Featured Posts

போதையுடன் நீங்கள் தொழுகையை நெருங்காதீர்கள்; பெரும் பாவமும் சின்னப் பாவமும் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-37 [சூறா அந்நிஸா–14]

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் கூறுவது என்னவென்று அறியாதவாறு நீங்கள் போதையுடையோர்களாக இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்” (4:43)

இந்த வசனத்தில் போதையுடன் இருக்கும் போது தொழுகையை நெருங்கக் கூடாது என்று கூறப்படுகின்றது. இதில் இருந்து தொழாத நேரத்தில் போதையுடன் இருக்கலாம் என தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இஸ்லாம் போதையைக் கட்டம் கட்டமாகத் தடுத்தது. அதில் ஒரு கட்டம்தான் போதையுடன் தொழுகையை நெருங்கக் கூடாது என்பதாகும்.

ஒரு முஸ்லிம் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழ வேண்டும். அதிகாலை சுபஹ் நேரத்தில் யாரும் போதையில் இருக்க மாட்டார்கள். லுஹர் தொழுவதாயின் காலை 10 மணிக்கு மேல் குடிக்க முடியாது. அஸர் தொழுவதாயின் பகல் ஒரு அணிக்கு மேல் குடிக்க முடியாது. மஃரிப் தொழுவதாகயின் மாலை 4.30 மணிக்கு மேல் குடிக்க முடியாது. மாலை மஃரிப், இஷா தொழுகைக்கிடையில் ஒரு மணித்தியாலமும் சுமார் இருபது நிமிடங்களுமே இடைவெளி இருக்கும். எனவே, மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடையே குடிக்க முடியாது. அப்படியாயின் இரவு தூங்கும் முன்னர் குடிக்கும் நிலைதான் ஏற்படும். குடிக்கு அடிமையாக இருந்தவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடியை விட்டும் தூரமாக்கி இறுதியில் இஸ்லாம் போதையை முழுமையாகவே தடுத்துவிட்டது. இது போதையின் ஒரு கட்டத்தில் அருளப்பட்ட வசனம் இறுதியில் அருளப்பட்ட வசனம் அல்ல என்பதை உணர்ந்து கொண்டால் போதுமானதாகும்.

பெரும் பாவமும் சின்னப் பாவமும்:

اِنْ تَجْتَنِبُوْا كَبٰٓٮِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْـكُمْ مُّدْخَلًا كَرِيْمًا‏

“உங்களுக்குத் தடுக்கப்பட்டவைகளில் பெரும் பாவங்களை விட்டும் நீங்கள் விலகிக் கொண்டால் உங்களை விட்டும் உங்கள் (சிறு) பாவங்களை நாம் அழித்து, உங்களை சங்கைமிக்க இடத்தில் நுழை விப்போம்” (4:31)

பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொண்டால் சின்னப் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவதாகவும் சுவனத்தில் நுழைவிப்பதாகவும் இந்த வசனம் கூறுகின்றது.

மனிதன் பலவீனமானவன், எந்தத் தவறும் செய்யாமல் அவனால் வாழ்ந்துவிட முடியாது. அவன் அறிந்தோ அறியாமலோ சின்னச் சின்னப் பாவங்களை செய்யலாம். பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொண்டால் சின்னப் பாவங்களை அல்லாஹ்வே மன்னித்துவிடுவான். இந்த வகையில் பெரும் பாவங்களையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

இஸ்லாம் இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், வட்டி எடுத்தல் மற்றும் கொடுத்தல், பொய் சாட்சி சொல்லுதல், கொலை செய்தல், சு+னியம் செய்தல்… போன்ற பல குற்றங்களை பெரும்பாவம் என்கின்றது.

இவ்வாறே இஸ்லாம் சபித்த பாவங்கள், இதைச் செய்தவர் சுவனம் செல்ல மாட்டார் அல்லது நரகம் செல்வான் எனக் கண்டித்த பாவங்கள் பெரும்பாவங்க ளாகும். இத்தகைய பாவங்களைச் செய்தவர்கள் ‘தவ்பா” – பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்.

அடுத்து, இந்த வசனத்தை வைத்து சின்னப் பாவங்களைத் தொடர்ந்தும் செய்யலாம் எனத் தப்பாகப் புரிந்து கொள்ளக் கூடாது. “தவ்பா” – பாவமன்னிப்புக் கேட்டுவிட்டால் பெரும்பாவம் என்பது இல்லை. தொடராகச் செய்து வந்தால் சின்னப் பாவம் சின்னப் பாவமாகப் பார்க்கப்பட மாட்டாது என்பது கவனிக்கத் தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *