரு வருடத்தில் நிகழும் வித்தியாசமான முக்கிய நிகழ்வுகளை வைத்து வருடங்களை அடையாளப்படுத்துவதே அவர்களின் வழக்கு.

உதாரணமாக: நபிகளார் பிறந்த வருடத்தை யானை வருடம் என்று அழைத்தார்கள். காரணம் அவ்வருடம் தான் கஃபாவை அழிக்க வந்த யானைப்படை அழிக்கப்பட்டது.

5: ஹிஜ்ரி 17ம் ஆண்டு முதல் வருடத்தை எப்படித் தெரிவு செய்வது? எந்த மாதத்தை முதல் மாதமாகத் தெரிவு செய்வது? என்ற ஒரு ஆலோசனைக் கூட்டம் உமர் பின் ஹத்தாப் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடை பெற்றது.

6: அப்போது, முதல் வருடத்தை நபித்துவம் கிடைத்த ஆண்டை வைத்துத் தீர்மானிப்போம் என்ற கருத்தும் ஹிஜ்ரத் சென்ற ஆண்டை வைத்துத் தீர்மானிப்போம் என்பன போன்ற பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதில் ஹிஜ்ரத் சென்ற ஆண்டையே முதல் வருடமாகக் கணக்கிடுவோம் என்ற கருத்து உமர் (ரழி) அவர்களால் தெரிவு செய்யப்பட்டது.

7: சிலர் முதல் மாதமாக ரமழான் மாதத்தைத் தெரிவு செய்வோம். ஏனெனில் அது அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்ற கருத்தும், இன்னும் சிலரால் முஹர்ரம் மாதத்தை முதல் மாதமாகத் தெரிவு செய்வோம். அதிலே தான் மக்கள் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டுத் திரும்புகின்றார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. பின்பு உமர் (ரழி) அவர்கள் அன்றைய நடை முறையில் இருந்ததின் படி முஹர்ரம் மாதத்தையே முதல் மாதமாகத் தெரிவு செய்தார்கள். நபிகளார் ஹிஜ்ரத் சென்றது ரபீஉல் அவ்வல் மாதமாகும்.

4) முஹர்ரம் மாதத்தில் நாம் செய்ய வேண்டியவையும், தடுக்கப்பட்டவைகளும்

1: ஜிஹாத் (போராட்டம்) செய்யத்தடை, தற்காப்பு அனுமதி

2:
فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ
(உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்து கொள்ளாதீர்கள்)

என்ற வசனத்தை அடிப்படையாகக் கொண்டு சில அறிஞர்கள் இம்மாதத்தில் பாவமான காரியங்களில் ஈடுபடுவது இரட்டிப்பான பாவத்தைப் பெற்றுத் தரும் என்கின்றனர்.

ஓன்று செய்த பாவத்துக்கான கூலி, அடுத்தது இந்தப் புனித மாதத்தின் புனிதத்தைப் பால் பாடுத்தியமைக்கான கூலி. என அறிஞர்கள் கூறுகின்றனர்.

5) ஆஷுரா நோன்பும், அதன் நான்கு கட்டங்களும்:

1: அறியாமைக் கால மக்களும், ஆஷுரா நோன்பும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்று வந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்படும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் “முஹர்ரம் பத்தாவது நாளில் விரும்பியவர் (ஆஷூரா) நோன்பு நோற்கட்டும்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிடட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி- 1893-முஸ்லிம்2071)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமழானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, ‘(ஆஷுராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதைவிட்டு விட விரும்புகிறவர் அதைவிட்டு விடட்டும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1592.
அத்தியாயம் : 25. ஹஜ்

நபியவர்களும், நபித்தோழர்களும் அறியாமைக் காலம் தொட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் போன பின்பும் ஆஷூரா நோன்பை நோற்றார்கள் .

அறியாமை காலத்தில் கஃபாவுக்கு புதிய திரைமாற்றும் நாளாக ஆஷூரா நாள் இருந்துள்ளது.

எதற்காகக் குறைஷிகள் முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு நோற்றார்கள் என்பது ஹதீஸ்களில் இடம்பெற வில்லை.

2: ஹிஜ்ரத்துக்கு பின் ஆஷுரா நோன்பு.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். “நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், “இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில் தான் மூஸாவையும், அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்.” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களை விட நாங்களே மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும், நெருக்கமானவர்களும் ஆவோம்” என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, பிறருக்கும் நோன்பு நோற்குமாறும் (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.

ருபைய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்தார்கள்.:

நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!’ என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
ஸஹீஹ் புகாரி : 1960.
அத்தியாயம் : 30. நோன்பு

3: ஹிஜ்ரி 2 ராமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பு.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்; அந்நோன்பை நோற்குமாறு எங்களை ஊக்குவிக்கவும் செய்வார்கள். அந்த நாளில் (நாங்கள் நோன்பு நோற்கிறோமா என) எங்களைக் கவனித்தும் வந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பு நோற்குமாறு) எங்களுக்குக் கட்டளையிடவுமில்லை; எங்களுக்குத் தடைவிதிக்கவுமில்லை; அந்த நாளில் எங்களைக் கவனிக்கவுமில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் : 2080.
அத்தியாயம் : 13. நோன்பு

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஒரு முறை (சிரியாவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது, முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது “மதீனாவாசிகளே, உங்கள் அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது, முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) ஆகும்; இந்நாளில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை. நான் நோன்பு நோற்றிருக்கிறேன். உங்களில் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்; விட்டுவிட விரும்புகின்றவர் விட்டுவிடட்டும்!” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “இது போன்ற (ஆஷூரா) நாளில் நபி (ஸல்) அவர்கள் “நான் நோன்பு நோற்றுள்ளேன். எனவே, நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் காணப்படவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் : 2081.
அத்தியாயம் : 13. நோன்பு

அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான், “அபூ அப்திர் ரஹ்மான், இன்று முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) ஆயிற்றே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு (ஆஷூரா நாளில்) நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமழான் நோன்பு கடமையானபோது அந்த (ஆஷூரா) நோன்பு கைவிடப்பட்டது. ஆகவே, நீங்கள் நோன்பை விட்டுவிட விரும்பினால் நீங்களும் (என்னுடன்) சாப்பிடலாம்” என்றார்கள்.
இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2079.
அத்தியாயம் : 13. நோன்பு

ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு ஆஷூரா நோன்பு சுன்னத்தாக மாறிவிட்டது.
விரும்பியவர் பிடிக்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம்.

4: ஹிஜ்ரி 11க்கு பின் ஆஷூரா நோன்பு :

அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹர்ரம் பத்தாவது நாளை (ஆஷூரா) யூதர்கள் கண்ணியப்படுத்தியும் பண்டிகை நாளாகக் கொண்டாடியும் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2084.
அத்தியாயம் : 13. நோன்பு

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:
அபூமூஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்: கைபர்வாசிகள் (யூதர்கள்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றுவந்தனர்; அந்நாளை அவர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடினர்; தங்களுடைய பெண்களுக்கு அந்நாளில் ஆபரணங்களையும், அழகிய ஆடைகளையும் அவர்கள் அணிவித்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) “இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!” என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2085.
அத்தியாயம் : 13. நோன்பு

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
(முஸ்லிம்- 2088)

முஹர்ரம் பிறை ஒன்பது யூதகிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்ய
நோன்பு பிடிக்க வேண்டும். பிறை பத்து மூஸா (அலை) அவர்களும் அவர்களின் சமூகத்தாரும் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப் பட்டமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக நோன்பு பிடிக்க வேண்டும்.

6) ஆஷூரா நோன்பின் சிறப்பு:

அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

”ஆஷூரா நோன்பைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் அந்த நாளில் நோன்பு வைப்பது அதற்கு முன் சென்ற ஒரு வருடத்தின் பாவங்களை அழிக்கிறது என்று கூறினார்கள்.
(முஸ்லிம்:2151)

முஹா்ரம் மாத நோன்பின் சிறப்புகள்:

“உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்களிலேயே இந்த (ஆஷூரா) நாளையும் மாதங்களிலேயே இந்த -ரமளான்- மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றதாக நான் அறியவில்லை” என்று விடையளித்தார்கள். (புகாரி-2006- முஸ்லிம்- 2086)

”ஆஷூரா நோன்பைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் அந்த நாளில் நோன்பு வைப்பது அதற்கு முன் சென்ற ஒரு வருடத்தின் பாவங்களை அழிக்கிறது என்று கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமழான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2157.
அத்தியாயம் : 13. நோன்பு

7) முஹர்ரம் மாதம் முழுவதும் நோன்பு நோற்கலாமா..?

முஹர்ரம் முதல் பத்து நாட்களும் சிலர் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ரமழானைத் தவிர தொடர் நோன்புகளை நபிகளார் மூன்று நாட்களுக்கு மேல் (அய்யாமுல் பீழ்) நோற்றுள்ளமைக்குச் சான்றுகள் கிடையாது. முஹர்ரம் மாதம் நோன்பு நோற்பது பற்றிப் பொதுவான சிறப்பு ஹதீஸில் வருவதால் இம்மாதத்தில் அதி கூடிய நோன்புகளை நோற்க ஒருவர் விரும்பினால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தாவூத் (அலை) நோற்றுவந்த அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நோன்பை நோற்கலாம். அது போக பிறை 13,14,15 ஆகிய நாட்களிலும், கிழமை நாட்களில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும் நோன்பு நோற்கலாம்.

அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?” என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திலிருந்தும், அவனுடைய தூதரின் கோபத்திலிருந்தும், பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும் வரை இவ்வாறு பல முறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு “அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் “(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்” அல்லது “அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், “இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்க, “இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்” என்று விடையளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்” என்று கூறினார்கள். பிறகு, “மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமழானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான். என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2151.
அத்தியாயம் : 13. நோன்பு

முஹர்ரம் மாதத்தில் மேற்படி ஹதீஸ்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் நோன்பைத் தவிர வேறு எந்த விஷேட அமல்களையும் குறிப்பாக்கிச் செய்ய நபிகளாரின் வழிகாட்டல்கள் ஹதீஸ்களில் இல்லை.

ஹிஜ்ரீ 61 முஹர்ரம் பிறை பத்து ஆஷூரா நாளன்று கர்பலா என்ற இடத்தில் நபிகளாரின் அருமைப் பேரன் ஹுஸைன் ரழி அவர்களின் கழுத்து யூதர்கள் மற்றும் முனாபிக்களின் சதியால் துண்டிக்கப்பட்டது அவர் கர்பலாவில் ஷஹீதாக்கப்பட்டார். அந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஷீஆக்களும் அவர்களைப் பின் தொடர்வோரும் அந்நாளை துக்கம் அனுபவிக்கும் நாளாக தங்களின் உடலில் இரத்தம் ஓட்டிக் கொண்டாடி வருவதுடன் பலவிதமான மௌலூதுகளையும் அத்தினத்தில் ஓதி கத்தம் வழங்குவார்கள்.

நவாஸிப்கள் என்ற ஷீஆக்களுக்கு எதிரான குளு ஷீஆக்களுக்கு நேர் முரணாக அத்தினத்தை புத்தாடை அணிந்து சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டாடுவார்கள். இத்தகைய இரு வழிகெட்ட அமைப்புக்களினதும் சதிகளிலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

குறிப்பு:
இம்முறை சர்வதேசப்பிறை அடிப்படையில் வெள்ளி, சனி பிறை ஒன்பது பத்து தேசியப்பிறை அடிப்படையில் சனி, ஞாயிறு .

நட்புடன்:
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
அட்டுலுகம
இலங்கை
ஹிஜ்ரீ 1442/01/04

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *