அண்டை வீட்டாருடன் நடந்து கொள்வது.
அண்டை வீட்டாருக்குரிய உரிமைகளையும் ஒழுக்கங்களையும் ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை முழுமையாகப் பேணி நடப்பது ஒவ்வொரு அண்டை வீட்டாரின் மீதும் கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டைவீட்டார், அந்நியரான அண்டை வீட்டார் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். (4:36)
அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணுமளவிற்கு. அண்டை வீட்டார் பற்றி ஜிப்ரீல்(அலை) என்னிடம் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வையும் மறுமையயும் நம்பிக்கை கொண்டவர் தன் அண்டை வீட்டாரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ்(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.
அண்டை வீட்டாரின் கடமைகள்
1. சொல்லால், செயலால் அவருக்கு தொல்லை தராமலிருப்பது. ‘அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டவர் தன் அண்டை வீட்டாரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ்(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்
அவன் முஃமினல்லன்! அவன் முஃமினல்லன்! என நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறியபோது, ‘அல்லாஹ்வின் தூதரே! யார் அவன்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள்,’எவனுடைய தொல்லைகளிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பாக இல்லையோ அவனே!’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), புகாரி
2. அவருக்கு நல்லுபகாரம் செய்வது. அதாவது அவருக்கு உதவி தேவைப்பட்டால் உதவி செய்வது, ஒத்துழைப்பது, நோயுற்றால் நோய் விசாரிக்கச் செல்வது, சந்தோஷம் ஏற்பட்டால் வாழ்த்துவது, துன்பம் ஏற்பட்டால் ஆறுதல் சொல்வது, தேவை ஏற்பட்டால் உதவுவது, அவருக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்வது, அவரிடமும் அவரின் குழந்தைகளிடமும் மென்மையாகப் பேசுவது, அவருடைய இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் விஷயங்களில் அவருக்கு வழிகாட்டுவது, அவருடைய, தவறுகளை மன்னிப்பது, அவருடைய அந்தரங்கங்களைத் துருவிப் பார்க்காமல் இருப்பது, அவர் வீடு கட்டுவதில் அல்லது பாதை அமைப்பதில் அவருக்கு நெருக்கடி கொடுக்காமலிருப்பது, அவருடைய வீட்டுக்கு முன்னால் குப்பைகளை போடுவதன் மூலம் தொந்தரவு கொடுக்காமலிருப்பது, இவையனைத்தும் நமக்கு ஏவப்பட்ட நல்லுபகாரங்களாகும்.
3. நன்மை செய்வதன் மூலம் அவரைக் கண்ணியப்படுத்துவது. ‘முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்குக் கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக நினைத்து கொடுக்காமலிருக்க வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக்கொண்டிருக்கும் எலும்புத் துண்டாயினும் சரியே! என நபி(ஸல்) கூறினர். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) புகாரி, முஸ்லிம்
அபூதரே! நீ குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்தி உன் அண்டைவீட்டாரையும் கவனித்துக்கொள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரு அண்டை வீட்டார் உள்ளனர். நான் யாருக்கு முதலில் அன்பளிப்பு கொடுக்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் யாருடைய வீட்டு வாசல் உனக்கு மிக அருகிலிள்ளதோ அவருக்குக் கொடு என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி.
4. அவரை மதிப்பது, கண்ணியப்படுத்துவது தன் எல்லைச்சுவரில் ஒரு குச்சியை நடுவதைக் கூட தடுக்காமலிருப்பது. அவருடைய இடத்துடன் சேர்ந்திருக்கிற இடத்தை வாடகைக்கு வீடுவதாக இருந்தால் அல்லது விற்பதாக இருந்தால் அவரிடம் ஆலோசிக்காமல், தெரிவிக்காமல் செய்யக் கூடாது
ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: அண்டை வீட்டுக்காரர் உங்கள்(எல்லைச்) சுவரில் மரக்குச்சியை நடுவதை யாரும் ஆட்சேபிக்க வேண்டாம். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்:புகாரி, முஸ்லிம்
ஒருவரின் தோட்டத்திற்கு பங்குதாரரோ அல்லது அண்டை வீட்டரோ இருந்தால் அவரிடம் தெரிவிக்காமல் அவர் அதை விற்க வேண்டாம். நபிமொழி (ஹாகிம்)
நூல்: முஸ்லிமின் வழிமுறை