எனது சகோதரனின் சிறு வயதில் நடந்திருந்த அந்த அனுபவத்தினை முதன்முதலில் கட்டுரையாக எழுதும் வாய்ப்பு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் எனக்கு கிடைத்திருந்தது. தமிழ்மொழியில் குறைந்தபட்சம் ஒரு திறமைச் சித்தி கிடைக்கும் என்ற உற்சாகத்தில் எழுதிவிட்டுத் திரும்பிய எனக்கு, அதை மீண்டும் மீட்டும் சந்தர்ப்பம் இரு தசாப்தங்களின்பின் கிடைத்திருக்கிறது.
அதையே எனது சகோதரன் மீட்டவேண்டுமானால், அவன் தனது ஐந்து வயதுக்குத் திரும்பவேண்டும். தனியார் ஆசுபத்திரி ஒன்றிற்குச் செல்ல ஆயத்தமாகிய தனது பெற்றாருடன் தானும் போக அடம்பிடித்த பருவம் அது. கூடவே, “நானும்” என்றழும் பருவத்தில் ஓர் இளைய சகோதரன்.
அடம்பிடித்தல்கள் தொடரவே, நானும் இளைய சகோதரியும் வீட்டில் இருக்க அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இருவரையும் சமாளிக்கும் முயற்சியில், மூத்த சகோதரனைக் காத்திருப்பறையில் இருத்திவிட்டு சிகிச்சைக்காக உள்ளே சென்ற பெற்றார், தாங்கள் திரும்பி வரும்போது, அவன் அங்கிருந்து காணாமற் போயிருப்பான் என்று நினைத்திருக்கமாட்டார்கள்
முகத்தில் எந்தக் கலவரமுமின்றி தனியாக நடந்தவன் அந்த ஆசுபத்திரிக் கட்டிடத்தைவிட்டும் வெளியேறி பிரதான பாதைக்கே வந்துவிட்டான். தன்னை வேகமாகத் தாண்டிச் செல்லும் வாகனங்களை பார்க்கிறான். கிராமத்துப் புழுதி பார்த்தவனுக்கு, அந்த நகரத்துப் பாதையும் அதன் கிடுகிடுப்பும் அவனை உற்சாகப்படுத்தின. அழைத்து வந்த பெற்றார் தன்னைத் தேடித் தவிப்பதறியாமல், அவனது பிஞ்சுப் பாதங்கள் ஒரே திசையில் நடந்துகொண்டிருந்தன.
பரந்து விரிந்த உலகில் சுதந்திரப் பறவையாவதற்கு சிறகுகள் மாத்திரம் அவனுக்கில்லை. இலக்கற்ற அவனது பயணம் எதிரே அகப்பட்ட பாலத்தினை அடைந்தது. முகத்தில் புன்னகையும் கண்களில் புதுமையும் மாறாமலேயிருந்தன.
வேகமாய் நடந்துபோன எவனோ சன சந்தடியில் தள்ளிவிட்டு நடக்கவே, சட்டெனக்கீழே விழுந்தவன், “உம்மா…” என்றழுதவாறே எழுந்தான். தாயின் அரவணைப்பு நினைவில் வந்தது. இப்போது நிலைமை மாறியது. போவோர் வருவோரின் முகங்களில் உறவுகளைத் தேடுகிறான். கண்களில் மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் மெதுவாய் ஒளியிழக்கத் தொடங்கின. இரையை விழுங்கும் முதலையைப்போல பயமும் பதட்டமும் கொஞ்சம் கொஞ்சமாய்
அவனை ஆட்கொண்டன.
எப்போதோ ஏற்பட்ட அழுகை கனிந்து பழுத்து விம்மலாகியது. எதிரே வந்தவர்களின் முகங்களில் அவன் தேடிய ஆதரவு, அவர்கள் கடந்துபோனதும் கானல்நீராகிப் பின் கண்ணீராகி, அவனது பாதங்களைத் தாங்கி நிற்கும் பாலத்தின் கீழ் பெருக்கெடுத்தோடும் பேராறுபோல ஓடியது.
காவல் நிலைய வாசலில் இரண்டாம் வரிசையில் அதிகபட்ச நம்பிக்கையுடன், காணாமற்போன மகன் பற்றி முறையிட நின்ற அவனது தந்தை உச்சந்தலையில் சுள்ளெனச் சுட்டசூரியனை அண்ணாந்து பாக்கிறார்.
“ஒரு மூதாட்டி உன் மகனை ஆசுவாசப்படுத்தி…
அழைத்துக்கொண்டு பாலத்தைக் கடந்து போகிறாள்…
இங்கே நின்று துன்பப்படாமல் அங்கே செல்…
உன் மகனைக் காண்பாய்…”
என்றொரு வார்த்தையேனும் கூறாது, அந்த தந்தையை எச்சரிப்பதற்காகவோ என்னவோ தான் மிகவும் வேலைப்பழு என்றாற்போல காட்டிக்கொண்டு உச்சிவானில் கர்வமாய் உட்கார்ந்திருந்தான் அந்தச்சூரியன்.
ஆதரவு கொடுத்து அணைத்துக் கொண்ட மூதாட்டியின் சகோதர மொழிக்குப் பரீட்சயமில்லாத போதிலும் அந்தப்பொழுது,பாலைவனத்தில் தாகித்து திரிந்தவனுக்கு குடிக்க தண்ணீர் கிடைத்தாற்போல அவனுக்குப் பெரும் ஆறுதலைக் கொடுத்தது.
தான் குழந்தையை என்ன செய்வதென்று மூதாட்டி யூகிப்பதற்குள் அவனது தாயின் பிரார்த்தனையம்புகள் வானத்தின்புறம் ஏவப்படுகின்றன. இறைவன் பதிலளிக்கிறான். மூதாட்டியின் பாதங்கள் காவல் நிலையத்தை நோக்கி நகர்கின்றன.
முச்சக்கரவண்டியின் உதவியுடன் அங்கே வந்திறங்கியவர் மற்றொரு காத்திருப்பு வரிசையில் இணைந்து கொள்கிறார். மூதாட்டியின் கரம் பிடித்தவாறே, வெயிலுக்கு ஒதுங்க முயற்சித்தவனுக்கு கிடைத்த நீண்ட நிழல், பக்கத்து வரிசையில் நின்ற அவனது தந்தையினுடையதுதான் என்றறியாமலே அந்த நிழலிடம் முழு உரிமையும் எடுத்துக் கொண்டான்.
வரிசையில் நின்றவாறே, சடுதியாக வலப்புறம் திரும்பிய தந்தை அருகில் நின்ற மகனைப் பார்த்து, மகிழ்ச்சியில் வாரியணைத்ததும், உச்சிமுகர்ந்ததும் கண்டு, தந்தையிடமே மகனை ஒப்படைத்துச் சென்றார் மறக்கமுடியாத அந்த மூதாட்டி, அதன்பின் என் தந்தையின் மனம் அடைந்த ஆறுதலுக்கு அளவேயில்லை.
பொலிஸ் நிலையத்திற்கு முறையிட வருவோர் ஒவ்வொருவராக விசாரிக்கப்படும் தோரணையில் தொடங்கி, அதை கோவையிடும் நடவடிக்கைகள் வரை சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் அதுவோர் கசப்பான சம்பவமே. அதிலும் சூழ்நிலையால் சொந்த மண்ணைவிட்டும் தனது குடும்பத்தோடு இடம்பெயர்ந்து போதியளவு அறிமுகங்களுமற்ற நிலையில் வாழ்ந்த அந்த தந்தைக்கு அது இன்னும் கசப்பு.
ஆசுபத்திரி வாசலில் நின்று மகனைக் காணோம் எனத் துடித்த பெற்றாருக்குப் பக்கபலமாயிருந்து, தேவையான உதவிகள் புரிந்த முன்பின் அறியாத சகோதரர்களின் நடவடிக்கையும், எல்லாவற்றிற்கும் மேலாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த மூதாட்டியின் புரிந்துணர்வும் தான் வசிக்கப்போகும் புதுச்சூழல் பற்றிய நம்பிக்கையையும் இன நல்லுறவின்மீதான திருப்தியையும் என் தந்தைக்கு கொடுத்திருந்தன. நல்லெண்ணங்கள் எப்போதும் ஆரோக்கியமான சூழலைத் தரக்கூடியவையே
இன்றும்கூட எனது பெற்றாரிடம் மகன் கிடைத்ததும் உள்மனதில் எவ்வாறு உணர்ந்தீர்கள் என்று கேட்டால் அல்-ஹம்துலில்லாஹ் என்பதைத் தவிர அந்த சந்தோசத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு இதுவரை வார்த்தைகளே இல்லை.
இவையெதுவும் அறியாமல் அப்போது வீட்டில் இருந்த சகோதரியையும் என்னையும் பொறுத்தவரை “போனவர்கள் திரும்பினார்கள்” என்பதை மட்டுமே உணரமுடிந்தது. ஆனால், எனது சகோதரனுக்கும் பெற்றாருக்கும் அந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்பொழுதுகள் எல்லாம் இறைவனுக்கு நன்றி கூறும் தருணங்களே.
பர்சானா றியாஸ்
//ஆசுபத்திரி வாசலில் நின்று மகனைக் காணோம் எனத் துடித்த பெற்றாருக்குப் பக்கபலமாயிருந்து, தேவையான உதவிகள் புரிந்த முன்பின் அறியாத சகோதரர்களின் நடவடிக்கையும், எல்லாவற்றிற்கும் மேலாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த மூதாட்டியின் புரிந்துணர்வும் தான் வசிக்கப்போகும் புதுச்சூழல் பற்றிய நம்பிக்கையையும் இன நல்லுறவின்மீதான திருப்தியையும் என் தந்தைக்கு கொடுத்திருந்தன. நல்லெண்ணங்கள் எப்போதும் ஆரோக்கியமான சூழலைத் தரக்கூடியவையே//
இதுதான் சகோதரி சொல்ல விழைந்த செய்தியின் கருப்பொருள் என்று நினைக்கிறேன். நல்லது.
ஜசாக்கல்லாஹ்கைறன்