தன் மடிபூத்த பூவுக்கும் வேண்டாம் இவ்வேதனை என்றென் தாய் பிரார்த்தித்தாளோ?
பச்சை வீட்டில் துளிர்த்தும் நாமின்னும் பூக்கவேயில்லை அன்பே!
தொட்டில் வாசனையற்ற மணவாழ்வு நம்மைச் சூழ்ந்து சுவாசிக்கின்றது
புறக்கணிக்கும் திங்கள்களால் திராணியற்றுக் கிடக்கிறது என் தாய்மை
மூவாறு வருடங்கள் நம்மைக் கடந்துபோன பொழுதுகள் சாட்சி
நம் வாசலில் கொட்டித் துளாவப்பட்டிருக்கும் இந்த வெறுமை சாட்சி
வைத்தியசாலையில் என் வயிற்றைக் கீறிய கத்திமுனையும் சாட்சி
தினம் புன்னகைகள் வாங்கி வருகிறாய் என்னைச் சமாதானம் செய்ய
உன் புன்னகையில் வழுக்கியே என் நாற்-பத்து ஆண்டுகள்
நகர்ந்ததை அறிவாயா?
நம் முஹப்பத்தில் முறிவு வந்ததில்லை முறுகல் சிறிதும் இல்லை என்பதற்காய்,
நம் “கத்ர்” இதுதான் என கண்டும் காணாதிருப்போம் என்கிறாயா?
உன் விதியின் முன்னால் நீ நிராயுதபாணி என்கிறாயா?
நிதானித்துப்பார் நமக்கான ஆயுதங்கள் நம் கையில்தான் இருக்கின்றன
நமக்காக உறவுகளால் விடுக்கப்பட்ட மனுக்கள் கஃபாவில் கனிந்து காத்திருக்கலாம்
நமது முறையீடுகள் படைத்தவனிடம் மௌனித்துக் கிடக்கலாம்
அவை யாவும் பேசுவதற்கு மஹ்ஷர் வரை அவகாசம் உண்டு அன்பே!
முதலாம் வானுக்கு அனுப்பப்பட்ட நம் நடுநிசிப் பிரார்த்தனைகள் இன்னும் உயிர் வாழ்கின்றன
அவனிடத்தில் ஒப்படைத்த நேர்ச்சைக் குவியல்கள் இன்னும் காத்திருக்கின்றன
மறைவானதையறிந்த இறைவன்தான் நமக்கான பரிசையும் வைத்திருக்கிறான்
அன்னை ஆயிஷா(றழி) நுகர்ந்திராத பரிசும் நபி இப்றாஹீம்(அலை) இரந்து பெற்ற பரிசும்கூட
தத்தெடுத்தலை நிபந்தனையிட்டு பக்குவம் சொன்ன தத்துவ மார்க்கம் இது
“தவக்குலாலும்” “ஆகிறத்தாலும்” நன்மாராயம் நவின்ற நன்னெறி மார்க்கம் இது
உன் உலகம் ஒன்றும் எனக்குள் சுருங்கிவிட்ட ஒன்றல்ல அன்பே!
என் இயலாமையை உன் புன்னகைக்குள் மறைக்க நான் விரும்பவில்லை
பரந்த வானில் மேகமாகு. விரிக்கப்பட்ட பூமியில் உன்னைத் தேடு
தொடங்கிய பந்தம் நம்முடனையே முடியப்போகும் கசப்பினை உணர்
தஜ்ஜாலை வீழ்த்தப் போகும் ஈசா நபியை உன் வம்சமும் பார்க்க வேண்டாமா?
இமாம் மஹ்தி (அலை) உடன் உன் கொள்ளுப் பேரனும் அணி சேர வேண்டாமா?
இவ்வளவுதான் வாழ்க்கை என்று உன்னை யார் வரையறுத்தார் அன்பே!
அகங்களால் ஒன்றிப்போன நம் இருப்பை புறங்களால் நிரூபிக்க வழியா இல்லை
மஹ்ஷர் வெளியின் விசாரணை இருவருக்குமானதல்ல அன்பே!
அவன் தரமறுத்த குழந்தைப் பேறு மறுமையில் எனக்கு மட்டும் பெரும் பேறாகலாம்
அதேவேளை, மௌனித்துப் போன உன் சந்ததி வளம் பற்றி நீ கூட விசாரிக்கப்படலாம்
இவள்தான் காரணம் என அங்கே நீ என்னைக் கை நீட்டலாம்
வேண்டாம் அன்பே! அங்கேயுமோர் கைசேதம் எனக்கு வேண்டாம்
என்னையும் தாண்டித் திறந்து கிடக்கின்றது உனக்கான உலகம்
என்வாசல் தாண்டிக் காத்துக் கிடக்கிறது ஆகுமாக்கப்பட்ட வாசல்கள்
பொய்யாக மூடிய கண்கள்திற! உனக்காய் இவள் விட்ட தூது படி!
பதிலிடு!
இப்படிக்கு,
பர்சானா றியாஸ்
மா’ஷா அல்லாஹ்.
தாய்மையின் ஏக்கமுடன் வம்சம் தொடர வழி தேடும் விசுவாசியின் குரல்.
உடலநலக்குறைவால் நோயுற்ற பெண்னொருவர், காதல் கணவனை கவனிக்க ஆள் வேண்டும் என்பதாக கணவனை வற்புறுத்தி அவரே பெண்பார்த்து திருமணம் செய்து வைத்தார். பிறகு அவரே சக்களத்தி சண்டைக்கு காரணமாயிருந்தார்.
அதுபோன்றல்லாமல், தூதுவிட்டவர் நல்லதொரு உண்மை விசுவாசியாக இருக்க வேண்டும்.
சந்தேகமே இல்லை. இவர் தைரியமானவர்தான்.