பெரும்பான்மை உத்தியோகத்தர் ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டதனால், அவர் பல நாட்களாக காரியாலயத்திற்குச் சமூகமளித்திருக்கவில்லை. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுப் பின் வீடு திரும்பிவிட்டார் என்ற தகவலையடுத்து, காரியாலய உத்தியோகத்தர்களிடம் அவருக்காக அறவிடப்பட்ட தொகையுடன் பெரும்பான்மைச் சகோதரர்களுள் இருவரோ அல்லது மூவரோ அவரது வீட்டிற்குச் சென்று சுகம் விசாரித்து வர எண்ணியிருந்தார்கள்.
ஒன்றரை மணித்தியாலங்கள் பயணித்துச் செல்ல வேண்டிய தூரத்தில் அவரது இல்லிடம் இருந்த காரணத்தினாலேயே அவ்வாறு முடிவாகியிருந்தது.
ஆனால், முஸ்லிம் உத்தியோகத்தர்களும் அவர்களுடன் இணைந்து செல்வதற்கான விருப்பத்தை திணைக்களத் தலைவரிடம் தெரிவித்தனர். அதற்கு சற்றும் மறுப்பின்றி,
“ஒரு வாகனத்தையே (வேன்) ஏற்பாடு செய்யுங்கள்…
ஒவ்வொரு பிரிவிலும் இரு உத்தியோகத்தர்களை அவசியம் கலந்து கொள்ளச் செய்யுங்கள்…
நாங்களும் சேர்ந்தே சுகம் விசாரித்து வரலாம்…”
எனத் பணித்ததையடுத்து, ஒருசில மணித்தியாலங்களிலேயே முஸ்லிம் உத்தியோகத்தர்களும் அரைவாசிப்பேர் கலந்துகொண்ட நிலைமையில் வாகனம் ஏற்பாடாகி, பயணம் ஆரம்பித்தது.
நினைத்ததைவிட நல்ல விதமாக பயணம் அமைந்துவிட்ட சந்தோசத்தினை அன்று முழுவதும் அவர்களது முகத்தில் காணமுடிந்தது.
திட்டமிட்டபடி குறித்த உத்தியோகத்தரை நலன் விசாரித்துவிட்டு, அவரது குடும்பத்தினர் வழங்கிய அன்பளிப்புகளுடன்
அங்கிருந்து திரும்பினோம்.
ஊர் எல்லையை அண்மித்ததும் விடைபெறும் உத்தியோகத்தர்களை முடிந்தவரை வீடுவரை கொண்டுபோய் இறக்கிவிடும் பொறுப்பை வேன் சாரதி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.
பயண இறுதியில், எங்களுடன் ஒரேயொரு பெரும்பான்மை பெண் உத்தியோகத்தர் எஞ்சியிருந்தார்.
அதேவேளை, மஹ்ரிபுடைய வக்து (நேரம்) முடிவுறும் தறுவாயில் இருந்தது. இசாவுடைய அதானுக்கிடையில் எங்கேனும் ஒரு பள்ளிவாசலில் தொழுதேயாக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.
அதனால்,
திணைக்களத் தலைவர் அவ்வுத்தியோகத்தரைப் பார்த்து,
“ஐந்து நிமிடங்களை எங்களுக்காக விட்டுத் தாருங்கள்…
தொழுகையை முடித்துக் கொண்டு வருகின்றோம்…”
எனக்கூறி, அனுமதி பெற்றுக்கொண்டு, பள்ளிவாயிலை நோக்கி நடக்க, ஏனைய முஸ்லிம் உத்தியோகத்தர்களும் பின் தொடர்ந்தனர்.
தொழுகையானது, நேரம் குறிக்கப்பட்ட கடமை என்பதனாலும். தான் திணைக்களத் தலைவர் என்பதனாலும், அப்
பெரும்பான்மை உத்தியோகத்தரிடம் அனுமதி பெறாமல்கூட போயிருக்கலாம்.
ஆனால், எல்லாவற்றையும் தாண்டி இஸ்லாம் கற்றுத்தந்த மனித நேயம், பிறமதத்தவர்களை மதித்தல், நளினமான அணுகுமுறை போன்றன அவ்விடத்தில் உயிர் பெற்றிருந்தன. அந்தப் பண்புகள் அவ்வுத்தியோகத்தரைக் கவர்ந்திருக்கலாம். அதனாலோ என்னவோ கிடைத்த இடைவெளிக்குள் அவர் தனது சகமொழியில் அந்தக் காரியாலயத்திற்கு பாராட்டுப் பத்திரம் ஒன்றேயே வழங்கத் தொடங்கினார்.
“இந்தக் காரியாலயத்திற்கு இடமாற்றம் கிடைத்ததும் சீக்கிரமே மனுக்கொடுத்து அதை இரத்துச் செய்யும் நோக்குடனே வந்திருந்தேன்…
ஆனால், இங்கு வந்த பின்னர்தான் புரிந்தது…
நாங்கள் பிற மதத்தவர்கள் என்பதற்காகவே இங்கே அதிகமாக கௌரவிக்கப்படுகிறோம்…
எனக்கு தானாக இடமாற்றம் வரும்வரை நான் இக்காரியாலயத்தினை விட்டும் போகப்போவதில்லை…”
எனப் பலவாறாக பேச, அவர் கூறியதைக் கேட்டு ஓர் உண்மை முஸ்லிமாக பெருமையடைந்தேன். அன்றைய நாளில் காரியாலயத்தில் திணைக்களத் தலைவரால் போடப்பட்ட இனஉறவுக்கான அத்திவாரம் பயண முடிவு வரையும் அழகியதோர் மாளிகையாக மின்னியது.
எவ்வளவுதான் ஆங்காங்கே மாளிகை எழுப்பப்பட்டாலும் இடையிடையே அவற்றைத் தகர்க்கும் சேனாக்கள் இருக்கும் வரை இவை தற்காலிக சந்தோசம்தானா? என்ற ஏக்கமும் கூடவே வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
– பர்சானா றியாஸ்