“(லாஇலாஹ இல்லல்லாஹ் எனும்) தூய வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகின்றான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (அது) ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் (பூமியில்) ஆழப் பதிந்ததாகவும், அதன் கிளை வானளாவியதாகவும் இருக்கின்றது.”
“அது தனது இரட்சகனின் அனுமதி கொண்டு, எல்லா வேளைகளிலும் அதன் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது. மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அல்லாஹ் அவர்களுக்கு உதாரணங்களைக் கூறுகின்றான்.”
“(நிராகரிப்பு எனும்) கெட்ட வார்த்தைக்கு உதாரணம், கெட்ட மரத்தைப் போன்றதாகும். அது பூமியின் மேற்பகுதியில் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது. அதற்கு உறுதியான நிலை இல்லை.”
அல் குர்ஆன் 14:24-26
அல்லாஹ் அல் குர்ஆனில் கூறிய அழகிய உதாரணங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த வசனத்தில் அல்லாஹ் தூய வார்த்தை “கலிமா தையிபா” என்று குறிப்பிடுவது “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனும் வார்த்தையாகும். இவ்வார்த்தையை மொழிந்தவர்களின் அமல்களையும் அதன் மூலம் கிடைக்கும் மறுமைப் பயன்களையும் இவ்வசனம் தெளிவாகவே எடுத்துக் கூறுவதுடன் கலிமா தையிபா வை மொழியாதவர்களின் இம்மை, மறுமை இரண்டும் பயனற்றுப் போவதை உறுதியற்ற மரத்திற்கு உதாரணமாகவும் அல்லாஹ் இவ்வசனங்களின் மூலம் எடுத்துக் கூறுகின்றான்.
நபி(ச) அவர்கள் கலிமா தய்யிபா வை மொழிந்த முஃமின்களுக்கு அழகிய ஒரு உதாரணத்தைக் கூறினார்கள்.
“மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?” என்று நபி(ச) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் “இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்” என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “பேரீச்சை மரம்” என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(வ)
நூல்: புகாரி 61
அன்றைய ஜாஹிலிய்யாக் கால கட்டத்தில் உணவு, வீடுகளின் தூண்கள், வீட்டு மஸ்ஜிதுகளின் கூரைகள் அனைத்திற்கும் பயன்பட்டது பேரீச்சம் மரமே! இவ்வாறு பயன் நிறைந்த பேரீச்சம் மரத்தையே நபி(ச) அவர்கள் கலிமா தையிபா வை மொழிந்த முஃமீன்களுக்கு உதாரணமாகக் கூறியுள்ளார்கள். இதன் மூலம் லாஇலாஹ இல்லல்லாஹ்வின் பயன்கள் தெளிவாகவே உணர்த்தப்படுகின்றன. அந்த வகையில் கலிமா தையிபாவின் பயன்களில் சில பின்வருமாறு.
- கலிமா தையிபா-வை மொழிந்தவருக்கு சுவர்க்கம் உரிமையாக்கப்படுகின்றது
“யார் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினாரோ அவர் சுவனம் நுழைவார்.”
அறிவிப்பவர்: உஸ்மான் (வ) | நூல்: முஸ்லிம் 5511
- இக்கலிமாவை மொழிந்தவர்களுக்கு நரகம் ஹராமாக்கப்படுகின்றது
“ஒரே வாகனத்தின் மீது முஆது(வ) நபி(ச) அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபி(ச) அவர்கள் ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். ‘இதோ உள்ளேன் இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்’ என்று முஆத்(வ) கூறினார். ‘முஆதே!’ என மீண்டும் நபி(ச) அவர்கள் அழைத்தார்கள். ‘இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்’ என மீண்டும் முஆத்(வ) கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறப்பட்டது. பிறகு ‘தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விடமாட்டேன்’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!’ என்று முஆத் கேட்டதற்கு ‘அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள்’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்” என அனஸ் இப்னு மாலிக்(வ) அறிவித்தார்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காக தம் மரணத் தருவாயில்தான் இந்த ஹதீஸை முஆத்(வ) அறிவித்திருக்கிறார்கள்.(புகாரி: 128)
- ஈமானின் கிளைகளில் மிகவும் மேலானது கலிமா தையிபா ஆகும்
‘ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளை உடையதாகும். அதில் சிறந்தது, ‘லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று கூறுவதாகும்”
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
நூல்: முஸ்லிம் – 35-58
- நபி(ச) அவர்களின் ஷபாஅத்திற்கு மிகவும் தகுதியானவராக கலிமா தையிபாவை மொழிந்தவர் மாறுகின்றார்.
‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?’ என்று நபி(ச) அவர்களிடம் நான் கேட்ட போது, ‘அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேரவா எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்’ என்று நபி(ச) அவர்கள் கூறிவிட்டு, ‘மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து – தூய்மையான எண்ணத்துடன் ‘வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்’ என்று கூறினார்கள்.” என அபூ ஹுரைரா(வ) அறிவித்தார்.
(புகாரி: 99)
எனவே, கலிமா தையிபாவின் பூரண பயன்களைப் பெற்றுக் கொள்ள அதை மொழிவது மாத்திரமல்லாமல் எமது ஈமான் பூரணமடைய அதை வாழ்வின் உறுதியாய் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவோமாக!
-ஐ. ஹுர்ரதுன்னிஸா-