பலவருடங்களாக சொந்த ஊரில் கடமையாற்றிய எனக்கு, வெளியூர் காரியாலயத்தில் இடமாற்றம் கிடைத்திருந்தமை, நல்லதோர் திருப்புமுனையாக அமைந்தாலும், அது சகோதரமொழிக் காரியாலயம் என்பதுதான் ஜீரணிப்பதற்குச் சற்றே கடினமாக இருந்தது. அதுவும் அங்குள்ளவர்களிடம் இருந்து அந்நியப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் வேறு ஒட்டிக் கொண்டதுடன், முற்றிலும் மாறுபட்டதொரு சூழலுக்கும் பஸ்வண்டிப் பிரயாணத்திற்கும் பழக வேண்டியும் இருந்தது.
எது எப்படியோ புதுக்காரியாலயம் வந்தாயிற்று.
வேறு உத்தியோகத்தர்கள், வேறுகாரியாலயம், வேறு நிருவாகம் என்று எனது உலகம் பரந்துபடத் தொடங்கியது.
“சிறு புன்னகையும் தர்மமாகும்” என்ற நபிமொழியில் நான் வளர்ந்திருந்தும், புன்னகைத்தலை வாழ்க்கையில் தொடராகக் கடைப்பிடிக்கும் யுக்தியை அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.
அத்துடன், பொறுமை எனும் தலைப்பிட்டுச் சில அசௌகரியங்களை உள்ளுக்குள் புதைத்துப் புழுங்கிக் கிடக்காமல் எனக்கான பேச்சுச் சுதந்திரத்தினை மேலும் பயன்படுத்தக் கற்றுக் கொண்டேன்.
இருப்பினும், என் கடமைகளுக்கப்பாலும் கலாசார ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ சில முரண்பாடுகளையும் கடந்துபோக வேண்டிய கட்டாயம் எனக்கேற்பட்டிருந்தது.
காரியாலய நாட்களில் காலைப்பொழுதில் பூஜைக்காய் பூக்களை தட்டில் நிறைத்துக்கொண்டு அங்கிருக்கும் உத்தியோகத்தர்களிடம் அதற்குச் சமர்ப்பணம் பெறவரும் ஒரு பெண் பக்தையிடம் நான் அவ்வப்போது மாட்டிக்கொள்வதுண்டு. அதேவேளை, எனது மார்க்கக்கடமைகளுக்கு தனியாக அறையேதும் இல்லையாயினும்,
“பூமி முழுவதும் தொழுமிடமாகும். மலசலகூடத்தையும் அடக்கஸ்தலத்தையும் தவிர” என்னும் நபிமொழிக்கமைய, தொழுகையை நிறைவேற்றுவதில் அங்கே இடரல் இருக்கவில்லை.
காரியாலயத் தேவைக்காக எனது மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை, தன்னுடைய மொழியில்தான் எழுதித் தரவேண்டும் எனக்கூறி, அக்கடிதத்தினை ஏற்க மறுத்த ஒரு நண்பியும் இருந்தார். இரு மொழிக் கொள்கை அமுலுக்கு வந்தும் இன்னும் ஒருமொழிக் கொள்கையிலேயே இருந்த அவரது மன இறுக்கமும் கடினமான அணுகுமுறையும் என்னைப் பயமுறுத்தவே அவரைவிட்டும் விலகியே இருந்தேன்.
வாய் நிறைய சொன்ன “அஸ்ஸலாமுஅலைக்கும்” என்ற முகமன் புதுக்காரியாலயத்தில் “குட்மோனிங்” ஆக மாறிற்று. ஆனால், என்னை கௌரவப்படுத்துவதற்காகச் சில சகோதரமொழி உத்தியோகத்தர்கள் சலாமுரைப்பதுமுண்டு.
பல்மொழிகள் தேர்ந்தவனும் தன் உணர்வுகளை வெளிப்படுத்த தேர்ந்தெடுப்பது தாய்மொழியே. ஆனால், அங்கே எனது தாய்மொழி அடிக்கடி ஒய்வு எடுத்ததாகவே தோன்றியது.
உடைகளிலும் உடம்பை மறைக்கும் அளவுகளிலும் எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் எனது துப்பட்டாவை கேட்டுப் பெற்று மறைமுகமாக அணிந்து பார்த்த தோழிகளும் அங்கு இல்லாமலில்லை.
நான்கைந்து பேர்களைத் தவிர முழுவதுமாய் வேற்று மதத்தவர்களைக் கொண்டிருந்த அந்தக் காரியாலயத்தில் அவர்களின் கலாசாரத்தையோ நடைமுறைகளையோ நான் ஒருபோதும் விமர்சித்ததில்லை.
அந்நிய மதத்தவர்களாயினும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியான நபிமொழி எனது நடைமுறைகளில் உறைந்திருந்தது.
குடும்ப வாழ்வு, ஆண்பெண் உறவுகள், ஆடை அணிதல் என்று வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தலையிடுவதால் இஸ்லாம் மார்க்கம் சுதந்திரமற்றது, சிரமமானது எனும் கருத்தினைப் பலர் கொண்டிருந்தார்கள். இதனால் அவர்களுக்கு நான் பரிதாபத்திற்குரிய பேசுபொருளாகிப் போனதுமுண்டு.
என்னைப் பொறுத்தவரை இஸ்லாத்தை சிரமம் எனக்கூறுவோர் அதற்குச் சரியான காரணங்களை முன்வைக்கத் தவறுகின்றனர். அதேவேளை சில கலாச்சார சீரழிவுகளுக்கு அவர்கள் என்ன காரணங்களை முன்வைக்கின்றார்களோ, அதே காரணங்களையே இஸ்லாம் ஆரம்பத்திலே தடுக்கிறது என்பதை நன்கு அறிந்திருந்தும் அறியாததுபோல தர்க்கிப்போரும் உண்டு.
எது எவ்வாறாயினும், ஓர் அனாதைக்கும்கூட வாழக்கற்றுக்கொடுக்கும் நன்நெறி தந்த இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் “உம்மத்தாள்” என்ற பெருமையை, அந்தக் காரியாலத்தில் இருக்கும்போதுதான் உணர்ந்தேன்.
கடமையுணர்வு, அதற்கான உச்சக்கட்ட பங்களிப்பு, தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுதல் போன்றவற்றில் முன்னுதாரணமாகத் திகழ்ந்த அவர்களுடனான அனுபவங்கள் எனக்குப் பல படிப்பினைகளையும் புரிதல்களையும் இரண்டே வருடங்களில் கற்றுக் கொடுத்து மீண்டும் எனது சொந்த ஊருக்கே அனுப்பி வைத்தது.
அல்-ஹம்துலில்லாஹ்!
பர்சானா றியாஸ்
أمة (உம்மத்) = சமுதாயம், மக்கள், வழி வந்தவர்கள்
உம்மத்தாள் = உம்மத்(தை சேர்ந்)தவள்
கட்டுரையாசிரியர் இதனைத்தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.
சரிதான், ஜசாக்கல்லாஹ்கைறன்