அரசாங்கத்தினால் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட சில அத்தியவசியப் பொருட்கள் வருமானம் குறைந்த பயனாளிகளுக்கிடையில் பங்கிடப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, அது. அந்தச் சன சந்தடிக்குள்ளும் உள் நுழைகிறேன். ஒரு உரையாடல் என் காதில் விழுகிறது.
முதலாமவர்-
“வாகனமும் வைத்துக் கொண்டு உழைக்கிறான்…
அந்தாளுக்கு எப்படி சேர் நிவாரணம் கொடுப்பீங்க…”
இரண்டாமவர்-
“வாகனம் என்கிட்ட இருக்குறது உண்மைதான்…
ஆனா அது என்ட பெயர்ல இல்லயே…”
ஒரு தெனாவெட்டும் சட்டம் சார்ந்ததுமாய் வெளிப்படுகிறது இரண்டாமவரின் பேச்சு. இரண்டு பொது மகன்களுக்கிடையிலும் சிக்கிக்கொண்டு முழிக்கிறார் கடமையிலிருக்கும் உத்தியோகத்தர். எப்படியோ அந்தப்பொழுதைக் கடந்தாயிற்று.
ஆனால், நிவாரணத்தினை பெற்றுக்கொள்ள அந்தப் பொதுமகன் செய்த முதலீடு இந்த கடின வார்த்தைகள்தான். இந்த முதலீடு வேண்டுமானால் அவரின் பொருளில் இலாபத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், ஈமானில் பெரும் நஸ்டத்தையல்லவா கொடுத்திருக்கும்?
அரச சொத்துகள் எந்த வடிவில் தன்னிடம் வந்தாலும் அது கிடைப்பதற்கு தான் தகுதியானவர்தானா? என்பதை ஒரே ஒரு நிமிடம் சிலர் சிந்தித்தாலே போதும் எங்கோ இருக்கும் உண்மையான ஏழைகள் இனங்காணப்படுவதற்கு அதுவே வழிவகுக்கும்.
அரசாங்கத்தின் நிவாரணங்களை பொதுமக்கள் தேடிப்போனதன்றி, நிவாரணங்களே பொதுமக்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டித் தானாக நுழைந்த நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் நிறைய உண்டு.
“என்னைவிடப் பெறத்தகுதியானவர் இதோ இருக்கிறார்…
அவருக்கே இதைக் கொடுத்து விடுங்கள்…”
என்று தனக்கு கிடைத்த அரச நிவாரணங்களை திருப்பிக் கொடுத்தோரும், பொருத்தமானவர்களைத் தானே தெடிச்சென்று தனக்கு கிடைத்ததை தியாகம் செய்தோரும் பிறந்த வம்சத்தில் தளைத்தவர்கள் நாங்கள்.
ஆனால், சண்டித்தனத்தினால் உரிமை கொள்வதைப் பெருமையாக கருதுவோரையும், மற்றவர்களை மட்டந்தட்டுவதிலேயே கவனமாயிருப்போரையும், வேதனையோடு நோக்கவேண்டியுள்ளது.
அத்துடன், நிவாரணங்களுக்கென குடும்பங்களைத் தெரிவு செய்வதற்கு பொதுமக்கள் உத்தியோகத்தருக்கு ஒத்துழைப்பு வழங்குவது மிகக்குறைவு.
தகைமையற்றவர்கள் பெறும் நிவாரணத்தை அவர்களது நட்பின் காரணமாகவோ அல்லது, செல்வாக்கின் காரணமாகவோ சுட்டிக்காட்டத் திராணியற்றுப் போய், இறுதியில் உத்தியோகத்தர்களைக் குறைசொல்லித் திரிபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்னும் சிலர், நிவாரணங்களுக்காக படிவங்களை பூரணப்படுத்துவதில் மாத வருமானத்தை எவ்வாறெல்லாம் குறைத்துக்காட்ட முடியும் என்றே சிந்திக்கிறார்கள். இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகளை (வருமானங்களை) இவர்கள் மறைக்கத் தலைப்படுவது அவனது கோபத்தை சம்பாதித்து தராதா?
அதேவேளை, வேறு தேவைகளுக்காக அதே வருமானத்தினை அதிகரித்துக் காட்டவும் தயங்கமாட்டார்கள். இவர்கள் பொய்த் தகவலை வழங்குவது மட்டுமன்றி, பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களையும் தவறான பாதைக்கு இட்டுச் செல்ல முனைகிறார்கள்.
பொதுமக்கள் ஒருபுறமிருக்க, அவர்களுடன் தொடர்பான உத்தியோகத்தர்களை எடுத்துக்கொண்டால், தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் விபரங்களை முன்கூட்டியே தனது அலுவலகத்தில் காட்சிப் படுத்தினால், அத்தெரிவு பற்றிய அபிப்பிராயங்களை மக்களிடமிருந்து பெறுவதற்கும், எதிர்காலத்தில் முறுகலற்ற ஆரோக்கியமான கடமைக்கும் நிச்சயமாக அது வழி சமைக்கும்.
அத்தோடு, தங்களை கோபஉணர்வால் பூசிமெழுகிக் கொண்டிருத்தல் மற்றும், அவர்களுடனான தொடர்பாடல்களைத் தவிர்ந்திருத்தல் போன்றன, மூமினான ஓர் உத்தியோகத்தரின் பண்பாக இருக்க முடியாது.
இதுதவிர, தான் விரும்பியவர்களுக்கு விசேட சலுகை வழங்கவோ, அல்லது பக்கச்சார்பாக முடிவெடுக்கவோ தலைப்படும் உத்தியோகத்தர்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை. இவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தைச் செய்யத் துணிகின்றனர். அதன் முதற்கட்டம் லஞ்சம் அல்லது அன்பளிப்புகளைப் பெறுவதில் ஆரம்பிக்கும்.
அப்படியான வாழ்வியல் சூழல் அந்தச் சமூகத்தை பயந்தாங்கொள்ளிகளாக்கி எதிரிகளது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி விடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இது இறைவன் விதித்த நியதியாகும்.
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் ஏழைகளை பெரும் கஷ்டத்திற்கும் மன உழைச்சலுக்கும் உள்ளாக்குவதோடு, நிறுவனப் பொறுப்பாளர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது.
கீழ்வரும் வரலாற்றுச் சம்பவத்தை சற்றே உற்று நோக்குவோம்
ஹிம்ஸ் பிரதேசத்திலிருந்து தன்னைச் சந்திக்கவந்த ஒரு தூதுக்குழுவிடம் கலீபா உமர் (றழி) அவர்கள்,
“உங்கள் பகுதியிலுள்ள பரம ஏழைகளின் பெயர்களை எழுதித் தாருங்கள்…
அதையறிந்து உதவி செய்யலாம்…” என்றார்கள்.
அதைக் கேட்ட தூதுக்குழுவினர் கலீபாவிடம் ஒரு பட்டியலை வழங்கினார்கள்.
(உத்தியோகத்தர் பொதுமக்களிடமிருந்தே தகவல் திரட்டும் முன்மாதிரியை கலீபா உமர்(றழி) பின்பற்றினார்கள் என்பது இங்கே சிறந்த முன்னுதாரணமாகும்.)
தூதுக்குழுவினர் வழங்கிய பெயர்ப்பட்டியல் கலீபாவின் பார்வைக்கு போகிறது. ஹிம்ஸ் பிரதேசத்தின் கவர்னரின் பெயர் அதிலிருப்பதை அவதானித்துவிட்டு,
கலீபா-
“ஸஅத் இப்னு ஆமிர் யார்?…”
தூதுக்குழு-
“எங்கள் கவர்னர்…”
கலீபா-
“உங்கள் கவர்னர் ஒரு பக்கீரா?…”
தூதுக்குழு-
“ஆம் கலீபா அவர்களே!… எங்கள் தலைவர் வீட்டில் பல நாட்கள் அடுப்பு எரிவதே இல்லை…”
இந்தச்செய்தி கேட்டு உருக்குப் போன்ற உமர் (றழி) அவர்கள் உருகினார்கள். கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. உடனே ஒரு பையில் ஆயிரம் தீனார் நாணயங்களைப் போட்டு,
கலீபா-
“இதை சஅதிடம் கொடுங்கள்… எனது சலாத்தையும் எத்தி வையுங்கள்…
இந்தப் பணத்தை உங்களது சொந்தத் தேவைகளை நிறைவு செய்யப் பன்படுத்துங்கள்…”
எனக்கூறும்படி தூதுக்குழுவிடம் பணம் கொடுத்தனுப்பினார்கள். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பர். ஆனால் இரண்டடி தள்ளி நிற்பவர்களை இஸ்லாமிய வரலாற்றிலேயே காணலாம்.
“இன்னாலில்லாஹி வாஇன்னாஇலைஹி ராஜிஊன்…”
இதுதான் அந்த ஸஅத் (றழி) அவர்கள் மொழிந்த ஒரே வார்த்தை. ஆம்! கலீபா கொடுத்தனுப்பிய பணத்தை தூதுக்குழுவினர் வழங்கியபோது வேண்டாத பொருளைக்கண்டு விலகுவதைப் போன்று பின்வாங்கி, “இன்னாலில்லாஹி வாஇன்னாஇலைஹி ராஜிஊன்…” என உரக்கக் கூறினார். வேதனையும் வெறுப்பும் கலந்த இந்த வார்த்தைகளை உள்ளேயிருந்து செவிமடுத்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்தவராய்,
மனைவி-
“என்ன நடந்தது…
கலீபா மரணித்துவிட்டார்களா…”
ஸஅத் (றழி)-
“இல்லை…
இல்லை…
அதைவிடப் பெரிய முஸீபத் இது…”
மனைவி-
“என்ன நடந்தது…
முஸ்லிம்கள் ஏதேனும் பொறியில் மாட்டிக் கொண்டார்களா?…”
ஸஅத் (றழி)-
“இல்லை…
அதைவிட மோசமான செய்தி இது…”
மனைவி-
“என்னதான் நடந்தது என்று கூறுங்களேன்…”
ஸஅத் (றழி)-
“எனது மறுமையைக் குழப்ப துன்யா நுழைந்து விட்டது…
பித்னா என் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது…”
மனைவி-
(கலீபா அனுப்பிய பண விபரம் தெரியாத அவர்)
“அந்த பித்னாவிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள்…”
ஸஅத் (றழி)-
“இந்த விடயத்தில் நீ எனக்கு துணை நிற்பாயா…”
மனைவி-
“நிச்சயமாக துணை நிற்பேன்…”
மனைவியிடம் இந்த உறுதியைப் பெற்றபின் அந்த ஆயிரம் நாணயங்களையும் ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து விட்டார்கள். தானாக வந்த செல்வத்திலும் தன்னிலையைக் கண்டார்கள்.
இந்த வரலாறு நமக்கு ஒரு முத்தேனும் தந்துவிடாதா? நம்மை ஒரு நூலளவுக்கேனும் பட்டை தீட்டாதா?
பொதுச் சொத்துக்கள் மற்றும் பிறரது உடமைகள் என்பவை அதைக் கையாளும் உத்தியோகத்தரின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் வேண்டிநிற்பவை. அதில் தவறினால் ஈருலகிலும் நஸ்டங்களைச் சந்திக்க நேரும். அவர் புரியும் பிரார்த்தனைகள் தொடக்கம் ஈமானின் அடிப்படை வரை அது தாக்கம் செலுத்துவதோடு, மனிதர்களின் சாபத்தை இலகுவாகவே பெற்றுத்தந்துவிடும்.
எனவே, ஈருலகிலும் வெற்றிபெற வேண்டுமெனில், பொதுச்சொத்துகள் விடயத்தில் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்தோடு கையாள்வது நானுட்பட அனைவரும் கவனத்திலெடுக்க வேண்டிய விடயமாக இருக்கிறது.
– பர்சானா றியாஸ்