Featured Posts

ஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்…

 

நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி மக்கமா நகர் முழுவதும் பரவியவுடன் முஹம்மதையோ அல்லது அபூ பக்கரையோ, உயிருடனோ அல்லது கொலை செய்தோ இங்கு கொண்டு வந்தால் இவ்விருவரில் ஒவ்வொரு தலைக்கும் நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற அறிப்பு எதிரிகளால் செய்த உடன் அதற்காக மக்கள் பல பகுதிகளில் தேட ஆரம்பிக்கிறார்கள்.

சுராக்கா இப்னு மாலிகின் பேராசை…

எப்படியாவது நபியவர்களையும், அபூபக்கரையும் பிடித்து கொடுத்து இருநூறு சிவந்த ஒட்டகங்களையும் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசையில் அவர் சொல்வதை நீங்களே படியுங்கள். “நான் அவர்கள் இருவரையும் தேடுவதற்கு முன் எனது சகுனம் காட்டும் அம்பை எடுத்து குறி பார்ப்பதற்காக எறிந்தேன். அது எனது விருப்பத்திற்கு மாற்றமாகவே குறி காட்டியது. இருந்தாலும் நான் எனது கூர்மையான ஈட்டியை எடுத்துக் கொண்டு, வேகமாக பாய்ந்து செல்லும் குதிரையின் மீதேறி தேடி போகும் போது, நபியவர்களையும், அபூபக்கர் அவர்களை நான் கண்டு விட்டேன். நபியவர்கள் ஒட்கத்தின் மீதிருந்த வண்ணம் குர்ஆனை ஓதிக் கொண்டே போனார்கள். ஆனால் அபூபக்கர் அவர்களோ, யாராவது பின்னால் தேடி வருகிறார்களா என்று திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே போனார்கள். நான் வேகமாக அவர்களின் பக்கத்தில் போன போது, எனது குதிரையின் இரண்டு முன் காலின் மூட்டு வரை பூமி உள்ளே இழுத்துக் கொண்டது. நான் குதிரையிலிருந்து இடரி கீழே விழுந்தேன்.  மீண்டும் எனது சகுனம் காட்டும் அம்பை எடுத்து குறி பார்ப்பதற்காக எறிந்தேன் அது எனது விருப்பத்திற்கு மாற்றமாகவே குறி காட்டியது. இருந்தாலும் இருநூறு ஒட்டகங்களுக்கு ஆசைப்பட்டு, அவர்களை பிடிப்பதற்காக பின் தொடர்ந்தேன். மீண்டும் பூமி குதிரையை இழுத்து பிடித்துக் கொண்டது.நான் இடரி கீழே விழுந்தேன். அப்போது “முஹம்மது அல்லாஹ்வின் தூதராக தான் இருப்பார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நபியவர்களிடம் எனக்காக பிரார்த்திக்கும் படி வேண்டினேன், நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் எனக்காக கொண்டு சென்ற உணவிலோ, வேறு எதையும் அவர்கள் என்னிடம் இருந்து எடுக்கவில்லை, நான் உங்களுக்கு  என்ன உதவி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேட்டேன், யாரையும் இந்த பக்கம் வரவிடாமல் திருப்புவீராக, என்றார்கள். எனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் படி நான் நபியவர்களிடம் வேண்டினேன். சரி என்றார்கள். நான் எழுத்து வடிவத்தில் கேட்டேன். அப்போது “ஆமிர் இப்னு புஹைரா” மூலம் தோலில் பாதுகாப்பு உறுதி எழுதி கொடுத்தார்கள்.

ஸவ்ர் குகையும், எதிரிகளும்…

மிகப்பெரிய ஸவ்ர் என்ற மலை உச்சியில் இருவரும் ஏறி அங்கிருந்த குகைக்குள் ஒழிந்து கொள்கிறார்கள். இருநூறு  சிவந்த ஒட்டகத்திற்கு ஆசைப்பட்டு மக்கத்து காபிர்கள் ஒரு இடம் விடாமல் தேடி அலைகிறார்கள். இறுதியில் நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் வந்து விடுகிறார்கள். சற்று குனிந்துப் பார்த்தால் இருவரையும் கண்டு பிடித்து விடலாம். அந்த அளவிற்கு எதிரிகள் நெருங்கி விட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதர் அவர்களே! எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டார்கள் என்ற பயத்துடன் அபூ பக்கர் அவர்கள் சொன்னார்கள். பயப்படாதீர்கள் நாம் இருவரல்ல, நாம் மூவர் அதாவது அல்லாஹ்வுடைய துணை நமக்கு இருக்கிறது பயப்படாதீர்கள், என்று அபூபக்கரின் கவலையை நபியவர்கள் போக்கினார்கள். இறுதி வரை எதிரிகளின் கண்களுக்கு அல்லாஹ் அவர்களை காட்ட வில்லை, அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கினார்கள்.

ஆட்டிடையனுடன் நபியவர்கள்…

மதீனாவை நோக்கி இருவரும் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவ்வழியே வந்து கொண்டிருந்தான். அப்போது இது யாருடைய ஆடு என்று கேட்டார்கள். இது இன்னார்,இன்னார், உடைய ஆடுகள் என்று சொல்லப்பட்டது, ஒரு ஆட்டிலிருந்து பாலை கரந்து இருவரும் வயிறு நிரைய தாராளாமாக குடித்தார்கள். மீண்டும் மதீனா பயணத்தை தொடர்ந்தார்கள்.

அபூபக்கரை சந்தித்த மனிதர்…

மதீனாவை நோக்கி போய் கொண்டிருக்கும் போது அபூபக்கர் அவர்களுக்கு தெரிந்த ஒருவர் எதிரே வந்தார். ஆனால் நபியவர்களை யாரென்று அவருக்கு  தெரியாது. அப்போது அபூபக்கர் அவர்களே ! இது யார் என்று நபியவர்களை காட்டி அம்மனிதர் கேட்டார். இவர் எனது வழி காட்டி என்று அபூபக்கர் அவர்கள் கூறிவிட்டு. மதீனாவை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்கள். அவர் எனது வழி காட்டி என்று நான் சொன்னது, நபியவர்கள் மார்க்கத்திற்கு எனது வழிகாட்டி என்றடிப்படையிலும், அவருக்கு வழி காட்டி என்று சொன்னது பயணத்திற்கான வழி காட்டி என்றடிப்படையிலும் கூறினேன் என்று சொல்லிக் கொண்டார்கள்.

வணிகக் குழுவும், நபியவர்களும்…

மதீனாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஷாம் நாட்டிலிருந்து தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஒரு முஸ்லிம் வணிககுழு மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த குழுவில் இருந்த “சுபைர் பின் அல்அவ்வாம்” (ரலி) அவர்கள் நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும் தனது வெண்ணிற துணியால் போர்த்தி அப்படியே மதீனாவிற்கு வழியனுப்பி வைத்தார்கள்.

மதீனமா நகரும், மக்களும்…

நபியவர்களும், அபூபக்கர் அவர்களும், மக்காவை விட்டு,விட்டு மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், என்ற செய்தி மதீனா மக்களுக்கு கிடைத்த உடன் நபியவர்களை வரவேற்ப்பதற்காக சந்தோசத்தில் ஒவ்வொரு நாளும் மதீனாவின் எல்லை பகுதியான “அல்ஹர்ரா” என்ற இடத்திற்கு தினமும் பகல் நேரம் வரை எதிர்ப்பார்த்திருந்து திரும்பி செல்வார்கள்.

ஒரு நாள் ஒரு யூதன் தனது வீட்டிற்கு மேல் ஏறி வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் மதீனாவை நெருங்கியதை கண்ட உடன் அவன் தன்னையறியாமல் சத்தம் போட்டு, அரபு மக்களே ! இதோ நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நபி வந்து விட்டார் என்று செய்தி மதீனா நகர் முழுவதும் பரவியவுடன், எல்லா மக்களும் ஆர்வத்தோடு ஓடி வந்து நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும் வரவேற்றார்கள். ஆயுதங்களுடன் அந்த இடத்திற்கு வருகை தந்து, முழு ஆயுத பாதுகாப்போடு இருவரையும் மதீனாவிற்குள் உற்ச்சாகத்துடன் அழைத்து செல்கிறார்கள்.

குபா பள்ளியை நிறுவுதல்…

மதீனா மக்களுக்கு யார் நபி, யார் அபூபக்கர், என்று தெரியாது. வயதில் மூத்தவராக காணப்பட்ட அபூபக்கர் அவர்களையே அனைவரும் நபி என்று எண்ணிக் கொண்டு நெருங்கிக் கொண்டிருந்தார்கள். சூரியன் உச்சியை அடைந்து, வெயில் கடுமையான  போது, அபூபக்கர் அவர்கள் தனது ஆடையால் நபியவர்களுக்கு அப்படியே நிழல் இடுகிறார்கள். அப்போது தான் நபியவர்கள் யார் என்பதை மக்கள் கண்டு கொள்கிறார்கள். அதன் பிறகு முட்டி, மோதிக் கொண்டு நபியவர்களுக்கு முகமுன் கூறினார்கள். குபாவில் உள்ள “பனு அம்ர் பின் அவ்ஃப்” குலத்தாரின் குடியிருப்பில் பத்து நாட்கள் தங்கி குபா பள்ளியை நிறுவினார்கள்.அந்த பள்ளியில் நபியவர்கள் தொழுதார்கள்.

மஸ்ஜிதுன் நபவியை நிறுவுதல்…

குபாவிலிருந்து மதீனாவிற்குள் நபியவர்கள் மக்களோடு ஒட்டகத்தில் சென்றார்கள். அந்த ஒட்டகம் தற்போது மஸ்ஜிதுன் நபவி அமைந்துள்ள இடத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டது. அந்த இடம் ஆரம்ப காலத்தில் பேரீத்தம் பழங்கள் காய வைக்கும் இடமாக இருந்தது. இது யாருடைய இடம் என்று நபியவர்கள் விசாரித்த போது, அது “ஸஅத் பின் சுராரா(ரலி) அவர்களின் பொருப்பிலிருந்த “சஹ்ல், மற்றும் “சுஹைல், என்ற இரண்டு சகோதர அநாதை சிறுவர்களுக்கு சொந்தமான இடம் என்று சொல்லப்பட்டது.

அந்த இடத்தை நபியவர்கள் விலை பேசினார்கள். இந்த இடத்தை அல்லாஹ்விற்காக நாங்கள் அன்பளிப்பாக தருகிறோம் என்று அவர்கள் கூறினார்கள். அநாதைளின் சொத்தை வெறுமனே சும்மா நபியவர்கள் எடுக்க விருப்பமில்லாமல். விலை கொடுத்தே வாங்கினார்கள்.

அதன் பிறகு குறிப்பிட்ட நாட்கள் அபி அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களின் வீட்டில் தங்கினார்கள்.

“அப்துல்லாஹ் பின் ஸலாம்” இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளல்…

யூத அறிஞராகவும், யூதர்களுக்கு மத்தியில் அதிகம் மதிப்புமிக்கவராகவும் காணப்பட்ட அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள் நபியிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் நபியிடம் கேட்ட சில கேள்விகளை பின் வரும் ஹதீஸில் காணலாம்.

“அனஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்’ என்று கூறினார். பிறகு, ‘1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ, தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்’ என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘ஜிப்ரீல் தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!’ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது’ என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள்,  வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், தாங்கள் இறைத்தூதர் தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். எனவே, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்’ என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி – ஸல் – அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்.) நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்’ என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு சலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!’ என்று கூறினார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் முன்பு போன்றே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வெளியே வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்கள். உடனே யூதர்கள், ‘இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்’என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள். (அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள்.” (புகாரி 3938)

மேற் குறிப்பிட்ட நிகழ்வுகள் யாவும் நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு செல்லும் வரை நடந்தவைகளாகும். மேலும் இவைகள்  அனைத்து புகாரியிலிருந்து தொகுக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *