ஏன் நபியவர்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாக பாதுகாப்புக் கோரினார்கள்?
ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ;
“اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ”
“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபில் கப்றி, வஅஊது பிக மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் மஃஸமி வல்மஃக்ரமி”
பொருள் : (இறைவா! உன்னிடம் நான் மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று பிரார்த்திப்பார்கள்.
(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன்படுவதிலிருந்து (இவ்வளவு) அதிகமாகப் பாதுகாப்புக் கோரக் காரணம் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன்படும்போது;
1- பொய் பேசுகிறான்;
2- வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள். (ஆதாரம் : முஸ்லிம்-1031)
மேற்கூறப்பட்ட ஹதீஸில் கூறப்படும் கடனாலியிடமிருந்து வெளிப்படும் இரண்டு பண்புகளும் (முனாபிக்) நயவஞ்சகனுடைய பண்புகளாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
ஒரு நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று;
1- பேசினால் பொய் பேசுவான்.
2- வாக்களித்தால் மாறு செய்வான்.
3- நம்பினால் துரோகம் செய்வான். (ஆதாரம் : புஹாரி-33)
எனவே, எங்களில் ஒருவர் கடன்படுகின்றபோது தங்களை அறியாமலே (ஒருசிலரைத் தவிர) நயவஞ்சகத்தன்மை உருவாகின்றது.
(இந்த) நயவஞ்சகர்களின் மறுமையின் நிலைப்பாடைப் பற்றி அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்;
اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًا (النساء : 145)
“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.” (அந்நிஸா-4 :145)
மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர. (ஆதாரம் : முஸ்லிம்-3832)
எனவே, நாமும் நபியவர்கள் பிரார்த்தனை செய்ததைப்போன்று கடன்படுவதிலிருந்து பாதுகாப்புக்கோரி அதிகம் பிரார்த்தனை செய்வோமாக!!
அல்லாஹுத்தஆலா நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து, மேலான கண்ணியமான சுவனமான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தைத் தந்தருள்வானாக.
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.
தொகுப்பு : றஸீன் அக்பா் (மதனி)
அழைப்பாளன் : தபூக் அழைப்பு நிலையம்- சவுதி அரேபியா.