அன்று திங்கட்கிழமை மஃரிப் தொழுது விட்டு அமர்ந்து கொண்டிருக்கும் போது தன் மரணம் நெருங்கி விட்டது என உணரும் போது நபி (ஸல்) அவர்கள் ஒதிய துஆவான
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَني والحقني بالرفيق الاعلى
இறைவா என் பிழைகளை மன்னிப்பாயாக. எனக்கு அருள் புரிவாயாக என்னை உயர்வான தோழனான உன் பக்கம் சேர்ப்பாயாக என்று ஒதிய துஆவை ஒதிக் கொண்டிருந்தேன்.
பிள்ளைகள் மூவரும் சேர்ந்து அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கின்றார்கள். பிள்ளைகளைப் பார்த்தால் மிகவுமே கவலையாக இருந்தது. அவர்களிடம் நான் எதனைக் கூறினாலும் அவர்களுக்குப் புரிந்து கொள்வதற்கான வயதும் இல்லை. எனக்கேதாவது நடந்து விட்டால் அவர்கள் மரணிக்கும் வரை என் இழப்பினை நினைத்து வருந்தக்கூடியவர்களும் அவர்கள் தான். எனவே என் கவலையையும் வலிகளையும் பிள்ளைகளிடமே கூற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
இன்னும் ஒரிரு நாட்களில் நான் மரணிக்கப் போகின்றேன். அதன் பிறகு என்னால் உங்களுடன் பேச முடியாது. உங்களைப் பார்க்கவும் முடியாது. என்னை உம்மம்மா வீட்டிற்குப் பக்கத்திலுள்ள மையவாடியில் தான் அடக்குவார்கள். நீங்கள் அடிக்கடி அங்கே வந்து எனக்காக துஆ செய்ய வேண்டும். நீங்கள் நல்ல பிள்ளைகளாக வாழ்ந்தால் தான் சுவனத்தில் எனக்கு உங்களைப் பார்க்க முடியும் என்று பல அறிவுறைகளைக் கூறுகின்றேன். அதனைக் கேட்டு நான்கு வயதை எட்டிக்கொண்டிருக்கும் என் சின்ன மகள் கூறுகிறாள் என் சல்லி முட்டியில் இருக்கும் சல்லியை அல்லாஹ்விடம் கொடுத்து உங்களை திருப்பி வாங்குவேன் என்கிறாள். இரண்டாவது மகன் நான் உங்களுடனே கப்ருக்குள் வருவேன் நான் யாருக்கும் பயமில்லை என்கின்றான். முதலாம் மகன் பத்து வயது மற்ற இருவரை விடவும் விபரமானவர் என்பதால் அழுது விட்டான். நீங்கள் மவ்த்தாகக் கூடாது என்று துஆ செய்கின்றேன் என்று தொழுகைக்குச் செல்கின்றான். இரண்டு நானா மாருக்கும் தங்கச்சியைப் பொருப்பாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டேன். தங்கச்சியைத் தனிமையில் விக்கூடாது. கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறி விட்டுத் தங்கச்சியிடம் நானாமாரைப் பார்த்துக் கொள்ளுமாறு பொறுப்புக் கூறுகின்றேன். நானும் பிள்ளைகளும் என் மரணம் பற்றியும் அடக்கம் பற்றியும் பேசிக்கொண்டோம். இதேபோன்று என்னுடைய மத்ரஸா மாணவிகளிடமும் அன்றிலிருந்து மரணத்தைப் பற்றியும் நான் மரணித்தாலும் நீங்கள் மத்ரஸா செய்ய உருவாக வேண்டுமென்றும் அறிவுறை கூறிவிட்டு றமழானில் சான்றிதல் வழங்கப்படவுள்ளது. அதில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளுக்குத் தயாராகுங்கள் என்றும் கூறுகின்றேன்.
என் கணவரோ நிறையப் பழங்கள், எனக்குப் பிடித்த உணவுகள் என்று எல்லாமே அள்ளிக்கொண்டு வருகிறார். இதெல்லாம் எதற்காக என்று கேட்கின்றேன். நீங்கள் ஹாமிலாவாக ப்ரெட்னட் ஆக இருப்பதால்தான் இவ்வளவும் என்று கையில் கொடுக்கின்றார். நானோ மரணத்தை நினைத்து மிகவும் பதட்டத்தில் அவரோ இன்னொரு குழந்தையை எதிர்பார்த்த குதூகலத்தில் ஸுப்ஹானல்லாஹ். என்னுடைய சில அறிகுறிகள் அப்படி இருந்ததால் அல்லாஹ் அவரை அப்படி சிந்திக்க வைத்திருக்கின்றான்.
அடுத்த நாள் பாணந்துறையில் ஓர் பள்ளியில் அல்குர்ஆன் மத்ரஸா மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் வழங்கும் வைபவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வைபவத்திற்குக் குடும்பத்துடன் சென்றோம். சான்றிதல் வழங்க என்னை அழைக்கின்றார்கள் .. ஆனால் என்னால் நடக்க முடியாது என்பதை உணர்கின்றேன். நான் சான்றிதல் வழங்க மேடையேறவில்லை. மிகவும் பயப்படுகின்றேன். என்கால்களை பல சிரமங்களுக்கு மத்தியில் அசைக்கின்றேன். இங்கே அனைவரின் முன்நிலையிலும் எனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டே அமர்ந்து கொண்டிருக்கின்றேன். பிறகு அங்கு வந்த பெண்களுடன் ளுஹர் தொழுகையையும் தொழுது விட்டு நோன்பு காலத்தில் அங்கே தஜ்வீத் வகுப்பு நடாத்துவதற்கான மஷுராவும் நடைபெற்றது. பின்னர் பகல் சாப்பாடு கணவரின் நண்பர் ஒருவருடைய வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே சாப்பிட்டு விட்டு கணவனுக்குத் தெரிந்த சில வீடுகளுக்கும் சென்று விட்டு வீடு வந்து விட்டோம்.
நோன்புக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருந்தன. முதலில் என் உடம்பை சரி செய்து கொள்ள வேண்டுமென்பதால் எந்த வைத்தியரை அணுக வேண்டுமென்று யோசிக்கின்றேன். என்ன வருத்தம் என்றே புரியவில்லை என்பதால் என்ன முடிவெடுப்பது என்றும் தெரியவில்லை. யாரிடமும் எதனைக் கூறியும் எந்தப் பலனுமில்லை. வியாழக்கிழமை மஃரிப் தொழுகைக்காக கணவர் பிள்ளைகளையும் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டார். நான் மகளுடன் தனியாக இருக்கின்றேன். கொஞ்சமாக தலைசுற்றல் ஏற்படுகின்றது. தொழ முடியவில்லை. நடக்கும் போது கால்கள் தடுமாருகின்றன. என்ன செய்ய வேண்டுமென்று எனக்குக் கலந்தாலோசிக்க யாருமே இருக்கவில்லை.
அப்போது தான் டாக்டர் ஹில்மி அவர்கள் நினைவிற்கு வருகின்றார். அவர் MBBS ஒரு VOG உம் கூட. மிகவும் திறமையானவர், பண்பானவர், ஒழுக்கமுள்ளவர். நோயாளிகளுடன் பண்பாக நடப்பவர். நோயாளிகளுக்கு ஓத வேண்டுமென்பதற்காகவே துஆக்களை மனனமிடுபவர். அவரது பிள்ளைகள் எங்களிடம் ஓதுவதால் அவரது குடும்பமும் நாமும் பல வருடங்களாகவே தொடர்பிலிருந்தோம். என்றாலும் எப்போதுமே அவருடன் நான் பேசியதில்லை. அவருடைய மனைவிக்குக் கோல் எடுத்துப் பேசிவிட்டு டொக்டரோடு கொஞ்சம் பேச முடியுமா? எனக்குக் கொஞ்சம் வருத்தமாக உள்ளது என்றவுடன் அவர் வீட்டில் தான் இருக்கின்றார் என்று கூறி போனைக் கொடுக்கின்றார். நானே அவருடன் பேசி என் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது டொக்டர். ஏதாவது மருந்து தாருங்கள் என்று கேட்கின்றேன். அவர் என்ன நோய் என்று தெரியாமல் எப்படி மருந்து தருவது? செக் பண்ணிப் பார்க்காமல் மருந்து தர முடியாது என்கின்றார். நான் இல்லை டொக்டர் நீங்கள் ஏதாவது செய்து மருந்து தரவே வேண்டுமென்று அடம்பிடிக்கின்றேன். அப்போது எல்லா வருத்தங்களையும் ஒவ்வொன்றாகக் கேட்கின்றார். நானும் எல்லாம் அடுக்கிக்கொண்டே போய் இப்போது எனக்கு ஏதாவது மருந்து கொடுங்கள் டொக்டர். நோன்பிற்கு இன்னும் ஒரிரு நாட்கள்தான் உள்ளது. என்னை எப்படியாவது குணப்படுத்துங்கள் என்று சத்தமிடுகின்றேன். அவர் என் மணநிலையைப் புரிந்து கொண்டார். கோபப்படவில்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ப்ரெட்னட் ஆக இருக்கலாம் என்கின்றார். இல்லை டொக்டர் அப்படியிருக்க வாய்ப்பில்லை கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது என்கின்றேன். இல்லையென்றால் இது விபரீதமாக இருக்கலாம். அதனால் நான் தரும் எல்லா டெஸ்டிங்களையும் செய்வீர்களா? நிறைய செலவாகும் . ரிப்போர்ட்டில் மாற்றமாக ஏதாவது இருந்தால் வைத்தியசாலையில் தங்க வேண்டும் உங்களால் முடியுமா?? ஏனென்றால் பல முறை வைத்திய சாலையில் நிற்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தும் நான் தங்காததால் முதலிலே அதை கன்போர்ம் செய்து கொண்டு போனை வைத்து விட்டு நிறைய டெஸ்டிங்களை அனுப்பியிருந்தார்.
ஒரு கிழமையாகவே தூக்கமில்லை, கணவர், பிள்ளைகள் எல்லோரும் தூங்கியவுடன் தனிமையில் கத்தி அழுகின்றேன். உண்மையிலே நான் மரணிக்கத்தான் போகின்றேனோ? ஏன் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விரக்த்தியாக இருக்கின்றது. யாரையுமே பிடிக்கவில்லை. எங்காவது தனியே சென்று விடவேண்டும் போன்ற உணர்வு. குமட்டல். தலைசுற்று. என் பேச்சை யாருமே நம்புவதுமில்லை. என்ன செய்ய? என்ன சோதனை என்று இரவெல்லாம் புலம்புகின்றேன். உண்மையிலே கணவர் நினைப்பதைப் போன்று ப்ரெட்னெட் ஆக இருக்குமோ.?? இல்லை மணநோயாக இருக்குமோ?? இதன் பிறகு என்னால் தாங்க முடியாதே என்றாலும்
وإذا مرضت فهو يشفين
நான் நோய் வாய்ப்பட்டால் அவனே நிவாரணம் அளிப்பவன். என்ற அல்லாஹ்வின் வாக்குப் பொய்யாகாது என்ற நம்பிக்கையோடு தூங்கி விட்டேன்.
விடிந்தால் வெள்ளிக்கிழமை என்பதால் குத்பாவுக்குப் போக வேண்டுமென்று அதற்குத்தயாராகி விட்டுக் கணவரும் பிள்ளைகளும் உறங்கி விட்டனர். நான் மட்டும் நிம்மதியாக இல்லை. தூக்கம் வருவதேயில்லை என்பதால் காலையில் என்னால் எழும்ப முடியாது. இது பதினைந்து நாட்களாகவே நடை பெறுகின்றது. நான் ஏனோ சோர்வாக இருப்பதால் அவர் என்னை எழுப்பவே மாட்டார். பிள்ளைகளைத் தயார் படுத்தி பாடசாலைக்குக் கொண்டு போய் விடுவார். எதுவுமே எனக்குத் தெரியாது. எல்லா வேலைகளையும் அறைகுறையாக செய்து விட்டு கொஞ்சம் தூங்கிவிடுவேன். பிறகு மீண்டும் சாப்பாடு சமைத்துக் கொடுத்து விட்டு மீண்டும் தூங்குவேன். மத்ரஸாக்களை நேரத்துக்குச் செய்கின்றேன். என் உடலின் பலவீனம் எனக்கு மட்டுமே புரிந்தது. மற்றவர்களுக்கு விளங்க வாய்ப்பே இருக்கவில்லை. என் கணவர் நான் ப்ரெட்னட் ஆக இருக்குமோ என்று எண்ணி கேட்பதையெல்லாம் கொண்டு வந்து தருகின்றார். எல்லா வேலைகளையும் செய்கின்றார் என்னிடம் எதுவுமே கேட்பதுமில்லை. அவரே வேலைகளைச் செய்து முடித்திருப்பார்.
அடுத்த நாள்
வெள்ளிக்கிழமை காலை நேரம் 8 மணிக்கு ஹில்மி டொக்டர் தந்த எல்லா டெஸ்டிங்களையும் செய்ய லங்கா ஹொஸ்பிடல் போக ரெடியாகினோம்…….
தொடரும்…….
✍️உம்மு உபாதா (உஸைமீனிய்யா)
2025/11/01
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library