Featured Posts

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள் என்றால் யார் என்று தெரியுமா? அவர்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் எனத் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம். கிடங்கு என்பது நெருப்புக் கிடங்காகும். அல்குர்ஆனில் சூறா ‘அல்புரூஜ் என்றறொரு (85) அத்தியாயம் உள்ளது. அதில் அல்லாஹுத்தஆலா இந்த வரலாற்றை சுருக்கமாகக் கூறுகின்றான். நபி(ஸல்) அவர்கள் அந்த சம்பவத்தை விவரித்துக் கூறுகின்றார்கள். வாருங்கள் அந்த வரலாற்றை வாசிப்போம்.

முன் ஒரு காலத்தில் கொடுங்கோல் அரசன் (ஒரு ஊரை அடக்கி ஆட்சி செய்து கொண்டு) இருந்தான். அவனிடம் ஒரு சூனியக்காரன் இருந்தான். அந்த சூனியக்காரன் வயோதிகத்தை அடைந்த போது அரசனை நோக்கி, “அரசே! எனக்கு வயதாகிவிட்டது. (எனவே எனக்குப் பின் சூனியம் செய்ய உங்களுக்கு ஒரு ஆள் தேவை) ஆதலால் ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்துத் தாருங்கள். நான் அவனுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுக்கின்றேன்” என்று கூறினான்.அரசனும் சூனியத்தைப் படிப்பதற்காக (அறிவும், ஆற்றலும் மிக்க) ஒரு சிறுவனை அவனிடம் அனுப்பி வைத்தான். அந்தச் சிறுவன் சூனியக்காரனைச் சந்திக்கச் செல்லும் வழியில், ஒரு மார்க்க அறிஞர் இருந்தார். சிறுவன் அவரிடம் சென்று பேசிய போது அல்லாஹ்வினால் அருளப்பட்ட உண்மை மார்க்கம் பற்றி அவர் கூறியவை அவனைக் கவர்ந்தது. இதனால் அச்சிறுவன் சூனியம் கற்கச் செல்லும் போது, வழியிலுள்ள மார்க்க அறிஞரிடம் மார்க்கத்தை வழமையாகப் படித்து வந்தான். இதனால் ஒவ்வொரு நாளும் சூனியக்காரனிடம் போனால், “ஏன் தாமதித்து வந்தாய்?” எனக் கேட்டு சிறுவனை அடிப்பான். தினமும் தன்னை சூனியக்காரன் அடிப்பதை சிறுவன் மார்க்க அறிஞரிடம் கூறினான். அடியில் இருந்து தப்ப ஒரு தந்திரம் சொன்னார் அந்த மார்க்க அறிஞர்.”மகனே! சூனியக்காரன் உன்னிடம், “ஏன் தாமதித்து வந்தாய்?” என்று கேட்டால், “வீட்டில் சற்று தாமதித்து தான் அனுப்பினார்கள்” என்று சொல்! (திரும்ப வீட்டிற்குப் போகும் போது) வீட்டில் “ஏன் தாமதித்து வந்தாய்?” எனக் கேட்டால், “சூனியக்காரன் என்னைத் தாமதித்து தான் அனுப்பினான்” என்று கூறு” என்றார்.(தம்பி தங்கைகளே! நாம் பொய் சொல்வது கூடாது. பொய் பேசினால் நாம் நரக நெருப்பில் எறியப்படுவோம்.

ஆனால், இந்தச் சிறுவன் என்ன செய்வான்? மார்க்கதைப் படிப்பதற்காக தினமும் அடி வாங்குகிறான். உண்மையைச் சொன்னால் அந்த அநியாயக்கார அரசன் ‘நறுக்’கென கழுத்தை வெட்டி விடுவான். அதில் இருந்து தப்புவதற்காகத்தான் சிறுவன் பொய் சொல்ல நேர்ந்தது! புரிந்ததுதானே?). இவ்வாறு அந்தச் சிறுவன் சூனியத்தையும், மார்க்கத்தையும் கற்றுக் கொண்டிருக்கும் போது மிகப்பெரிய மிருகம் ஒன்று, அந்த ஊர் மக்கள் போய் வரக்கூடிய பாதையில் படுத்துக் கொண்டது. (எவரும் அதை நெருங்கத் துணியவில்லை) இதைக் கண்ட சிறுவனுக்கு ஒரு யோசனை வந்தது. இன்றைக்கு சூனியக்காரனா? மார்க்க அறிஞரா? இருவரில் எவர் சிறந்தவர் என்று பார்த்து விடுவோம் என்றுஎண்ணிஒரு சிறுகல்லைஎடுத்தான்.

“இறைவா! நீ சூனியக்காரனை விட மார்க்க அறிஞரை விரும்பினால் இந்த மிருகத்தை அழித்து விடு! மக்களுக்கு இருக்கும் நடைபாதைத் தடையை நீக்கி விடு” என்று கூறி, அந்த சிறு கல்லை அம்மிருகத்தை நோக்கி வீசினான். (என்ன ஆச்சரியம்?) கல் பட்டதும் மிருகம் செத்துவிட்டது. மக்களுக்கு இருந்த நடைபாதைத் தடையும் நீங்கிவிட்டது. சிறுவன் (நேராக) மார்க்க அறிஞரிடம் வந்து நடந்த அதிசய சம்பவத்தைக் கூறினான். இது கேட்ட மார்க்க அறிஞர், “என் அன்பு மகனே! நீ என்னைவிட மிகப்பெரிய தகுதியை அடைந்து விட்டாய்! (உன் இறைவன் விசுவாசத்தால், மன உறுதியால்) அற்புத ஆற்றல் கொடுக்கப் பெற்றாய்.

இதனைத் தொடர்ந்து நீ சோதிக்கப்படுவாய். அப்படிச் சோதிக்கப்பட்டால் (உனக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தது நான்தான் என) என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே!” என்று கூறினார். அந்தச் சிறுவன் அல்லாஹ்வின் அருளால் பிறவிக் குருடு, தொழுநோய் போன்ற நோய்களையும் குணப்படுத்தி வந்தான். (இச்செய்தி காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது) அந்தக் கொடுங்கோல் அரசனின் அரச சபையில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவனுக்கும் செய்தி எட்டியது. அவன் நிறைய பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு சிறுவனிடம் வந்தான்.

அவன் சிறுவனிடம் என்ன சொன்னான்? என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்…

இன்ஷா அல்லாஹ்… தொடரும்

2 comments

  1. அஸ்ஸலாமு அலைகும்.
    சூரா புரூஜ்-ல் இந்த சம்பவம் குறிப்பிடப்படவில்லையே!
    சரியான சூராவின் பெயரை தெரியப்படுத்தவும்.

  2. Assalamu alaikum.

    Sura boorujil (85) than kuripidapattathu enbatharku sariyana villakam tharavum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *