“உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.” (4:15)
இந்த வசனத்தின் முதல் பகுதி விபச்சாரக் குற்றத்தை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகள் தேவை என்கின்றது. அந்நான்கு சாட்சிகளும் தவறை நேரடியாகக் கண்டவர்களாகவும் இருக்க வேண்டும். நான்கு சாட்சிகள் மூலம் உறுதிப்படுத்த முடியாவிட்டால் தனி நபரது கற்பு விடயத்தில் அவர் தவறு செய்வதைத் தனிமையாகக் கண்களால் கண்டிருந்தால் கூட பேசக் கூடாது. அப்படிப் பேசி அவர் அதை ஒத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. மறுத்துவிட்டால் சாட்சி கூறியவருக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.
“எவர்கள் கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறி, பின்னர் நான்கு சாட்சி களைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு எண்பது கசையடி அடியுங்கள். மேலும், ஒருபோதும் அவர்களது சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள். இன்னும் அவர்கள்தாம் பாவிகள்.”
“எனினும், இதன்பின் யார் பாவமன்னிப்புக் கோரி, (தம்மை) சீர்திருத்திக் கொண்டார்களோ, நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்’ நிகரற்ற அன்புடையவன்.”
(24:4-5)
இவ்வாறே ஒரு ஆண்’ குறித்த ஒரு பெண்ணுடன்: தான் விபச்சாரம் செய்ததாகச் சொல்லி அந்தப் பெண் அதை மறுத்துவிட்டாலும் அந்த ஆண் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டதற்கான தண்டனை வழங்கப்படுவதுடன் ஒரு பெண் மீது அபாண்டம் சுமத்தியதற்கான தண்டனையையும் பெறுவான். அந்தப் பெண் சட்டப்படி நிரபராதியாகக் கருதப்படுவாள்.
இந்தச் சட்டத்தை இஸ்லாம் பெண்ணின் கற்பையும் மானத்தையும் காப்பதற்காக இட்டது. சில வேளை ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கலாம். அந்தப் பெண் அவனை நிராகரிக்கலாம். அப்போது அந்தப் பெண் மீது களங்கத்தைக் கற்பித்து அவளை அவன் பழிவாங்க முற்படலாம் அல்லது அவளை வேறு யாராவது திருமணம் முடிக்க முடியாத நிலையை உண்டுபண்ணுவதற்காக இவளுடன் நான் விபச்சாரம் செய்திருக்கின்றேன் என்றும் கூறலாம். எனவேதான் இஸ்லாம் இவ்வாறான கடுமையான சட்டங்களைப் போட்டது. இஸ்லாத்தின் இந்தச் சட்டம் மனித மானம் புனிதமானது என்பதாலும் குறிப்பாக பெண் களங்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அது காட்டும் அக்கறையினாலும் இடப்பட்டதாகும்.
மாற்றப்பட்ட சட்டம்:
“உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.”
“உங்களில் இருவர் இ(ம்மானக் கேடான)தைச் செய்தால் அவ்விருவருக் கும் நோவினை செய்யுங்கள். அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடி, தம்மைத் திருத்திக் கொண்டால் அவ்விருவரையும் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.” (4:15-16)
இந்த வசனத்தில் விபச்சாரத்திற்கான தண்டனை பற்றிப் பேசப்படுகின்றது. ஆண்கள் விபச்சாரம் செய்தால் நோவினை செய்யப்பட வேண்டும் என்றும் பெண்கள் விபச்சாரம் செய்தால் அவர்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விடயத்தில் வேறு சட்டம் வரும் வரை அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்றும் இந்த வசனங்கள் கூறுகின்றன. ஆண் வீட்டுக் காவலில் இருந்தால் அவனது பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டி வரும். அவன் உழைக்க வேண்டியவன். எனவே, அவனுக்கு தண்டனை வழங்கி அவனை வெளியில் விடலாம் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன.
15 ஆம் வசனத்தின் இறுதியில் இது குறித்து வேறு சட்டம் வரும் என்ற செய்தியும் கூறப்படுகின்றது. இதன் பின்னர் ஆண்-பெண் இருவருக்கும் விபச்சாரத்திற்கான தண்டனை ஒன்றாக மாற்றப்பட்டது.
விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவரும் திருமணம் முடிக்காதவர்களாக இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு நூறு கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும்.
‘(திருமணம் முடிக்காத) விபச்சாரி, விபச்சாரன் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி அடியுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அவ்விருவர் மீதும் உங்க ளுக்கு கருணை ஏற்படவேண்டாம். அவ்விருவரின் தண்டனையை நம்பிக்கையாளர்களில் ஒருசாரார் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.” (24:2)
திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சட்டம் மாற்றப்பட்டது. இது குறித்து நபி(ச) அவர்கள் கூறும் போது,
‘என்னிடமிருந்து நீங்கள் எடுங்கள்! என்னிடமிருந்து நீங்கள் எடுங்கள்! திருமணம் முடிக்காதவர்களுக்கு 100 கசையடியும் ஒரு வருட ஒதுக்கி வைப்பும், திருமணம் முடித்தவர்களுக்கு 100 கசையடியும் கல்லெறிந்து கொல்லுதலும் தண்டனையாகும். அவர்கள் விடயத்தில் அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உப்பாததிப்னுஸ் ஸாமித்(வ)
நூல்: முஸ்லிம் 1690-12, இப்னுமாஜா: 2550, அபூதாவூத்- 4415
பொதுவாக ஆண் தவறு செய்தால் அதை சம்பவமாகவும் பெண் தவறு செய்தால் அதை சரித்திரமாகவும் பார்க்கும் மனநிலைதான் நிலவுகின்றது. ‘ஆண் சேற்றைக் கண்டால் மிதிப்பான்’ தண்ணீரைக் கண்டால் கழுவுவான்” என்று கூறுவார்கள். இஸ்லாம் ஆணுக்கும் கற்பு உண்டு என்று கூறுகின்றது. ஒழுக்கம் ஆண், பெண் இருபாலாருக்கும் சமமானது என்கின்றது.