இலங்கையில் அன்மையில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரச் சூழல் தொடர்பாக கடந்த 07-03-2018 அன்று சவுதி அரேபியா, அல்-கப்ஜி நகரத்தில் உள்ள இலங்கை உறவுகளின் ஒன்று கூடலின் போது பெறப்பட்ட சில முக்கிய குறிப்புக்கள்).
கலவரத்தில் நாம் பெரும் படிப்பினைகள்!
மீண்டும் ஒரு இனவாத பிரச்சினை வந்த பின் வெற்று கோசங்கள் விடும் சமூகமாக அல்லாமல் நடந்த முடிந்த கலவரத்தில் நாம் பெரும் படிப்பினைகளை அறிந்து கொள்வோம்!
01) இணைவைப்பிலிருந்து முழுமையாக எமது சமூகம் விடுபடல்
நாம் நிந்திக்கப்படவும், உதவி அற்ற சமுதாயமாகவும் இருப்பதற்கு பெரும் காரணத்தை அல்லாஹ் தெளிவு படுத்துகின்றான்.
எமது சமுதாயத்தில் இருந்து இணைவைத்தல் முழுமையாக ஒழிக்கப்படுவதே நாம் கண்ணியமாக வாழ்வதற்கு மிகப் பெரும் காரணமாகும். இதனை அல்லாஹ் சூரதுல் இஸ்ரா வின் 22வது வசனத்தில் இவ்வாறு குறிப்பிடிகின்றான்.
அல்லாஹ்வுடன் மற்றோர் கடவுளை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர். (அல்குர்ஆன் 17:22)
‘அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்’ (அல்குர்ஆன் 24:55)
இணைவைப்பிலிருந்து முழுமையாக எமது சமூகம் விடுபட்டால் எமக்குள் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை இல்லாமல் ஆக்கி அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்துவான். அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படக் கூடிய நிலையில் இருந்தும், அவ்லியா வழிபாடுகளில் இருந்தும் எமது சமுதாயம் முற்றுமுழுதாக விடுபட்டு உண்மை முஸ்லிம்களாக மாறுவது காலத்தின் தேவை. அப்போழுது நாம் யாரிடமும் சென்று பாதுகாப்பு பிச்சை கேட்க்க வேண்டிய அவல நிலை ஏற்படாது.
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அல்-குர்ஆன் 24:55)
எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட, அச்சம் இல்லாத வாழ்வு கிடைத்திட எமக்கு மத்தியில் பரவிக்கிடக்கும் இணைவைத்தலின் எல்லா வகைகளை விட்டும் முழுமையாக நீங்கி தவ்பா செய்து மீளுவோம். இணைவைப்பில் ஈடுபடாதவர்களின் பாதுகாப்பை அல்லாஹ் உறுதிப்படுத்துவான்.
இறைவாக்குறுதியை பாருங்கள்…
எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள். (அல்குர்ஆன் 6:82)
02) மார்க்கக் கடமைகளில் கரிசனை அவசியம்
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கடமைகளில் கரிசனை இல்லாமல் ஒரு முஸ்லிம் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது. மார்க்கதை விட்டுத் தூரமாக வாழும் போது அவ்வப்போது இறைவன் புரத்தில் இருந்து சில சோதனைகள் வருவதை தடுக்க முடியாது. குறிப்பாக ஐங்காலத் தொழுகை மற்றும் இஸ்லாத்தின் வறுமை ஒழிப்புத் திட்டமாகிய ஸக்காத் போன்றவற்றில் அதிக கரிசனை கொள்ள வேண்டும். எம்மில் அதிகமான மக்கள் தொழுதுவிட்டால் மாத்திரம் போதும் மற்ற அனைத்தையும் அல்லாஹ் பாதுகாப்பான் என்று வழிகாட்டப்பட்டுள்ளமை கவலைக்குறிய நிலவரமாகும். தொழுகைச் சொல்லும் இறைவன் தொழுகையோடு இணைத்து 70 ற்கும் மேற்பட்ட அல்குர்ஆனிய வசனங்களில் ஸக்காத் தொடர்பாக எமக்கு கட்டளையிடுகின்றான். ஸக்காத் என்றால் நோன்பு காலங்களில் ஒரு இரு ஆயிரங்களை சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு ஹதியாவாக கொடுத்துவிட்டால் கடமை முடிந்து விடாது. மாறாக ஒவ்வொரு வருடமும் நிஸாப் என்ற உச்ச வரம்பை அடைந்த எமது பொருளாதாரத்திற்கு அதற்குரிய ஸக்காத்தை கொடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும்.
அதிகமான மக்கள் எங்களுக்கு ஸக்காத் கடமையில்லை என்று முடிவெடுத்துக் கொள்கின்றனர். ஆனால் மேற்படி கலவர சூழலில் தமது பொருளாதாரம் எரியூட்டப்பட்டதும் இத்தனை கோடிக்கு சாமான் இருந்தது என்கின்றனர். 85 கிராம் தங்கத்திற்கு ஈடான பொருமதியில் வியாபார பொருட்கள் உள்ள அனைத்து வியாபாரிகளும் வருடாந்தும் 2.5 வீதம் (2.5 %) ஸக்காத்தாக கொடுத்தாக வேண்டும் என்பது இஸ்லாத்தின் சட்டநிலையாகும். நாம் சரியாக ஸக்காத்தை பேணாமல் இருப்பது எமது பொருளாதாரம் சாம்பல் ஆக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது என்று எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது திருமைறையில் குறிப்பிடுகின்றான். எமக்கு முன் சென்ற சமுதாயத்தில் வாழ்ந்த தோட்டவாசிகளைப் பற்றி சூரதுல் கலம் எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிட்டு அவர்கள் தமது தோட்டத்தில் இருந்து அறுவடை செய்த பழங்களில் ஏழைகளுக்கு உரிய பகுதியை கொடுக்க மறுத்ததால் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனையை எமக்கு படிப்பினைக்காக பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது. (நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது. (அல்-குர்ஆன் 68:19-20)
கலவரங்களின் போது காடையர்களின் கண்களுக்கு சில கடைகளை அல்லாஹ் மறைத்து விடுவதையும் நாம் பார்கின்றோம். எனவே அல்லாஹ் கட்டாயமாக்கிய ஸக்காத்தை எனது சமுதாயத்தில் அனைவரும் சரியாக நிறைவேற்றுவதும் நாம் இந்த கலவரச் சூழலில் பெறும் முக்கிய படிப்பினைகளில் நின்றும் உள்ளது எனலாம். யாரையும் நோக்கியும் விரல் நீட்டுவது இதனைக் குறிப்பிடுவதின் நோக்கம் கிடையாது. மாறாக எமக்கு ஒரு படிப்பினைக்காகவும், நம்மை நாமே மீள்பரிசீலனை செய்து கொள்வதற்கும் மேற்படி இறை எச்சரிக்கை மற்றும் தண்டனையை நினைவிருத்திக் கொள்ள வேண்டும்.
பொதுவாக நாம் செய்யும் ஸதகாக்கள் எமக்கு பல வசையில் உதவியாக அமைந்து விடும் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
நாம் பிறருக்குச் செய்யும் உதவிகள், எமக்கு வர இருக்கும் ஆபத்துக்களை அல்லாஹ் தடுத்துவிடுவதற்கு காரணமாக இருக்கும்.
“தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களை விட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்”
“எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.”
மதீனத்து ஸஹாபாக்களிடம் இருந்த எல்லை இல்லாத ஈகை எமக்கு ஒரு படிப்பினை… எப்போதும் எனது சம்பாத்தியம் எனக்கும் எனது மனைவி, மக்களுக்கும் என்று நினைக்கும் நாம் மற்றவர்களின் கஷ்ட, நஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு உதவும் மனோநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு, அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள், அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர், அன்றியும் அ(வ்வாறு குடியேறிய)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள். மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் – இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (59:9)
03) தவறான புரிதல்களுக்கு சரியான விளக்கத்தை வழங்குவோம்
மாற்று மதத்தவர்களுக்கு குறிப்பாக இனவாதத்தை கக்கக் கூடியவர்களுக்கு முஸ்லிம்கள் இனவாதிகள் இல்லை என்பதை தெரியப்படுத்தும் சந்தர்பங்களை பயன்படுத்திக் கொள்வோம்!! நமது சமூக உறுப்பினர்கள் விடும் சில தவறுகள் தனிப்பட்ட தவறு அது இனவாத நடவடிக்கை கிடையாது என்பதை தெளிவு படுத்துவோம்..எமது முஸ்லிம் பெண்களின் ஆடைகள், ஆண்களின் ஜுப்பா மற்றும் தாடி என்பன இனவாதத்தின் அடையாளம் என அவர்களின் தவறான புரிதல்களுக்கு சரியான விளக்கத்தை வழங்க வேண்டியது எமது பொறுப்பு.. அவர்களுக்கு பயந்து எமது ஆடைக் கலசாரத்தையோ அல்லது மர்க்கக் கடமைகளையோ விட்டும் தூரமாகி கோழைகளாக வேண்டிய அவசியம் கிடையாது..
04) முப்படையில் எமது பங்பளிப்பு
முஸ்லிம் இளைஞர்கள் பாதுகாப்பு படையில் அங்கம் வகிப்பதன் தேவை மிகப் பலமாக உணரப்பட்டுள்ளது. எமது ஊருகளுக்கு பாதுகாப்புக்காக வந்த எத்தனையோ பாதுகாப்பு வீரர்கள் அவர்களது இனத்திற்கு உதவிய சந்தர்பங்கள், எமது மக்களை மாத்திரம் தாக்கிய சந்தர்ப்பங்களை நிறையவே பார்திருப்பீர்கள். எமது இளைஞர்களும் ஒர கனிசமான அளவு பாதுகாப்பு பிரிவில் இருப்பார்களேயானால் எமது எதிர்கால சமூகத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்படுவதற்கு அல்லாஹ்வின் நட்டத்தினால் பெரும் காரணியாக இருக்கும்.
மீசை முளைத்தவுடனே கடவுச் சீட்டை எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்று அவசர பணக்காரன் ஆக வேண்டும் என்ற மோகமே எமது மக்களிடம் குடிகொண்டிருக்கின்றது. வெளிநாடுகளில் சென்று இரவு பகலாக கஷ்டப்பட்டு நாம் சம்பாதித்து பெரும் கணவுகளோடு கட்டிய வீடு, வாங்கிய வாகனம் என்பவற்றை ஒரே இரவில் இனவாதிகள் தீக்கிரையாக்கி விட்டு செல்கின்றனர். நமது சமூதாயத்தை சார்ந்தவர்களும் முப்படைகள், குற்றப் புலனாய்வுப் பிரிவு என்று எல்லா துரைகளிலும் கால்பதிப்பார்களேயானால் சாலச் சிறந்தது. ஓவ்வொரு வருடமும் பாதுகாப்பு படையின் எல்லா பிரவுகளுக்குமான ஆட்சேர்பு தொடர்பான வார்த்தமானி அறிவிப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதனை எமது சமூகம் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பெரும் வாய்ப்புக்கள் பாதுகாப்பு படையில் இருக்கின்றன. ஆனால் நாமோ அது நமக்குறிய தொழில் கிடையாது என்று ஒதுக்கி வைக்கின்றோம். இப்படியான இன வாத தாக்குதல்களை எமது சமுதாயம் சந்திக்கும் போது நம்மவர்கள் இருந்தால் நமக்கு உதவியிருப்பார்களே என அங்களாய்க்கின்றோம். உயர் தரத்தில் எந்தப் பிரிவில் கல்வி கற்றாலும் தத்தமது விருப்பத்திற்கேற்ற பதவியை தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றான என்பதை மறந்து விடலாகாது.
05) அரச தொழில்களில் நமது சமுதாயம்
அரச நிர்வாகத் துரையில் நமது மக்களில் பங்குபற்றுதல் மிகவும் குறைவாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. அரச தினைக்களங்கள், பிரிவுகளில் நமது பிரதிநிதித்துவத்தை பற்றி சிந்திக்க வேண்டும். வெறும் ஆசிரியர் தொழிலுடன் மாத்திரம் சுருங்கிக் கொண்ட சமுதாயமாக அல்லாமல் எல்ல துறைகளிலும் கால் பதிப்பது காலத்தின் தேவையாக உள்ளது. வெறும் வியாபார சமூகமாக அல்லாமல் நாட்டுக்கு சேவை செய்வதற்கான ஏனைய துரைகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நமது கடைகளை தீயிட்டு கொலுத்தி அதில் மகிழ்சியடையும் இனவாதிகள் நாம் செய்யும் தொழில் அரச உத்தியோகமாக இருந்தால் இவர்கள் எந்த தினைக்களத்தை தீயிட்டு மகிழ்சியடைவர்?? அதே நேரம் நமக்கெதிராக முன்னெடுக்கப்படும் திட்டங்களையும் ஓரளவு அறிந்து கொண்டு நேரகாலத்துடனே உசாராக இருந்து கொள்ளலாம். வெரும் சம்பளத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளலாமல் ஏமது தாய்நாட்டிலே நாம் எமது தொழிலை தெரிவு செய்து கொண்டால் இந்த இனவாத பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட அளவு தீர்வு காணலாம் என்பது ஆளமாக சிந்திக்க வேண்டிய ஒரு பகுதியாகும். அரச துரையில் எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் அதனை பெற்றுக் கொள்ள பல தியாகங்களை செய்திடும் மாற்றுமத மக்களை இந்த விடயத்தில் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உத்தியோகத்தில் மார்க்க விளுமியங்களை, கடமைகளை பேண முடியாது. தொழுகை வக்துக்கு தொழ முடியாது, தாடி வைக்க முடியாது, அபாய அணிய முடியாது என்று சொல்லிக் கொண்டு இருக்காமல் எமது இந்த அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்ள நாம் முதலில் அரச துரைகளில் நுழைந்து பின்னர் மேலதிகாரிகளுக்கு அவற்றை விளங்கப்படுத்தி மேற்படி எமது மார்க்க ரீதியான உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம். அப்படி நாம் முயற்சித்தும் சில உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாது போனால் நிர்ப்பந்தம் என்ற ரீதியில் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.
06) வியாபாரத்தில் எமது பிழைகளை திருத்திக்கொள்ள முயற்சிப்போம்
செய்யும் வியாபாரத்திலும் ‘பிஸ்னஸ் டெக்னிக்’, ‘வியாபார வித்தைகள்’ என்று சொல்லிக் கொண்டு அவசர பணக்காரன் ஆக வேண்டும் என்று குறுக்கு வழிகளை யோசிக்காமல் இஸ்லாம் காட்டித்தந்துள்ள வரையரைகளை பேணி எமது வியாபார நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமும், எமது கடமையுமாகும்.
எமது முன்னோர்களுக்கு அன்னிய மக்களுக்கு மத்தியில் மதிப்பு கிடைத்தது எனறால் அதற்கு காரணம் அவர்களின் பொய், கலப்படம் இல்லாத வியாபாரம்… இதுவே அவர்களை பெரும் இஸ்லாமிய அழைப்பாளர்களாக மாற்றியது. இவர்கள் தங்களது பண்பாட்டால் மிகப் பெரிய அழைப்புப் பணியை மேற்கொண்டனர். தூர கிழக்கு நாடுகளில் இஸ்லாம் தலைநிமிர்வதற்கு இதுவே மிகப் பெரும் காரணமாயிற்று. எனவே செய்யும் வியாபாரத்தில் பண்பாட்டுடன் நடந்து கொள்ள முயற்சிப்போம். அப்போது தான் அல்லாஹ்வின் பரக்கத்தும், பாதுகாப்பும் எமது சமுதாயத்திற்கு கிடைக்கும்.
07) கோழைத்தனம் மற்றும் தற்காப்புக்கான வீரம்!!
அன்பர்களே! கலவரம் முடிந்து விட்டது தானே என்று நிம்மதி பெறுமூச்சு விட முடியாது. இன்றளவும் ஓரிரு சம்பங்கள் நடந்த கொண்டே இருக்கின்றன. மிகப் பாரிய இலப்புக்களை சந்தித்து பலகிய எமது சமுதாயத்திற்கு ஒரு கடயை உடைத்தது, ஒரு விட்டுக்கு பெற்றோல் குண்டு எறிந்தது எல்லாம் பெரும் சம்பவமாக தெரியாத அளவுக்கு நம்மவர்கள் விரக்தி நிலையை அடைந்துவிட்டனர்.
நமது பொறுமைக்கு கோழைத்தனம் என்று அவர்கள் பொருள் கொள்ளுமளவு நம்மை நாமே இழிநிலைக்கு தள்ளிவிடக் கூடாது. அல்லாஹ் தருவான் என்று வீட்டுக்குல் குந்திக் கொண்டு ரிஸ்க்கை கேட்பது எப்படி மடத்தனமோ, அவ்வாரே வீட்டக்குல் ஒலிந்து கொண்டு அல்லாஹ் பாதுகாப்பான் என்பதும் மிகப் பெரிய கோழைத்தனமாகும் என்பதை எமது மனதில் ஆழமாக பதிந்து கொள்ள வேண்டும். நமது மணைவி, மக்கள் அனைவருக்கும் தற்காப்பு தொடர்பான வழிகாடல்கள், பயிற்சிகளை வழங்குவதும் காலத்தின் தேவையாக உள்ளது எனலாம். வீரத்தை வெளிப்படுத்துவது மடத்தனம் என்று சொல்லப்பட்ட சமுதாயத்தில் வாழ்கின்றோம். நாம்மில் சிலர் இப்படியான வியாக்கியானங்களை கொடுத்து விட்டு தப்பித்துவிடலாம் என்று யோசித்தாலும் நாளைய வரலாறு எங்கள் மீது காரி துப்பிவிடக் கூடாது. அதையும் தாண்டி நமது சமுதாயத்தை பிழையாக வழிநடாத்தினோம் என்ற கேள்விக்கு நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். வீரத்தையும், தற்காப்பையும் பற்றி பேசுபவர்கள் இரத்த வெறிபிடித்தவர்கள் என்று வியாக்கியானம் செய்து விடாதீர்கள். இரத்த வெறியில் துடிப்பவர்களுக்கு அவர்களது பாணியில் பதில் அழிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். நாம் செய்யவேண்டிய பகுதியை ஆழமாக சிந்தித்து அதற்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அல்லாஹ்விடம் முழுமையாக நம்பிக்கை வைப்போம்!! நமது எதிர்கால சந்ததிகளுக்கு கண்ணியத்துடன் எமது இலங்கை தாய் நாட்டில் வாழ்வதற்கான வழிவகைகளை செய்ய முற்படுவோம். இன்று நமது கருத்துக்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் மக்கள் மத்தியில் பெரிய இடம் கிடைக்காவிட்டாலும் என்றோ ஒரு நாள் இதன் உண்மைத் தன்மையை எமது சமுதாயம் உணர்ந்து கொள்ளும் அப்போது இந்த கருத்துக்களை முன்வைக்கும் நாம் உயிரோடு இருக்க மாட்டோம்… எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவருக்கும் ஈமானிய உறுதியையும், கொள்கைத் தெளிவையும் தந்தருள்வானாக! எமது தாய் நாட்டில் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழ்வதற்கு அருள் புரிவானாக! எமது மாற்று மத உறவுகளுக்கும் அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில் எத்திவைத்திடும் பாக்கியத்தை தந்தருள்வானாக!
தொகுப்பு எம். றிஸ்கான் முஸ்தீன்
அல் கப்ஜி இலங்கை உறவுகள். சவுதி அரேபியா. 07/03/2018