நரகத்தில் பாவிகள் அனுபவித்து வரும் தண்டனைகளை தொடராக நான் உங்கள் சிந்தனைக்கு எடுத்துக் காட்டி வருகிறேன். அந்த தொடரில் இன்னும் சில காட்சிகளை காணலாம்.
மனோ இச்சையினால் நரகம்…
மனிதன் சரியான முறையில் வாழ்வதற்காக நபியவர்களை தேர்ந்தெடுத்து, அவரின் மூலமாக மார்க்கத்தை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.
நபியவர்களின் மரணத்திற்கு பிறகு காலம் செல்ல, செல்ல, நபியவர்கள் மார்க்கத்தில் காட்டித்தராத பல செயல்பாடுகள் மார்க்கமாக மக்கள் செய்ய ஆரம்பித்தார்கள். செய்தால் நல்லது தானே, செய்தால் என்ன தப்பா, நல்ல செயல் பாடாக தானே உள்ளது, என்று மனோ இச்சைக்கு அடிபணிந்து மனோ இச்சை எதையெல்லாம் மார்க்கமாக நாடுகிறதோ அதையெல்லாம் மார்க்கம் என்ற பெயரில் நடை முறைப்படுத்தி வர ஆரம்பித்தார்கள். அதற்கான எச்சரிக்கையாக தான் மனோ இச்சைகளுக்கு அடிபணிந்தால் நரகம் தான் என்று நபியவர்களின் எச்சரிக்கையை பின் வருமாறு காணலாம்.
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 6487)
மேலும் “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைபோன்றே (மிக அருகில் உள்ளது.)
என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். (புகாரி 6488)
மேலும் அல்லாஹ்வின் எச்சரிக்கையையும் பின் வருமாறு காணலாம்.
“அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)
பெருமையும், நரகமும்…
எவரிடத்தில் பெருமை இருக்கிறதோ அவர் இறுதியாக ஒதுங்குமிடம் நரகமாகும் என்று அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும் எச்சரித்துள்ளார்கள். தன்னை அறியாமல் மனிதனிடத்தில் பெருமை வந்து விடுகிறது.குறிப்பாக பெருமையைப் பற்றி நபியவர்கள் பின் வருமாறு ஒரே வரியில் சுருக்கமாக கூறினார்கள். பெருமை என்றால் சத்தியத்தை மறுப்பதும், பிறரை அற்பமாக நினைப்பதும்ஆகும் என்று எச்சரித்தார்கள்.
இன்று மனிதன் தன்னை அறியாமல் நான், நான் என்று பிறரை அற்பமாக நினைத்து பெருமையில் சிக்கிக் கொள்கிறான். எனக்கு தான் தெரியும் அவருக்கு தெரியாது. எனக்கு தான் முடியும் அவருக்கு முடியாது. இப்படி அதிகமாக என்னால் முடியும் அவருக்கு முடியாது என்று சர்வ சாதாரணமாக நினப்பதே பெருமையாகும் .தஃவா களத்தில் ஈடுபடும் மௌலவிமார்கள் உட்பட சாமானியர்கள் வரை இப்படியான பெருமையில் தன்னை அறியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். இதனுடைய முடிவு நரகம் என்பதை நாம் பயந்து கொள்ள வேண்டும்.
“ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.
(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.(புகாரி 4918)
வெப்பமும், நரகமும்…
நாம் உலகில் வாழும் போது நமது வாழ்க்கைக்காக அல்லாஹ் இந்த உலகத்தையும், உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்துள்ளான். அவைகளில் ஒன்று தான் சூரியனாகும். இந்த சூரியனிடமிருந்து வெளியாகும் வெப்பத்தை நபியவர்கள் நரகத்தின் மூச்சுக் காற்று என்று எடுத்துக் காட்டி நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று எச்சரிப்பதை காணலாம்.
உலகில் நாம் வாழும் போது பல இலட்ச மயில்களுக்கு அப்பால் இருந்து வெளிவரும் சூரியனின் தாக்கத்தை தாங்க முடியவில்லை என்றால், நேரடியாக நரகத்தின் கொடூரம் எப்படி இருக்கும் என்பதை நினைவுப் படுத்தவே நபியவர்கள் பின வரும் செய்தியை சொல்கிறார்கள்.
“அபூ தர்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். அப்போது (முஅத்தின் லுஹர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முறபட்ட போது), ‘வெப்பம் தணியட்டும். பிறகு, தொழலாம்’ என்று அவர்கள் கூறினார்கள். மீண்டும், ‘வெப்பம் தணியட்டும்’ என்று – சிறு குன்றுகளின் நிழல் நீண்டு விழும் வரை – கூறினார்கள். பிறகு, ‘தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது’ என்றார்கள். ( புகாரி 3258)
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம் தன் இறைவனிடம், ‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே’ என்று முறையிட்டது. எனவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர்காலத்திலும் மற்றொரு மூச்சு கோடைக் காலத்திலுமாக இரண்டு மூச்சுகள்விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவை தாம் நீங்கள் கோடைக் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 3260)
உலகில் எங்களால் வெப்பத்தின் தாக்கத்தையும்,தாங்க முடியாது. குளிரின் தாக்கத்தையும் எங்களால் தாங்க முடியாது. எனவே வெப்பமும், குளிரும், நரகத்தின் நினைவை கொண்டு வர வேண்டும்.