ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்காக என்னென்ன தியாகங்களை செய்கிறார் என்பதை பற்பல கோணங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அண்மையில் தந்தை ஒருவரின் செயல் என் மனதைத்தொட்டுப்போனது.
அவர்கள் குடும்ப சகிதம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவரது பிள்ளைகள் இருவருடன் எனது சகோதரியின் மகனும் தனது விளையாட்டுப் பொருட்களுடன் உட்கார்ந்து விளையாடத் தொடங்கியபோது ஆரம்பித்தது பிரச்சினை.
பொருட்களின் சொந்தக்காரன் என்றவகையில் எங்கள் வீட்டுப் பிள்ளை அதிகம் உரிமை எடுப்பதும், அதைத் தொட்டு விளையாடக்கூட முடியாமல் வந்த பிள்ளைகள் தன் பெற்றாரிடம் முறையிடுவதுமாய் ஒரே ரகளையாயிற்று.
இரு தரப்பினரும் பிள்ளைகளிடத்தில் சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றும் யாவும் தோல்வியில் முடியவே, விட்டுக் கொடுப்பு என்றால் என்ன என்பதை திணித்துத்தான் எனது மகனுக்கு கற்பிக்க வேண்டும் என்று உணர்ந்தவளாய், அவனை தோளில் வாரிப் போட்டுக்கொண்டு இருந்த இடத்தை விட்டும் நகர்ந்து வேறுவிடயங்களில் பராக்காக்கிவிட முயன்றேன். ஆனபலனேதுமில்லை. மகனது கடுங்கோபத்திற்காளாகி பிஞ்சு விரல்களால் நான்கைந்து அடிகள் வாங்கிக்கொண்டதுதான் மிச்சம்.
அட இப்படி எல்லா வீடுகளிலும் சாதாரணமாக நடப்பதுதானே… இதுல சொல்றதுக்கு புதுசா என்ன இருக்கு… என்று நீங்கள் கேட்பது புரிகிறது
சமாளிக்க முடியாமல் திணறி நாங்கள் நின்றபோது, எங்கள் மகனிடம் வந்து,
“வாங்க புதினம் பாத்துற்று வருவோம்” என்று கூறி தனது வாகனத்தில் என்மகனை ஏற்றிக் கொண்டு வீதியுலா போய்விட்டார் அந்த தந்தை.
நான் அப்படியே ஆச்சரியப்பட்டுப் போய்நின்றேன். தனது பிள்ளைகளும் சந்தோசம் அடைய வேண்டும், அதேவேளை எங்கள் பிள்ளையும் சந்தோசப்பட வேண்டும் என்று நினைத்த இங்கிதம்,
தான் திரும்பி வரும்வரையான பொழுதுகளை தன் பிள்ளைகளுக்கு சுதந்திரமாகப் பெற்றுக் கொடுத்த சமயோசிதம்,
இப்பயெடியெல்லாம் தந்தைமார்களுக்குள் ஒளிந்து கிடக்கும் தாய்மைகள் அழகுதான்.
பர்சானா றியாஸ்