وهو معكم اينما كنتم
“நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனேயே இருக்கிறான்” -57:04
அத்வைதம் பேசக்கூடிய வழிகேடர்கள் தம்முடைய இந்த வழிகெட்ட சிந்தனையை நிறுவுவதற்காக இத்திருமறை வசனத்தையும் தம்முடைய கையில் எடுத்து தவறான விளக்கம் கொடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
உண்மையில் இந்த வசனம் அத்வைதத்தை போதிக்காமல் அல்லாஹ்வுடைய கண்காணிப்பைப் பற்றி பேசக்கூடிய திருமறை வசனமாகும்.
சகல வல்லமைகளையும் உடைய அல்லாஹ்வுத்தஆலா மனிதனது எல்லா செயற்பாடுகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கிருக்கிறான். அந்தடிப்படையில் மேற்கூறப்பட்ட இந்த வசனமானது ஒரு தனி வசனம் கிடையாது. இதனுடைய முழுமையான அமைப்பை முதலாவது அவதானிக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்,
“அவன்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்து பின் (தன் தகுதிக்கேற்றவாறு) அர்ஷின் மீதானான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளிவருவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். மேலும் நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனேயே இருக்கிறான். இன்னும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்.” –57:04
அல்லாஹ் இந்த வசனத்தில் முக்கியமான சில விடயங்களை சொல்லித் தருகிறான். அந்தடிப்படையில் இந்த வசனம் சொல்லக்கூடிய முக்கியமான விடயங்களாக,
▪அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியை படைத்தவன்.
▪அவைகளை படைத்து விட்டு அர்ஷுக்கு அப்பால் அவனுடைய தகுதிக்கேற்ப உயர்ந்துவிட்டான்.
▪எல்லா விடயங்களையும் நன்கறியக்கூடியவனாக இருக்கிறான்.
▪நாம் எங்கேதான் இருந்தாலும் அந்த இடங்களில் எம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான்.
▪நாம் செய்பவைகளை பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
என்பவைகளை அடையாளப்படுத்தலாம்.
மேற்கூறப்பட்ட ஐந்து விடயங்களும் அல்லாஹ்வுடைய வல்லமைகளை சொல்லித் தருவதுடன் அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் அவ்வசனத்தின் ஆரம்ப பகுதி சொல்லித் தருகிறது.
அந்தடிப்படையில் அர்ஷுக்கு அப்பால் உயர்ந்து விட்ட இறைவன் மக்களுக்கு பக்கத்தில் இருந்தால் எப்படி எல்லா செய்திகளையும் அறிய முடியுமோ அதே போன்று வானத்திலிருந்து அறிந்து கொண்டிருக்கிறான் என்ற விளக்கத்தை சொல்வதற்காகவே நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடனேயே இருக்கிறான் என்று எளிதில் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
இதனைப் புரிவதற்கு இன்னுமொரு உதாரணத்தையும் சொல்லி விளங்கப்படுத்தலாமென நினைக்கிறேன்.
ஒரு முகாமையாளர் ஒரு காரியாலயம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். அந்த முகாமையாளர் காரியாலய வளாகத்தை சுற்றி cctv கெமராவினை பொறுத்தி விட்டு அந்த காரியாலயத்தில் பணிபுரியக்கூடிய நிர்வாகிகளைப் பார்த்து நான் உங்களுடனேயே இந்த வேலை நேரங்களில் இருந்து கொண்டிருக்கின்றேன் என்று கூறுகிறார்.
இம்முகாமையாளர் இப்படி கூறியதற்காக அம்முகாமையாளர் எல்லாருக்கும் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார் என்று புரிவது தவறான புரிதலாகும்.
மாற்றமாக அந்த cctv மூலம் எல்லாவற்றையும் கண்காணிப்பதன் மூலம் எல்லோருடனும் இருக்கிறார் என்றே விளங்க முடியும்.
அல்லாஹ்வுத்தஆலா க்கு மக்களை அவதானிப்பதற்கு cctv என்ற ஒன்றுமே தேவை கிடையாது. அவன் யாவற்றையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறான். cctv மூலம் அவை பொறுத்தப்பட்ட இடங்களை மாத்திரம்தான் அவதானிக்க முடியும்.
இவ்வாறு எல்லாவற்றையும் கண்காணிக்கக்கூடிய அல்லாஹ் அர்ஷுக்கு அப்பால் இருந்து ஒவ்வொரு மனிதர்களையும் கண்காணித்து கொண்டு “நான் உங்களுடனேயே இருக்கிறேன்” என்று சொல்வதானது அல்லாஹ் எம் ஒவ்வொருவருடனும்தான் இருக்கிறான் என்று புரிவது தவறான புரிதலாகும். மாற்றமாக எம் ஒவ்வொருவரையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறான் என்பதே சரியான புரிதலாகும்.
ஒரு சமயம் ஒரு மனிதர் இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்களிடம் வந்து இந்த வசனத்தை கூறிவிட்டு அல்லாஹ் எம்முடன் இருப்பால் இருக்கின்றானா? அல்லது கண்காணிப்பால் இருக்கின்றானா? என்று கேட்ட போது, அதற்கு இமாமவர்கள் அறிவுபூர்வமான முறையில் பின்வருமாறு பதிலளித்தார்கள்.
“நாங்கல்லாம், அல்லாஹ் எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிறான் என்று அறிந்திருக்கிறோம். நிச்சயமாக அல்லாஹ் அர்ஷுக்கு அப்பால் உயர்ந்து விட்டான். ஒருவர் மேற்சொன்ன வசனத்தை கேட்டு விட்டு அல்லாஹ் பூமியில் எம்முடனேயே இருக்கிறான் என்று புரிவது கூடாது. முஃமின்களில் சிறந்த புத்திசாலிகள் இப்படி கற்பனை செய்யவும் மாட்டான். என்றாலும் அர்ஷுக்கு அப்பால் இருந்து எம்மை அவதானித்து கொண்டிருக்கிறான் என்றே புரிய முடியும்.
இமாமவர்கள் செல்கிறார்கள்:-
அரபிகள் பின்வருமாறு சொல்வார்கள்: நாங்கள் பூமியில் சுற்றித்திரிகிறோம். சந்திரனும் எம்முடனேயே வந்து கொண்டிருக்கின்றது.
இதற்காக சந்திரன் எம் ஒவ்வொருடனுமே இருப்பது கிடையாது. சந்திரனின் இடம் வானமாகும். அல்லாஹ்வும் படைப்பினங்களுடன் இருக்கிறான். என்றாலும் அவன் வானத்திலேயே இருக்கிறான். எனவே யார் அல்லாஹ் படைப்பினங்களுடன் இருக்கிறான் என்று ஜஹமிய்யாக்கள் சொன்னது போன்று வாதாடுகிறாரோ அவரை நான் காபிராகவே பார்க்கிறேன். அவர் அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்ய வேண்டும். அல்லாஹ்வுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தை கொடுக்க வேண்டும்.
(சுருக்கமாக :-மஜ்மூஃ பதாவா : முதலாவது பாகம்- அஸ்மாஉ வஸ்ஸிபாத் என்ற பாடத்திலிருந்து)
எனவே என் அன்புள்ள இஸ்லாமிய உறவுகளே!
எல்லாம் அவனே என்ற சித்தாந்தம் மக்களை இணைவைப்பின் பக்கம் கொண்டு செல்வதாக இருக்கிறது. இணைவைப்பு மக்களை நிரந்தர நரகின் பக்கம் அழைத்து செல்கின்றது. எல்லாம் வல்ல இறைவன் எம் அனைவரையும் இந்த தவறான கொள்கைகளிலிருந்து பாதுகாப்பானாக!
தொகுப்பு…
பர்ஹான் அஹமட் ஸலபி
01/02/2019