ஐம்பது நாள் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பங்களால் இலங்கையின் நன்மதிப்புக்கு சரிவு ஏற்பட்டது. நாணயத்தின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி…. என பல சரிவுகள் ஏற்பட்டன. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் நாடு உள்ளது.
நாட்டில் ஏற்பட்ட இந்த குழப்பநிலை முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிடவில்லை. விவாகரத்தை வேண்டி நிற்கும் தம்பதிகள் போல ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு குட்டிச் சுவராகிவிடும். தமது அரசியல் காய் நகர்த்தல்கள் அனைத்தும் புஷ்வாணமாகிவிட்டதே என்ற புலம்பலில் மைத்திரி-மகிந்த தரப்பும், தமக்கு எதிராகப் பின்னப்பட்ட சதிவலைகளையெல்லாம் தகர்த்து தவிடுபொடியாக்கிவிட்டோம் என்ற பூரிப்பில் ரணில் தரப்பும் தொடர்ந்து முறுகல் நிலையில் செயற்பட்டால் முன்னேற்றப்பதையில் பயணிக்க முடியாமல் போய்விடும். எனவே. அவரவர் அரசியல் நலன்களை விட தேசிய நலன்களை முன்னிறுத்தி அனைவரும் பயணிக்க வேண்டியுள்ளது.
சாதாரண அரச ஊழியர்கள் பாதுகாவல்துறையினரிடம் தேச நலனுக்காக தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாத ஊதியத்தை மட்டும் பெறும் ஒரு பாதுகாவல்துறை ஊழியன் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கும் நிலை ஏற்படுகின்றது. நாட்டின் உச்சகட்ட ஊதியத்தையும் அணுகூலங்களையும் அனுபவிக்கும் ஜனாதிபதி, பிரதமர் பதவியில் இருப்பவர்களும் தேச நலனுக்காக சில அர்ப்பணிப்புக்களை ஆற்ற வேண்டியுள்ளது. எனவே, போட்டி, பொறாமை போன்ற போக்குகளைக் கைவிட்டு விட்டு பொதுவிடயங்களில் இரு தலைவர்களும் இணைந்து பயணிக்க வேண்டியுள்ளது.
அடுத்து, ஜனநாயகத்தையும் நாட்டின் சட்டம் ஒழுங்கையும் காக்கும் நோக்கிலே பலரும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்காகப் போராடினார்கள். இதை கௌரவ பிரதமர் அவர்களும் மனதில் உறுதியாகப் பதிந்து கொள்ள வேண்டும். அவ்வாறே அவரின் எதிர்த்தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சூழலை தமது அரசியல் இலக்கை அடைவதற்காக இனவாதமாகக் காட்ட முனையக் கூடாது. சிலர் இதை சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான உணர்வலைகளை தூண்டுவதற்காகப் பயன்படுத்துவதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. அரசியல் ஆதாயத்திற்காக இனவாத உணர்வுகளைத் தூண்டுபவர்கள் தேச நலனைக் கருத்திற் கொள்ளாத தேச துரோகிகளாகவே இருப்பர்.
அடுத்து, சிறுபான்மை இனத் தலைவர்கள் இந்த அரசியல் பிரச்சினையில் ஒருமித்துச் செயற்பட்டது பாராட்டத்தக்கதுதான். ஆனால், பிரச்சினை முடிந்த பின்னர் மீதமுள்ள பிரச்சினைகளைப் பெரும்பான்மை இன அரசியல் புள்ளிகளை முன்னெடுக்க விட்டு விட்டு கொஞ்சம் ஓரமாக இருந்து ஓய்வாக இருப்பது நல்லதாகும். அதை விட்டு விட்டு ஓவராக சீன் போடுவது அவ்வளவு நலவாக அமையாது.
குறிப்பாக, முஸ்லிம் சமூகத் தலைமைகள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லதாகும். சில தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் முன்னணியிலிருந்து முனைப்புடன் செயற்பட்டனர். சரி பரவாயில்லை என்றாலும் தொடர்ந்து அவர்கள் மகிந்தவின் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தல், அடக்கிவிட்டோம், ஒடுக்கிவிட்டோம் என்று மிதமிஞ்சிப் பேசுவது நல்லதல்ல. இது எதிர்த்தரப்பை ஆத்திரமூட்டும்’ அதன் பாதிப்பை எமது சமூகம்தான் சுமக்க வேண்டி ஏற்படும்.
இந்தப் பிரச்சினையில் நடுநிலையான சிலரும் ரணில் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். எமது தலைவர்கள் கொஞ்சம் துள்ளினால் சொல்வது சரியாக இருந்தாலும் இதைச் சொல்ல இவன் யார்?கொஞ்சம் இடம் கொடுத்தால் சோணிகள் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். எனவே, முஸ்லிம் சமூக அரசியல் தலைமைகள் சற்று நிதானித்து செயற்படுவது அனைவருக்கும் நலவாக அமையும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌகரியமே! கருடன் சொன்னது’ அதில் அர்த்தம் உள்ளது… என்ற கண்ணதாசன் பாடல் வரிகளை ஒருமுறை நினைத்துப் பார்ப்பது நல்லதாகும்.
அடுத்து, அரசியல் பிரச்சினைகளில் முனைப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களிடம், இந்த முனைப்பை முஸ்லிம் சமூகம் தமது சமூகப் பிரச்சினையிலும் எதிர்பார்க்கின்றது. இதையும் எமது தலைவர்கள் கவனத்திற் கொண்டு ஒற்றுமையுடன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
அரசியல் குழப்பங்கள் பல நாடுகளில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்றன. அதற்கு சில அமைப்புக்கள் பக்கபலமாக நின்று ஒத்து ஊதுகின்றன. அரபு நாடுகளின் வளங்களையும் நலன்களையும் அழிக்கும் நோக்கத்தில் அரசியல் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன. சில அமைப்புக்கள் அரபு வசந்தம் என்ற பெயரில் அதற்கு ஆதரவு அளித்தன. ஈற்றில் வசந்தம் புயலாக அழித்துவிட்டு ஓய்ந்துவிட்டன. இதோ இப்போது சூடானில் இதே புயல் வீசுகின்றது. அங்கும் இஸ்லாமிய அடிப்படை அறியாத இஸ்லாமிய அமைப்புக்களில் பங்குள்ளது. இதோ இந்தப் புயல் இப்போது துருக்கியிலும் வீசத் துவங்கிவிட்டது. பல்வலியும் தலைவலியும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள். புரட்சிகளை வசந்தம் என்று கூறி வரவேற்றவர்கள் இப்போது என்ன செய்யப் போகின்றார்கள்? எனவே, எங்கும் எதிலும் நடுநிலையோடும் அளவோடும் இருந்தால் எவருக்கும் நல்லதே!
இதன் பின்னர் நடப்பது யாவும் இனிதாய் அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக!…