காலை நேரம் பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றுவிட்டனர். நானும் சாப்பிட்டுவிட்டு 9.30 மணியளவில் என்னுடைய சாச்சியுடன் ப்லெட் டெஸ்டிங் செய்வதற்காக வெளியாகின்றோம். என் கணவர் எங்களை அழைத்துச் சென்று விட்டு வெள்ளிக்கிழமை என்பதால் ஜுமுஆவுக்கு அங்கிருந்து சென்று விட்டார். நிறைய டெஸ்டிங் என்பதால் நிறையவே இரத்தமும் எடுக்கப்பட்டது. உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் இந்த டெஸ்டிங்களை செய்கின்றீர்கள்? யார் இதனைச் செய்யச் சொன்னார்கள்? என இரத்தம் எடுக்கும் நேர்ஸ் கேட்கின்றார். என்ன பிரச்சனை என்று தெரிந்தால் ஏன் நான் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். ஏன் இவ்வளவு இரத்தத்தையும், பணத்தையும் வீணாக்க வேண்டும். என்று அவரிடம் சிரித்துக் கொண்டே கூறுகின்றேன். அவரும் சிரித்துக்கொண்டே கடவுளிடம் நான் உங்களுக்காகப் பிராரத்தனை செய்கின்றேன் எனக் கூறுகிறார்.
அடிக்கடி அங்கே சென்றாலும் என்னிடம் அவ்வாறு எதுவுமே இதுவரை கேட்டதில்லை. நாம் பேசிக்கொள்ளவும் மாட்டோம். வழமைக்கு மாற்றமாக ஏன் இவர் இப்படிக் கூறுகின்றார் என்று என் மணம் உறுத்தியது. இந்த டெஸ்டிங் ஏதாவது பிரச்சினைக்குரியதோ என யோசிக்கின்றேன். அப்போது தான் ஏன் என்னுடைய இரத்தத்தில் நுரை போன்று வந்தது? என்ன காரணம்? என்று கேட்க என்னை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த அந்த நேர்ஸ்.. அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது ஸிஸ்டர்… டெஸ்டிங் முடிந்ததும் ரிப்போர்ட்டை பார்த்துத்தான் கூறவேண்டும் என்று என்னை அனுப்பி வைக்கின்றார். எல்லா டெஸ்டிங்களுக்கும் 15000 என்று கூறினார்கள். எனக்கு அப்போது எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. என் உடல், உள மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்வதுதான் முக்கியமாக இருந்தது. 2 மணித்தியாலத்தில் ரிப்போர்ட்டை வாட்ஸப் பண்ணிவிடுங்கள் என்று கூறிவிட்டு சாச்சியும், நானும் றமழான் பற்றியும், அதற்காக நாம் சில பொருட்கள் வாங்க வேண்டுமென்றும் பேசிக்கொண்டே கிட்டத்தட்ட 400மீட்டர் தூரம் நடந்து வந்திருப்போம். வீடு வரும் வரை எனக்கு எதுவுமே ஆகவில்லை அல்ஹம்துலில்லாஹ்.
பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றிருந்தனர். கணவர் ஜுமுஆவிற்குச் சென்று விட்டார். சாச்சியும் என்னை வீட்டில் விட்டுவிட்டு அவரது வீட்டுக்குச் சென்று விட்டார்கள். நான் மட்டுமே வீட்டில் தனியாக இருக்கின்றேன். அடிக்கடி மரணிக்கும் எண்ணம் வருவதால் வீட்டிலிருந்த என்னுடைய சில தேவையற்ற பொருட்கள், டயரிகள், தேவையற்ற ஆடைகள் எல்லாவற்றையுமே குப்பையில் போட்டுக் கட்டி வைக்கின்றேன். உம்ராவிலிருந்து கணவர் எனக்காகக் கொண்டுவந்த சில பரிசுப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் என ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஆம் அவை அனைத்தும் எனக்கான காதல் பரிசுகள் தான். அவற்றை என்னால் பார்க்க மட்டுமே முடியும் என்று இனம் புரியாத எண்ண அலைகள் மணதில் ஒடிக்கொண்டே இருந்ததால் என்னை அறியாமலே எனக்குக் கண்ணீர் வழிந்தோடியது.
لا يكلف الله نفسا الا مآ آتاها.. سيجعل الله بعد عسر يسرا
தான் வழங்கியதற்கு மேல் எந்தவொரு ஆத்மாவையும் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அல்லாஹ் கஷ்டத்துக்குப் பின் இலகுவைத் தருவான் என்ற அல்லாஹ்வின் வாக்கை ஞாபகப்படுத்தி விட்டு கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்துகொண்டேன்.
பிள்ளைகள் பாடசாலையிலிருந்து வர முன்னர் சமைக்க வேண்டுமென்பதற்காக கண்ணீரைத் துடைத்து விட்டு சமயலறைக்குச் செல்கின்றேன். அங்கே எல்லாமும் வைத்த இடத்திலே இருக்கின்றது. எந்த வேலைகளையுமே ஒழுங்காக செய்ய முடியாததால் வீடும் குப்பையாகவே காணப்பட்டது. பிள்ளைகள் வீடு வர முன்னே சமைத்து விட்டேன். சமயலறையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, வீட்டையும் முழுமையாக சுத்தப்படுத்தியும் முடித்தேன். 11.40 ஆகும் போதே பிள்ளைகள் வீடு வந்து விட்டனர்.
மகன் குளித்துவிட்டுப் பள்ளிக்குச் சென்று விட்டார். நானும் இரண்டாவது மகனும், மகளும் தான் தனியே வீட்டில் இருக்கின்றோம். அப்போது தான் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை, தலைசுற்றல், எழும்பமுடியாது. அடக்க முடியாதளவு வாந்தி வந்து கொண்டே இருக்கின்றது. நிற்க முடியாமல் சின்ன மகளை அழைக்கின்றேன். அவளோ குளித்துக்கொண்டிருந்தாள். குளித்துக் கொண்டிருந்த மகளை துடைத்து எடுத்துக்கொண்டு வந்து எனக்குத் தலை சுற்றுவதைக் கூறுகின்றேன். பாவம் சிறியவள் தான் ஆனாலும் தாயைப்போல நடந்து கொள்கின்றாள். என் கையைப் பிடித்து ஒரு கதிரையில் அமர வைத்துவிட்டு எழும்ப வேண்டாம் என்று கூறுகின்றாள். கட்டிலைத்தட்டிவிட்டு இரண்டாவது மகனிடம் உம்மாவுக்குத் தலை சுற்று நானா… பாவம் கரச்சல் பண்ண வேணாம் என்று கூறிவிட்டு அவரையும் ஒரு ஓரமாகத் தூங்கு என்று கூறுகிறாள். என்னையும் தூங்க வைக்கிறாள். உண்மையிலே மகள் அவ்வாறு செய்யாவிட்டால் நான் விழுந்திருக்கலாம். அல்லாஹ் என்னைக் காப்பாற்றிவிட்டான். எனக்குத் தூங்கச்சொல்லி விட்டு அவளோ எனக்கு முதலில் தூங்கியும் விட்டாள். இப்போது நான் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கின்றேன். அன்றெல்லாம் எனக்குத் தனிமையே தேவைப்பட்டது. ஏனென்றால் என் கணவர் முன்னிலையில் நான் எப்போதும் அழுவதை விரும்புவதில்லை. நான் கவலையோடு இருந்தாலே அவருக்குத் தாங்காது. அப்போது அவர் ஒரு குற்றவாளியாகவே அவரைப் பார்ப்பார். எனவே நான் மிகவும் தைரியமாகவே என்னைக் காட்டிக் கொள்வேன். அன்று யாருமில்லை கத்தி அழுகின்றேன்.
இவ்வளவு பதற்றத்தையும், சோர்வையும் இவ்வளவு நாட்களும் மறைத்து வைத்திருந்த நான் என் உம்மா வாப்பாவிடம் மட்டும் எதுவும் கூறவில்லை. பெண் பிள்ளையென்றாலே வாப்பாமாருக்கு உயிர் தானே. நான் எந்த நிலையில் பேசினாலும், எப்படிப் பேசினாலும் படம் பிடித்துக் காட்டுவது போன்று என் நிலையை சரியாகக் கூறுவார் என் வாப்பா. அதேபோன்று என்ன வருத்தம்? எதை மறைக்கின்றீர்? என்று பல முறை கேட்டாலும், இல்லை வாப்பா நான் நன்றாகவே இருக்கின்றேன் என பொய் கூறிவிடுவேன். அப்போதுதான் உம்மாவிற்கு கோள் எடுத்து உம்மா எனக்குப் பயமாக இருக்கிறது. ஏதோ ஆகப்போகின்றது என்கிறேன். வேறு எதுவுமே என்னால் பேசமுடியவில்லை அழ மட்டுமே முடிந்தது. பல முறை பேசும்போதும் எதுவுமே வருத்தமில்லை. நான் நன்றாகவே இருக்கின்றேன் என்று பொய் கூறிய என்னால் அன்று மட்டும் உண்மையையும் கூற முடியாமல் அழமட்டுமே முடிந்தது. உம்மா கூறிய சில ஆறுதல் வார்த்தைகளும், நான் இன்றே வருகிறேன் என்ற வார்த்தையிலும் உம்மா வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு தைரியமளித்தது….
வழமையாக சில மெஸேஜ்களை மட்டுமே அனுப்பி விட்டு மிம்பர் ஏறும் என் கணவர் 12.15 க்கு கோள் எடுக்கின்றார். கோள் எடுத்து என்னிடம் ஒருவேலையுமே செய்ய வேண்டாம். கட்டிலை விட்டு இறங்கவோ, நடமாடவோ வேண்டாம். தைரியமாக இருங்கள் என்கின்றார். பிள்ளைகளையும் பார்க்க வேண்டாம் என்கின்றார்.. ஏனென்று எதுவுமே கூறவில்லை. நீங்கள் கவனமாக இருங்கள் என்று கூறிவிட்டு போனைவைக்கின்றார். உண்மையிலே நான் ப்ரெட்னட் தான் ஆகியிருக்கிறேன் அதனால் தான் இவ்வாறு கூறுகின்றார் என நினைத்து கட்டிலை விட்டு எழும்பி விட்டேன். வைத்தியர்கள் இனிக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறிய பின்னே இரண்டு குழந்தைகளைப் பெற்ற எனக்கு இன்னுமொரு குழந்தை பெற்றெடுப்பதில் எனக்கென்ன கஷ்டம் என்று என்னை நானே ஆறுதல் படுத்திக் கொள்கின்றேன். என் மனம் அமைதி பெறுகின்றது.
رب هبلي من الصالحين
رب هبلي من لدنك ذرية طيبة
..துஆக்களை ஓதி வயிற்றில் தடவிக் கொள்கின்றேன்.
அதற்கிடையில் அவர் சாச்சியிடம் சொல்லியிருப்பார் போல.. அவர்களும் வந்து லெப்பிலிருந்து கோள் வந்ததா?? ரிப்போர்ட் எப்படியாம்??. மகன் கோள் பன்னினாரா?? என்று கேட்கின்றார். மகன் பேசினார் கவனமாக இருங்கள் என்று கூறினார்.. ஏன் சாச்சி என்று கேட்கவும். லங்கா ஹொஸ்பிடலிலிருந்து வந்த தகவலை என்னிடம் கூறுகின்றார். அப்போது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம் மட்டும்தான் எஞ்சியிருந்தது. ஒரிரு நிமிடத்தில் நானே சமாதானம் செய்து ஆற்றிக்கொண்ட என்னுடைய ஆறுதலும், ஆசைகளும் சில வினாடிகளிலே சுக்கு நூறாகிப் போனது.
லங்கா ஹொஸ்பிடலில் இருந்து கோள்பன்னி என்னுடைய ப்ளேட்லெட் 25 அதனால் உடனடியாக நோயாளியை அட்மிட் பன்ன வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்கள். சிறிய வருத்தங்களின் போதே தனிமையில் என்னை விடாதவர் ப்ளேட்லெட் 25 என்றவுடன் மிகவும் நொருங்கி விட்டார். பாவம் மிம்பருக்கு ஏறி என்ன பேச வேண்டும் என்ன தலைப்பு என்பதையே மறந்து விட்டார். மிகவும் பதற்றத்துடன் குத்பாவை முடித்து, சாப்பிட்டு விட்டு 3 மணிக்கே வீடு வந்து சேர்ந்து விட்டார்.
லெப்பில் இருந்து எல்லா ரிப்போர்ட்களும் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கின்றோம். எல்லாமே தாறுமாறாகக் கிறுக்கப்பட்டது போலவே இருந்தது.
Hb 7, wbc 39, platelet 25 என்று குறைந்தும் கூடியும் இருந்தது. இது எப்படி நடந்தது. காய்ச்சலோ, தடுமலோ என்று எதுவுமிருக்கவில்லை. லங்கா ஹொஸ்பிடல் ரிப்போர்ட் பிழையாக வாய்ப்பும் இல்லை. எனவே சில நண்பர்களுக்கும், வைத்தியர்களுக்கும் ஏன் இவ்வாறு ரிப்போர்ட் வந்திருக்கின்றது என அனுப்பிக் கேட்கின்றேன். ஒவ்வொருவரும் பல காரணங்களைக் கூறுகின்றனர்.
என் ரிப்போர்ட்டை பார்த்த டொக்டர் ஹில்மி அவர்கள் எனக்கு என்ன பிரச்சினை என்பதை முடிவுபன்னியிருப்பார் போலும். ஒரு பெண் வைத்தியர் VP யிடம் போகுமாறு கூறுகிறார். கணவர் வீடு வந்ததும் சாச்சி, பிள்ளைகளுடன் வைத்தியசாலைக்குப் போகின்றோம். என்னால் உள்ளே நடந்து போக கொஞ்சம் சிரமமாக இருந்தது. வீல்செயார் தேவையில்லை. எதற்கு என்னால் எல்லோருக்கும் கஷ்டம் என்று நடந்தே போகின்றேன். வைத்தியரை சந்திக்க உள்ளே சென்றதும் ரிப்போர்ட்டையும், என்னையும் மாறிமாறிப் பார்க்கிறார் வைத்தியர். நான் நோர்மலாக இருக்கின்றேன். எந்தவித உதவியுமில்லாமல் நடந்தே அவரிடம் சென்றதால் இந்த ரிப்போர்ட் பிழையாகவும் வாய்பிருக்கின்றது. எனவே வேறு புதிய ரிப்போர்ட் ஒன்றை நாம் பார்த்துவிட்டு முடிவெடுப்போம். மீண்டும் இரத்தத்தைக் கொடுக்கச் சொல்லிவிட்டு… நாளை காலையில் களுபோவிலை வைத்தியசாலையில் வந்து அட்மிட் ஆகும்படி கூறி அனுப்பிவிட்டார்கள். வீடு வந்து சேறும் நேரத்திற்கிடையில் மீண்டும் எடுக்கப்பபட்ட ரிப்போர்டும் வாட்ஸப்கு வந்திருந்தது. காலையில் இருந்த இரத்த அளவுகளை விட மாலையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் இன்னுமின்னும் நிறைய மாற்றங்கள் ப்லேட்லட் 20, Hb 6 ஆகக் குறைந்து ,wbc 39 ஆகவும் உயர்ந்திருந்தது. பரவாயில்லை பல நாட்கள் பொறுக்க முடிந்த எனக்கு சில மணித்தியாலங்கள் காத்திருப்பது ஒன்றும் பெரிய விடயமாகத் தெரியவில்லை.
நானும் கணவனும், பிள்ளைகளும் மட்டுமே வீட்டில் இருந்தோம். சுபஹ் தொழுதவுடனே வைத்தியசாலைக்குப் போக வேண்டுமென்பதால் அதற்கான ஆடைகள், தேவையான பொருட்கள் தயாராகின்றன. வைத்தியசாலைக்குத் தேவையான அனைத்தையும் கணவர் மேலதிகமாகவே வாங்கி வந்திருந்தார். ஊரிலிருந்து உம்மா, வாப்பா, சகோதரர்கள் அனைவரும் இஷாவுக்குப் பின்னரே வெளியேறிவிட்டார்கள்.
يآيها الناس اذكروا نعمت الله عليكم
மனிதர்களே அல்லாஹ் உமக்களித்த அருட்கொடையை நினைவு கூறுங்கள் என்ற அல்குர்ஆன் வசனத்தை ஞாபகப்படுத்திக் கொண்டேன். ஏனென்றால் என் இரத்தத்தில் இவ்வளவு சிக்கல் இருந்தும் நான் பதட்டமாக இருந்தேனே தவிர விபரீதங்கள் ஏற்படவில்லை. பலமுறை தலை சுற்றினாலும் விழவில்லை.. அல்ஹம்துலில்லாஹ். முழு வீட்டையுமே கவனித்துக் கொண்டிருந்தேன். ரிப்போர்ட் வந்ததும் தான் நன்றாக இருந்த என் உடல் நிலை மெதுவாக மோசமடைவதை உணர்ந்தேன். என்னால் சாப்பிடக் கூட முடியாதளவு கை நடுக்கம், நடக்கமுடியவில்லை. பயத்தினாலோ என்னவோ சோர்ந்திருந்த நான் முழுமையாகவே பலகீனமாகி விட்டேன்.
பிள்ளைகள் மூவரையும் அணைத்துக் கொண்டு சில அறிவுரை கூறுகின்றேன். அல்லாஹ்விடம் எனக்காக துஆ செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் இரண்டு நாட்களில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்கின்றேன். என்
இரண்டாவது மகன் துடிப்பானவன். அவனை நான் அணைத்துக்கொண்டு தான் தூங்க வேண்டும். தூக்கம் வரும் வரை வயிற்றிலும் முதுகிலுமே மாறிமாறித் தூங்குவான். அன்றும் உம்மா நீங்கள் ஹொஸ்பிடல் போனால் வர நிறைய நாட்கள் பிடிக்குமே என்று மேலில் ஏறி அணைத்துக்கொள்கிறான். மற்ற இருவரையும் அழைத்து எல்லோரையும் வைத்து செல்பியும் எடுத்து விட்டான்.
பாவம் என் அன்புக் கணவர் அவரோ எதுவும் பேசமுடியாமல் கலங்கிய கண்களுடன் கட்டிலில் அமர்ந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அவர் நினைத்தது ஒன்று. ஆனால் நடப்பது வேறொன்று.. அன்று நமக்கிடையில் மெளனத்தைத் தவிர பேச எதுவுமே இல்லாமல் போனது. இது தான் எம்மிருவரின் கடைசி இரவாக இருக்குமோ??.. இனி நாம் சந்திக்கவோ பேசவோ முடியாமல் போய்விடுமா.?? என் பிள்ளைகளின் நிலை என ஆயிரம் எண்ணங்கள்… என் மனதில்….
தலையில் கையை வைத்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.. அப்போது என் கணவரின் எண்ணங்களை நான் அவரிடம் கேட்கவில்லை. அன்றைய இரவு எனக்கு எப்போது விடியும்?? என்றிருந்தது… அவரோ விடியாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருப்பார்.. என்னுடைய சாச்சியோ என்னாகுமோ, ஏதாகுமோ என்று அவருக்குத் தெரிந்த வைத்தியர்கள் எல்லோருக்கும் என் ரிப்போர்டை அனுப்பி அனுப்பி விசாரித்துக் கொண்டிருந்தார்.
சுபஹ் நேரம் கண்விழித்துப் பார்க்கின்றேன். வீட்டிலிருந்து அனைவரும் வந்து கட்டிலைச் சுற்றி அமர்ந்திருந்தனர். உம்மாவையும், வாப்பாவையும் ஒரிரு மாதங்களுக்குப் பிறகு காண்பதால் அழுகை வந்து விட்டது. எல்லோரும் என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லத் தயாராகின்றனர். ஏற்கனவே ஹேர்னியா ஆபரேஷன் செய்யப்பட்டதில் சில தவறுகள் இருப்பது ஸ்கேனில் தெரிய வந்ததால் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யவேண்டுமென்று வைத்தியரும் கூறியிருந்தார். அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுக்கொண்டும் இருந்தது. சிலவேலை ஆபரேஷன்கு எடுப்பார்கள் என்று நினைத்து அதற்குத் தயாராகியே வைத்தியசாலைக்குப் போகின்றோம்…..
தொடரும்…
உம்மு உபாதா (உஸைமீனிய்யா)
2025/11/03
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library