Featured Posts

நூல் அறிமுகம்: “அழைப்பொலி” – இஸ்லாம் அறிமுகத்துக்கான நவீன வாசிப்பு

  • நூல் அறிமுகம்: “அழைப்பொலி” – இஸ்லாம் அறிமுகத்துக்கான நவீன வாசிப்பு
  • ஆசிரியர்: மக்தூம் தாஜ்
  • அழைப்பொலி பதிப்பகம், தாங்கல், திருவொற்றியூர், சென்னை-19. தொடர்புக்கு – 98849 28787
  • விலை: ரூபாய் 40

பிறப்பது முதல் இறப்பது வரையிலான இவ்வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு சீரான, பக்கச் சார்பற்ற வழிகாட்டுதல் நிச்சயம் தேவைப்படுகின்றது. அவ்வழிகாட்டுதலில் எந்த ஏற்றத் தாழ்வுகளும், எந்தத் தவறான கண்ணோட்டங்களும் இருக்கக் கூடாது. முற்றிலும் அமைதியை விரும்புகின்ற, அமைதியை போதிக்கின்ற, சார்புகள் எதுவுமில்லாத, உலகப் பிரச்னைகளுக்கு தீர்வு கூறுகின்ற கோட்பாடாக அது இருக்க வேண்டும்.

அப்படி எல்லோருக்கும் பொருந்தக் கூடிய கோட்பாட்டினையே இந்நூல் முன் வைக்கின்றது. வெறும் இது இஸ்லாம் அறிமுகத்துக்கான நூல் மட்டுமல்ல! கடவுள் அறிமுகத்துக்கான நூலும் கூட! பிறந்தது எதற்காக என்ற கேள்விக்கு விடைச் சொல்லும் நூலும் கூட! மனித ஒற்றுமைக்கு வழி என்ன என்பதை விளக்கும் நூலும் கூட! உலக அமைதிக்கு அடித்தளம் அமைப்பது எப்படி என்று சொல்லும் நூலும் கூட! தெள்ளிய வாழ்வியல் பாதைக்கு வழிகாட்டும் நூலும் கூட!!

கடவுள் சித்தாந்தத்தை மறுக்கும் பகுத்தறிவுச் சகோதரர்களின் வாதங்களுக்கு விடை கொடுக்கும் வண்ணம், முதல் அத்தியாயமான “கடவுளும் பகுத்தறிவும்” என்கிற பகுதி அமைந்துள்ளது. ஒட்டு மொத்த மனிதச் சமூகத்தின் தொடக்க கால வரலாறு, வானம், பூமி மற்றும் அதிலுள்ளவைகளின் தோற்றம், மனிதனின் ஆதிப்பிறப்பு எப்படி உருவானது, மனிதன் தோன்றுவதற்கு முன் என்ன நடந்தது, எதற்காக பூமிக்கு வந்தோம், எங்கே செல்ல இருக்கிறோம், இப்பூவுலக வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களின் வரையறை என்ன? போன்ற பல விடை புரியா கேள்விகளுக்கு நறுக்கு தெறித்தார் போல் விடைகளை அள்ளித் தருகிறது இரண்டாவது அத்தியாயமான “நம் ஆதிகல வரலாறு” என்கிற பகுதி.

மேலும் திருக்குர்ஆன் அறிமுகம், இயேசுவின் இஸ்லாம் குறித்த உண்மையான பார்வை, நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகச் சுருக்கமாக, இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான தெள்ளிய மற்றும் சுருக்கமான விடைகள், இஸ்லாத்தின் பிரதானமான கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகள் என இஸ்லாத்தில் இதுவெல்லாம் தெரிந்திருத்தல் அவசியம் என்ற அளவுக்கு இந்நூலில் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.

தமிழறிந்த முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இந்நூலை அறிமுகப்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் திருமணம் போன்ற நிகழ்வுகளில் அழைக்கப்படும் சகோதர சமுதாயத்தவர்களுக்கு இந்நூலை பரிசாக வழங்க வேண்டும்.

இதுவரை தமிழில் வெளிவந்திருக்கின்ற இஸ்லாம் அறிமுகத்துக்கான புத்தகங்களில் இது நிச்சயம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இஸ்லாத்தை ஒரு புதிய கோணத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர்.
எண்ணங்களை தூய்மையாக்கி, முயற்சிகளை உறுதியாக்கி, ஈருலக வாழ்க்கையை செம்மையாக்கிட இணையில்லா இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *