-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
விசுவாசிகளே! நீங்கள் இறையச்சம் (தக்வா) உடையவர்களாக திகழ்வதற் காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டவாரே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட் டுள்ளது. (அல்குர்ஆன் 2:183)
முஸ்லிம் மக்களை பக்குவப்படுத்தி நல்லொழுக்கமுள்ளவர்களாக அல்லாஹ் வை பயந்து நடக்கக் கூடியவர்களாக மாற்றுவதே நோன்பின் பிரதான நோக்கமாகும். தவிர காலையிலிருந்து மாலைவரை பசித்திருந்து தாகித்திருந்து வீணாக நேரத்தைப் போக்குவது நோன்பின் நோக்கமல்ல.
சஹர் செய்ததிலிருந்து நோன்பு திறக்கும் வரை சாப்பிடக்கூடாது, பருகக்கூடாது, மனைவியிடம் உறவு கொள்ளக்கூடாது போன்ற ஆகுமாக்கப் பட்ட சில காரியங்கள் தடுக்கப்படுகின்றன. தனக்கு உரிமையான இக்காரியங்களை அல்லாஹ்வுக்காக விட்டு விட்டு தியாகம் செய்ய முன்வருபவன் அடுத்தவனுடைய சொத்துக்களை அபகரிக்க மாட்டான், கொள்ளையடிக்க மாட்டான், மானக் கேடான, பாவமான காரியங்களில், ஈடுபட மாட்டான். மோசடி செய்ய துணிய மாட்டான். இத்தகைய பயிற்சியை வழங்கு வது தான் நோன்பின் அடிப்படை நோக்கம். இந்தப் பயிற்சியை பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இவனுக்கு அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் கிடையாது.
நோன்பு வைத்திருக்கும் போது பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் எவர் விட்டுவிட வில்லையோ அவர் தாகித்திருப்பதனாலும், பசித்திருப்பதனாலும் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி)
ஆன்மீக ரீதியில் மக்களை பண்படுத்தி பக்குவப்படுத்தி உண்மையாளர்களாக, வாய்மையுள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் பெரும் இலட்சியப் பயணத்தின் பயிற்சிப் பாசரையாக இருப்பது தான் ஒரு மாத கால நோன்பு! ஒவ்வொரு வணக்க வழி பாடுகளும் (இபாதத்களும்) இந்தப் பயிற்சி யைத் தான் எங்களுக்கு வழங்குகிறது.
நோன்பு உங்களை தீமைகளிலிருந்து தடுக்கும் ஒரு கேடயமாகும். என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே உங்களில் எவரும் நோன்பு பிடித்திருக்கும் போது கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். வீண் கூச்சல் போட வேண்டாம் எவரேனும் ஏசி னால் அல்லது சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளியாக இருக்கிறேன். (என்னுடன் பிரச்சினைப்படாதே) என்று கூறட்டும். அல்லாஹ்வின் மீது சத்திய மாக, நோன் பாளியின் வாயிலிருந்து வெளிப்படும் மணம் அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி.
வாயை திறந்தால் தூசனம் பேசுபவர் களுக்கு, கெட்டவார்த்தைகளை பயன் படுத்துபவர்களுக்கு, வீண் கூச்சல் போடு பவர்களுக்கு, தொலைக்காட்சி (வுஏ), சினிமாவில் மோகம் கொண்டவர்களுக்கு அதனை விட்டும் தூரமாகி தங்களுடைய நடத்தைகளை சீர் செய்து, நல்ல பண்பாடு களை வளர்த்துக் கொள்வதற்கு நோன்பு ஒர் அரிய சந்தர்ப்பம்.
வீண் பேச்சுக்களில் சண்டை சச்சரவு களில் ஈடுபடாமல் நோன்பாளிகளுக்கு தொல்லை கொடுக்காமல் இரவு நேரங் களில் அரட்டையடிக்காமல், பாதைகளில் விளையாட்டுகளில் ஈடுபடாமல் அடுத்தவர் களுக்குக் கஷ்டத்தை கொடுக்காமல் வாழப் பழகிக்கொள்ள பயிற்சிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றி மாற்று மத நண்பர்களிடத்தில் தப்பான எண்ணங்கள் உருவாகாத முறையில் நடந்து கொள்ளும் அதேவேளை நோன்பின் மாண்புகளை புரிவைக்கும் செயல்பாடுகளை காண்பிக்க வேண்டும்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுவும் ஓர் அரிய சந்தர்ப்பம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆத்மீக லௌகீக வாழ்வின் அர்த்தங்களை புரிய வைத்து செயல்படுத்தவைப்பதைத் தான் இந்த ரமழான் எங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. இந்த நோக்கத்தை புரியாமல் இந்தப் பயிற்சிகளை பெறாமல் ஒருவர் நோன்பு நோற்பதால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.