எம்.ஏ.ஹபீழ் ஸலபி M.A.
யூஸூப் நபி
ஒரு நபிக்கு மகனானவும் நபிப் பரம்பரையில் வந்தவருமான யூஸூப் நபி சிறுபான்மை சமூக சூழலில் எவ்வாறு செயற்பட்டு, வெற்றிவாகை சூடினார்கள் என்ற வகையில் யூஸூப் நபியின் வரலாறு சிறுபான்மை சமூகத்திற்கு மிக அழகான பாடத்தையும் படிப்பினையையும் வழங்குகிறது.
தனது உறவுகளால், சமூகத்தால் ஏற்படும் இன்னல்களை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்ற பாடத்தை இந்த நபயின் வரலாறு தெளிவுபடுத்துகிறது.
இளமைப் பருவத்தில் தன் உடன் பிறந்த சகோதரர்களால் வஞ்சிக்கப்பட்டு, கிணற்றில் தூக்கி எறியப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டு, தான் வளர்ந்த வீட்டில் எஜமானியால் இம்சிக்கப்பட்டு. பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு, அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டு, பல இன்னல்களை அடுக்கடுக்காக சந்தித்தும் இரும்பைப் போன்ற இதயம் கொண்டவராய்த் திகழ்ந்த நபி யூஸூப் (அலை) அவர்களின் வாழ்க்கையை சிறுபான்மைச் சூழலில் வாழ்வோருக்கு அழகிய வரலாறாக அல்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது.
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَذَا الْقُرْآنَ وَإِنْ كُنْتَ مِنْ قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ (3) [يوسف : 3]
(முஹம்மதே!) இந்தக் குர்ஆனை உமக்கு அறிவித்திருப்பதன் மூலம் மிக அழகான வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். இதற்கு முன் நீர் அறியாதவராக இருந்தீர்.
சிறுபான்மை சூழலில் யூஸூப் நபி பல்வேறு இன்னல்களை அனுபவித்தாலும் ஒழுக்கம், நேர்மை தவறாதவராக இருந்தார். ஆபாச லீலை செய்ய முயற்சித்து, அதில் தோல்விகண்டு, அநியாயமாக சிறைப்படுத்திய அதிகாரவர்க்கத்தையும் அவர் திட்டவில்லை. இறைக் கோட்பாட்டில் அவர் எந்த சமரசமும் செய்யவில்லை.
ஓர் ஆட்சியாளனிடம் தனித்துவ அடையாளத்தை எவ்வாறு வெளிப்படுத்தி,தனது இருப்பை உறுதி செய்து கொள்ளலாம், அதன் மூலம் மன்னனின் உள்ளத்தை கவர்ந்து, அதனுாடாக ஏகத்துவப் பிரசாரத்தை எப்படி மேற்கொள்ளலாம் அத்தோடு, தன் உறவுகளுக்கு நலன் நாடலாம் என்ற பேருண்மையையும் ஹிக்மத்தையும் யூஸூப் நபியிடம் பெற்றுக் கொள்ளலாம்.
وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَنْ نُشْرِكَ بِاللَّهِ مِنْ شَيْءٍ ذَلِكَ مِنْ فَضْلِ اللَّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ (38) [يوسف : 38]
38. “என் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்கலாகாது. இது எங்களுக்கும், மனித குலத்துக்கும் அல்லாஹ் செய்த அருள். எனினும், அதிகமான மக்கள் நன்றி செலுத்துவதில்லை.”
يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39) [يوسف : 39]
39. “என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள் (இருப்பது) சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா?”
مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (40) [يوسف : 40]
40. “அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. “அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது’ என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.”
وَقَالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ أَسْتَخْلِصْهُ لِنَفْسِي فَلَمَّا كَلَّمَهُ قَالَ إِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌ (54) [يوسف : 54 ،]
54. “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன்” என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது “இன்றைய தினம் நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிகைக்குரியவராகவும் இருக்கிறீர்” என்றார்.
قَالَ اجْعَلْنِي عَلَى خَزَائِنِ الْأَرْضِ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ (55)
55. “இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக்காப்பவன்” என்று அவர் கூறினார்.
وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ نُصِيبُ بِرَحْمَتِنَا مَنْ نَشَاءُ وَلَا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ (56) [يوسف : 55 – 57]
56. இப்பூமியில் விரும்பிய இடத்தில் வசித்துக் கொள்ளும் வகையில் இவ்வாறே யூஸுஃபுக்கு அதிகாரம் அளித்தோம். நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். நன்மை செய்தோரின் கூலியை வீணாக்க மாட்டோம்.
وَلَأَجْرُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (57) [يوسف : 57]
57. நம்பிக்கை கொண்டு, (இறைவனை) அஞ்சுவோராக இருப்போருக்கு மறுமையின் கூலியே சிறந்தது.
யூஸுஃப் நபியவர்கள், நம்பிக்கை, நாணயம், நல்லொழுக்கம் போன்ற அனைத்தையும் தம் இளம் பருவத்தே கொண்டிருந்தார். அதனால், அந்நிய அரசிடம் மிக தைரியமாக தான் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு, ”இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக்காப்பவன்” என்று கேட்டார். பதவியும் பணியாளரும் வழங்கப்பட்டார். அந்த அதிகாரத்தை அவர் நல்ல முறையில் பயன்படுத்தினார்.அவர் யாருக்கும் அடிவருடியாக செயற்படவில்லை.
யூஸுப் நபி, அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டாலும் அதற்காக வருந்தவோ, அதைப் யன்படுத்தி புகழ்தேடவோ, பொதுப் பணத்தை பயன்படுத்தவோ இல்லை.
அந்நிய மதகுருக்களை ,அநியாயமாக சிறையிலடைத்த மன்னனை அவர் விமர்சிக்கவில்லை. மன்னனின் மனதிலும் மக்களின் உள்ளத்திலும் மாண்புறும் மார்க்கத்தின் மகத்தான நடைமுறைகளால், மன்னிக்கும் மனப்பான்மையால் இடம்பிடித்து உயர் பதவியில் கவ்ரமாக, கர்வமற்று அமர்ந்தார்.
தான் நிரபாராதி என்பது தெளிவாகத் தெரியும் வரை பொறுமையாக இந்தார்.தனக்குத் துரோகம் செய்தவர்களுக்கு நன்மை செய்தார். தன்னைக் கொலை செய்ய முனைந்தவர்களுடன் அவர் நடந்து கொண்டவிதம் அகிலத்தாருக்கு அழகிய வரலாறாக அல்குர்ஆன் பிரகடப்படுத்துகிறது.
وَقَالَ لِفِتْيَانِهِ اجْعَلُوا بِضَاعَتَهُمْ فِي رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُونَهَا إِذَا انْقَلَبُوا إِلَى أَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ (62) [يوسف : 62]
62. “அவர்கள் கொண்டு வந்த சரக்குகளை அவர்களது பொதிகளிலேயே வைத்து விடுங்கள்! அவர்கள் தமது குடும்பத்தாரிடம் சென்றதும் அதைக் கண்டு விட்டு (திருப்பித் தருவதற்காக) மீண்டும் வரக்கூடும்” என்று தமது பணியாளரிடம் யூஸுஃப் கூறினார்.
قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ يَغْفِرُ اللَّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ (92) [يوسف : 92 ، 93]
92. “இன்று உங்களைப் பழிவாங்குதல் இல்லை. உங்களை அல்லாஹ் மன்னிப்பான். அவன் கருணையாளர்களில் சிறந்த கருணையாளன்” என்று அவர் கூறினார்
சிறுபான்மை சூழலில் மிகப் பெரும் இன்னல்கள் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வரும் போது,அதை எவ்வாறு மனவலிமையுடன் எதிர்கொண்டு,வெற்றிவாகை சூடலாம் என்ற பாடத்தை இந்த நபியின் வரலாறு தெளிவுபடுத்துகிறது.
இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்