அல்லாஹ் கூறுகிறான்;
ونحن أقرب إليه من حبل الوريد
“இன்னும் பிடரி நரம்பை விடவும் அவனுக்கு மிக சமீபமாகவே நாம் இருக்கிறோம்”
(ஸூரதுல் காஃப் 50 : 16)
இந்த திருமறை வசனத்தை தவறான கண்ணோட்டத்தில் புரிந்த வழிகேடர்கள் இந்த வசனம் எல்லாம் அவனே என்ற சித்தாந்தத்தையே சொல்லுகின்றது என்று தவறான விளக்கம் கொடுக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்த திருமறை வசனம் இவர்கள் சொல்லக்கூடிய இந்த இணைவைப்பு சார்ந்த விடயத்தை தெளிவுபடுத்தவில்லை.
இந்த திருமறை வசனத்திற்கு இமாம் தபறீ ரஹிமகுல்லாஹ் அவர்கள் விளக்கம் சொல்லும் போது,
“உங்களுடைய உயிரைக் கைப்பற்றக் கூடிய எம்முடைய தூதர்கள் உமக்கு மிகவும் நெருக்கமாவே இருக்கிறார்கள்” என்று விளக்கம் சொல்லி இருக்கிறார்கள்.
(இணையதளத்தில் quran.ksu.edu.sa>tabary எனும் பக்கத்தில்.)
இது போன்று தப்ஸீர் கலையுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இமாம்களும் ஒவ்வொரு விதமான விளக்கங்களை சொல்லி இருந்தாலும் அவ்விளக்கங்களிலிருந்து நாம் பெறுகின்ற விளக்கங்களை சுருக்கமாக சொல்லலாமென நினைக்கிறேன்.
▪இவ்வழிகேடர்கள் தமது கொள்கைக்கு ஆதாரமாக சொல்லக்கூடிய இந்த வசனத்தை அதனுடைய முழுமையான வசனத்துடன் ஒப்பு நோக்கி ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்கின்ற போது ,
அல்லாஹ் கூறுகிறான்,
“மேலும் நிச்சயமாக நாம் தான் மனிதனைப் படைத்தோம். அவன் மனம் எதை ஊசலாடச் செய்கிறது என்பதையும் நாம் நன்கறிவோம் . இன்னும் நாம் பிடரி நரம்பை விடவும் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம்.”
(ஸூரதுல் காஃப்: 16)
இந்த திருமறை வசனத்தில் அல்லாஹ்வுத்தஆலா மனித உள்ளங்களில் ஏற்படுகின்ற தடுமாற்றங்களை சொல்லி விட்டு இந்த ஒவ்வொரு தடுமாற்றங்களை நாம் நன்கறிவோம் என்ற செயலை வர்ணிப்பதற்காகத்தான் இந்த தொடர்பினை சொல்லிக் காட்டியிருக்கிறான்.
எப்படி மனிதனுடைய பிடரி நரம்பு அவனுக்கு மிக அண்மையில் இருக்கின்றதோ அதே போன்றுதான் மனிதன் செய்யக்கூடிய காரியங்களையும் அவனுக்கு ஏற்படக்கூடிய தடுமாற்றங்களையும் நாம் பக்கத்தில் இருந்தால் எப்படி நுணுக்கமாக அவதானிக்க முடியுமோ அதே போன்றுதான் அல்லாஹ்வும் அர்ஷுக்கு அப்பால் இருத்தும் நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றான்.
▪அதே போன்று யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வுத்தஆலா மனிதனது நாவு மொழியக்கூடிய ஒவ்வொரு விடயங்களையும் எழுதிக் கொள்வதற்காக வேண்டி மலக்குமார்களை பொறுப்பாக நியமித்திருப்பதாக திருமறையில் ஸூரதுல் காஃபில் வாசிக்க முடிகின்றது. எனவேதான் பிடரி நரம்பு மனிதனுக்கு எப்படி நெருக்கமானதாக இருக்கிறதோ அதை விடவும் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்ற மலக்குகளும் நுணுக்கமாக கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் மனித நாவு இரகசியமாக பேசக்கூடிய செய்திகளையும் பகிரங்கமாக பேசக்கூடிய செய்திகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்திகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஆகவே சுருக்கமாக சொல்வதாக இருந்தால்,
அல்லாஹ் இந்த வசனத்தின் மூலமாக எல்லாம் அவனே என்ற வழிகெட்ட சிந்தனையை சொல்லவில்லை. மாற்றமாக அர்ஷுக்கு அப்பால் உயர்ந்து விட்ட அல்லாஹ் மனிதனை எப்படி நுணுக்கமாக அவதானிக்கிறான் என்பதை புரிய வைப்பதற்காகவே இப்படி கூறியிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரையும் அவனுக்கு இணையாக ஆக்கக்கூடிய எல்லாக் காரியங்களிலிருந்தும் பாதுகாப்பானாக!
தொகுப்பு…
பர்ஹான் அஹமட் ஸலபி