மரணத்தைக் குசலம் விசாரித்து,
அதனுடனேயே கண்ணயர்தல்
எனக்கு பழகியதொன்று
இருப்பினும், புதுப்பொழுதை
புலரவிட்டு இன்றைக்கும்
வாழ்ந்துபார்!
என்கிறது வாழ்க்கை
வாழ்க்கையுடன்
தைரியமாகவே நடக்கிறேன்
என் கைப்பட எழுதிய
“வசிய்யத்து” கைப்பையில்
இருப்பதனால்
நாளை நாளை என்று
நான் கொடுத்துவிட்ட
வாக்குறுதிகள்
நாளை என் கப்றை
நெருக்க வேண்டாமென,
“நாளை” களுக்கு முன்னால்
“இன்சாஅல்லாஹ்” களையும்
சேர்த்தே மொழிந்துள்ளேன்
நான் கடனாக கொடுத்தவைகளை
எங்கேனும் பொறிக்கவில்லை
அழகிய கடனாக அவை
என்னை அடையட்டும்!
என்பேன்
எனதறையின் அந்தரங்கம் வரை
தங்கம் தேடவேண்டாம்
அலுமாரியில் விலையுயர்ந்த
ஆடைகளும் தேடவேண்டாம்
அவற்றின் வாடையேனும்
இருக்காது
அதிகமிருக்கும் என்று
என் வீட்டிற்குள் பாத்திரங்கள்
தேடவேண்டாம்
காணிப் பத்திரங்களும்
தேடவேண்டாம்
சொத்துக்காய் நடக்கும்
அக்கப்போர்களை
பதவி வழியாய்ப்
பார்த்தவள் நான்,
என் தலைமாட்டிலுமோர்
“வசிய்யத்து” இருப்பதில்
ஆச்சரியம் ஒன்றுமில்லை
மரணமே! உன் அழைப்பிற்கு
மனப்பூர்வமாய் ஒத்துழைக்க
வேறென்ன தகுதி வேண்டும்?
– பர்சானா றியாஸ்