மனிதன் வாழத்தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் அல்லாஹ்வால் அருளப்பட்டவையே. அல்லாஹ்வின் அருளினால் தான் அவனை மறுக்கும் இறை மறுப்பாளர்களும் இவ்வுலகில் வாழ்கின்றனர். இவ்வுலகமும் அதன் செழுமையும் மனிதர்களுக்குப் பெறுமதிமிக்கதாய் தெரிந்தாலும் அல்லாஹ்விடத்தில் இவ்வுலகம் பெருமதியற்றதே என்பதை கீழ்வரும் நபி மொழியிலிருந்து விளங்கலாம்.
سنن الترمذي-2320
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ كَانَتِ الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ اللهِ جَنَاحَ بَعُوضَةٍ مَا سَقَى كَافِرًا مِنْهَا شَرْبَةَ مَاء.
ஒரு கொசுவின் இறக்கை அளவிற்கு அல்லாஹ்விடத்தில் இவ்வுலகம் பெறுமதி வாய்ந்ததாய் இருந்திருந்தால், ஒரு இறைமறுப்பாளனுக்கு அல்லாஹ் இவ்வுலகில் ஒரு சொட்டுத்தண்ணீரைப் கூட புகட்டியிருக்கமாட்டான். (திர்மதி 2320)
நீர், காற்று, பசுமை போன்றன மனித வாழ்வுக்கு இன்றியமையாவைகளாகும். இவற்றின் இழப்பு, மாசு, மனிதவாழ்வைக் கேள்விக்குறியாக்கி விட்டது. அதனால்தான் ‘இயற்கையைப் பாதுகாப்போம்‘ ‘மரங்களை நடுவோம்‘ ‘வனங்களை உருவாக்குவோம்‘ என்றெல்லாம் சர்வதேச அளவில் விழிப்புணர்வு வலைகள் ஆர்பரித்துள்ளன.
கால நிலை, தட்ப வெட்ப மாற்றங்கள் போன்ற அல்லாஹ்வின் அருட் கொடைகளை மனிதனால் உருவாக்க முடியாது. இவைகளில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்து, குறைவு ஏற்பட்ட போதுதான் இவற்றின் அருமையை நாம் உணர்கின்றோம்.
எத்தனையோ அருட்கொடைகள், அவைதான் நமது வாழ்வின் அமைதியை, சந்தோசத்தைத் தீர்மானிக்கும் காரணிகள், ஆனால் இவற்றை அல்லாஹ்வின் அருட்கொடைகளாக நாம் பார்ப்பதில்லை. பாதுகாப்பு, அமைதி, சமாதானம், சகவாழ்வு போன்றவைகளும் அல்லாஹ்வின் அருட்கொடைதான் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருப்போம்?? அதற்காக எப்போதெல்லாம் அல்லாஹ்வைப் புகழ்ந்திருப்போம்??
இன்றைய உலகம் பசுமைக்காய் ஏங்குவதைப் போன்று, நீருக்காய் வாடுவதைப் போன்று பாதுகாப்புக்காய் பரிதவித்துக்கொண்டிருக்கின்றது என்பதை நிதர்சன உண்மைகள் புலப்படுத்தியுள்ளன.
உலகையே நீங்கள் பெறவேண்டுமா?
سنن الترمذي 2346
عَنْ سَلَمَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ مِحْصَنٍ الخَطْمِيِّ، عَنْ أَبِيهِ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا
தனது வீட்டில் பாதுகாப்பாக இருந்த நிலையிலும், தனது உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையிலும், அன்றைய நாளுக்குப் போதுமான உணவைப் பெற்றிருந்த நிலையிலும் யார் ஒரு காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் உலகையே பெற்றவர் போன்றவர் ஆவார். (திர்மிதி)
பாதுகாப்பாக தனது வீட்டில் வசிப்பதற்கான சூழல், உடல் ஆரோக்கியம், ஒரு நாளைக்குத் தேவையான உணவு ஆகிய முக்கியமான மூன்று அருட்கொடைகளின் அவசியத்தையும், பெறுமதியையும் நபியவர்கள் சிறப்பாக சுருக்கமாக மேலுள்ள ஹதீஸில் விளக்கியிருக்கின்றார்கள். வீடு வாசல், சொத்துக்கள் ஒருவருக்கிருந்தாலும் அவற்றை அனுபவிப்பதற்கு அமைதியான, பாதுகாப்பான சூழல் அவசியமாகும். உள்நாட்டுப் போர், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆக அல்லாஹ் அருளிய இவ்வருட்கொடைகளுக்காக நாள்தோறும் அவனுக்கு நன்றி செலுத்துவோமாக!
இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டது
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ (البقرة -126)
இறைவா இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக (அல்குர்ஆன் 2:126)
மக்கமாநகரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குமாறு அல்லாஹ்விடம் பிராத்தித்த இப்றாஹீம் (அலை) அவர்கள், அதற்கடுத்தபடியாகத்தான் மக்காவாசிகளுக்கு கனிவர்கங்களை வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டியுள்ளார்கள். இதிலிருந்து மனித வாழ்வுக்குப் பாதுகாப்பான சூழலின் அவசியத்தை அல்குர்ஆன் கூறவருவதைப் புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறும் தகுதியுடையவர்கள் யார்?
الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ (الأنعام – 82)
நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர். (அல்குர்ஆன் 6:82)
மேலுள்ள திருமறை வசனத்தில் ‘அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது’ எனக்கூறப்பட்டுள்ளது. இங்கு அநீதி என்ற வார்த்தை, அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதைக் குறிக்கின்றது என்பதை நபியவர்கள் ஹதீஸில் விளக்கியிருக்கிறார்கள். ஆகவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது மிகப்பெரும் பாவமாக இருக்கின்ற அதேவேளை, அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளில் அமைதியின்மையும் ஒன்றென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்போது அமைதிகுலைந்து, பாதுகாப்பு அச்சறுத்தல் உண்டாகும்?
وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ (النحل 112)
‘ஓர் ஊரை அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகின்றான். அது நிம்மதியுடனும், அமைதியுடனும் இருந்தது. ஓவ்வொரு இடத்திலிருந்தும் அவ்வூருக்குரிய உணவு தாரளமாக வந்து சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது. எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவ்வூருக்கு அணிவித்தான்‘. (அல்குர்ஆன் 16:112)
அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி செலுத்தாமல், நன்றி மறந்து, பாவிகளாக வாழும் போது பசியும், பயமும் மனிதர்களை ஆட்கொள்ளும். இந்தப் பிரபஞ்சப் பரிபாலனத்தில் இது அல்லாஹ்வின் விதியாகும். இதில் அவனால் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூர்ந்து, அவற்றில் குறை காணாது, பாவம் செய்யாமல், நாள்தோறும் அவனுக்கு நன்றி செலுத்துவது தான் மனநிறைவான சகவாழ்வை ஏற்படுத்தும் என்பது தான் மேலுள்ள திருமறை வசனம் நமக்கு சொல்லித்தரும் பாடமாகும்.
குறைஷிகளுக்கு அல்லாஹ் கூறியது….
لِإِيلَافِ قُرَيْشٍ ، إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ، فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ ، الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ ، (سورة قريش)
‘குறைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். பசியின் போது அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்‘ (அல்குர்ஆன் 106:1-4)
உண்பதற்குத் தேவையான உணவுடன், பயமற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்து மகிழ்ச்சியான வாழ்வைத் தந்தற்காக தன்னை வணங்குமாறு அல்லாஹ் குறைஷிகளுக்குப் பணித்தன் மூலமாக அமைதியான சந்தோசமான வாழ்வின் இலக்கணங்களையும், அவற்றை நிர்ணயிப்பது அல்லாஹ் ஒருவனே என்பதையும் விளங்கலாம்.
ஆடம்பரங்களையே அருட்கொடைகளாகப் பார்த்துப் பழகிப்போன நாம் பாதுகாப்பு, பசியற்ற வாழ்வு போன்ற பேரருட்களை மறந்து விட்டோம். அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறப்பது, குறை காண்பது, பாவிகளாய் வாழ்வது போன்றன மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அவனது கட்டளைகளை மாறு செய்யாமல் முடிந்த வரை பின்பற்றும் நல்லடியார்களாய் வாழப் பழகிக் கொள்வோம்.