Featured Posts

மடமையைத் தகர்ப்போம்

– K.L.M. இப்ராஹீம் மதனீ

உலகம் படைக்கப்பட்ட நாட்களிலிருந்து அல்லாஹுத்தஆலா ஒரு வருடத்தை பன்னிரெண்டு மாதங்களாகத்தான் படைத்திருக்கின்றான். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்-குர்ஆன் 9:36).

பன்னிரெண்டு மாதங்களில் எந்த மாதத்தையும் துக்கம் அனுஷ்டிக்கும் மாதமாக இஸ்லாம் பிரகடனப்படுத்தவில்லை. மாறாக எல்லா மாதங்களையும் அல்லாஹ் ஒரே அமைப்பில்தான் படைத்திருக்கின்றான். அதில் சில மாதங்களுக்கு மற்ற சில மாதங்களை விட சிறப்புக்களை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான். உதாரணமாக ரமலான் மாதம், துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள், இவை மற்ற மாதங்களை விட சிறப்பிற்குரியது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

அல்லாஹ் படைத்த ஒவ்வொரு நாளிலும் மனிதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய காரியங்களும், கவலை ஏற்படுத்தக்கூடிய காரியங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுதான் அல்லாஹ்வின் நியதியாகும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்-குர்ஆன் 2:155)

அல்லாஹ் தன் அடியார்களை பல விதத்திலும் சோதித்துக் கொண்டே இருப்பான், அதற்காக பொறுமையை மேற்கொள்வதுதான் ஒவ்வொரு முஃமினின் கடமையாகும். இதற்கு மாறாக தனக்கு ஏற்பட்ட துக்ககரமான செயலுக்காக ஒவ்வொரு வருடமும் துக்கம் அனுஷ்டிப்பது மடமைக் காலத்தின் செய(லும், இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்றுமாகும். இந்த வகையைச் சேர்ந்ததுதான் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை துக்கம் அனுஷ்டிக்கும் நாளாக எடுத்துக் கொள்வது. நபி(ஸல்) அவர்களின் பேரர் ஹுஸைன்(ரலி) அவர்கள் இந்த நாளில்தான் கர்பலாவில் கொல்லப்பட்டார்கள், அந்த நிகழ்ச்சியை ஞாபகம் ஊட்டும் முகமாகவே இதை நாங்கள் செய்கின்றோம் என்கிறார்கள் இந்நிகழ்ச்சியை செய்பவர்கள். ஹுஸைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டது கவலைக்குரிய செய்தி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, அந்த நாளை துக்கம் அனுஷ்டிக்கும் நாளாக எடுத்துக் கொள்வதற்கு இஸ்லாத்தில் எந்தவித ஆதாரமும் இல்லை.

நல்லவர்கள் ஷஹீதாக்கப்பட்ட நாட்களை துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட நபித்தோழர்களான உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி) போன்றவர்கள் ஷஹீதாக்கப்பட்ட நாட்களையும் துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா(ரலி) அவர்கள் கோரமாக உஹத் போர்க்களத்தில் ஷஹீதாக்கப்பட்ட நாளை துக்கம் அனுஷ்டிக்கும் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? இப்படிக் கடந்த ஒவ்வொரு நாளிலும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அநியாயமாக ஷஹீதாக்கப்படாத நாட்கள் இல்லையென்று கூறலாம். இவர்களின் கருத்துப்படி ஒவ்வொரு நாளும் துக்கம் அனுஷ்டிக்கும் நாளேயாகும். அப்படி இவர்களும் கூறுவதில்லை. இத்துடன் அவர்கள் முடித்துக் கொள்ளாமல் துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக பல்வேறு அனாச்சாரங்களையும் செய்கின்றார்கள். இவர்கள் செய்யும் அனாச்சாரங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒன்றை ஜரிகைகளாலும், வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை ‘பஞ்சா’ என்ற பெயரில் பலர் இந்தியாவின் பல பகுதிகளிலும் செய்து வருகின்றனர். மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கூர்ந்து கவனித்தால் இது இஸ்லாத்தில் உள்ள பண்டிகை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக முஹர்ரம் பண்டிகையில் தீ மிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல் மேலும் மாற்று மதத்தவர்கள் தம் கடவுளுக்கு ரதம் அமைத்து ஊர்வலம் செல்வது போன்று நம் சகோதரர்களும் இதுபோன்று ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன் மற்றும் கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமில்லை. மாற்று மதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி ஷியாக்களால் உருவாக்கப்பட்டவைதான் இவையனைத்தும். குறிப்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதன் தாத்பரியம் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகும். அதாவது ஷியாக்களின் கொள்கையான ஐந்து புனிதர்களை வணங்கும் கொள்கைதான் இந்த பஞ்சாவின் அடிப்படையாகும். அதாவது

1) முஹம்மது(ஸல்) அவர்கள்
2) அவர்களின் திருமகளார் பாத்திமா(ரலி)
3) அலி(ரலி)
4) ஹஸன்(ரலி)
5) ஹுஸைன்(ரலி)

என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும். உருது மற்றும் ஹிந்தியில் ‘பாஞ்ச்’ என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.

இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும்.

ஹஸன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் புகாரி) இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக இப்பஞ்சா ஊர்வலத்தில் ‘மாரடித்தல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ! யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன்(ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொழுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு மற்ற அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும். ஊர்வலம் என்ற பெயரில் கொட்டு மேளதாளங்களுடன் செல்வதால் பல சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற அறியாமையினால் செய்யும் செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன. அன்பிற்குரிய முஸ்லிம்களே! நமது இறைவன் ஒருவன்தான். அவனுக்கு எந்தவகையிலும் நாம் இணைவைக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு தூதுத்துவம் நிறைவுற்றுவிட்டது. அதற்குப்பின்னால் ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். நபி(ஸல்) அவர்கள் எந்த காரணத்திற்காக நோன்பு நோற்றார்களோ அதே காரணத்திற்காக நாமும் நோன்பு நோற்று அதற்குரிய முழு நன்மைகளையும் அடைய அல்லாஹ் அருள் செய்வானாக.

முஹர்ரம் பத்தாம் நாளில் செய்யும் நல் அமல்கள் – ஆஷுரா நோன்பு

முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). நபி(ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்றார்கள் – யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் அவர்களுக்கு மாறு செய்வதற்காக எதிர்வரும் வருடம் நான்; உயிருடன் இருந்தால் 9ஆம் நாளையும் சேர்த்து நோன்பு நோற்பேன் என்றார்கள். இதனால் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ஆம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

ஆஷுரா நோன்பு ஏற்படுத்தப்பட்டதற்குரிய காரணம்
நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற நேரம் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டு இது என்ன நோன்பு என வினவினார்;கள். அதற்கு அவர்கள் இது நல்ல நாள், இந்த நாளில்தான் பனூ இஸ்ராயீல்களை அவர்களின் பகைவ
(ஃபிர்அவ்)னிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்தான், அந்த நாளில் மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களைவிட மூஸா(அலை) அவர்களை (மதிப்பதற்கு) நான் தகுதியுடையவன் என்று கூறி அந்த (முஹர்ரம் பத்தாம் நாள்) நோன்பை நோற்றார்கள், அந்த நோன்பை நோற்பதற்கு (மக்களையும்) ஏவினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி.

ஆஷுரா நோன்பைப் பற்றியுள்ள ஹதீஸ்கள்
1. ஆஷுரா நோன்பைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர்கள் சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

2. நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்று (மற்ற மக்களையும்) நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

3.ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்.

4. எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்.

முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ஆம் நாட்களில் நபியவர்கள் எதற்காக நோன்பு நோற்றார்கள் என்பதை அறிவீர்கள். மேலும் நோன்பைத்தவிர வேறு எந்த விஷேச வணக்கங்களையும் நபியவர்கள் செய்யவில்லை. நபியவர்களை பின்பற்றும் நாமும் அதைத்தான் செய்ய வேண்டும், அதை விட வேறு எதையாவது செய்து விட்டு இதுவும் சுன்னத் அல்லது வணக்கம் என்று சொன்னால் அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதர் மீதும் இட்டுக்கட்டுவதாகும், இதற்கு ‘பித்அத்’ என்று சொல்லப்படும்.

ஆகவே முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாள் ஆஷுரா நோன்பை மாத்திரம் நோற்போம். இது அல்லாத சடங்கு சம்பிரதாயங்களை தகர்த்தெரிந்து நபி வழி நடப்போமாக.!

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ் – முஹர்ரம் (ஹிஜ்ரி 1427)

2 comments

  1. assalamualaikum bros.
    Brother can you briefly explain the history of Hassan & Hussain and how was their end? and why shias are following them?
    rahmath

  2. wa alaikum assalam,
    There is a very good lecture series titled “Fitnah” by Kemal al makki in English. It explains the whole history from the khilafah of Uthman(RA) until the death of Abdullah Ibn Zubair and in that lecture he explains in a very balanced way, the whole history and the origin of khawarij and the origin of “Rafidah” who are commonly called as shiah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *