அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் | பகுதி:03
“هو الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير”
“அவனே முதலாமவனும், கடைசியானவனும், அவனே மேலானவனும், அவனே அந்தரங்கமானவனுமாவான்” (57:03)
—————————————————
இந்த வசனத்திற்குரிய வழிகேடர்களது தவறான விளக்கம்:-
எல்லாம் வல்ல இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்று வாதாடக்கூடிய சாரார் இந்த வசனத்தை வைத்து இதனை தவறான முறையில் பிரச்சாரம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
முதலாவது படைக்கப்பட்டவனும் அல்லாஹ்தான். இறுதியாக படைக்கப்பட இருப்பதும் அல்லாஹ்தான் என்று சொல்லி விட்டு அந்த வசனத்தில் வருகின்ற ழாஹிர் ( ظاهر ) என்ற சொல்லுக்கு நேரடியான பொருளான வெளிப்படையானவன் என்று சொல்லி விட்டு வெளிப்படையானவைகளும் அல்லாஹ்தான் என்றும் மறைவாக இருக்கக்கூடியவைகளும் அல்லாஹ்தான் என்று மக்களை நிரந்தர நரகிற்கு அழைத்துச் செல்லும் தவறான கொள்கையை பரப்பி வருகின்றனர்.
சரியான விளக்கம்:-
உண்மையில் அல்லாஹ் இந்த வசனத்தின் மூலமாக எல்லாம் அவனே என்ற வழிகெட்ட சிந்தனையை சொல்லவில்லை. மாற்றமாக இந்த வசனங்கள் அல்லாஹ்வுடைய பண்புகள், வல்லமைகளைச் சொல்லக்கூடியதாகும்.
இந்த திருமறை வசனம் அல்குர்ஆனின் 57வது அத்தியாயம் 3வது வசனத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முந்தைய வசனங்களான 1,2 வது வசனங்களை வாசிக்கின்ற போது இந்த 3வது வசனத்தின் உண்மையான விளக்கத்தை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ் முதலிரண்டு வசனங்களிலும்,
“வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். தீர்க்கமான அறிவுடையவன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான் மரணிக்குமாறும் செய்கிறான். மேலும் அவன் ஒவ்வொன்றின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்”
(57:1-2)
என்று அல்லாஹ்வுடைய சக்தி, வல்லமைகளை சொல்லி விட்டு மூன்றாவது வசனத்தில் நாம் விளக்கத்துக்காக எடுத்துக் கொண்ட அந்த வசனத்தை சொல்கிறான்.
அந்த வசனமானது நான்கு விதமான செய்திகளை சொல்லித் தருகிறது.
▪முதலாவது:
இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்னிருந்து அவன் அவன் இருந்து கொண்டிருக்கிறான். இதனால்தான் அவன் ஆரம்பமானவன் என்ற செய்தியை சொல்லி இருக்கிறான்.
▪இரண்டாவது:
ஒருநாள் இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் அழிக்கப்பட இருக்கின்றன. அப்படி அழிக்கப்பட்டாலும் அல்லாஹ் மாத்திரம் எஞ்சிய இருப்பான். இதனால்தான் அவன் கடைசியானவன் என்ற செய்தியை சொல்லி இருக்கிறான்.
▪மூன்றாவது:
அந்த வசனத்தில் அல்லாஹ்வுத்தஆலா ழாஹிர் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறான். ழாஹிர் என்ற சொல்லுக்கான நேரடியான பொருள் வெளிப்படையானவன் என்பதாகும். ஆனால் இந்த இடத்தில் வெளிப்படையானவன் என்பது பொருள் கிடையாது. இந்த இடத்தில் சரியான பொருள் மேலானவன் என்பதாகும். இந்த பொருளை நாம் எம்முடைய சுய விருப்பத்தின் பெயரில் சொல்லவில்லை. மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பிரார்த்தனை செய்யும் போது “மேலானவன்” என்ற பொருளில்தான் கேட்டிருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்கள் மூலமாக அறிய முடிகின்றது. அந்த நபிமொழியினை இவ்வாக்கத்தின் இறுதியில் குறிப்பிட இருக்கிறேன்.
ஆகவே அல்லாஹ்வாகிய அவன் மேலே உள்ளவனாகும் என்ற செய்தியையும் சொல்லித் தருகிறது.
▪நான்காவது:
அவனை மனிதர்கள் யாரும் இந்த உலகில் பார்க்கவே முடியாது. அவன் மறைவானவனாக இருக்கிறான். மறைவான பொருட்களை அறியக்கூடியவனாக இருக்கிறான். மனித உள்ளத்தில் மறைந்திருக்கக்கூடிய விடயங்களை அறியக்கூடியவனாக இருக்கிறான்.
இப்படியாக அல்லாஹ் இந்த வசனத்தில் தன்னுடைய நான்கு மிகப்பெரும் வல்லமைகளை சொல்லித் தந்திருக்கிறான்.
மேலும் அல்லாஹ் இந்த வசனத்தில் “மறைவானவன்” என்றும் “மேலாக இருக்கக்கூடியவன்” என்று இரண்டு பண்புகளை சொல்லித் தருகிறான். இந்த இரண்டு பண்புகளும் அல்லாஹ் எல்லா இடங்களிலுமே இருக்கிறான் என்ற வழிகெட்ட சிந்தனையை அப்படியே மறுத்து விடுகின்றது. அல்லாஹ் பூமிக்கு மேலால் உள்ள வானத்தில் இருக்கிறான். அப்படியானால் அல்லாஹ் பூமியில் இருக்கிறான் என்று சொல்வதானது ஏற்றுக் கொள்ளவே முடியாத விடயமாகும். மாற்றமாக அல்லாஹ் வானத்தில் இருந்து பூமியில் நடக்கக்கூடிய விடயங்களை எல்லாம் அவதானித்து கொண்டிருக்கிறான்.
அதே போன்று அல்லாஹ் மறைவானவன் என்று தன்னை அடையாளப்படுத்துவதன் மூலமாக அவனை யாருமே இந்த உலகில் பார்க்க முடியாது என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம்.
மனிதனையும் அல்லாஹ்தான் என்று சொல்லக்கூடிய அந்த வழிகேடர்கள் மனிதனை நேருக்கு நேர் காணமுடியும் என்ற யதார்த்தத்தை மறந்து விட்டார்கள். அல்லாஹ் தன்னை மறைவானவன் என்று சொல்லி இருக்கிறான்.மனிதன் மறைவானவன் கிடையாது. அவனை எல்லோராலும் பார்க்க முடியும். அப்படியாக இருந்தால் மனிதனையும் அல்லாஹ்தான் என்று சொல்வது முட்டாள்தனமான வாதமாகும்.
எது எவ்வாறாக இருந்தாலும் இந்த வசனம் எமக்கு அல்லாஹ் ஒருவனே என்ற செய்தியை அழகாக சொல்லித் தந்திருக்கின்றதென்பதை சிந்தனையுள்ள, அல்லாஹ்வை உண்மையாகவே பயந்த மக்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள்.
இந்த மூன்று வசனங்களும் இதற்கடுத்து வருகின்ற 4,5,6 ஆகிய வசனங்களும் அல்லாஹ்வுடைய வல்லமைகளை சொல்லித் தந்திப்பதை இணங்கான முடிகின்றது.
இமாம் ஷவ்கானி ரஹிமகுல்லாஹ் அவர்கள் இந்த வசனத்துடைய விளக்கத்தை சொல்லும் போது,
“அல்லாஹ்வாகிய அவன் படைப்பினங்களை படைப்பதற்கு முன்னிருந்து ஆரம்பமானவனாக இருந்து கொண்டிருக்கின்றான். எல்லாமே அழிக்கப்பட்டதன் பின் அவன் மாத்திரம் கடைசியானவனாக நிலைத்துக் கொண்டே இருப்பான். எல்லாப் பொருட்களை விடவும் மேலானவனாக இருக்கிறான். மனித உள்ளங்கள், பார்வைகள் எவைகளை மறைத்து வைத்திருக்கின்றதோ அந்த விடயங்களை எல்லாம் மறைந்து கொண்டு அவதானிக்கிறான்.”
(சுருக்கம்: பத்ஹுல் கதீர்: 5/199)
என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆகவே எம்மைப் படைத்த அல்லாஹ்வை இந்த தெளிவான வசனத்தை தவறான முறையில் சிந்தித்து எல்லாம் அவனே என்று சொல்வது முட்டாள்தனமான வாதமாகும்.
ழாஹிர் ( ظاهر ) என்பதற்கான சரியான பொருள் மேலானவன் என்று சொல்வதற்கான ஆதாரம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பிரார்த்தனை செய்யும் போது ழாஹிர் என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டு அதனை விளக்கிச் சொல்லும் போது பவ்க் ( فوق ) என்ற சொல்லையும் சேர்த்து பயன்படுத்தினார்கள். பவ்க் என்றால் மேலே என்பது பொருளாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதிய அந்த பிரார்த்தனை இதுதான்,
( اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنْ الْفَقْرِ) رواه مسلم (2713) .
இறைவா நீ தான் ஆரம்பமானவன் உனக்கு முதல் எதுவுமே கிடையாது. நீ தான் இறுதியானவன் உனக்கு பிறகு எதுவுமே கிடையாது. நீ தான் மேலானவன் உனக்கு மேலே எதுவுமே கிடையாது. நீ தான் மறைவானவன் உன்னைத் தவிர வேறு எவரும் கிடையாது. இறைவா எங்களை விட்டும் கடனை நீக்கி விடு. வறுமையிலிருந்து போதுமென்ற நிலையினை தந்துவிடு”
(முஸ்லிம்:2713)
இந்த பிரார்த்தனையானது எல்லாமே அல்லாஹ்தான் என்ற வழிகெட்ட சிந்தனையை சொல்லவில்லை. மாற்றமாக அல்லாஹ் ஒருவன்தான் நிரூபிக்க கூடியதாகவே இருக்கிறது என்ற செய்தியை மேலுள்ள விடயங்கள் மூலமாக இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
எனவே எல்லாம் வல்ல இறைவன் அவனுக்கு இணைவைக்காத கூட்டத்தில் எம்மொவ்வருவரையும் ஆக்குவானாக!