Featured Posts

உணவளிப்பவன்!

உணவு இன்றி எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது! உணவு என்பது ஓர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும்

இறைவன் படைத்த எல்லா உயிரினத்திற்கும் உணவு என்பது அவசியமான ஒன்றாகும். வரலாற்று ரீதியாக மனிதன் இரண்டு வழிகளில் உணவைப் பெற்றுக்கொண்டான். ஒன்று விவசாயம், மற்றொன்று வேட்டையாடுதல்.

முந்தைய காலங்களில் மனிதனின் பெரும்பாலான உழைப்பு தனது உணவுக்காகவும் தனது ஆடைக்காகவுமே இருந்தது. இன்று மனிதன் நகையை, பணத்தை, வாகனத்தைத் திருடுவதைப் போன்று பண்டைய காலத்தில் உணவையும் ஆடையையும் திருடியதுமுண்டு. அவர்கள் வளமிக்க வாழ்வாதாரங்களைக் கற்பனை செய்தும் பார்க்கமுடியாது.

மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி மிருகத்தனமான வாழ்க்கை வாழ்ந்த காலத்தில்தான் அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களைத் தனது தூதராக அனுப்பி வைத்தான். அவர்களுக்கும் உண்ண உணவும் உடுத்த ஆடையும் கிடைப்பது அரிதாகவே இருந்தது. இதனால்தான் வணக்க வழிபாடுகளில் ஏற்படும் பிழைகளுக்கான பரிகாரமாகவும், சத்தியத்தை முறிப்பதற்கான குற்றப்பரிகாரமாகவும் மிஸ்கீன்களுக்கு (வறியவர்) உணவும் – ஆடையும் வழங்கவேண்டும் என்று அல்லாஹ் திருமறையில் விளக்குகின்றான். (பார்க்க: அல்குர்ஆன்:05:89, 02:184)

வாழ்வில் உணவுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருந்தபோதிலும் மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் உட்பட தங்களுக்கு உணவு வழங்குவது அல்லாஹ்தான் என்பதை நன்கு விளங்கியிருந்தனர்.

قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ مَنْ يُّخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَ‌ فَسَيَـقُوْلُوْنَ اللّٰهُ‌ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேழும். உடனே அவர்கள் “அல்லாஹ்” எனப் பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

(அல்குர்ஆன்: 10:31)

சிலைகளுக்குப் பூஜை செய்தவர்களும், விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்தவர்களும்,  குடித்துவிட்டு கும்மாளம் அடித்தவர்களும், கஃபாவை நிர்வாணமாக வளம் வந்தவர்களும் படைத்த இறைவன்தான் நமக்கு உணவளிக்கின்றான் என்பதை அன்று நன்கு விளங்கி இருந்தார்கள்.

مَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ

பூமியில் உள்ள எந்த உயிரினமானாலும், அதற்கு உணவைப் பெறும் வழியைக் காட்டித் தருவது அல்லாஹுவின் பொறுப்பாகவே உள்ளது. அதன் உறைவிடத்தையும் அதுபோய் சேருகின்ற இடத்தையும் அவன் (அல்லாஹுவே) அறிவான். எல்லாம் தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) உள்ளன. (அல்குர்ஆன்:11:06)

பூமியில் வசிக்கின்ற சிறிய மற்றும் பெரிய உயிரினங்கள் உட்பட அனைத்து படைப்பினங்களுக்கும் உணவளிப்பதற்கு அதாவது அவைகள் உணவைப் பெறுவதற்கான வழியை காட்டுவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றான்.

அதுமட்டுமின்றி (முஸ்தகர்) அவற்றின் சேருமிடத்தையும் அதாவது பூமியில் அவை எதுவரை போய்ச் சேருமோ அந்த இடத்தையும் – அவற்றின் வசிப்பிடத்தையும் (முஸ்தவ்தாஃவு) அதாவது அவை எங்குப்போய் தஞ்சம் அடையுமோ அந்த உறைவிடத்தையும் அவன் அல்லாஹ்தான் அறிகின்றான்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவை தஞ்சமடையும் உறைவிடத்தையும் (முஸ்தகர்) இறக்கப்போகும் அடக்க இடத்தையும் அவன் (அல்லாஹ்) அறிவான் என்று பொருள் கூறினார்கள். (இப்னு கஸீர்)

நிச்சயமாக எவன் உயிரினங்களைப் படைத்தானோ அவன்தான் இவ்வளவு திட்டமாகக் கூறமுடியும். உணவிற்கு இறைவன் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் இல்லை! இப்போது இங்கு ஒரு கேள்வி எழும்!

அப்படியானால் உணவு கிடைக்காமல் ஏன் தற்கொலைகள் நிகழ்கின்றன? என்று ஒரு கேள்வி எழும்! சரி.., உணவு கிடைக்காமல் எப்போதாவது ஒரு பறவை வானத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டதுண்டா?

அல்லது மனிதன் வளர்க்கக்கூடிய ஆடு மாடு கால்நடைகள் உணவு கிடைக்காமல் என்றாவது தன்னைத்தானே மாய்த்துக் கொண்டதுண்டா?

மனிதனைப் போன்றே 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது யானை! யானை ஒரு நாளைக்கு 150 கிலோ உணவையும் 200 லிட்டர் நீரையும் குடிக்கின்றது. இந்த யானைக் கூட்டம் என்றாவது தனக்கு உணவுவோ தண்ணீரோ இல்லாமல் தற்கொலை செய்துகொண்டதுண்டா?

இறைவனின் இன்னொரு பிரமாண்டமான படைப்பான திமிங்கிலத்தை எடுத்துக்கொள்வோம் திமிங்கிலத்தில் ஒரு வகை உண்டு அது 100 அடி நீளமும் 150 டன் எடையும் கொண்டது. திமிங்கிலம் நாள் ஒன்றுக்கு 3000 கிலோ உணவை உட்கொள்கின்றது. இதன் நாவில் 50 நபர்கள் உட்காரும் அளவுக்கு இடவசதி கொண்டது. அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படைப்பு, இறைவனின் படைப்புகளில் அதிக உணவை உண்ணக்கூடியது திமிங்கிலம்தான். இது என்றாவது உணவு இல்லாமல் தன்னைத்தானே தற்கொலை செய்துகொண்டதுண்டா? இவ்வாறாக முதலையையும் சொல்லலாம்..,

அல்லது நமது கழிப்பிடங்களில் வசிக்கின்றதே பூச்சி, வண்டு அவைகள் என்றைக்காவது உணவு கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டதுண்டா? இறைவனின் படைப்பில் உணவு கிடைக்கவில்லை என்று தற்கொலை செய்துகொள்வது பகுத்தறிவு வழங்கப்பட்ட முட்டாள் மனித இனம் மட்டும்தான்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

كَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا  اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

எத்தனையோ உயிரினங்கள் தம் உணவைச் சுமந்துகொண்டு திரிவதில்லை! அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹுவே உணவளிக்கின்றான். அவன் நன்கு செவியுறுவோனும் நன்கு அறிந்தோனுமாவான். (அல்குர்ஆன்: 29;60)

எந்த உயிரினமும் தன் உணவைத் தானே சுமந்துகொண்டு திரிவதில்லை! மனிதர்களுக்கும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கின்றான் ஆனால் மனிதன் தன் உணவைப்பற்றி கவலைப்படுவதைப் போல மற்ற உயிரினங்கள் கவலைப்படுவதில்லை. மேற்கண்ட இறைவசனத்தின் பின்னணி என்னவென்பதை இன்ஷாஅல்லாஹ்.., அடுத்த தொடரில் பார்ப்போம்.

-S.A. Sulthan

10/09/1441h

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *